கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இதில் 3 டெஸ்டும் அடங்கும்.
இதன்படி கேப்டவுனில் நடைபெறும் 2–வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 2–6) டெண்டுல்கருக்கு 200–வது டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
மேலும் 200–வது டெஸ்ட் விளையாட இருக்கும் உலகின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
அப்பா வழியில் சின்னப் பிள்ளையிலிருந்தே கிரிக்கெட் ஆடி வருகிறார் அர்ஜூன். இவர் தற்போது 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் மோசமான போர்ம் என்று கூறியுள்ளனர்.
மும்பை அணிக்கான 30 பேர் கொண்ட பட்டியலில் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் இடம்பெறவில்லை. 14 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பைக்காக ஆடியிருந்தார்.
கிண்ணத்தை அந்த அணிதான் வென்றது. ஆனால் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை.
சச்சினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஜூனை அணியில் சேர்த்து விட்டதாக பல பெற்றோர்கள் குமுறல் வெளியிட்டிருந்தனர். புகார்களும் கூறியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில்தான் தற்போது அர்ஜூனை அணியிலிருந்து நீக்கியுள்ளது தேர்வாளர்கள் குழு. தேர்வுப் போட்டிகளில் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதுவே அவருக்கு ஆப்பாக மாறி விட்டது.
இதுகுறித்து தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் கூறுகையில் சரியாக விளையாடாவிட்டால் அணியில் இடம் கிடையாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மீண்டும் அவர் சிறப்பாக விளையாடி பார்முக்குத் திரும்பினால் மும்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றார்.
மேலும் சச்சின் மகன் என்பதற்காக இலகுவாக அணியில் நுழைந்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த அதிரடி முடிவை தேர்வாளர்கள் எடுத்தனராம்.
உலகக் கோப்பை லீக் சம்பியன்ஸிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய அயர்லாந்து அணி 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அவுஸ்ரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்துகின்றன. அயர்லாந்து 3வது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.
நெதர்லாந்துக்கு எதிராக நேற்று அம்ஸ்டெர்டாமில் நடைபெற்ற போட்டியில் அபாரமாக விளையாடியது அயர்லாந்து. அந்த அணியின் ஜோய்சி 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியில் கூடுதல் புள்ளிகளைப் பெற்றதன் அந்த அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை டி 20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வலம் வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்தியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில், எனது சுதந்திரத்தை யாருக்காவும் இழக்க விரும்பவில்லை. என்னை என் போக்கில் விடும் கணவன் தேவை. அப்படி ஒரு மனிதர் கிடைப்பாரா என்பது சந்தேகம் தான்.
உறவு என்ற பெயரில் எனது சுதந்திரத்தை களவாடிவிடக் கூடாது.
இதில் இரண்டாவது என்ற கருத்துக்கே இடமில்லை. எனக்கு திருமணத்திலோ, கேர்ள் பிரண்ட் போன்ற உறவுகளிலோ நம்பிக்கையில்லை. ஆனால் குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், குழந்தை பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட “ஊழல் அளவுக்கோல் 2013” என்ற கருத்துக்கணிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. “டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல்” என்ற அமைப்பு உலகில் உள்ள 107 நாடுகளில் வசிக்கும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 270 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பன்மடங்கு பெருகி விட்டதாக 70 சதவீதம் இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழலை ஒழிக்க இந்திய அரசு போதுமான முயற்சி எடுப்பதாக தெரியவில்லை என இவர்களில் 68 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
86 சதவீதம் பேர் இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் கறை படிந்தவை என்று கூறுகின்றனர். ஆசிய அளவில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையில் மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க இந்தியா தவறி விட்டது.
உலகின் தனிப்பெரும் சக்தியாக மாற நினைக்கும் இந்தியா ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் உள்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற தவறி விட்டதாக எங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது என டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் அமைப்புக்கான ஆசிய பிராந்திய பிரதிநிதி ருக்ஷானா நானயக்கார தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில் தங்களது காரியத்தை குறுக்கு வழியில் சாதிக்க 27 சதவீதம் பேர் கடந்த 12 மாத காலத்தில் யாருக்காவது இலஞ்சம் தந்துள்ளனர். ஆனால், இந்தியாவில் மட்டும் 54 சதவீதம் பேர் இலஞ்சம் தந்து காரியம் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஊழலை அடுத்து இலஞ்சத்திலும் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் பொலிஸ் துறையில் 62 சதவீதம், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவீதம், கல்வி துறையில் 48 சதவீதம், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவீதம், நிதித்துறையில் 36 சதவீதம் இலஞ்சம் நடமாடுவதாக மேற்கண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இப்படி பெருகிவரும் இலஞ்சம் ஜனநாயகம் மற்றும் சட்டப்படியான நடைமுறை ஆகியவற்றின் மீதான மக்களின் அடிப்படை நம்பிக்கையையே தகர்ந்து விடுகிறது. இலஞ்சம் பெறுவது என்பது குறுக்கு வழியில் ஆதாயம் பெற நினைக்கும் தனி நபருக்கு மட்டும் அதிக செலவை ஏற்படுத்தவில்லை.
