இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்..

refugee

அவுஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த டி. தினேஸ் என்ற 26 வயது இளைஞன் இறுதியாக தாங்கள் 11 பேர் சுயவிருப்பத்துடன் நாடு திரும்பியதாக கூறுகின்றார்.

அந்நாட்டிலுள்ள 50 தொடக்கம் 60 முகாம்களில் பெண்கள், குழந்தைகள் அடங்கலாக இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தாலும் சரியான எண்ணிக்கை தெரியாது என்கின்றார் அவர்.

மலேசியாவில் 15 மாதங்கள் தொழில் செய்து கொண்டிருந்தவேளை நிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தீர்மானித்ததாக கூறும் அவா், இந்தோனேசியாவிலிருந்து சென்ற ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி படகில் ஏறும்போது தன்னுடன் 89 பேர் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

கைதானவர்களில் 31 பேர் இலங்கையர்கள், ஏனையோர் பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் நாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-BBC தமிழ்-

ராணுவம் – தீவிரவாதிகள் தாக்குதலில் 78 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் தினசரி தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாசில்அகமது தலைமையில் சமாதான உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதில்80உறுப்பினர்கள் உள்ளனர்.

நேற்று காஷ்னி மாகாணத்தில் சமாதான உயர்மட்ட கவுன்சில் தலைவர் பாசில் அகமது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரம் மறைத்து வைத்திருந்த குண்டுகளை தலிபான் தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

அதில், பாசில்அகமது படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் அவரது கார் டிரைவர் உயிரிழந்தார்.

நேற்று இது போன்று பல இடங்களில் ரோட்டோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர். மற்ற இடங்களில் நடந்த தாக்குதல்களில் 7வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் தலிபான் தீவிரவாதிகள் 64 பேர் கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களில் 14ராணுவ வீரர்களும், 64 தலிபான் தீவிரவாதிளும் ஆக மொத்தம் 78 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தகவலை ஆப்கானிஸ் தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன வவுனியா மாணவனை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

வவுனியாவில் கடந்த 26 நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவன் ஒருவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

பாடசாலை முடிவடைந்து சென்ற வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனான சிவசூரியன் சனராஜ் (வயது 17) என்பவர் காணாமல் போயுள்ளார்.

இம்மாணவனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி வவுனியா விபுலானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு வருகை தந்த இம்மாணவன் பாடசாலையில் மாலை நேர வகுப்புகள் நிறைவடைந்த பின்னர் வீடு நோக்கிச் சென்றபோதே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாணவன் காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸில் மாணவனின் பெற்றோரும் வவுனியா விபுலானந்தாக் கல்லூரி அதிபரும் முறைப்பாடு செய்திருந்தனர்.

இருப்பினும் காணாமல் போனதாகக் கூறப்படும் இம்மாணவன் இதுவரையில் கண்டுபிடிக்காத நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் குறித்த மாணவன் காணாமல் போன விடயம் பற்றி கேட்டறிந்துகொண்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் காணாமல் போனதாகக் கூறப்படும் மாணவனை கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்தனர்.

vavuniya2

vavuniya1

சிவ்சங்கர் மேனன் இன்றிரவு இலங்கை வருகிறார்!

shivshankar_menon

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இரவு கொழும்பு வருகின்றார்.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை, இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையினை கொழும்பில் நடத்த பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இந்த பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையிலும் கலந்துகொள்ளவிருப்பதாக வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சுகள் உறுதியளித்துள்ளன.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ளும் முகமாக மாலைத்தீவு நாட்டின் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பல அதிகாரிகள் இலங்கை வரவிருப்பதாகவும் மேற்படி அமைச்சுக்கள் தெரிவித்தன.

இளையதளபதியை ஏமாற்றிய அமலாபால்..!

கொலிவுட்டில் தலைவா படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, அப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது விருந்தாக அமைந்துள்ளது.
மேலும் தலைவா படத்தை ஒகஸ்ட் 9ம் திகதி திரையிட திட்டமிட்டு உள்ள நிலையில், படம் குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தலைவா படத்தில் நடனம் மட்டுமே தனது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விஜய், இந்தியாவிற்கு வந்து எதிர்பாராத சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்.

இதில் குறிப்பிடத்ததக்க விடயம் என்னவென்றால், அவுஸ்திரேலியாவில் இருக்கும் விஜய்யை ஏமாற்றி இந்தியாவிற்கு அழைத்து வர அனுப்பப்பட்டவர் தானாம் அமலாபால்.

அப்படி விஜய்யை ஏமாற்றும் போது, வழக்கமான கதாநாயகி போன்று அமலாபாலும் விஜய் மீது காதலில் விழுந்து விடுகிறாராம்.

தலைவா படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாக, இந்தப் படத்தின் புக்கிங் ரகசியமாக பல இடங்களில் நடைபெற்று வருகின்றதாம்.

