காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ள 10 லட்சம் ம் வைன் போத்தல்களைஅழித்து விட போவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மது ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று “டிரெஷிரி ம் வைன் எஸ்டேஸ்”, “பென்ஃபோல்ட்ஸ்”, “உல்ஃப் பிளாஸ்”, “ரோஸ்மவுண்ட்” போன்ற உலகப் புகழ் பெற்ற மது வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பொதுவாக காலம் கடந்து குடிக்கும் போது தான் வைன்அதிக மணமும் சுவையும் பெற்றிருக்கும் என நம்பப் படுவதுண்டு. ஆனால் இது மட்ட ரக வைன்களுக்கு பொருந்தாது. இந்நிலையில், அவுஸ்ரேலிய மது தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல தயாரிப்பு வைன் போத்தல்கள் லட்சக் கணக்கில் அமெரிக்க மது பானக் கடைகளில் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.
அவற்றின் காலாவதி திகதி நெருங்க இருப்பதால் அவற்றை அழித்து விட அந்நிருவனம் முடிவு செய்துள்ளது. காலாவதியாகும் நிலையில் உள்ள வைன் போத்தல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்தைத் தாண்டும் எனச் சொல்லப் படுகிறது.
ஆனால், வைன் போத்தல்களை அழிக்கும் ரகசியம் குறித்து விவரம் வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது. அவை கால்வாயில் ஊற்றி அழிக்கப்படலாம் அல்லது பள்ளம் தோண்டி புதைக்கப்படலாம் என தெரிகிறது. காலாவதியான தங்களது தயாரிப்புகளை மக்கள் உட்கொண்டால் அவர்களுக்கு தங்களது தயாரிப்புகளின் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் என்பதற்காகவே இந்த முடிவு செய்யப் பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சூரிய குடும்பத்தின் 8வது கிரகமாக அறியப்பட்டுள்ள நெப்டியூன் சூரியனிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும், நான்காவது மிகப்பெரிய கோளாகும். இந்த கிரகத்துக்கு மேலும் ஒரு சிறிய துணைக்கோள் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசாவின் ஹப்பில் விண்வெளி தொலை நோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெப்டியூன் 10க்கும் மேற்பட்ட துணைக்கோள்களைக் கொண்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கோள் இவற்றில் மிகச் சிறியதாகும்.
இதற்கு எஸ்/2004 என் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் சுமார் 20 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர், நெப்டியூன் ஆராய்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த புதிய கோளை கண்டுபிடித்தார்.
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது,
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா இருவரும் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்கள் தான். ஆனால் டெண்டுல்கரை விட லாரா தான் தனது அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் போது சச்சினை காட்டினாலும் லாரா அடுத்த நாள் துடுப்பெடுத்தாட வருவதை நினைத்து ஒரு தலைவராக பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளேன்.
களத்தில் டெண்டுல்கரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து விடலாம். ஆனால் லாரா அப்படி இல்லை. களம் இறங்கிய அரை மணிநேரத்தில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நம்மிடம் இருந்து பிரித்து போக்கையே மாற்றி விடுவார்.
என்னை பொறுத்தவரை எத்தனை சதங்கள் அடித்தோம் என்பதை விட அணியின் வெற்றிகள், தொடரை வெல்வது ஆகியவை தான் மிகவும் முக்கியம் என்றார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில், நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது.
இந்தநிலையில் 2–வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இதில் அவுஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறையால் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் சர்ச்சை ஏற்பட்டது.
இங்கிலாந்து வீரர் டிராட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையில் கொடுக்கப்பட்ட ஆட்டமிழப்பு மற்றும் ஆட்டமிழப்பு என்று நன்றாக தெரிந்தும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை விட்டு செல்ல மறுத்தது ஆகியவற்றின் காரணமாக இந்த டெஸ்ட் மிகுந்த விமர்சனங்களுக்குள்ளானது,
இந்த நிலையில் டி.ஆர்.எஸ். முறையால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஆசஷ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தியது சரியானதாக தெரியவில்லை. சில பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். ஆனால் ஓட்டு மொத்த தீர்வாக இல்லை என்றார்.
உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் வகையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கும் புதிய சுகாதார திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இலவச தங்கத்தை பெற விரும்பும் நபர்கள் தங்களின் தற்போதைய உடல் எடையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும். உடல் எடையை குறைக்க உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
துரித உணவகங்களில் அதிகம் சாப்பிடுவதை மக்கள் கைவிட்டு, உடற் பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுவதை ஊக்கப்படுத்தவே இந்த பரிசு திட்டம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வரும் விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திக் கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். நேற்று அதிகாலை கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளை யாரையும் இறக்க விடாமல் விமானத்திற்குள் சோதனை செய்தனர்.
அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பார்வதி (48), அமராவதி (62), சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயமணி (57) ஆகியோரையும், இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த ஜெயசங்கர் (53) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் கீழே இறக்கி சுங்க இலாகா அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குபின் முரணாகவே பேசியதால் அவர்களது உடமைகளை பிரித்து சோதனை போட்ட போது 20க்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு இந்திய ரூ. 70 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தி.நகரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு மேல் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மவுனியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத் தீவினை இலங்கை நாட்டிற்கு தாரைவார்த்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கதல்ல என்று 2008 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்குப் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய போது, தமிழக அரசின் சார்பாகவோ அல்லது தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசின் சார்பாகவோ, தமிழகத்திற்கு சாதகமான ஒரு மனுவினை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்காத கருணாநிதி; ‘‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரம்’’ என்ற பழமொழிக் கேற்ப கச்சத் தீவு மீட்பு குறித்து தற்போது உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது ‘‘தும்பை விட்டு வாலை பிடிக்கும்’’ கதையாக உள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு, கருணாநிதி தமிழகத்தின் முதல்– அமைச்சராக இருந்த காலத்தில், 1974 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் தாரைவார்க்கப்பட்டது.
இவ்வாறு இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப் படுவதற்கு முன்பு, இதைத் தடுப்பதற்குத் தேவையான எவ்வித நடவடிக்கையையும் அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி எடுக்க வில்லை. மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி பகுதியை 1960–க்கு முன்பு கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க இந்திய அரசு முயன்ற போது, அப்போதைய குடியரசுத் தலைவரின் வினாவினை அடுத்து உச்ச நீதிமன்றம், ‘‘இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்’’ என 1960–ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனால் பெருபாரி, கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்படுவது தடுக்கப்பட்டு, இன்று வரை இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த வழக்கை மேற்கோள் காட்டி கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் கருணாநிதி வழக்கு ஒன்றை தொடுத்திருப்பாரேயானால், மத்திய அரசின் கச்சத் தீவு தாரைவார்க்கும் செயல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.
ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை. கச்சத்தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கு, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு கருணாநிதி இழைத்த முதல் துரோகம் இது.
இதே பெருபாரி வழக்கினைச் சுட்டிக் காட்டி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது, அந்த வழக்கில் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.
ஆனால், கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசின் சார்பில் தமிழகத்திற்கு சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசு ஒரு புரோபார்மா ரெஸ்பாஸ்டன்ட் தான் என்பதால், மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்து விட்டு பின்னர் தமிழக அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தவர் தான் தி.மு.க. தலைவரும் அன்றைய முதல்வருமான கருணாநிதி.
இது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த இரண்டாவது துரோகம்.
குறைந்த பட்சம், தான் தாங்கிப் பிடித்து இருந்த மத்திய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, வற்புறுத்தி, ஒரு அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டிற்கு சாதகமான முறையில் பதில் மனுவை தாக்கல் செய்யச் சொல்லியிருக்கலாம்.
இதையும் கருணாநிதி செய்யவில்லை. கருணாநிதி மத்திய அரசிடம் என்ன சொன்னாரோ தெரிய வில்லை; மத்திய அரசு 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்து, என்னுடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இது கருணாநிதி தமிழகத்திற்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்த மூன்றாவது துரோகம்.
கச்சத்தீவு பிரச்சனையில் இது போன்ற தொடர் துரோகங்களை இழைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘‘ஒப்புக்குச் சப்பாணி’’ போல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது நகைப்புக்குரியது, கேலிக் கூத்தானது, எள்ளி நகையாடத்தக்கது.
காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கச்சத் தீவை தாரைவார்த்தது செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டால், இந்த வெற்றியும் எனக்கு மட்டுமே உரித்தானதாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இது போன்ற சந்தர்ப்பவாத நடவடிக்கையை கருணாநிதி எடுத்திருக்கிறார் போலும்!
