இங்கிலாந்தின் குட்டி இளவரசரின் பாதுகாப்பிற்கு 50 பொலிஸ்!!

imgpress

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயியை ஆயுதம் ஏந்திய 50 பொலிசார் 24 மணிநேரமும் பாதுகாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் அழகான ஆண் குழந்தையை கடந்த 22ம் திகதி பெற்றெடுத்தார்.

அந்த குழந்தைக்கு ஜோர்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தநிலையில் குழந்தை ஜோர்ஜை பாதுகாக்க 50 பொலிசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்தி ஜோர்ஜை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவிருக்கின்றனர். இளவரசர் ஜோர்ஜ் தனது பெற்றோருடன் 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அன்மர் ஹாலில் பெரும்பாலான நேரத்தை செலவிடவிருக்கிறார்.

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிசார் குட்டி இளவரசரை பாதுகாப்பதுடன் பிற பணிகளிலும் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

காதலியை கோடரியால் சரமாரியாக வெட்டி தானும் தற்கொலை செய்த காதலன்!!

murder

இந்தியாவின் டெல்லியில் காதலியை கோடரியால் வெட்டிய பின்னர் வாலிபர் ஒருவர் கைகளை அறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஆகாஷ். இவர் அதே வகுப்பில் பயின்ற ரோஷினி என்ற பெண்ணை காதலித்து வந்தார். நேற்று பல்கலைகழக வளாகத்திற்கு ஒரு கோடரியுடன் வந்த ஆகாஷ், வகுப்பிலிருந்த ரோஷினியை வெறித்தனமாக தாக்கினார்.

இதனால் பலத்த காயமடைந்த ரோஷினி இரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார். உடனடியாக அவரை சப்டர்ஜங் மருத்துவமனைக்கு பிற மாணவர்கள் அழைத்து சென்றனர்.

காதலியை தாக்கிவிட்டு ஆகாஷ் தன்னுடைய கையை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டார். அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவருடைய உயிர் பிரிந்தது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரோஷினிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 6 மாதம் சிகிச்சை: மனிஷா கொய்ரலா மும்பை திரும்பினார்!!

manisha

தமிழில் முதல்வன், பம்பாய், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ரலா. கடைசியாக மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். மனிஷா கொய்ரலாவுக்கு கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

வைத்தியர்கள் பரிசோதித்த போது கர்ப்பப்பை புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தீவிர சிகிச்சைக்குப்பின் பூரண குணமடைந்தார்.

சிகிச்சை காரணமாக தலைமுடி போய்விட்டது. ஆளே உருமாறி இருக்கிறார். தற்போதைய தோற்றத்திலான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அமெரிக்காவில் ஆறு மாத சிகிச்சை முடிந்து நேற்று மும்பை திரும்பினார். அந்தேரியில் உள்ள வீட்டில் உறவினர்கள் வரவேற்றனர்.

கொழும்பு கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்தில் பாரிய தீ விபத்து!!

fire

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சின் 7 வது மாடியில் நேற்று திடீரென பற்றிய தீயினால் அமைச்சின் ஊடகப்பிரிவு முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

பொலிஸார் தீயணைப்பு படையினரின் ஒத்துழைப்புடன் குறுகிய நேரத்திற்குள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் நாசமாகியிருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

சேதமாகிய சொத்துக்களின் விபரம் இதுவரை கணிப்பிடப்படவில்லை. தீ ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊடகப் பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அலுவலகம் என்பன தீக்கிரையாகியுள்ள போதும் முக்கியமான ஆவணங்கள் பாதுகாப்பான முறையில் கையிருப்பிலிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த நுட்பம் வாய்ந்த கெமரா, வீடியோ பதிவுகள் என்பன எரிந்து சாம்பலாகியுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அகதிக்கு தமிழ்நாட்டில் 11 வருட கடூழிய சிறைத்தண்டனை!

judge

இலங்கையின் அகதி ஒருவருக்கு தமிழகம் நாகப்பட்டினம் நீதிமன்றம் 11 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.

