அரச இலை மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும் – ஆட்டோ ஓட்டியின் அபார கண்டுபிடிப்பு!!

mobile

ஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். மொபைல் பேட்ரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மொபைல் சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம்.

காட்டுப்பகுதியில்கூட மொபைலை இலகுவாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம்  மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ ஓட்டுனர் . இவர்  2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார்.

அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. மொபைலில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் மொபைலை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக மொபைலை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். மொபைல் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

மொபைல் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் மொபைலில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார்.

அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு மொபைல் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது மொபைலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை மொபைலின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் மொபைல் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது.

மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும். அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை மொபைலில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார்.

 

யாழ். மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில்!

indian scholarships

யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில், கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசில் வழங்கல். இந்திய அரசு இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் கற்பதற்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் 290 பேருக்கு புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் 120 பேருக்கும், ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் 25 பேருக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திர சுற்றுவட்ட புலமைப்பரிசில் இரண்டு பேருக்கும், பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு ஐந்து பேருக்கும், சார்க் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு மூன்று பேருக்கும், மௌலானா ஆஸாத் புலமைப்பரிசில் 50 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.

இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் வழங்கலில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த 24 பேரில் 13 பேர் மூன்று வருட கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுநலவாய மற்றும் சார்க் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 7 பேருக்கு கலாநிதிப்பட்ட ஆய்வு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய துணைத்தூதுரகம் அறிவித்துள்ளது. இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்த செலவினக் கொடுப்பனவு, பாடநெறியின் காலப்பகுதி முழுமைக்குமான கல்விக் கட்டணம், தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் புத்தகங்கள், காகிதாதிகளுக்கான வருடாந்தக் கொடுப்பனவு ஆகியன வழங்கப்படவுள்ளது.

அத்துடன் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் பெற்றவர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதார வசதி, இலங்கையிலிருந்து செல்லும் போது இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்துக்கான விமானப் பயணக் கொடுப்பனவு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கான கல்விச் சுற்றுலாக் கொடுப்பனவுடன் மேலும் பல உதிரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசாங்கமானது புலமைப் பரிசில்களை திறமை அடிப்படையில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வருவதாகவும், புலமைப்பரிசில் தெரிவுகள் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

rail

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 12 மணியுடனேயே முடிவடைந் திருக்க வேண்டிய ரயில்வே வேலை நிறுத்தம் போக்குவரத்து துறையமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சுமுகமான பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இடைநடுவே கைவிடப் பட்டதாகவும் அவர் கூறினார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் முதலாவது ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ரத்னநாயக்க கூறினார்.

பணிக்கு திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கையினைப் பொருட்டே நேற்றைய தினம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும் இன்று காலை முதலே அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்புமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நேற்று கூறினார்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சின் அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கும் மேல் நடத்திய பேச்சுவார்த்தையினையடுத்து அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவு செய்யப்படுமென கூறியதனைத் தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் நேற்று இடைநடுவே தமது வேலை நிறுத்தத்தை கைவிட்டன.

 

அனைத்தும் அழிந்தபின் கடைசியாகத்தான் மூட்டைப்பூச்சி அழியுமாம்!!

Bed-Bug

உலகம் அழியும் நிலைமை உண்டாகி அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும், கடைசியாகத் தான் மூட்டைப்பூச்சி அழியும் என விஞ்ஞானி ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

சிறிய உயிரினமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சியின் சிறப்பு பற்றி அறிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்.

உலகில் கடைசி வரை தாக்குப்பிடித்து வாழக்கூடிய சக்தி மூட்டைப்பூச்சிக்கு மட்டுமே உண்டு என லண்டன் விஞ்ஞானி ஒருவர் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.

சென்ட் அண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக்.மல்லே ஜேம்ஸ் இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என கண்டுபிடித்துள்ளாராம்.

அப்போது, உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும் என அவர் கூறுகிறார். அதன் மூலம் ஏற்படும் இரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும்.

இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிந்து போகுமாம். ஆனால், மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழுமாம். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என தெரிவித்துள்ளார் ஜோக்.

 

முல்லைத்தீவு மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் – வினோ எம்பி!!

vino_noharathalingam

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவ சங்க பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த திங்கட்கிழமையில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் முக்கியஸ்தர்களும்,மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினராகிய நான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டரிந்து கொண்டேன்.

