வட மாகாணத்தில் சுகாதாரம், கல்வித்துறை சம்பந்தமான சவால்கள் உள்ளன : மேல் மாகாண முதலமைச்சர்!!

prasanna

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை விட சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பான சவாலே இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல் மாகாண தமிழ் பாடசாலைகளுக்கான 109 ஆசிரியர்களுக்கு நியமனத்தை வழங்கும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பித்து வந்த ஆசிரியர்கள் வடக்கு நோக்கி சென்று விட்டனர்.

இதனால் மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. வட மாகாண கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அந்த மாகாண சபை கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானது.

அதேவேளை மேல் மாகாணதத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக வெளி மாகாணங்களில் இருந்து ஆசிரியர்களை மேல் மாகாணத்திற்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தி!!

department of examination

இம்முறை இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 70 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் பரீட்சைக்கு தோற்றியர்களில் 223 908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

ஒகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற தரம் 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்!!

liqourshop

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனால் நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

முனி 3 படப்பிடிப்பில் லோரன்ஸுக்கு பலத்த அடி : 3 மாத காலம் ஓய்வெடுக்க முடிவு!!

lowrence

முனி, காஞ்சனா வெற்றிக்குப் பிறகு ராகவா லோரன்ஸ் நடித்து இயக்கும் படம் முனி 3 கங்கா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். மேலும், கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் ஒத்திகையின்போது லோரன்ஸ் தடுமாறி கீழே விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. அவரது கழுத்து மற்றும் கை மணிக்கட்டுகளில் பலத்த அடிபட்டுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த அடிபட்டுள்ளதால் 3 மாதங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என வைத்தியர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் டிசம்பர் மாதம் முனி 3 கங்கா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இதுகுறித்து லோரன்ஸ் கூறும்போது முனி 3 கங்கா படத்தின் முதல் பாதி முடிந்துவிட்டது. இரண்டாவது பாதியில் ரிஸ்க்கான காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் முழு சிகிச்சைக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். வைத்தியர்கள் ஆதரவுடனுடம் நான் வணங்கும் எல்லா வல்ல இறைவன் ஸ்ரீராகவேந்திரர் மகிமையாலும் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்றார்.

இரண்டு முறை சென்சார் செய்யப்பட்ட மலேசிய திரைப்படம்!!

ethirveechu

சமீபகாலமாக மலேசியா, சிங்கப்பூரில் படமாகும் தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் வெளியீடு செய்யப்படுகிறது. அந்த வரிசையில் மலேசியாவில் படமாக்கப்பட்ட கோல் என்ற படம் தமிழ்நாட்டில் எதிர்வீச்சு என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இப்படத்தை குணா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது இப்படத்தில் மலேசியா நடிகர்கள் தவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் நடித்திருக்கின்றனர். தமிழில் சுண்டாட்டம் படத்தில் நடித்த இர்பான் கதாநாயகனாக நடிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த ரஸ்னா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சின்னி ஜெயந்த், நளினி, சிங்கமுத்து, வையாபுரி, ராஷிக், மலேசியாவைப் சேர்ந்த உதயா, ரதி, கிளிமாஞ்சாரோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு மலேசியாவில் சென்சார் செய்யபட்டுள்ளது. என்றாலும் தமிழகத்தில் வெளியிடுவதற்காக மறு சென்சார் இங்கு செய்யப்படுகிறது. இப்படத்திற்கு ராஜாமணி இசையமைக்கிறார். பிர்லா போஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். என்று அவர் கூறினார்.

மெய்சிலிர்க்க வைக்கும் நடனம்(வீடியோ)!!

இந்த நடனம் கண்டிப்பாக உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

கவர்ச்சி வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன் : தமன்னா!!

Thamana

நடிகை தமன்னா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படங்களில் தாராளமாக ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

இவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது..

கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை.

தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன். கவர்ச்சி மட்டும்தான் இருக்கும். ஆபாசமாக ஒருபோதும் நடிக்கமாட்டேன். எனது உடம்புக்கு கவர்ச்சி ஆடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். என்று தமன்னா தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தந்தையிடம் கேட்ட விசித்திரமான பரிசு!!

grade 5

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவியொருவர் தனது தந்தையிடம் விசித்திரமான பரிசொன்றை கோரியுள்ளார்.
தெற்கைச் சேர்ந்த சிங்கள பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இவ்வாறு பரிசு கோரியுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த மாணவி தனது தந்தை இனிமேல் மதுபானம் அருந்தக் கூடாது எனக் கோரியுள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தையை பார்வையிடச் சென்ற தாயிடம் குறித்த மாணவி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அப்பா எனக்கு 172 புள்ளிகள் கிடைத்தன. பரீட்சையில் சித்தியடைந்தேன். இனிமேல் குடிக்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும். கடவுள் துணை என கடிதத்தில் குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

இதனை வாசித்த தந்தை கதறி அழுததாகவும் வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர் சக நோயாளிகள் அனைவரும் இந்த விடயத்தை அறிந்து மனம் உருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பணிப்பெண்ணாகச் சென்ற தாயை மீட்டுத் தருமாறு அம்பாறைச் சிறுவன் கோரிக்கை!!

anulakshan

இலங்கையில் சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படும் ஒக்டோபர் முதலாம் திகதியான நேற்று சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரியச் சென்றிருந்த தனது தாயை மீட்டுத்தருமாறு 7வயது சிறுவனொருவன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் தியாகராசா அனுலக்ஷன் என்ற இந்தச் சிறுவன் தன்னை பராமரித்து வரும் பாட்டியுடன் சென்று இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் கல்முனை பிராந்திய அலுவலகப் பொறுப்பதிகாரியிடம் இது தொடர்பான எழுத்து மூல மனுவொன்றையும் கையளித்துள்ளார்.