எதிர்வினையாக மற்றவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய முன்னுரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும், ஒட்டுமொத்தமாக சமுதாய ஒருமைப்பாட்டையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது என அந்த சர்வே அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
அனுஷ்கா நடித்த சிங்கம்–2 படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனுஷ்கா அழகு குறைந்துள்ளது என்றும் முன்பு போல் கவர்ச்சியாக இல்லை என்றும் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா கூறியதாவது:–
என்னிடம் கவர்ச்சியும், அழகும் குறைந்து இருப்பது உண்மைதான். பிசியாக படங்களில் நடிப்பதே இதற்கு காரணம்.
சிங்கம்–2, இரண்டாம் உலகம் படங்களில் அடுத்தடுத்து நடித்தேன். வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்காக போய் வந்தேன். வெயிலிலும் நின்று நடித்தேன். இதனால் என் அழகை கவனிக்க முடியவில்லை. யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் நேரம் அமையவில்லை. என் அழகான பொலிவு குன்றியது.
இந்த படங்கள் முடிந்ததும் உடனடியாக ருத்ரமாதேவி படப்பிடிப்புக்கு சென்றேன். இதில் ராணி வேடத்தில் நடிக்கிறேன். இதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் பெற வேண்டி இருந்தது. வெயிலில் தான் இந்த பயிற்சிகளை பெற்றேன். சரியான தூக்கம் இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனையில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாவற்கொடிச்சேனையைச் சேர்ந்த (வயது 72) கதிர்காமத்தம்மி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். காட்டு யானையின் தாக்குதலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த முதியவரையே காட்டு யானை தாக்கியுள்ளது. இவ்வாறு நெருப்பு மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்திருந்த இம்முதியவரின் பின்பக்கமாக வந்த காட்டு யானை அவரை தூக்கி அடித்து நெருப்பில் வீசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தர்மபுரி இளைஞன் இளவரசனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டுமா என்பது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் சம்பத்குமார் உடலை சுயாதீனமாகப் பரிசோதனை செய்துவிட்டு அறிக்கை சமர்ப்பிப்பார் அதன் பிறகே உயர்நீதி மன்றம் தன் தீர்ப்பினைக் கூறும்.
இளவரசனின் கலப்புத் திருமணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இறுதியில் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த மனைவி திவ்யா பிரிந்து செல்வதாக அறிவித்த்தார்.
மனமுடைந்த தலித் இனத்தவரான இளவரசனின் உடல் கடந்த ஜூலை நான்காம் நாள் தர்மபுரியில் ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இளவரசன் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் எனக் கருதும் இளவரசனின் உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறுகின்றனர். இந்நிலையில் இளவரசனின் நண்பர் ரமேஷ் மறு பரிசோதனை கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவருகிறது.
தர்மபுரி பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவை நேற்று நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. அதைப் பார்த்த ஏழு மருத்துவர்களில் மனுதாரர் ரமேஷ் தெரிவு செய்த மருத்துவர் மட்டும் தர்மபுரி பரிசோதனை பிழைபட்டது எனவே மீண்டும் பரிசோதனை தேவை எனக் கூறினார்.
மருத்துவர்களின் அறிக்கைகள் குறித்து இன்று புதன் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. பிறகு நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையைச் சேர்ந்த சம்பத்குமார் நாளை தர்மபுரி சென்று இளவரசனின் உடலை பரிசோதனை செய்து பிறகு தனது கருத்தினைத் தெரிவிக்கட்டும். அதன் பிறகு வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறிவிட்டனர்.
வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபுரம், பரந்தனைச் சேர்ந்த எஸ்.அருணோதயம் என்ற 32 வயது கைதி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக வவுனியா வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக வைத்தியசாலைக்கு சென்று கைதியை பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் பிரத்தியேக இடமொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் பரவலாக நடைபெற்றுவரும் நியாயமற்ற நில ஒதுக்கீடுகள், காணி வழங்கல்கள், இன விகிதாசாரத்தை சீர்குலைக்கும் குடியேற்றங்கள், காடழிப்புகள், மண் அகழ்வுகள், முறையற்ற அரச வள ஆளணி உள்ளீர்ப்புகள் உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, மாவட்டத்தின் நிலம் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டன.