இது வரை எந்த ஒரு அரசாங்க அதிகாரிகளும் தம்மை வந்து பார்வையிடவில்லை என அவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டியதையடுத்து அரசாங்க அதிபரை சந்தித்து உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சங்க பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

தமது கோரிக்கைகளை நேரிலும் எழுத்திலும் விரிவாக அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறிய மீனவ பிரதிநிதிகள் வெளிமாவட்ட மீனவர்களின் சட்ட விரோத மீன் பிடியினையும், அத்து மீறிய குடியேற்றத்தையும் உடன் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாது விட்டால் தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என உறுதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடையம் தொடர்பாக மேலும் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மீன் பிடித்துரை அமைச்சின் பனிப்புரைகளை மாவட்ட மீன் பிடி திணைக்களமே பொலிசாரே அமுல்படுத்துவது இல்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் அதிகாரம் மிக்கவர்களாக செயற்படுவதினாலும் ஒத்துழைப்பு வழங்குவதினாலும் வெளி மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாகவும் சட்டத்திற்கு முரணாகவும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என கூறினார்.

அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் மீனவ பிரதிநிதிகளுக்குமிடையிலான நீண்ட கலந்துரையாடலின் பின் அரசாங்க அதிபர் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினிருக்கு அறிவித்து ஏற்ற ஒழுங்குகளை செய்வதாகவும் கூறிச் சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

 

கடற்கொள்ளையர்கள் பிடித்த கப்பல் மூழ்கியது – இலங்கையர்கள் கதி?

kappal

சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர். இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கப்பல் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் அந்தக் கப்பலில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த மொஹமது பிஸ்தாமி என்ற கப்பல் பொறியாளரும் ஒருவர்.

அவரது நிலை குறித்து  தற்போது மாலத்தீவில் வசிக்கும் ,அவரது மகளான பர்ஹானா பிஸ்தாமி தெரிவித்ததாவது,

தனது தந்தை ஜுன் மாத இறுதியில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது கப்பல் மூழ்குவதாக அவர் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர் ஐரோப்பிய கடற்படையினருடன் தொடர்பு கொண்டு பேசியபோது  அவர்கள் தாங்கள் இதுவரை இந்தக் கடற்பகுதியில் தேடியபோது எந்த உடலும் கிடைக்கவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.

ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறினார்.

ஆனால் இலங்கை அரசு கப்பலில் பணயக்கைதிகளாகப் பிடிபட்ட இலங்கைப் பிரஜைகளை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் பர்ஹானா.

-BBC தமிழ்-

 

புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம்..

Ashes

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்) டெஸ்ட் போட்டியில் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் திகதி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் இந்த முதல் தோல்வியை அந்த நாட்டு பத்திரிகை ஒன்று கடுமையாக விமர்சித்து இருந்தது.

அதில் இங்கிலாந்து கிரிக்கெட்டை, அவுஸ்திரேலிய அணி கொன்று அதன் பிணத்தை எரித்து சாம்பல்களை (ஆஷஸ்) அதன் சொந்த நாட்டுக்கு எடுத்து சென்று விட்டது என்று குறிப்பிடப்பட்டது.

அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இரு நாடுகள் இடையேயான பாரம்பரியமும், கௌரவமும் மிக்க இந்த போட்டி தொடருக்கு இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் நிலவுகிறது.

இந்த டெஸ்ட் போட்டி தொடர் தற்போது 5 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டி தொடரில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி அதிக வெற்றிகளை குவித்தாலும், பின்னர் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது.

ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு (2-1), 2011-ம் ஆண்டு (2-1) ஆகியவற்றில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தொடரை கைப்பற்றி வலுவாக விளங்குகிறது.

இந்த ஆண்டுக்கான ஆஷஸ் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் அலஸ்டயர் குக் தலைமையில் இங்கிலாந்து அணியும், மைக்கேல் கிளார்க் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் கோதாவில் குதிக்கின்றன.

இரு தலைவர்களும் தலா 92 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். இருவருமே தங்களது அறிமுக டெஸ்டில் சதம் கண்டதுடன் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களாக விளங்கி வருகிறார்கள்.

இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றும் இருப்பதால் இந்த போட்டி தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூரில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் தர வரிசையில் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 4-வது இடத்திலும் உள்ளன.

இந்த போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணி தலைவர் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,

“இந்த போட்டி தொடர் எனது தலைமைத்துவ திறனை முடிவு செய்யும் என்று சொல்வதை நான் நம்பவில்லை. எல்லா நேரங்களிலும், எந்த அணிக்காகவும் விளையாடினாலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

அந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஷஸ் தொடருக்கு கடுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா முறையும் அணி வெல்ல வேண்டியது என்பதே எனது விருப்பமாகும்” என்றார்.

