இந்தியா – இலங்கை – மாலைத்தீவுகள் இடையே கடல் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து..!

meeting

இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் இடையில் கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கையின் பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவுகள் பாதுகாப்பு அமைச்சர் முகமது நாஜிம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளைச் செய்வது, கடற்கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, கடல் பகுதியை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பது போன்ற விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இம்மூன்று அண்டை நாடுகளும் உடன்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்தை உணர்ந்து தங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை இந்த மூன்று நாடுகளும் செய்துகொண்டுள்ளன.

(BBC)

‘நோ’ சொன்ன தனுஷ், ‘ஓ.கே.’ சொன்ன சிம்பு!

dhanush

பசங்க, மெரினா படங்களின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பசங்க படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இந்தப் படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

பின்னர்,மெரினா, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களை இயக்கி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா சூப்பர் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து தனுஷிடம் கால்ஷீட் கேட்டிருந்தார் பாண்டிராஜ். ஆனால், இந்தியில் தனுஷ் நடித்த “ராஞ்ஹெனா” சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், அடுத்தும் இந்திப் படத்தில் நடிக்கப் போகிறார் தனுஷ். அதனால் பாண்டிராஜுக்கு கால்ஷீட் இல்லையென்று சொல்லிவிட்டார்.

இதனால் கடுப்பான பாண்டிராஜ் தனுஷின் போட்டியாக சொல்லப்படும் சிம்புவைச் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் மகிழ்ந்த சிம்பு தான் நடிப்பதாக ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

சிம்புவே இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறாராம். சிம்புவின் தம்பி குறளரசன் இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

 

பிரபல இயக்குனர் புற்றுநோயால் காலமானார்!

vasu

மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக உள்ளிட்ட பல படங்களை இயக்கிய , பிரபல சினிமா இயக்குனர் ராசு மதுரவன் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி சென்னை மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராசு மதுரவன், மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த இவரின் மாயாண்டி குடும்பத்தார் படம் இவரை பிரபலப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மதுரையையும், திண்டுக்கல் மாவட்டத்தையும் பின்னணியாகக் கொண்ட திரைப்படங்களையே ராசு மதுரவன் இயக்கினார். கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் உள்ளிட்டவை இவரது இயக்கத்தில் உருவான வேறு சில வெற்றிப் படங்கள்.

சமீபத்தில், இவருக்கு நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 11 மணியளவில் ராசுமதுரவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பு – நாளை முதல் பஸ்களும் சேவையில் இல்லை..!

நாளை நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர்ந்து பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனரா என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்ட போதும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் தமக்கு கிடைக்காமையை தொடர்ந்து இத்தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அதில் கெமுனு விஜேரத்ன கலந்து கொள்ளவில்லை.

இளவரசன் கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கண்ணீர்..!

இளவரசன் தனக்கு கடைசியாக எழுதிய காதல் கடிதத்தை பார்த்து திவ்யா கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றியதாக கூறப்படுகிறது.

´இளவரசன்–திவ்யா´ காதல் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத சுவடுகளாக பதிவாகி விட்டது. கலப்பு திருமணம் செய்ததால் ஏற்பட்ட மோதல், வன்முறை என சினிமாவை போல் நீண்டு கொண்டே சென்ற இவர்களின் காதல் இளவரசனின் மரணத்தால் முடிவுக்கு வந்து விட்டது.

காதல் மனைவியை பிரிந்த துக்கத்தில் இருந்த இளவரசன் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டது பல காதல் ஜோடிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறந்து கிடந்த இளவரசன் தனது மனைவி திவ்யா,பெற்றோருக்கு தனிதனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில் திவ்யாவை அவர் எந்த அளவுக்கு நேசித்து உள்ளார் என்று விவரித்து உள்ளார். இந்த கடிதம் இளவரசனின் பெற்றோரிடம் போலீசார் படிக்க கொடுத்தனர். இதே போல் அந்த கடிதத்தை போலீசார் திவ்யாவிடமும் படிக்க கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இளவரசனின் கடைசி காதல் கடிதம் பற்றி பத்திரிகை மற்றும் டி.விக்களில் செய்தி வெளியிடப்பட்டு வருவதை பார்த்த திவ்யா கண்ணீர் விட்டு கதறி அழுததாக கூறப்படுகிறது. தனக்காக தன் உயிரையும் விட்ட இளவரசனை நினைத்து திவ்யா மிகுந்த சோகத்தில் உள்ளார்.

அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்கள். மேலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி திவ்யாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் போலீசார் திவ்யாவின் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

சோகமே உருவான நிலையில் திவ்யா உள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார் திவ்யா. காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய போது இருவரும் கைகோர்த்து நின்றனர். தற்போது இளவரசனின் மரணத்தால் திவ்யா மட்டும் தனிமையில் இருக்கிறார்.

காதலால் ஒரு புறம் தந்தையை இழந்தும், மறுபுறம் காதல் கணவரை இழந்தும், சமூகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நினைத்தும் திவ்யாவின் மனநிலை குழப்பத்தில் உள்ளது. மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ள திவ்யாவுக்கு ஆறுதல் கூறுவது கூட கடினம் தான்.

தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாகக்கிடந்த இளவசரன் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை வீடியோவும் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சியை இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் பார்வையிடுகின்றனர். அவர்களுடன் வீடியோ படத்தை பார்க்க இளவரசனின் பிணத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டர் சீப், சதீஷ்குமார், ரவிக்குமார் ஆகியோர் தர்மபுரியில் இருந்து சென்னை சென்று உள்ளனர். நீதிபதிகள் குழுவுடன் இந்த 3 டாக்டர்களில் ஒருவர் அந்த வீடியோ காட்சியை பார்வையிடுவார்.

இவர்களுடன் சேர்ந்து இளவரசன் பெற்றோர் சிபாரிசு செய்து உள்ள சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் டெக்காலலும் வீடியோ காட்சியை பார்வையிடுகிறார். இவர் சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல ஆஸ்பத்திரிகளில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் பணியாற்றி பல பிணங்களை பரிசோதனை செய்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசன் திவ்யாவுக்கு எழுதிய கடிதம் வருமாறு…

என் அன்புக்காதலி திவ்யாவுக்கு,

நீ என்னுடன் இருந்த நாட்கள் என் வாழ்நாளில் மறக்கமுடியாது. நீ என்னை விட்டுப் பிரிந்த நாளில் இருந்து என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. காரணம், எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். ஜுலை 1 ம் திகதிவரை நீ வருவாய், என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வாய் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை நீ அன்று என்னுடன் வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன்.

நீ ஏற்கனவே உன் அப்பா இறந்ததற்கு காரணம் நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய் “என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்தவராய் இருந்தால் என்மேல் கொலைப்பழியை போட்டுவிட்டு என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்” என்று சொல்வாய்.

அதுபோலவே நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே என்னால் உன்னை விட்டு வாழமுடியவில்லை.

ஏன் எனில் அந்த அளவிற்கு நாம் இரண்டு பேரும் இருந்தோம். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

நான் உனக்கு என்ன துரோகம் செஞ்சேன் ? என்கூட ஏன் வாழ வரமாட்டேங்கறன்னு கண்டிப்பா எனக்குத் தெரியல …… நாம்ம இரண்டுபேரும் எவ்வளவு கஷ்டத்துக்கும் மேல ஒன்னு சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும்.

எனக்கு ரொம்ப ஆசை திவ்யா. நம்ம இரண்டு பேரும் நல்லா வாழனும். நம்மள கேவலமாப் பாத்தவங்க முன்னாடி பொறாமைப்படும் அளவுக்கு உன்ன அழகா, கண்கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை.

உனக்கு ஒன்னு தெரியுமா…நீ என்னோட எல்லா விசயத்துலையும் சேர்ந்திருக்க. ஆனா இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா.

Please திவ்யா என்ன வெறுக்காத எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.

தயவு செய்து என்னை மன்னித்துவிடு. நீ என்னிடம் கேட்கலாம், உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால் ஏன் நீ என்னை விட்டு போகனும்னு….

..கண்டிப்பா சொல்றேன். நான் உன்ன விட்டுப் போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டுப் போறேன்.

இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா.

I Love so much baby….I love so much….

என் பாசத்திற்குரிய அப்பாவிற்கு….

என்னை மன்னிச்சுடுங்க. அப்பா அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பாத்துகோங்க. தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா.

என் நேசமிகு அம்மாவிற்கு அம்மா என்னை மன்னிச்சுடு. எனக்கு உன்னை நல்லா வெச்சி பார்க்கனும்னு ஆசை. நீயும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க, ஆனால் என்னால உங்களுக்கு எதுவுமே செய்ய முடியல……

…அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நீயும், அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கனும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மம் தீர்க்கனும்.

என்னோட Best Friend என் அண்ணன் பாலாஜிக்கு….

என்னை மன்னிச்சிடு பாலா…

நீ எனக்கு எவ்வளவோ சொன்ன தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால் என்னால முடியல பாலா. I am really so sorry Bala..