என்னைப் பொறுத்த வரையில், 1991 ஆம் ஆண்டு முதன் முறையாக தமிழ்நாட்டின் முதல்– அமைச்சராக நான் பொறுப் பேற்றது முதல் கச்சத்தீவினை மீட்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவிலேயே ‘‘கச்சத்தீவினை மீட்போம்’’ என்று சூளுரைத்தேன்.
கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் என்னால் முன்மொழியப்பட்டு, 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கச்சத்தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாரதப் பிரதமரை நேரிலும், கடிதங்கள் மூலமும் பல முறை வற்புறுத்தி இருக்கிறேன்.
ஆனால், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற என்னுடைய அறைகூவலை தொடர்ந்து ஏகடியம் பேசியவர் கருணாநிதி. ‘‘ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்டேத் தீருவேன் என்றாரே? ஏன் இன்னும் மீட்கவில்லை? அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?’’ என்று கச்சத் தீவு மீட்பைப் பற்றி பல முறை கொச்சைப்படுத்தி கேலியும், கிண்டலுமாகப் பேசியவர் கருணாநிதி.
நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு பெற்று, அதன் வாயிலாக தமிழக மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என பாரதப் பிரதமரை நேரில் வலியுறுத்தியுள்ளேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.
மூன்றாவது முறையாக 2011–ல் நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், 2008 ஆம் ஆண்டு என்னால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இணைத்துக் கொள்வதற்கான ஒரு தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தேன்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, 3.5.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இந்திய நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை 1974 ஆம் ஆண்டைய இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின்படி இலங்கை நாட்டிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தேன்.
ஆனால், கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்த போது கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு இருந்ததில்லை.
1974 ஆம் ஆண்டு கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்டத் தருணத்தில், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் ‘‘கச்சத் தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக ஜனசங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே? உங்கள் கருத்து என்ன?’’ என்று கேட்டதற்கு, ‘‘அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’’ என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி. வழக்கு தொடுப்பது குறித்து பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டியும், வழக்குத் தொடராமல் அலட்சியமாக விட்டு விட்டார் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி.
கருணாநிதி நினைத்திருந்தால், தமிழக அரசின் சார்பில் அப்போதே உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அப்பொழுதே வழக்கு தொடுக்காதது ஏன் என்பது குறித்து கருணாநிதி தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், கச்சத்தீவு பிரச்சனை தொடர்பாக 1974 ஆம் ஆண்டு சட்டமன்றத்திலே பேசும் போது, ‘‘ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27 ஆம் திகதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப் போய் எல்லா கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன்’’ என்று பேசியுள்ளார் கருணாநிதி.
ஆனால், பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பின் சார்பில் 15.4.2013 அன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘‘1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனை கடுமையாக எதிர்த்தது.
அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி, அந்த ஷரத்துகள் சேர்க்கப்பட்டன …’’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், தனக்குத் தெரிந்தே, தனது ஒப்புதலுடனேயே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என்பதை கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத கருணாநிதி, ஆட்சி அதிகாரம் பறிபோன பிறகு, அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே டெசோ அமைப்பை புதுப்பித்து கூட்டங்களை நடத்துவது; அந்த அமைப்பின் மாநாட்டில் கச்சத் தீவை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது; உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்; தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி.
கருணாநிதியின் இது போன்ற பல கபட நாடகங்களை தமிழக மக்கள் கண்டு வெறுத்துப்போய், சலிப்பு அடைந்துள்ளார்கள். கடந்த மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி,
‘‘ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை’’ என்று கூறினார். ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசிலிருந்து வெளியேறியதாக தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதி, விலகிய ஒரு சில நாட்களிலேயே, ‘‘தி.மு.கழகம் மத்திய அரசிலிருந்து வெளியேறி விட்டதால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களை கொண்டுவந்து விட்டதா?’’ என்ற கேள்விகளை எழுப்பியதன் மூலமும்; பின்னர், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘‘காங்கிரஸோடு ஒட்டியிருந்த தன்னை வெட்டிவிட்டது யார் என்று விரிவாகப் பேச விரும்பவில்லை’’ என்று தெரிவித்ததன் மூலமும்; மத்திய அரசிலிருந்து தான் வெளியேறியது ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக அல்ல என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார்.