இதேவேளை, இங்கிலாந்து தலைவர் அலஸ்டயர் குக் கூறுகையில், “இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் இருக்கிறது. அதற்காக இந்த போட்டி கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஆஷஸ் தொடரை வென்ற பசுமையான நினைவுகள் உள்ளன. அந்த வெற்றியை தொடர முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆஷஸ் தொடருக்கான இரு நாட்டு அணிகள் வருமாறு:-

அவுஸ்திரேலியா: மைக்கல் கிளாக் (தலைவர்), பிராட் ஹாடின், ஷேன் வட்சன், எட்கோவன், டேவிட் வார்னர், பில் யூக்ஸ், ஸ்டீவ் சுமித், உஸ்மான் ஹவாஜா, மத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், நாதன் லயன், பீட்டல் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ரையான் ஹாரிஸ், ஜாக்சன் பேர்டு.

இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (தலைவர்), ஜோ ரூட், ஜோனதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயன்பெல், பேர்ஸ்டோவ், மாட் பிரையர், டிம் பிரிஸ்னன், ஸ்டூவட் பிராட், ஸ்வான், ஸ்டீவன் பின், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரகம் ஆனியன்ஸ்.

 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்களை ஹிந்தியில் மிரட்டிய சீனா!

china

ஜம்மு எல்லை கட்டுப்பாட்டு பகுதியான லடாக்கில் சீன துருப்புகள் மீண்டும் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களிடம் ஹிந்தியில் எல்லையை விட்டு போக சொல்லி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சீன எல்லை பகுதியின் லடாக் இந்திய எல்லை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இந்த பகுதியில் சீன துறுப்புகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3ம் திகதி இரு நாட்டு படைகளும் கொடி அமர்வு பேச்சில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் சீனப் படைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு லே-லடாக் எல்லையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அங்குள்ளவர்களை ஹிந்தி மொழியில் மிரட்டியுள்ளனர்.

மேலும் அங்கு இந்திய இராணுவம் வைத்திருந்த உயர் தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இந்திய இராணுவத்தினருக்கும் சீன இராணுவத்தினருக்கும் கடுமையான, வாக்குவாதமும் ஏற்பட்டதாம். இதனையடுத்து ஃபிளாக் மீட்டிங்கில் கமரா ஒப்படைக்கப்பட்டதாம்!

மேலே குறிப்பிட்ட சீனாவின் அராஜக கமரா உடைப்பு சம்பவம், ஜூன் 17ஆம் திகதி தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்திற்கு அருகில் உள்ள சுமூர் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது. அது எங்கள் இடம் என்று சீனா கோரியுள்ளது. இதனை இந்திய உளவு அமைப்பு இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை இந்திய-திபெத்திய பொலிஸும் உறுதி செய்துள்ளது.

சீன அரசியலில் நடைபெறும் உள்குத்துதான் இத்தகைய ஊடுருவலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவ நேவி அமைப்புக்களுக்கு இடையே நடைபெறும் அதிகார மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனால் சீனா தெற்குக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்து செயல்பட்டு வருகிறது. அதாவது கட்சியில் நான்தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க இத்தகைய ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் தேவைப்படுவதாக தெரிகிறது.

 

எம்மை வாழ விடுங்கள்: 17 இலங்கை அகதிகள் கைது..!

அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர்கள் உள்பட 2 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காட்டில் சந்தேகப்படும்படியான சிலர் கடந்த 2 நாள்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் திங்கள்கிழமை இரவு ஊத்துக்காடு சென்று விசாரித்தனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை ஆணையூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சுகந்தகுமார் (33), அவரது மனைவி மேரி சுலோசனா (27), திருநெல்வேலி கோபாலசமுத்திரம் சுப்பிரமணியபுர அகதிகள் முகாமைச் சேர்ந்த ராமசாமி மகன் கர்ணன் (31), அவரது மனைவி சந்திரிகா (29), அவர்களது மகன் சந்தோஷ்குமார் (10), மகள் ரஞ்சன்தேவி (6), சுந்தரலிங்கம் மகன் விமலநாதன் (36), அவரது மனைவி விஜயேந்திரி (33), அவர்களது மகன் சுடர்மணி (7), சந்தியா பிள்ளை மகன் அந்தோனி பிள்ளை (38), தவராஜா மகன் பி.ஏ. பட்டதாரி கரண் (21), குருசாமி மகன் பேச்சிமுத்து (20), மாரிமுத்து மகன் சிவா (27), பொன்னையா மகன் கேதீஸ்வரன் (30), திசநாயகா மகன் ரமேஷ் (38) மற்றும் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த அந்தோனி மகன் சுரேஷ் (41), அவரது மகன் அந்தோனி சார்லஸ் (16) ஆகிய 17 பேர் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் சென்னை அல்லது கடலூரில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.