என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை, நான் இறந்த பின்பு என்னைப் பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி ஒருவேளை திவ்யா வந்தால் யாரும் அவளைத் திட்ட வேண்டாம். அவளை அனுமதிக்க வேண்டும்.

Please, அவளை யாரும் கோபமாகப் பேசவேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். என்னால அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல. அவளாவது. வாழ்க்கைல சந்தோசமா இருக்கட்டும்.

ததேகூ உறுப்பினர்கள் சிவசங்கர மேனனுடன் சந்திப்பு..!

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13வது சட்டத்திருத்தத்தை திருத்த இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து தமிழோசைக்குக் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இந்திய இலங்கை ஒப்பந்தம்தான், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிரதேசங்களை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியாக வசித்து வந்த பூமியாக அங்கீகரித்தது என்ற அடிப்படையில், அந்தப்பகுதியில் தற்போது இலங்கை அரசு சிங்கள குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மேனனிடம் கூறியதாக்த் தெரிவித்தார்.

எனவே இந்திய இலங்கை ஒப்ப்பந்த்த்தின் அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்படவேண்டும், இது போன்ற சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று அவரிடம் தெரிவித்த்தாக சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.
வடமாகாணத்தில் முறையான, நியாயமான தேர்தல் நடத்துவதாக இருந்தால், வடமாகாணத்தில் இருக்கும் ராணுவமும், ராணுவப் புலான்ய்வுப்பிரிவும் ராணுவ முகாம்களுக்குள் போகவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்கள் நிலை நிறுத்தப்படவேண்டும், அந்த விடயத்திலும் இந்தியா அக்கறை காட்டவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா இந்த இரண்டு விஷயங்களிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுடன் உடன்படுவதாகவே தங்களுக்கு மேனன் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

(BBC)

வவுனியா முருகனூரில் புதையல் விவகாரம்: பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தினால்பிணையில் விடுதலை..!

vavuniy

கடந்த மாதம் 30 ம் திகதி வவுனியா முருகனூரில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் புதை பொருள் களவாடல் என்ற சட்டத்தின் கீழ் சாமி கலையாடிய ஒரு பெண் ,ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் பொலிசாரினால் கைது செய்யபட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடந்த 5 ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்தனர்.

இது பற்றி ஆலய நிர்வாக சபையினர் கூறியதாவது பல ஆண்டுகளுக்கு பிறகு அண்மையிலே இவ்வாலயத்தில் மஹா கும்பாபிசேகம் இடம் பெற்றது சில நாட்களின் பின் எழுந்தருளி விநாயகர் சிலை இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டது இது பற்றி பொலிஸிலும் புகார் செய்யப்பட்டது அதன் பிறகு மதங்கள் சார்ந்த சமூக நம்பிக்கைகளுக்கு ஏற்ப எமது ஆலய பக்தர்களும் சமூகமும் இணைந்து தத்தம் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சுதந்திரமான முறையில் சாமி பார்த்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம் இது தொடர்பாக பொலிசார் உதவியும் நாடப்பட்டது

கடந்த 30 ம்திகதி சாமி கலையாடிய பெண் சாமியார் ஆலயத்தின் பின் புறத்திலே விநாயகர் திருவுருவம் இருப்பதாகவும் அவ்விடத்திலே கிடங்கினை வெட்டுமாறு கூறிய போது தொண்டர்கள் கிடங்கினை வெட்டிய போது அவ்விடத்திற்கு வந்த 119 பொலிசார் புதை பொருள் களவாடல் சட்டத்தின் கீழ் பெண் சாமியார் .சாமியாரின் குழந்தை .ஆலய தொண்டர்கள் ,பரிபாலன சபை உட்பட எட்டு பேரை கைது செய்தனர் .விசாரணைகளின் பின் கடந்த 5ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் அடுத்த வழக்கு 21 ம்திகதி நடை பெறவுள்ளது

இது பற்றி ஊர்மக்கள் கூறியதாவது ஆலய விக்கிரக களவு தொடர்பாக 119 பொலிசிக்கு அறிவித்த நபரை சந்தேக படுவதாகவும் அவரை பொலிசார் விசாரித்தால் உண்மை தெரிய வரும் எனவும் கூறினர் இக் கைது விடயம் தொடர்பாக பிரதேச செயலர் ,கலாசார உத்தியோகத்தர் சிவில் பாதுகாப்பு குழு, பாராளு மன்ற உறுப்பினர்கள் என பல தரப்பினரிடம் கூறிய போதும் இது வரை ஆலயத்தை வந்து பார்க்கவில்லை என ஆதங்கத்துடன் ஊர் மக்கள் கவலை தெரிவித்தனர்.

