கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்ணுக்கு 6 வருட சிறைத் தண்டனை!!(வீடியோ)

supermarket robberyஇங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார்.

அந்த பெண் அவரை கத்தியால் தாக்க முயற்சித்த போதிலும் இவர் அந்த பெண்ணை தாக்கவில்லை. இதனால் அந்த கடையின் உதவியாளர் பாராட்டப்பட்டுள்ளார்.

59 வயதான மைக்கல் வைப்ரோ என்பவர் பணியாற்றும் எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்குள் மது அருந்திய நிலையில் எட்டு அங்குல நீளமான கத்தியுடன் புகுந்த 29 வயதான அனா சேம்பர்ஸ் என்ற பெண், காசாளர் இருக்கும் பகுதியில் இருந்த அவரை தாக்க முயற்சித்தார்.

மைக்கல் அந்த பெண்ணின் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள பெண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத கையில் கத்தியை பிடிங்க முயற்சித்தர். இதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அந்த பெண் தொடர்ந்தும் போத்தல் ஒன்றை உடைத்துடன் தாக்குதலை தொடர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் சேம்பர்ஸை கைதுசெய்தனர். சேம்பர்ஸ் பொலிஸாருடன் மல்லுகட்டினார். தனது நாய் குட்டி இறந்த கோபத்தில் அந்த பெண் இவ்வாறு வன்முறையாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கேன்டர்பேரி கிரவுண் நீதிமன்றம் இந்த குற்றத்திற்காக அந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது சினிமா நூற்றாண்டு விழா : ஜெயலலிதா ஆரம்பித்து வைக்கின்றார்!!

cinema

தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் இன்று ஆரம்பமாகின்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இவ்விழாவை ஆரம்பித்து வைக்கிறார்.
இதில் தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வீதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பூங்காக்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தினமும் இரவு இலவசமாக படங்கள் திரையிடப்படுகிறது. தியேட்டர்களும் மின் ஒளியில் ஜொலிக்கின்றன.
சத்யம், அபிராமி, உட்லண்ட்ஸ், 4 பிரேம் தியேட்டர்களில் தினமும் இலவசமாக பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் படங்களும் திரையிடப்படுகிறது. கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் இப்படங்களை பார்க்கிறார்கள். நூற்றாண்டு விழாவையொட்டி 24ம் திகதி வரை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

யுவராஜ் மீண்டும் இடம் பெற 200 சதவிகித வாய்ப்பு : கங்குலி!!

Yuvaraj Singh

இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங்கிற்கு தகுதி உள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

கடந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் போட்டியுடன் யுவராஜ் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் பிரான்ஸ் சென்று தீவிர பயிற்சி மேற்கொண்டு, உடற்தகுதி பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான இந்திய ஏ அணியை வழிநடத்தினார். இதில் 1-2 என்று தொடரை இழந்தாலும் யுவராஜ் சிங் மூன்று போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் உட்பட மொத்தம் 224 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

இதனிடையே, இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணி ஒரு T20 மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதற்கான இந்திய அணித் தேர்வு, வரும் 30ம் திகதி நடக்கிறது. இதில், யுவராஜ் சிங் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து கங்குலி கூறுகையில் யுவராஜ் சிங் முன்பு போல முழு வேகத்தில் துடுப்பாட்ட திறனை வெளிப்படுத்தியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.

இவர் இந்திய அணியில் இடம் பெற்றால் ஆச்சரியம் இல்லை. இதற்கு, 200 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றும் நடுவரிசையில் யுவராஜ் சிங் 4வது இடத்தில் களமிறங்கும் தகுதி உள்ளது எனவும் கூறினார்.

நீதிமன்றத்தில் ஆவேசப்பட்ட விஜயகாந்த்!!