ஊத்துக்காட்டைச் சேர்ந்த மீனவர் ஜோதிராஜ் (50) முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இவருக்கு உதவியாக அதே ஊரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி பிரகாசம் (35) செயல்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பொலிஸார் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள பொலிஸ் சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் தவிர மற்ற அகதிகள் மற்றும் முகவர்கள் ஜோதிராஜ், அவருக்கு உதவியாக இருந்த சாரதி பிரகாசம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

இதேவேளை, புதிய வாழ்க்கைத் தேடிச் செல்லும் எங்களை அரசே முன்வந்து அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பிடிபட்ட இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவுஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற அகதிகள் கூறியது:

நாங்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை. சொந்த நாட்டில் வாழ வழியின்றிதான் இந்தியாவுக்கு வந்தோம். ஆனால் இங்கு எங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

குறைந்த கூலிக்கு நீண்ட தூரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் மாலை 6 மணிக்குள் முகாமுக்குள் வரவில்லை என்றால், எங்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுகின்றனர். படித்த பட்டதாரிகளுக்கும் நல்ல வேலைவாய்ப்பு இல்லை. படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி அதே கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்றைய தலைமுறை குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாங்கள் வாங்கும் கூலிக்கு குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

எங்கள் உறவினர்கள் பலர் அவுஸ்திரேலியாவில் உள்ளனர். அவர்கள் அவ்வப்போது எங்களைத் தொடர்பு கொண்டு பேசுவர். அங்கு வசதியுடன், சுதந்திரமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

6 மாதம் தங்கிவிட்டால் அவுஸ்திரேலியா நாட்டு குடியிரிமை கிடைத்துவிடுகிறது. இந்தியாவில் இருந்து வரும் இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்புவதில்லை.

கடந்த 2 தலைமுறையாக வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம். இப்போது ஒரு வாழ்க்கையைத் தேடிச் செல்ல நினைக்கிறோம். எனவே அரசு எங்களை அவுஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப உதவி செய்ய வேண்டும் என்று கண் கலங்கியவாறு தெரிவித்தனர்.

இந்தியா இலங்கையுடன் இறுதிப் போட்டியில்..!

cricket

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில்81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான,முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது.

இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

இந்தியா அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்துனேயே நேற்றையதினம் களமிறங்கியிருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை,இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

தவான் 15 ஓட்டங்களுடனும், கோலி31 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 12ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது, சர்மா 48ஓட்டங்களுடனும், ரெய்னா4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இலங்கைக்கு 26 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தரங்கா 6ஓட்டங்களுடனும், ஜெயவர்த்தன 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சங்கக்கார (0), சந்திமால் (26), மெத்யூஸ்(10) உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடனேயே மைதானத்தை விட்டு வெளியேற,இலங்கை அணி 24.4 ஓவர்களில் 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா,ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டிகளில் ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி சொந்த மண்ணிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முதலில் பந்துவீச்சு..!

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையே நடைபெறும் இறுதி லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணியின் தலைவர், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு நுழைய இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அபாரமான முறையில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா பெறும்.

ஏற்கனவே, இலங்கை, மேற்கிந்தி தீவு அணிகள் தலா 9 புள்ளிகளுடன் உள்ளது. ஓட்ட விகிதாசாரத்தில் இலங்கை அணியே (+1.019) முன்னணி வகிக்கிறது.

தற்போது இந்திய அணி 5 புள்ளிகளுடன் உள்ளது. இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் 3 அணிகளும் சமபுள்ளிகளுடன் இருக்கும். இதனால் ஓட்ட விகிதாசார அடிப்படையில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் முதலில் சிவில் நிர்வாகமே தேவை..!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகச் சர்வதேசத்தால் அவதானிக்கப்படுகிறது. இந்த நிலையில் வடக்கில் முதலில்,சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார். கொழும்பு இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வடக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தப்படுவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும். ஆனால் தற்போதே தேர்தலுக்கு முன்னோடியாக அரசு தானம் வழங்க ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக மூக்குக் கண்ணாடி மற்றும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் போன்றவற்றைத் தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களில், அரசு தானமாக வழங்குகின்றது. அத்துடன் அரச சொத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

பேஸ்புக் பேஜின் லைக் எண்ணிக்கையை கணக்கிட புதிய சாதனம்..

facebook

குறுகிய காலத்தில் பிரபலமாக பில்லியன் கணக்கான பயனர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் விரும்பிய பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி லட்சக்கணக்கானவர்களின் விருப்பத்தை (Like) பெறுவது. இவ்வாறு பெறப்படும் லைக் எண்ணிக்கையினை பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துபவர்களால் மட்டுமே பார்வையிட முடியும்.