இலங்கை தூதரை அழைத்து கண்டிக்குமாறு மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்..!

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

தமிழக மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் சென்று கைது செய்யப்பட்டுள்ள அராஜகம் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். தற்போது 21 மீனவர்களும் 19.7.2013 வரை இலங்கை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி சட்டவிரோதமாக கடத்தி கைது செய்வது பற்றி மீண்டும், மீண்டும் நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்து கடிதம் எழுதி வருகிறேன். 5.6.2013 அன்று 10 படகுகளில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்றது உங்களுக்குத் தெரியும்.

அவர்களில் 24 மீனவர்கள் 2.7.2013 அன்று விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 25 மீனவர்கள் சுமார் ஒரு மாதம் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிறகு கடந்த 3.7.2013 அன்று விடுதலை ஆனார்கள்.

15.6.2013 அன்று இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்கள் சட்டவிரோதமாக பிடித்து செல்லப்பட்டு, இன்னமும் இலங்கையில் உள்ள சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 29.11.2011 முதல் இலங்கை சிறையில் தவித்தப்படி உள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை கடற்படையினர் அப்பாவியான, ஆயுதம் இல்லாத மீனவர்களை திட்டமிட்டு தாக்குகிறார்கள். இந்த கச்சத்தீவு பகுதியில்தான் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகிறார்கள் என்பதை எனது அரசு எப்போதும் வலியுறுத்தி கூறி வருகிறது.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்செயல்களை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டமாகும். இது தமிழக மீனவர்களிடம் அதிருப்தியை அதிகரிக்க செய்து நிலைமையை மோசமாக்கி விடும்.

ஏற்கனவே நான் 17.6.2013 அன்று உங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, பேச்சுவார்த்தை உள்ளிட்ட எந்த முயற்சியையும் இந்திய அரசு எடுப்பதற்கான அறிகுறி இல்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கணக்கற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டிருப்பது, குறிப்பாக சமீபகாலங்களில் இந்த சம்பவம் அதிகரித்து இருப்பதால் உயர்மட்ட தூதரக அளவில் பேச்சு நடத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்து சிறையில் அடைப்பதற்கும் கடுமையான கண்டனம் தெரிவித்து கண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று இலங்கை தூதரிடம் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் பலப் பரீட்சை..

 sl

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டியில் இலங்கை அணி டக்வத் லூயிஸ் முறைப்பாடி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில்நேற்று முந்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று போட்டி தொடரப்பட்டது. இதன்போதும் மழை குறுக்கிட்டமையினால் போட்டி 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு 230 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அறிவிக்கப்பட்டது.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுக்ளை இழந்து 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இத்தொடரின் இறுதி லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன..

இன்றைய போட்டி இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டியாகும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
 

இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ்..!

இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார்.

இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம் தயாராகிறது.

இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய கதை என சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கதாபாத்திரம் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது.

ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி இருந்தாராம்.

கதை கேட்டு நடிக்க சம்மதித்த பிரகாஷ் ராஜ், தான் இளையராஜா கேரக்டரில் நடிப்பதாக வெளியே தகவல் கசிந்ததும் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.

சர்ச்சைக்கு பயந்தே அவர் விலகியதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கதையை கூறியுள்ளார் சூர்யா.

ஆனால் யாரும் நடிக்க முன்வராத இந்நிலையில் இப்படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொர்ஸி ஆதரவாளர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு..!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இராணுவ முகாமொன்றுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் குறைந்தது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மொர்ஸி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் இராணுவக் கட்டடத்துக்கு முன்பாகவே, அவரது ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை தொழுகையின்போது எந்தவிதமான எச்சரிக்கைகளும் இன்றி காவல்துறையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

மொர்ஸியின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் பேச்சாளர் ஒருவர், 35 பேர்வரையில் பலியானதாகக் கூறுகிறார். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இராணுவத் தரப்போ,பயங்கரவாதக் கும்பலொன்று முகாமின் பாதுகாப்பு தடுப்பு அரணை தகர்க்க முயன்றதாகக் கூறுகிறது.

இதற்கிடையே, மொர்ஸியை பதிவியிலிருந்து கவிழ்த்த இராணுவ சதிப்புரட்சியை ஆதரித்திருந்த இஸ்லாமிய வாத அல்- நூர் கட்சி,இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளது.

இன்றைய தாக்குதல் சம்பவம் உண்மையில் ஒரு படுகொலை நடவடிக்கை என்று அக்கட்சி வர்ணித்துள்ளது.

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..!