Vijayakanthஜெயலலிதா குறித்த அவதூறு வழக்கில் இன்று நீதிமன்றத்தில் ஆஜாரானார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 13ம் திகதி கேப்டன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் பத்திரிகைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளம்பரங்கள் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை கோடிக் கணக்கில் நாசம் செய்கிறார் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் உள்ளே சென்ற விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கும்பிடுவது மாதிரி இரு கைகளையும் தலைக்கு மேலே குவித்து இரண்டு முறை கும்பிடு போட்டிருக்கிறார்.

பின்பு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது கூட்டம் முண்டியடுத்தது. இதில் ஆவேசப்பட்ட விஜயகாந்த் நாக்கை துருத்தி கையை ஓங்கி ஆவேசத்தை காட்டியுள்ளார்.

முன்னதாக விஜயகாந்துடன் தேமுதிக மகளிர் அணியினரும் நீதிமன்றத்திள்குள் நுழைந்தனர். பொலிசார் அவர்களை தடுத்து அனுமதி சீட்டு இருந்தால்தான் இங்கே நிற்க முடியும் என்று கூற எங்களிடம் இருக்கிறதே என்று அனுமதி சீட்டை தலைக்கு மேலே உயர்த்தி காட்டியுள்ளார்கள்.

முதல் இரவுக்குப் பின் காணாமல் போன நஸ்ரியா!!

nasriya

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா நசீம். இவர் தற்போது ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கில் முதன் முதலாக ஜுனியர் என்.டி.ஆர் ஜோடியாக ரபாஷா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்க முதல் இரவு காட்சி படம் பிடிக்கப்பட்டது. அதற்குப்பின் நஸ்ரியா சினிமா சூட்டில் இருந்து காணாமல் போய்விட்டார் என்று தெலுங்கி சினிமா வட்டாராங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் முதல் இரவு காட்சியை படத்தில் இருந்து நீக்கினால்தான் மீண்டும் நடிக்க வருவேன் என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக தெலுங்கு சினிமா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே ஜெய் உடன் காதல் என்ற வதந்தி கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் மினி உலக அழகிப் போட்டிக்கு தடை!!

mini miss world

பிரான்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான்.

ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப்படும் அழகிப் போட்டிகளால் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ்.

பிரான்சின் சிறு நகரங்களில் இதுபோன்ற குழந்தைகளுக்கான அழகிப்போட்டிகள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மினி மிஸ் என்ற பெயரில் அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் சிறுமிகள் விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து பெரியவர்களைப் போலவே ஒய்யார நடை நடந்து மேடைகளில் வலம் வருவார்கள். அத்தோடு, விதவிதமான மேக்கப் செய்து தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி இருப்பார்கள் அவர்களது பெற்றோர்கள்.

சிறு வயதிலேயே இத்தகைய மேக்கப் போடுவதால் குழந்தைகளுடைய தோல் பாழாவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம். இதன் மூலம் அவர்கள் மனதில் சிறு வயதிலேயே வயது முதிர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில் அழகிப் போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டப்படும் நிகழ்ச்சி என்று செனேட்டர் மையமானது எதிர்ப்பு தெரிவித்தது. தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான அழகிப் போட்டியானது பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி இத்தகைய போட்டிகள் நடத்துபவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் 2 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து செனேட்டர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மேலும் சோசலிச கட்சியானது இந்த தண்டனை மிக அதிகம் எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் ஊர்வலத்தில் நடந்த பெண் மானபங்க காட்சியால் பரபரப்பு!!

mumbai

மும்பையில் விநாயகர் ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டதை பத்திரிகை ஒன்று வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைத்து விசர்ஜனம் நடந்தது. இதில் ஊர்வலத்தின் போது இளம் பெண் ஒருவரை வாலிபர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதும் அப்பெண் மேலாடையை அவிழ்த்து மானபங்கம் செய்த வக்கிர காட்சி வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டார்.
மேலும் டெல்லியை போல மும்பையில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஆதி எனக்கு நல்ல நண்பர் : டாப்சி!!