மேலும் திரைப்படத்தை எங்கள் திரையரங்குகளில் தான் வெளியிடுகிறோம் எனக் கூறி பல திரையரங்கு உரிமையாளர்கள் அட்வான்ஸ் புக்கிங் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்பகுதி மீவர்களை வெளியேற்ற கோரி முல்லைத்தீவு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று  காலை 9 மணி தொடக்கம் மீனவர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை உடனடியாக வெளியேற்றக் கோரி இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

தென் பகுதி மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி காரணமாக மாத்தளன் தொடக்கம் கொக்கிளாய் வரையிலான கரையோரப் பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன் பிடித்துச் செல்வது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையைத் தொடர்ந்து தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

சேலை நுாலும் என் சாலை ஆகின்றது..

வாழை இலை நீர்
விரும்பும் கிளிகள்..

அதைவிட்டு
உன் வாய் வழி நீர்
விரும்புகின்றது..

காலை எழு கதிரவன்
கதிர்களும் உன்
தோள் தொட்டு
குளிர்கின்றது..

சோலை மலரும்
மலர்களும் உன்
வாசம் நுகர்கின்றது..

மாலை வருகின்ற
மேகம் உன்
செவ்விதழ்
குழைகின்றது..

சேலை இணைகின்ற
நுாலும்
என் சாலை ஆகின்றது..

ஆலை இடுகின்ற
கரும்பும் உன்னில்
ஆசைப்படுகின்றது..

வேலை ஏதுமின்றி
எனக்கும் உன்னைக்
காதலிப்பதே
வேலையாகிறது..

பாலையாய் உன்
ஈரமில்லா
இதயம் அறிந்த பின்பு..

-திசா.ஞானசந்திரன்-

விமான விபத்து – விமானி உள்பட 10 பேர் பலி..!

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் பாதையில் குறுக்கிடும் பெரும் மலைத் தொடர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அலாஸ்கா மக்கள் வான்வழிப் போக்குவரத்தை தொடர்ந்துக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில், அலாஸ்காவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் ஓடு பாதையை விட்டு உயர எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் பெரும் தீப்பிழம்பாக மாறிய விமானத்தை தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை. இந்த விபத்தில் விமானத்தினுள் இருந்த 9 பயணிகள் மற்றும் விமானி உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம்..!

தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ குனியாவில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை4.35 மணிக்கு நியூ அயர்லாந்து தீவில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

தரைமட்டத்தில் இருந்து 379 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் நியூ அயர்ல்ந்து மற்றும் தரோன் பகுதிகள் கடுமையாக குலுங்கின.

இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நியூ பிரிட்டன் பகுதியில் உள்ள கண்ட்ரியன் நகரை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில்6.8 என பதிவாகிய இந்த நிலநடுக்கம் தரை மட்டத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஏற்பட்டதால் அதிகமான பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும்,சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அடங்கியுள்ள நாடுகளில் ஒன்று பப்புவா நியூ குனியா என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் ஆன்டி முர்ரே..!

இங்கிலாந்தின் 77 ஆண்டு கால சாம்பியன்பட்ட ஏக்கத்தைப் போக்கி, விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆன்டி முர்ரே.

பலமான, அனுபவசாலியான செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முர்ரே, ஜோகோவிச்சை 6- 4, 7- 5, 6- 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாதனை சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன் நகரில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதற்தர வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் நேற்று மோதினர்.

உள்ளூர் இரசிகர்களின் பலத்த ஆதரவுடன் ஆடிய முர்ரேவின் ஆதிக்கம் படிப்படியாக தலைதூக்கியது. முதலாவது செட்டில், ஜோகோவிச்சின் 7-வது கேமை பிரேக் செய்து முதல் செட்டை தனதாக்கினார்.

முர்ரே.2-வது செட்டிலும் இதே யுத்தம் தொடர்ந்தது. இந்த செட்டில் ஜோகோவிச் நிறைய தவறுகளை இழைத்ததால், இந்த செட்டையும் முர்ரே வசப்படுத்தினார். இதையடுத்து 3-வது செட்டிலும் முர்ரே ஆதிக்கம் தொடர்ந்தது.

இதிலும் முர்ரே தனக்கே உரிய பாணியில் முத்திரை பதித்தார். மணிக்கு 131 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்ட முர்ரே, மொத்தம் 9 ஏஸ் சர்வீஸ்களும் போட்டுத் தாக்கினார்.

3வது செட்டில் இத்தனைக்கும் ஜோகோவிச் முர்ரேயின் சர்வீஸ் ஒன்றை முறியடித்து 4- 2 என்று முன்னிலை பெற்றிருந்தார். இருந்தபோதும் ஜோகோவிச் மேலும் தவறுகளைச் செய்து தன் சொந்த சர்வையே இழக்க சாம்பியன் பட்டமும் கைநழுவிப் போனது.