இது போன்ற மக்களை ஏமாற்றுகின்ற, அரசியல் சந்தர்ப்பவாத கபட நாடகங்கள், கண்துடைப்பு நாடகங்கள், மக்கள் மத்தியில் இனி எடுபடாது என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
‘‘வீழ்வது தமிழர்களாக இருப்பினும், வாழ்வது தன் குடும்பமாக இருக்கட்டும்’’ என்பதற்கேற்ப, இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த மத்திய காங்கிரஸ் அரசுடனான உறவை ‘‘கூடா நட்பு கேடில் முடியும்’’ என்று கூறி உறவை முறித்துக் கொண்ட ஒரு சில மாதங்களிலேயே, தன் மகளின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக மீண்டும் காங்கிரசிடம் கருணாநிதி மன்றாடியது சுயநலத்தின் உச்சக் கட்டம்!
தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு வழக்கை தாக்கல் செய்ய வில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால், தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் கருணாநிதிக்கு, தமிழக மக்கள் தக்கப் பாடம் கற்பிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.
* எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேயிலைத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
* சாப்பிட்ட பின்பு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர் ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
* சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
* சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் – ஏன் சிலர் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்கின்றனர். நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
* மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விசா காலாவதியாகி சவுதியில் தங்கியுள்ளவர்கள் சவுதியின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்று தங்களை பதிவு செய்து தண்டனை இன்றி நாடு திரும்ப முடியும் என பொது மன்னிப்பு காலம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் இலங்கை பணியாளர்கள் மீண்டும் சவுதிக்கு தொழில் புரிய செல்ல முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரசியன் பொது மன்னிப்பு காலம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் நவம்பர் 4ம் திகதிவரை அமுலில் இருக்கும்.
வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவத்தனர்.
பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த முற்சக்கரவண்டி முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட பொது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக முற்சக்கரவண்டியில் சென்ற நால்வரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியும் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும் ஓர் விடயமாக காணப்படுகின்றது. இந்நிலையில் பல வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிக்கூட்டமைப்பு முன்னாள் பிரதம் நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வரவேற்கின்றோம்.
முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு முதலில் பிரேரிக்கப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா மற்றும் சி.விவிக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இரு வேறு துறைகளில் சிறந்தவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக மாவை சேனாதிராஜா தமிழர்களின் நீண்ட கால அரசியல் செயற்பாட்டின் முன்னின்றுழைத்த ஜனநாயகவாதியாவார். தமிழர் விடுதலைக்கு பல தியாகங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்து இன்றும் சிறந்த நிலையில் உள்ள அரசியல்வாதியாகவே தமிழர்கள் மத்தியில் கணிக்கப்படுபவர்.
இந்நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ஒருவராக கருதப்படுபவர்.
சட்டத்தில் தன்னிறைவு கண்ட அவர் வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற நாற்காலிக்கு பொருத்தமான புத்திஜீவியாவார். எனவே தமிழ் தேசிக்கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வவுனியா கல்விச்சமூகம் வரவேற்கின்றது.
இந் நிலையில் வவுனியாவின் புத்திஜீவிகள் குழுவென்ற போர்வையில் சிலர் தமது அரசியல் வளர்ச்சிக்காக மனித உரிமை காப்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அவரை விமர்சனம் செய்வதற்கு தகுதியானவர்களாக கருத முடியாது.
இதேவேளை சிலர் தாமாக அமைத்துக்கொள்ளும் குழுக்களுக்கு சமூகத்தின் நன் மதிப்பான பெயர்களை சூட்டி எவ்வித பதிவுகளும் இன்றி அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியியல் குழப்பமான நிலையை தோற்றுவிப்பதை வவனியா மாவட்ட கல்விச்சமூகம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ளாததுடன் கவலையும் அடைகின்றோம் என தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸுக்கு இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உரிய நேரத்திற்கு பந்துவீசி முடிக்காததால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலால் இப்போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகக் கூடிய பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சந்தானம் இருக்கிறார். அவர் இருந்தால்தான் படம் ஓடுகிறது என்ற தயாரிப்பாளரும், இயக்குநரும் நினைக்கிறார்கள்.