2010ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ம் திகதி இவரது தாயாரான தியாகராசா சுகந்தினி (29) சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக சென்றிருந்தார்.

கட்டிட தொழிலாளியான இவரது கணவன் முன்னதாக 2007ம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் செயற்பட்ட ஆயுத குழுவொன்றினால் கட்டிட வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் துப்பாக்கி சூட்டுச் சடலமாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது கணவன் மரணமடையும் போது குறித்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்றும் வறுமை காரணமாக குறித்த சிறுவனை 3வது வயதில் தன்னிடம் ஒப்படைத்து விட்டு அவர் வெளிநாடு சென்றதாகவும் பாட்டியாரான கதிர்காமர் யோகேஸ்வரி கூறுகின்றார்.

சவுதி அரேபியாவிற்கு சென்ற பின்னர் இரு வருடங்களாக தொடர்பிலிருந்த அவருடன் அதன்பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக தற்போது தொடர்புகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

தனது தாயை மீட்டுத் தருமாறு சிறுவனால் அதிகாரிகளிடம் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு அந்த பகுதியைச் சேர்ந்த சமுக ஆர்வலரொருவரால் எழுதப்பட்டு சிறுவனின் கையொப்பம் இடப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

சவுதி அரேபியாவில் இருந்து இரு வருடங்கள் தன்னுடனும் உறவினர்களுடனும் தொடர்புடன் இருந்த தாய் ஒரு வருடமாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருக்கின்றார் என்றும் தாயை வெளிநாட்டிற்கு அனுப்பிய உள்ளுர் முகவர் மூலம் எஜமானிடம் தொடர்பை ஏற்படுத்திய போது தாய் நாடு திரும்பி விட்டதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சபையின் கல்முனை பிராந்திய பொறுப்பதிகாரி எம். ஐ. நாஸர் இது தொடர்பாக தெரிவித்த போது..

குறித்த சிறுவனால் தனது தாய் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களும் விபரங்களும் மேலதிக நடவடிக்கைக்காக உடனடியாகவே தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.

குறித்த மனுவின் பிரதியொன்றை கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதனை தனது பாட்டியார் சகிதம் சந்தித்து சிறுவன் கையளித்துள்ளார்

எனது அரசியல் வாழ்க்கையை படுகொலை செய்ய முயற்சி : சஜித் பிரேமதாஸ!!

sajith

தம்மை தென்மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி எடுத்து வரும் முனைப்புக்கள் குறித்து அதன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் பிரதி தலைவரான தம்மை தென்மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக எவ்வாறு தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி தமது அரசியல் வாழ்க்கையை படுகொலை செய்யக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சஜித் பிரேமதாஸ அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் பதவிப் பிரமாணம்!!

nothern

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

யாழ்ப்பாணம் கைதடியில் கோலாகலமான நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஜனாதிபதி அல்லது வடக்கு ஆளுனர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அல்லது ஆளுனரின் முன்னிலையில் கட்டாயம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் வட மாகாணசபை நடவடிக்கைகளை சர்வதேச மயப்படுத்த முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பெருமளவிலான வடக்கு மக்களை பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கச் செய்ய கூட்டமைப்பு முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாணசபை முதலமைச்சர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் இதுவரையில் வெளிநாட்டு தூதுவர்கள் பங்கேற்றதில்லை.

இதேவேளை பதவிப் பிரமாண நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இலங்கை எதிர்ப்பு தரப்பினர் பங்கேற்கின்றார்களா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

dengu

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தால் வீழ்ச்சியடைந் துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் செப்டம்பர் இறுதியளவில் 35000 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவ்வருடத்தில் செப்டம்பர் இறுதியளவில் 24 384 நோயாளர்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மட்ட குழுக்கூட்டத்தில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் இக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அக்டோபர் 07 முதல் 13 ஆம் திகதி வரை அமுலாக்கப்படவுள்ள தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் வெற்றிக்காக அமைச்சுக்கள் மட்டக் குழுவை அழைத்து ஒத்துழைப்பைப் பெறுமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் இக்கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமளவில் 80 பேர் டெங்குவினால் மரணித்தனர். இவ்வாண்டு 64 பேர் மட்டுமே மரணித்துள்ளனர்.