வவுனியா மரக்கறிச் சந்தை வியாபாரிகள் சந்தைக்கு வெளியில் இடம்பெறும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்யுமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகர சபையினால் மரக்கறி வியாபாரிகளுக்கு தொழில் செய்வதற்கென கட்டிடத்தொகுதி அமைக்கப்பட்டு தினமும் நில வாடகையாக 50 ரூபா அறவிடப்பட்டு வரப்படும் நிலையில், சிலர் வேறு தேவைகளுக்கு வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் மரக்கறி வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். இதனால் தங்களது தொழில் பாதிப்படைவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, நகரசபை கட்டளைச் சட்டத்தை மதித்து மரக்கறிச் சந்தை உள்ள இடத்தில் இருந்து 500 மீற்றருக்குள் உள்ள அனைத்து மரக்கறிக் கடைகளையும் அகற்றுமாறு கோரி நகரசபைத் தலைவர், பிரதி பொலிஸ் மா அதிபர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

vavuniya

கார்த்திகாவுக்கு பிடித்த ஹீரோ..!

தன்னுடைய அம்மா, பெரியம்மா இடத்தை எந்த கதாநாயகியாலும் பிடிக்க முடியாது என கார்த்திகா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பாரதிராஜாவின் அன்னக்கொடி அந்த அளவுக்கு ஓடவில்லை என்றாலும், கார்த்திகாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் அவர் தற்போது பிருந்தாவனம் என்ற கன்னட படத்திலும், தமிழில் டீல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பிற மொழி படங்களை விட தமிழ் படங்களில் நடிக்கவே கார்த்திகா விருப்பமாக உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அம்மா ராதா, பெரியம்மா அம்பிகாவின் இடத்தை எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியாது.

அவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்கள். சூப்பர்ஸ்டார்களைப் போன்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர்.

தற்போது அப்படி இல்லை, ஏராளமான புதுமுக நடிகைகள் வருவதால் போட்டி அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு அனைத்து ஹீரோக்களையும் பிடிக்கும் என்றும், பணத்திற்காக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா..!

அம்பிகா- ராதா காலத்தில் இருந்தே கேரள நடிகைகள் தான் தமிழில் கொடி கட்டி பறக்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையிலும், அவர்கள் தான் சினிமாவை முழுதாக ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.

அப்படி வரும் நடிகைகள் யாரும் இதுவரையிலும் தமிழ் சினிமாவை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டது இல்லை.

திருமணம் என்ற பட்சத்தில், கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றனர்.

ஆனால் நஸ்ரியா நசீமோ, நான் எதிர்காலத்தில் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

மலையாளிகளுக்கு எந்த வகையிலும் தமிழர்கள் குறைந்தவர்கள் இல்லை என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற குருசேத்திரம்..!

வடமாகாண கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் ஏற்பாட்டில் மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா மாவட்ட கலைஞர்களின் ‘குருசேத்திரம்’ நாட்டிய நாடக நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

அவை நிறைந்திருந்த இந் நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி, கல்வி பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வட மாகாண கலாசார திணைக்கள அதிகாரி சிறிதேவி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதேவேளை, இந் நிகழ்வில் கலந்து கொண்டவட மாகாண ஆளுனர் ஏ.சந்திரசிறி மூத்த கலைஞர் வேலானந்தன் அவர்களை கௌரவித்தார்.

guru1 guru2 guru3 guru4

வவுனியா பாராதிபுரத்தில் இருந்து மக்களை வெளியேறுமாறு வன இலாகா அறிவுறுத்தல்

vavuniya

வவுனியா, பாராதிபுரம் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடந்த 40 வருடங்களாக வசித்து வரும் மக்களை வன இலாகா திணைக்களம் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதற்கு அப்பிரதேச மக்கள் தமது எதிர்பபை தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரம் கிராம பிரதேசத்தில் வசித்து வரும் இம் மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்னதாக மலையகத்திலிருந்து சென்று இங்கு குடியேறியவர்கள்.

இவ்வாறாக 240 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்ற நிலையில் அவர்கள் குடியேறியுள்ள பிரதேசம் வன இலாக்காவுக்குரியது என குறிப்பிட்டு அம்மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வன இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரதிபுர பிரதேசத்தில் 200 ஏக்கர் வனப்பிரதேசம் அழிக்கப்பட்டு புத்தளத்தைச் சேர்ந்த 400 குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினதும் அமைச்சர் றிசாட் பதியூதீனதும் திட்டத்திற்கு அமைய இந்த பக்கச்சார்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஒற்றுமையாக வாழும் இருசமூகங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களை முட்டி மோத வைக்கும் முகமாக அரசாங்கமும் அமைச்சரும் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.