இதில் முக்கிய தீர்மானமாக மாவட்டத்தில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இனங்களுக்கிடையில் முரண்நிலையை தோற்றுவிக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்பை கண்டிப்பதோடு, குறிப்பாக பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் காணிகளுக்கு காணி பத்திரம் வழங்காமல் கால இழுத்தடிப்புகளை செய்துவிட்டு, தற்போது வன இலாகாவுக்கு சொந்தமானது எனக்கூறி, அங்கிருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிக் கொண்டிருப்பதையும், சமகாலத்தில் பாரியளவில் காடுகள் அசூர வேகத்தில் அழிக்கப்பட்டு உடனடியாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு இனங்களுக்கிடையில் விரிசலையும், கசப்புணர்வையும் உண்டுபண்ணும் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் கண்டித்து, இவை தொடர்பான தகவல்களை திரட்டி மாவட்ட அரச அதிபர் ஊடாக வரும் வாரமளவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 13.06.2013 அன்று கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியின் மாணவன் சிவசூரியகுமாரன் சரன்ராஜ்ஜை மீட்பது தொடர்பில் பெற்றோர் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பக்கபலமாக இருப்பதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய விசமிகளை வவுனியா பொலிஸார் உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், கடத்தப்பட்ட மாணவனை உடனடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, தம் பிள்ளைகள் தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரிடமும் ஏற்பட்டிருக்கும் கவலைகள் மற்றும் பயப்பீதியைப்போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனவும் வவுனியா மக்கள் சார்பாக பிரஜைகள் குழு வலியுறுத்துகிறது.
நடிகை லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு பொலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். 45 வயதான இவர் தன்னைவிட 12 வயது இளையவரான போனியை திருமணம் செய்துகொண்டது பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: என் முதல் மனைவி லலிதாகுமாரியுடன் எனக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எங்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன். இதில் மகன் இறந்துவிட்டான்.
லலிதாவை விவாகரத்து செய்யப்போவது பற்றியும் போனி வர்மாவை திருமணம் செய்யப்போவதுபற்றியும் என் மகள்களிடம் பேசினேன். அவர்களின் அனுமதி கேட்டேன். பிறகு இருதரப்பிலும் பெரியவர்களிடம் பேசினேன்.
முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் பிறகு ஒப்புதல் அளித்தார்கள். சட்டப்படி லலிதாவை பிரிந்தாலும் எனது அலுவலகம் இன்னும் அவர் வீட்டில்தான் இயங்குகிறது. போனியை மணந்தபிறகு என் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. என் மகள்களுடன் அவர் பாசத்துடன் இருக்கிறார். என் வாழ்வில் மிகுந்த சோகத்தை தந்தது மகனின் இறப்புதான்.
முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டது கிடையாது.
இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.
சூர்யா – கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா “ஸ்டுடியோ க்ரீன்” என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே நேரடியாகத் தயாரிக்கிறது. மற்ற படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.
அண்ணன் – தம்பியாக இருந்தாலும் சூர்யாவைவிட கார்த்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஞானவேல்ராஜா. குறிப்பாக, சூர்யாவைத் தேடி வரும் வாய்ப்புகளை கார்த்திற்கு மாற்றி விடுகிறார்களாம்.
வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து “பிரியாணி”ஐ இயக்கி வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து “ஆல் இன் ஆல் அழகுராஜா” இயக்கி வருகிறார்.
“சிங்கம்-2” முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோவதைக் கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.
வாய்ப்புகள் பறிபோனாலும் பரவாயில்லை திறமையான சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம்வெதும்பிப் புலம்புகிறாராம் சூர்யா.
இதை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று கருதித்தான், சொந்தமாகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா. D – Diya, D – Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து ‘2D Entertainment’ என்று பெயரிட்டு இருக்கிறார்.
சினிமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த கையோடு தான் நடித்த “சிங்கம்-2” படத்தை பெரும்பாலான இடங்களில் சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறார் சூர்யா.
தற்போது “சிங்கம்-2” படத்திற்கு செய்த விளம்பரத்தைப் பார்த்து, தான் நடிக்கும் “பிரியாணி” படத்துக்கும் அதுபோலவே பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் கார்த்தி.
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த ப்ந்து வீச்சாளரான வபத் அகமத் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்தார்.