இவ்வாண்டில் 47 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீசப்படும் கழிவுப் பொருட்கள் மூலமே டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம் டெங்கை ஒழிக்கலாம். டெங்கை முற்றாக ஒழிப்பது எம் கைகளிலேயே உள்ளது.

விசாரணையில் தலையிடக் கூடாது என சீனிவாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

N_SRINIVASAN_1467333g

பிசிசிஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம் ஆனால் ஐபிஎல் போட்டி விவகாரங்களில் தலையிடக் கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

பிசிசிஐயின் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. கடைசியில் சென்னை பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட மேல் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதில் சீனிவாசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி தெரிவானார். இருப்பினும் இறுதி தீர்ப்பு வரும் வரை தலைவராக பொறுப்பேற்க முடியாத நிலை இருந்தது.
இதற்கிடையே நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கூறுகையில் பி.சி.சி.ஐ தலைவராக சீனிவாசன் தொடரலாம். ஆனால் ஐபிஎல் சூதாட்டம் குறித்த வெளிப்படையான விசாரணை பாதிக்கப்படக் கூடாது. ஏனெனில் சூதாட்ட வழக்கில் சிக்கிய குருநாத் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன்.

இதனால், விசாரணை தொடர்பான விஷயங்களில் இவர் தலையிடக் கூடாது. இதற்கான முழு ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரவேண்டும். விசாரணை குழு எப்படி இருக்க வேண்டும் என சி.ஏ.பி மற்றும் பிசிசிஐ உடன் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வரவேண்டும். இதற்காக சி.ஏ.பியை அவசரப்படுத்தக் கூடாது.

மற்றபடி ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதுதொடர்பாக பல முறைகேடுகள் வெளிவந்துள்ளன. பிசிசிஐயில் ஏதோ தவறுகள் நடக்கின்றன. சமீபகாலமாக பிசிசிஐ ஏன் தனது நம்பகத்தன்மையை இழந்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.

இவ்வழக்கு வருகிற அக்டோபர் 7ம் திகதி மீண்டும் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு நவநீதம்பிள்ளை விடுத்துள்ள காலக்கெடு முடிவுக்கு அமெரிக்கா பூரண ஆதரவு!!

USA-flag

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த 25ம் நாள் ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும் கருத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது..

ஐ.நா மனிதஉரிமை ஆணையர் பிள்ளையின் அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் நீதித்துறையில் தலையீடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த உயர் ஆணையரின் கவலைகளில் அமெரிக்காவும் பங்கு கொள்கிறது.

போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றம் காணப்படாவிட்டால் அனைத்துலக விசாரணை அழைப்புகள் தொடரும் என்ற ஐ.நா உயர் ஆணையரின் மதிப்பீட்டை அமெரிக்காவும் சுட்டிக்காட்டுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக 32 வயது நபரை நடுவீதியில் குத்திக் கொன்ற 16 வயது சிறுவன்!!

Blood_StainedKnife

சென்னையில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் 16 வயது சிறுவனால் வீதியில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. குற்றவாளியான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த வினோத் (32), பாண்டிபஜாரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் பாரதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சீட்டு விளையாட்டில் கிடைத்த 30 ஆயிரத்தைக் கொண்டு நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் வினோத். பின்னர் ஆயிரம்விளக்கு அண்ணாசாலை-பத்தாரி சாலை சந்திப்பில், நண்பர்களுடன் போதை உற்சாகத்தில் அவர் பேசிக்கொண்டிருந்த வினோத்தையும் அவரது நண்பர் தபேலா பாஸ் என்பவரையும் கிண்டல் செய்துள்ளான் 16வயது சிறுவன் ஒருவன்.

இதனையடுத்து வினோத்துக்கும் அச்சிறுவனுக்குமிடையே மோதல் உண்டாகியுள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வினோத்தை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன். வினோத் குடிவெறியில் இருந்ததால் இத்தாக்குதலை அவரால் தடுக்க இயலாமல் போய்விட்டது.

உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப் பட்ட வினோத் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு பொலிசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வினோத்தை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்தவன் என்பதும் ஏற்கனவே அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் வினோத்துக்கும், அச்சிறுவனுக்கும் தகராறு உண்டானதும் தெரிய வந்தது.

மேலும் அப்போது உண்டான மோதலில் வினோத் அச்சிறுவனை அடித்ததாகவும் அவனது தாயாரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் அந்த விரோதத்தை மனதில் வைத்தே வினோத்தை கத்தியால் குத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை மீனவர்கள் ஐவர் தூத்துக்குடி சிறையில் தடுத்து வைப்பு!!

fish

இந்திய எல்லையில் மீன் பிடித்த குற்றச்சாட்டின்படி கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஐவரும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்க்கொழும்பைச் சேர்ந்த மீனவர் ஐந்து பேர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி தூத்துக்குடி, தரவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்பின்னதாக கடந்த 18ஆம் திகதி ராமநாதபுரம் சி.ஜே.எம்., நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒக்டோபர் முதலாம் திகதிவரை அனைவரையும், தூத்துக்குடி சிறையில் துடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று ஐந்து பேரும் மீண்டும் ராமநாதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது ஐவரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை சிறையில் தடுத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.