aathi

ஈரம் படப்புகழ் நடிகர் ஆதியும் ஆடுகளம் புகழ் டாப்சியும் இணைந்து மறந்தேன் மன்னித்தேன் படத்தில் தோன்றினார்கள். இந்த நட்பு திரையுலகைத் தாண்டியும் நெருங்கி வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மறந்தேன் மன்னித்தேன் படத்தில் இருவரும் தோன்றும் ஒரு நெருக்கமான காட்சிக்குப் பின்னர் இந்த நட்பு இறுகியதாகத் தெரிகின்றது. ஆதியிடம் மிகவும் நெருக்கம் காட்டும் டாப்சி சில படத் தயாரிப்பாளர்களிடமும் ஆதி குறித்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

தான் நடிக்கும் முனி படத்திற்குப் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருக்கும் டாப்சி இந்த செய்தியை மறுக்கின்றார். ஆதி தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்று கூறும் அவர் சில மாதங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் ஆதியைச் சந்தித்த பின்னர் இதுவரை வேறெங்கும் பார்க்கவில்லை என்கிறார்.

அதுமட்டுமின்றி இதுவரை தான் யாருடனும் நெருங்கிப் பழகவில்லை, இனியும் அதுபோல் யாருடனும் பழகமாட்டேன் என்றும் உறுதிபடத் தெரிவிக்கின்றார். டிசம்பர் வரை தனக்குத் திகதிகள் இல்லாததினால் தெலுங்குப்பட ஒப்பந்தம் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லும் டாப்சி இந்திப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

விரைவில் அந்தப் படத்திற்கான ஒத்திகையில் ஈடுபடப் போவதாகக் கூறிய அவர் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிப்பு வரும்வரை தான் வேறு எதுவும் கூற இயலாது என்றார்.

ஓய்வு பெறும் எண்ணத்தை தள்ளிப்போட்ட உசேன் போல்ட்!!

London Olympics Athletics Men

உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் தனது ஓய்வு பெறும் முடிவை தள்ளிப் போட தீர்மானித்துள்ளார்.
ஆறு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுள்ள இவர் வரும் 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் போட்டிகளுடன் ஒய்வு பெறுவதாகக் கூறியிருந்தார்.

உலக சம்பியன்ஷிப் போட்டிகளிலும் எட்டு தங்கப் பதக்கங்களை குவித்துள்ள போல்ட் நேற்று லண்டனில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஒய்வு பெறும் முடிவை ஒரு வருடம் தள்ளிப் போடுவதாக அறிவித்துள்ளார். இதனால் 2017ம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கு பெறலாம் என்று அவர் கூறினார்.

தன்னுடைய ரசிகர்கள் இதனை விரும்புவதாகக் கூறிய உசேன் தனது அனுசரணையாளர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். அவருடைய பயிற்சியாளரும் இதற்கு சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

27 வயதாகும் உசேன் போல்ட் நான்கு வருடங்களுக்கு முன்னால் தான் நிகழ்த்திய 100மீ ஓட்டத்தில் 9.58 வினாடி மற்றும் 200மீ ஓட்டத்தில் 19.19 வினாடி சாதனை நேரத்தை இன்னும் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சென்ற வருடம் இதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் காயம் காரணமாக தான் மெதுவாக ஆரம்பித்ததாகவும் உசைன் கூறினார். அடுத்த வருடம் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் பங்கு பெற விரும்புவதாக அவர் கூறினார்.

மகன் அணிந்த டிசேட்டால் சிறைக்கு செல்லும் தாய்!!

tshirt

பிரான்சில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தைகள் எழுதிய டிசேட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஜிகாத்ஸ் என்னும் மாணவன் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் செப்டம்பர் 11, 2001 என்ற திகதியும் எழுதப்பட்ட டிசேட்டை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளான்.