பின்னர் பாகிஸ்தானில் பெண் கல்வி வளர்ச்சிக்காக உதவி செய்து வந்தார். இதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால விசாவில் வந்தார் வபத் அகமத்.
பின்னர் அவுஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடினார். இதைத் தொடர்ந்து நிரந்தரமாக அவுஸ்திரேலியாவிலேயே தஞ்சமடையவும் அவர் முடிவு செய்தார். இதற்காக குடியுரிமை கோரி வபத் அகமத் விண்ணப்பித்தார்.
விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் வபத் அகமத்துக்கு விரைவாகவே குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவுஸ்திரேலிய அணியிலும் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வபத் அகமத்தின் வருகையால் அவுஸ்திரேலியா அணி புது பலம் பெறுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வைத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டதற்காக முதலில் சண்டையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், பதிலுக்கு வாயை விட்ட சுரேஷ் ரெய்னாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது கேட்ச் பிடிப்பது தொடர்பாக ஜடேஜாவுக்கும், ரெய்னாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு விட்டது.
சீனியர் வீரரான ரெய்னாவை மைதானத்தில் வைத்தே ஜடேஜா திட்ட, பதிலுக்கு ரெய்னா திட்ட களேபரமாகி விட்டது. கேப்டன் கோஹ்லி தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நடந்த சம்பவம் தொடர்பாக அணி மேலாளரிடம் ஜடேஜாவும், ரெய்னாவும் பேசியுள்ளனர். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதுமாதிரி மறுபடியும் நடக்காது என்று உறுதியளித்துள்ளனர். இருவரும் தேசிய கிரிக்கெட் வீரர்கள் என்ற தங்களது தகுதியை மறக்காமல் இனி நடந்து கொள்வோம் என்றும் சொல்லியுள்ளனர் என்றார்.
இதற்கிடைய இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அணி மேலாளர் எம்.வி.ஸ்ரீதரிடம் கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இருப்பினும் இரு வீரர்கள் மீதும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் இடைக்கிடை மைதானத்தில் இது போன்ற வாய்ச்சண்டையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவது என வாயில் சிகரெட்டை வைத்த படியே யோசிப்வர்களுக்கு மத்தியில் தனது கடின முயற்சியால் அந்த தீய பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் ஒருவர்.
இதற்காக அவர் தனக்குத் தானே விஷேட தலைக்கவசம் ஒன்றையும் தயாரித்துள்ளாராம். அதை நாள் முழுவதும் தலையிலேயே மாட்டி புகைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் இப்ராஹிம் யூசுல் என்ற 42 வயது துருக்கி மனிதர்.
இவர் கடந்த 26 வருடங்களாக, தினமும் இரண்டு பக்கெட் சிகரெட் பிடிக்குமளவிற்கு புகைக்கு அடிமையாக இருந்துள்ளார். அதில் மீள எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்ததாம்.
தனது பிறந்த நாள், தனது பிள்ளைகளின் பிறந்த நாள், மனைவியின் பிறந்த நாள், அவரது மணநாள், புத்தாண்டு என ஒரு நாள் விடாமல் சிகரெட்டை விட்டு விடப் போவதாக சபதம் எடுப்பாராம் இப்ராஹிம். ஆனால் அந்த மன உறுதியெல்லாம் நான்கைந்து நாட்களில் காணாமல் போய்விடுமாம்.
என்ன செய்யலாம் என ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கண்டறிந்தது தானாம் இந்த வயர் ஹெல்மெட். தானே அதனை வடிவமைத்தும் உள்ளார். இந்த வயர் ஹெல்மெட்டை காலையில் எழுந்ததும் தலையில் மாட்டிக் கொள்வாராம் இப்ராஹிம். பின் இரவுப் படுக்கப் போகும் போது தான் கழட்டி வைப்பாராம்.
இந்த ஹெல்மெட்டிற்கு இரண்டு சாவிகள் உண்டாம். ஒன்று அவரது மனைவியிடமும், மற்றொன்று அவரது மூத்த மகளிடமும் இருக்குமாம். சாப்பிடும் போது மட்டும் அவர்கள் திறந்து விடுவார்களாம். இப்ராஹிம்மின் தந்தை நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானாராம்.
தானும் அதுபோலவே தனது குடும்பத்தை தவிக்க விட்டு விடக் கூடாது என்பதாலேயே இந்த ஹெல்மெட் கண்டுபிடித்தாராம்.
பொது இடங்களில் இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்ல ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்ததாம்.ஆனால் இப்போது வெட்கமும் குறைந்து விட்டதாம் புகைப் பிடிக்கும் பழக்கமும் குறைந்து விட்டதாம்.