ஆனால் பல வியாபார நிறுவனங்களும் தனது வியாபார உத்திகளில் ஒன்றாக இந்த பேஸ்புக் லைக்கினை பயன்படுத்தி வருகின்றது.இவ்வாறானர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் லைக்கின் எண்ணிக்கையினை எடுத்துக்காட்டுவதற்கு Fliike எனும் கணக்கீட்டு சாதனம் (Fliike physical Facebook fan counter) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சாதனம் லைக் அளவுகளில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சிகளை நேரடியாக உடனுக்குடன காட்டிக்கொண்டு இருக்கும்.இதன் விலை 390 அமெரிக்க டொலர்கள் மட்டுமே.

 

அவுஸ்திரேலிய பெண்ணை காதலித்து மறுமணம் செய்கிறார் வசிம் அக்ரம்!!

vasim akram
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சனை மறுமணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 47 வயதான வசிம் அக்ரம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷனாரியா தொம்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதை தொம்சனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு இறுதியில் திருமணம் இடம்பெறவுள்ளது.

வசிம் அக்ரம் ஷனாரியா தொம்சனை 2011 ஆம் ஆண்டு மெல்போர்னில் முதல் முறையாக சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஷனாரியா தொம்சன் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார். திருமணத்துக்கு பிறகு அவர் பாகிஸ்தானில் குடியேறுகிறார்.

இந்நிலையில் இது குறித்து வசிம் அக்ரம் தெரிவிக்கையில்

நான் மீண்டும் திருமணம் செய்வேன் என்று நினைத்து பார்க்கவில்லை. நான் அதிர்ஷ்டக்காரன் தான் மீண்டும் காதல் உருவானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மனைவியை இழந்த பிறகு வசிம் அக்ரம் நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருந்தார். அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்து இருந்தனர்.

வசிம் அக்ரமின் மனைவி ஹுமா கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசிம் அக்ரமுக்கு முதல் மனைவி ஹுமா மூலம் 15 வயதில் தைடூர் என்ற மகளும், 12 வயதில் அக்பர் என்ற மகனும் உள்ளனர். இருவரும் கராச்சியில் வசிக்கின்றனர்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளரான வசிம் டெஸ்டி போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.

 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 17 தமிழர்கள் பிடிபட்டனர்..

kanchipuram

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 17 பேர் காஞ்சிபுர காவல்துறையினரிடம் பிடிபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் ஏராளமானோர் தமிழகத்திற்கு சென்று அங்கு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் பலர் இலங்கைக்கோ, உறவினர்கள் உள்ள அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கோ அடிக்கடி தப்பிச் செல்வதும் காவல்துறை அவர்களை பிடிப்பதும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் சம்பவங்கள்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு பகுதியிலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற 11 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேரை காவல்துறை பிடித்துள்ளது.பிடிபட்டவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணையில் அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் சுப்பிரமணியபுரம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி மற்றும் மதுரை மாவட்டம் ஆணையூர் திறந்தவெளி முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும், வாலாஜாபாத்தை சேர்ந்த ஜோதிராஜா என்ற ஏஜெண்ட் மூலம் இவர்கள் இலங்கைக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

பிடிபட்ட இலங்கை தமிழர்களை அந்தந்த முகாம்களில் திரும்ப கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

மீண்டும் இணையும் ஷங்கர் – விஜய்..!

கொலிவுட்டில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் நண்பன். இதில் விஜய்யுடன் இணைந்து ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். நண்பன் படம் இந்தியில் வெளியாகி வசூல் சாதனை புரிந்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான்.

சொந்தக் கதைகளை இயக்கி வந்த ஷங்கர் முதன் முறையாக இந்தி படமான 3 இடியட்ஸை தமிழில் ரீமேக் செய்தார்.

தற்போது அறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதன் பின்பு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெகா பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இப்படத்திற்கு விஜய், இயக்குனர் ஷங்கருக்கு மொத்த கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் ஐ படத்தை முடித்த பின்பு விஜய் படத்தை இயக்குவதாகவும், அதுமட்டுமின்றி விஜய், 2014ம் ஆண்டில் முருகதாஸ், ஷங்கர் படத்தை தவிர வேறு யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.