இந்த டிசேட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 11, 2001 என்பது அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல் நாளாகும் மற்றும் அதில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளதால் சர்சை கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார் மற்றும் மாமாவின் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீவிரவாத சம்பவங்களோடு தொடர்புடைய ஆடை என்பதால் தாயாருக்கு ஒரு மாத சிறையும் 2,000 யூரோ அபராதமும் மற்றும் மாமாவிற்கு 2 மாத சிறையும் 4,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவனின் தாயார் கூறுகையில் இந்த டிசேட்டினை என்னுடைய அண்ணன் வாங்கி கொடுத்தார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள நான் ஒரு வெடிகுண்டு என்பதற்கு நான் அழகானவன் என்ற அர்த்தம் என்றும் அதோடு செப்டம்பர் 11 2009 என்பது என் மகனுடைய பிறந்த திகதி எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவரது அண்ணன் கூறுகையில் நாங்கள் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த டிசேட்டினை அணிந்துவிடவில்லை. அதில் உள்ளது ஒரு நகைச்சுவையான விடயமே ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர்களது சட்டத்தரணி கூறுகையில் இந்த விதிமுறையானது கடுமையானதாக உள்ளது என்றும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

25 வருடங்களின் பின் வடக்கிற்கு இன்று மாகாணசபை தேர்தல்!!

northern_map

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன் மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் இம்முறை தேர்தல்கள் கடமைகளில் 40,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இம்முறை மரத்திலான வாக்குப்பெட்டிகளுக்குப் பதிலாக சில பகுதிகளில் பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் உபயோகப்படுத்தப்படவுள்ளன. இதற்கென வெளிநாட்டிலிருந்து 250 பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

நாளை 22ம் திகதி காலை 6.00 மணிக்கிடையில் சகல தேர்தல் முடிவுகளையும் வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணம் சுமார் 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக மாகாணசபைத் தேர்தலை எதிர் கொள்கிறது. வட மாகாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள்.

மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள். வடமாகாண சபையில் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கட்சி 2 ஆசனங்களை போனசாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கின்றது. இதனால் தேர்தல் முடிந்ததும் 38 உறுப்பினர்களுடன் வடமாகாண சபை செயற்படத் தொடங்கும்.

வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 367 வாக்காளர்கள் 6 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள். மன்னார் மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 420. உறுப்பினர்களின் எண்ணிக்கை 5. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 52 ஆயிரத்து 409 வாக்காளர்கள் 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 589. உறுப்பினர்கள் எண்ணிக்கை 4. யாழ் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 4 இலட்சத்து 26 ஆயிரத்து 793 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தேர்தலில் இரு முனைப்போட்டியே முனைப்பு பெற்றிருப்பதாக பார்ப்படுகிறது. ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவுகின்றது.

குடும்பப் பெண்ணை வல்லுறவு செய்து கொலை செய்த இலங்கை அகதி கைது!!

arrest1

கோவை தொண்டாமுத்தூர் ஆலாந்துறையில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

கோவை தொண்டாமுத்தூர் ஆலாந்துறையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலகம். இதன் அருகே உள்ள நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் வழியில் வசித்து வந்தவர் கல்பனா(46). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கல்பனா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 17 வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டார். குழந்தைகளுடன் இங்கு வசித்து வந்தார். அதிகாலை அந்த பகுதியில் உள்ள கழிப்பறைக்கு பொது மக்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியின் கல்பனா அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து ஆலாந்துறை பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கல்பனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். யாரோ கல்பனாவை கடத்தி வந்து வல்லுறவு புரிந்து கொலை செய்திருப்பற்கான அடையாளங்கள் தெரிந்தன. தன்னை கொலை செய்தவரிடம் இருந்து தப்பிக்க கல்பனா போராடியுள்ளார். இதில் அவரது உடைகள் கிழிக்கப்பட்டிருந்தது.