இறுதியில் முர்ரே வெற்றியை நெருங்கிய சமயத்தில், ஜோகோவிச் அவரது மூன்று சாம்பியன்ஷிப் பாயிண்டுகளை தடுத்தார். இதனால் 10-வது கேம் மட்டும் 10 நிமிடத்திற்கு மேலாக நகர்ந்தது. இறுதியில் ஜோகோவிச் பந்தை வலையில் அடித்து தவறு செய்ய, முர்ரே கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது.

இங்கிலாந்து வீரர் ஒருவர் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது 77 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1936-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பிரெட் பெர்ரி விம்பிள்டனை வென்றிருந்தார்.

26 வயதான முர்ரேவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே 2012-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை கைப்பற்றி இருந்தார்.

2011-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆட்டத்தில் அளவுக்கு அதிகமான தவறுகளை செய்தார். குறிப்பாக பந்தை வெளியே அடித்து தானாக செய்யக்கூடிய தவறுகளை (அன் ஃபோர்ஸ்டு எரர்ஸ்) 40 முறை ஜோகோவிச் செய்தது தான், பெரும் பின்னடைவாகிப் போனது.

3300 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு..!

நேபாளத்தில் 3,300 ஆண்டுகள் பழமையான கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.புத்தர் பிறந்த லும்பினி பகுதி இப்போது நேபாளத்தில் உள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் அனைத்தும் மன்னர் அசோகர் காலத்தைச் சேர்ந்தவையாகவே இதுவரை கருதப்பட்டு வந்துள்ளன. அவர் கி.மு. 3ஆவது நூற்றாண்டில் லும்பினியில் ஒரு தூணையும்,கோவிலையும் கட்டினார். இப்பகுதியில் புத்த மததத்தைப் பரப்புவதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில், லும்பினி பகுதியில் சமீபத்தில் நேபாள மற்றும் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் சமீபத்தில் நடத்திய அகழாய்வின் மூலம், அசோகர் காலத்துக்கு முன்பே அங்கு கோவில் இருந்தது தெரிய வந்துள்ளது. அங்கு 3,300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமமும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து நேபாள சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலாளர் சுஷீல் கிமிரே, காத்மாண்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இப்பகுதியை உலகளாவிய மதிப்பு மற்றும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நேபாள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

லும்பினியில் புத்தர் பிறந்த பகுதிக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் கி.மு.1,300ஆம் ஆண்டில் இந்த கிராமம் இருந்துள்ளதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இது குறித்து பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபின் கோனிங்ஹாம் கூறுகையில், தெற்காசியாவில் முதன் முறையாக, அசோகர் காலத்துக்கு முந்தைய, செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் இருந்திருப்பது அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

லும்பினி வளர்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஆசார்ய கர்மா சாங்கோ ஷேர்பா கூறுகையில், தொன்மையான கோவில், கிராமம் ஆகிய இரண்டும் கண்டறியப்பட்டுள்ளது பெரிய நடவடிக்கையாகும். இவை, புத்தரின் வாழ்க்கை மற்றும் லும்பினியின் முக்கியத்துவம் ஆகியவற்றை நாம் நன்கு புரிந்து கொள்ள உதவும் என்றார்.லும்பினி கடந்த1997ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி இன்று தொடரும்..!

cricket

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டி இன்று தொடரவுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை முடக்கம்: பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை..!

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறு போக்குவரத்துச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வரை பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

என்னுள் இசையாகிறாய்..

திஸ்ட்ட நடையில்
துள்ளித்திரிந்தேன்
உனைப்பார்த்ததும்
சதுஸ்ட்ட நடையாகி
கல்யானி இசைக்கிறேன்..

ராகமாலிஹாவாய்
குளைகின்றாய்
நீலாம்பரியாய் தோளிடுகின்றேன்
வளைந்து மடியில்
வீணையாகின்றாய்
என் விரல் மூக்கின் நுணிபட
மூச்சு மோகனம் பாடுகிறது..

நான் தட்டிடுவேனெ
தவிலாகின்றாய்
தொட்டிட மனம்
நாயனமாகின்றது
விரல் முட்டிட முட்டிகள்
தபேலாவாகின்றது
இசை கொட்டிட மெட்டிட
உன் கண்களில் வரி தேடுகிறேன்..

எதுகையும் மோனையுமாய்
கண்கள் தொடங்கி
கண்டைக்கால் வரை
கவிதை பெருகுகின்றது..

உலகிலேயே நீளக்கானமென
கின்னஸ் குழு
எனைத் தேடுகின்றது.

-திசா.ஞானசந்திரன்-

சவுதியில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்..!

சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.

இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். பின்னர், இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.

இந்த நோய்க்கு மாற்று மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமியைப் போன்றே கண்ணுக்கு புலப்படாத நோய் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்நோயினால் பாதிக்கப்பட்ட 36 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து இந்த மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இளவரசனின் மரணம் காதல், வீரத்தை போற்றும் தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட இழிவு..!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் மட்டுமின்றி, காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் வாழ்வில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியில்கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன, காதலை மையக்கருவாக வைத்து வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன.

இப்படி தமிழரின் வாழ்வில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால், சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக இளைய சமுதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.