இதனால் சந்தானத்தின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. ஒருநாளைக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர் “25 நாட்கள் கால்ஷீட், 5 கோடி ரூபாய் சம்பளம், படம் முழுக்க வரவேண்டும் என அதிரடி வேட்டையைத் தொடங்கி உள்ளார்.
இருந்தாலும் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காகத் தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம். படத்தின் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்பு சந்தானத்திடம் கால்ஷீட் வாங்கி விடுகிறார்கள்.
கால்ஷீட் வாங்கும்போது படத்தின் கதையைச் சொல்ல வேண்டுமல்லவா? அப்படி படத்தின் கதையைக் கேட்கும் சந்தானம், இந்தக் கதையில் அந்த ஹீரோ நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறாராம்.
இப்படித்தான் “மிர்ச்சி” சிவா – தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள “யா யா” படத்துக்கு சந்தானத்திடம் கதை சொன்னார் ராஜசேகரன். இந்தப் படத்தில் யார் ஹீரோ என சந்தானம் கேட்க, சிவகார்த்திகேயனை கேட்கலாம் என நினைத்திருக்கிறேன் என்றிருக்கிறார் ராஜசேகரன். அவரை விட “மிர்ச்சி” சிவா இந்தக் கதைக்கு பொருத்தமா இருப்பார் என சந்தானம் சொல்ல, இப்போது அந்தப் படத்தில் “மிர்ச்சி” சிவா தான் ஹீரோ.
இப்படி விஷால், சிம்பு என இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுக்கான கதையை முடிவு செய்வது சந்தானம் தானாம்.
குறிப்பாக, ஒன்றிரண்டு படம் இயக்கியவர்களும், புதிதாக இயக்க வருபவர்களும் சந்தானம் சொல்வதைத்தான் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்களாம்.
ரஷ்யாவில் பெண் வீராங்கனைகள் 101 பேர் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். ரஷ்யாவின் “பேர்ல்ஸ் ஒப் ஸ்கைடைவர்ஸ் என்ற பராசூட் வீராங்கனைகள்” அணியின் கேப்டன் இரினா சினிட்சினா என்பவர் சாக நிகழ்ச்சியின் போது உயிரிழந்தார்.
இவரின் நினைவாக ரஷ்யாவை சேர்ந்த 101 பெண் வீராங்கனைகள் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். விமானத்தின் மூலம் நடுவானுக்கு சென்ற வீராங்கனைகள் 101 பேரும் அங்கிருந்து குதித்து பூ வடிவில் கீழே இறங்கினர்.
இதனை பார்த்து கொண்டிருந்த அனைவரும் சந்தோஷத்தில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.101 பெண்கள் விண்ணில் பூ வடிவில் பாராசூட் மூலம் பறந்தது அந்நாட்டின் புதிய தேசிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைரவர்புளியங்குளம் கதிரேசன் வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாடசாலை வான் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியமையலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா சர்வதேச பாடசாலையிலிருந்து சிறுவர்களை ஏற்றி வந்த வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. இவ்விபத்தினால் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதோடு முச்சக்கரவண்டி சாரதியும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
அதிஷ்டவசமாக பாடசாலை சிறுவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால் சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன். இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்.
13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது உடல்நிலையும்தான் இப்படி அவரைச் சொல்ல வைத்திருக்கிறது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு என் அடுத்த படம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். அடுத்து நான் என் தம்பியுடன் சேர்ந்து படம் பண்ணலாம். அல்லது ராணாவுடன் இணையலாம்.
ரொம்ப நாளாக தாமதமாகிக் கொண்டிருக்கும் என் இந்திப் படத்தைத் தொடங்கலாம். ஏன் நான் இந்த சினிமாவை விட்டே கூட விலகலாம். என் உடல்நிலை சரியில்லை. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மெதுவாகச் செய்கிறேன்.
குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. என் மகள் என்னை வீட்டைவிட்டு நகரவிடமாட்டேன் என்கிறாள். யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுத்துக் கொண்டு, எனது கடன்களை செட்டில் செய்ய ஒப்புக் கொண்டால் நிச்சயம் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டிலாகி இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
பாவம் இவரைப் போன்ற ஏழையை தத்தெடுக்க யாராவது பணக்காரர்கள் முன்வருவார்களா??