கல்பனாவை வல்லுறவுக்கு உட்படுத்தியது மட்டுமல்லாமல் அவரை கழுத்தை நெரித்தும் தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்துள்ளனர். கல்பனா இறந்ததை உறுதி செய்த பின்னர் பிணத்தை அங்கேயே வீசி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் கல்பனாவை பூலுவபட்டி இலங்கை அகதி முகாமை சேர்ந்த உதயகுமார் (28) என்பவர் கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. உல்லாசத்துக்காக கல்பனாவை உதயகுமார் இந்த கழிப்பறைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் 2 பேருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் உதயகுமார் ஆத்திரம் அடைந்து கல்பனாவை கழுத்தை நெரித்தும், தண்ணீர் தொட்டியில் அழுத்தியும் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உதயகுமாரை பொலிஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுநலவாய மாநாட்டிற்கு முன் சா/த மாணவர்களுக்கு பரீட்சை!!

exam

பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேல் மாகாணத்தில் சாதாரண தர மாணவர்களின் தவணை பரீட்சைகளை நடத்தி முடிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

10 மற்றும் 11ம் தர மாணவர்களுக்கு பொது நேர அட்டவணை அடிப்படையில் தவணை பரீட்சை மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.

உரிய பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 10ம் தர மாணவர்களின் தவணை பரீட்சையை பொதுநலவாய மாநாட்டின் பின்னர் நடத்துவதற்கு குறித்து ஆராயப்பட்டுள்ளது.

பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேல் மாகாணத்தில் பல பாடசாலைகளுக்கு அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குளவியால் இடம்மாறிய வாக்களிப்பு நிலையம்!!

vavuniya

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் புதுக்குளம் சித்தி விநாயகர் திறந்த வெளியரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம். கே. பந்துல கரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு குளவி கொட்டியதில் ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..

நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, பாடசாலையின் மாடிக்கட்டிடத்தின் மேல் அமைந்திருந்த குளவி கூடானது வேகமாக அடித்த காற்றின் காரணமாக கீழே விழுந்துள்ளது.

இந் நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளான மாறம்பைக்குளம் மதினா நகர் பாடசாலையின் ஆசிரியர் ஜி. கிறிஸ்துராஜா, புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அ.லோகேஸ்வரன், அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை திருமதி சு.ரஞ்சிதமலர் ஆகியோர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த அவர்கள் வீதியால் ஓடிச் சென்றபோது காப்பாற்றுவதற்கு சென்றவர்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது.
இதன் பின்னர் கிராமத்தவர்கள் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் ஜி.கிறிஸ்துராஜா என்பவர் மரணடைந்துள்ளார்.

இந் நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆகியோர் சென்று வாக்களிப்பு நிலையத்தினை பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இதேவேளை பாடசாலை வளாகத்திற்கு உடனடியாக வருகை தந்த வவுனியா மாவட்ட மலோரியா தடை இயக்கத்தினர் குளவி கூட்டை இரசாயன மருந்து தூவி அகற்றியுள்ளனர்.

அத்துடன் இவ் வாக்களிப்பு நிலையமும் உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதுக்குளம் மாகாவித்தியாலயத்தில் வாக்களிக்கவிருந்த வாக்காளர்கள் இப் பாடசாலைக்கு எதிராகவுள்ள சித்தி விநாயகர் திறந்தவெளியரங்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியும்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மூன்று பேர் வாக்களிக்க தனியான வாக்குச்சாவடி!

ele

இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மூன்று பேர் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து 150 கிலோ மீற்றரில் உள்ள கொக்காவில் பகுதியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 644 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 89 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள 799 பேர் வாக்களிப்பதற்காக மதவாச்சியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனந்தி வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் : விசாரணை நடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை!!

US-embassy

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் அனந்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் மற்றும் இதன் போது தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

21ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் வெளிப்படையான சுயாதீன விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வன்முறையின்றி, சுதந்திரமாகவும் அமைதியாகவும் ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளை தாம் விரும்பியபடி தெரிவு செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.