கே.கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அகதி முகாமில் வசித்து வந்த இவர் சௌந்தரராஜன் என்ற பெயரைக்கொண்டவராவார்.

2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியன்று இவர் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

இதன்போது இவர் வைத்திருந்த செய்மதி தொலைபேசி, டெட்டினேட்டர் குச்சிகள், ஜெலிக்னைட் குச்சிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றை இவர் இலங்கைக்கு கடத்தவிருந்தார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

மேலும் 74 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது !!

TN

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடிக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இந்திய மீன்பிடித் திணைக்கள பிரதி பணிப்பாளர் உமா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 65 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி 139 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்யவில்லை.

ஜனாதிபதி, 4 முதல் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்திய திரைப்பட 100வது ஆண்டு விழா சென்னையில்!!

100 years indian cinema

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100வது ஆண்டு திருவிழாவை சென்னையில் நடத்துகிறது. இதில் தென்னிந்தியாவின் நான்கு முதலமைச்சர்கள், தமிழக ஆளுநர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 21, 22, 23, 24, திகதிகளில் இவ்விழாவினை அனைத்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்களும் கலந்துக் கொண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளார்கள். 21ம் திகதி காலை மலையாளத் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சி 4 மணி நேரம் நடைப்பெறும். அன்றைய தினம் மாலை 4 மணி நேரம் தமிழ்த் திரைப்பட கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

22ம் திகதி காலை கன்னடத் திரைப்பட நடிகர்கள் கலைஞர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும், அன்றைய தினம் மாலை தெலுங்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் நடத்தப்போகும் கலை நிகழ்ச்சியும் 4 மணி நேரம் நடைபெறும்.

23ம் திகதி மாலை தென்னிந்திய மொழி கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இனிய விருந்து நடைபெறும், தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் ஒன்று சேரும் குடும்ப விழா.

24ம் திகதி இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சரித்திர விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா முதல் அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் அனைத்து மொழியைச் சேர்ந்த திரைப்பட சாதனையாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

இந்த விழா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டுடியோ முதலாளிகள் என அத்தனை சங்கங்களையும் சார்ந்தவர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ளவும் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை மற்றும் பங்களிப்புகளுக்காகவும் நான்கு மொழி கலைஞர்கள் நடிகர்கள் சாதனையாளர்கள் சென்னையில் சங்கமிக்க வேண்டும் என்பதால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் உலகமெங்கும் செப்டம்பர் 18, முதல் 24 வரை நடைபெறாது.

இது மட்டுமல்லாமல் சென்னை நகரமெங்கும் வண்ணமயமான அலங்காரங்கள், திரையரங்குகளில் சிறந்த இந்தியத் திரைப்படங்கள், பூங்காக்களிலும் சென்னையில் முக்கிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள், திரைப்பட போட்டிகளில் வெற்றிப் பெற்ற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைப்பெறும்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அத்தனை கலைஞர்களையும் தமிழகமும் சென்னை மாநகர மக்களும் வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலிருந்து ஹெரோயின் கடத்திய இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை!!

hang

இந்தியாவிலிருந்து ஹெரோயினை இடுப்புப் பட்டிகளில் மறைத்து கடத்தி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜாஎல பள்ளிவீதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிகே தொன் சந்த்ராணி என்ற 54 வயது பெண்ணுக்கே நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின் 8 வருடம் விளக்கமறியலில் இருந்த நிலையில் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005 ஜூலை 8ம் திகதி இந்தியாவிலிருந்து இப்பெண்மணி கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய போது இவரில் சந்தேகம் கொண்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவரது பொதிகளை சோதனை செய்தபோது இவர் கொண்டுவந்த பொதியில் இருந்து 474 இடுப்புப் பட்டிகளில் சூசகமான முறையில் ஹெரோயின் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றில் சுத்தமாக ஹெரோயின் 141.8 கிராம் இருந்ததாக தெரிய வந்தது. இவர் மீது போதைப் பொருளை கடத்தி வந்தமை தன்வசம் வைத்திருந்தமை வியாபாரம் செய்கின்ற ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் மீது வழக்குத் தொடரப்பட்டன.

குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை வழங்கி தனது தீர்ப்பை அறிவித்தார்.

சொத்து பிரச்சினை: கனகாவுக்கு நடிகர் சங்கம் உதவி!!

kanaka

நடிகை கனகா உடல் நிலை பற்றி நேற்று பரபரப்பான வதந்திகள் வெளியாயின. கேரள ஆஸ்பத்திரியில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் வந்தன. பிறகு அது தவறானவை என தெரிய வந்தது. கனகா கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

அதிசயப் பிறவி, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி போன்ற படங்களிலும் நடித்தார். இவர் மறைந்த நடிகை தேவிகாவின் மகள் ஆவார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் கனகா தனியாக வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன் அவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும் செய்தி பரவியது. இந்த நிலையில் நேற்று அவர் இறந்து விட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து நேற்று மாலை ராஜாஅண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து கனகா திடீர் என வெளியே வந்தார். நான் உயிரோடுதான் இருக்கிறேன் என பேட்டி அளித்தார். அப்போது நான் பணக்காரி. என் சொத்துக்களை அபகரிக்க சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து கனகாவுக்கு சொத்து பிரச்சினையில் உதவ நடிகர் சங்கம் முன் வந்துள்ளது. சொத்து விவகாரத்தில் கனகாவுக்கு நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார். இதனை கனகாவிடம் நடிகர் சங்க மனேஜர் நடேசன் தெரிவித்தார். கனகாவுக்கு என்ன உதவி தேவையோ அதை நடிகர் சங்கம் செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 3ம்,4ம் வருட மாணவர்கள் வளாகத்தினுள் நுழைய நிர்வாகம் தடை!

jaffnauniversity

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே கலைப்பீட 3ம் வருட மாணவர்கள், 4ம் வருட மாணவர்கள் உள்பிரவேசிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை வித்துள்ளது.

நேற்று பல்கலைக்கழகத்தில் இரண்டு பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்தே இதனை யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று மதியம் 12 மணிக்குள் இரண்டு வருடங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டள்ளது.

மேலும் மறு அறிவுறுத்தல்கள் வரும் வரையில் இவர்கள் எவரும் பல்கலைக்கழக எல்லைக்களுக்குள்ளாக செல்லக் கூடாது என்றும் அதனை மீறி நடந்தால் பல்கலைக்கழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மாணவர்கள் : ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

mathu

இந்திய அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும் மாணவர் விஜயகுமாரும் சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள்.

ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜோன் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.

புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு..!

thayaஇலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று (01) பதவியேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது.

புதிய இராணுவத் தளபதியின் பதவியேற்பு நிகழ்வு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

தயா ரத்னாயக்க இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தின் பழைய மாணவரான தயா ரத்னாயக்க, ரக்பி மற்றும் தடகள விளையாட்டுகளில் திறமை காட்டியவராவார்.

இதேவேளை, நேற்றையதினம் பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய பாதுகாப்புப் படைகளின் தளபதியாகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!

Srilanka

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 5வதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 43.5 ஓவர்களில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அத்துடன் சஜித்திர சேனாநாயக்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் நாயகனாக திலகரட்ன டில்ஷானும் தொடரின் நாயகனாக சங்ககராவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இப்படியும் பயமுறுத்த முடியுமா? (வீடியோ)

மற்றவர்களை பயமுறுத்தி இன்பம் காண்பதில் சிலருக்கு அலாதிப்பிரியம். அதற்காக தமது மூளையைப் பிழிந்து பல்வேறு வழிகளை கையாளுவார்கள். அதே போலவே இங்கு மற்றவர்களை எப்படியெல்லாம் பயமுறுத்துகின்றார்கள் என்று பாருங்கள்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இலங்கை அபார துடுப்பெடுத்தாட்டம்!!

Tillakaratne Dilshan, Lahiru Thirimanne

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களை பெற்று துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மேலும் லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 75 ஓட்டங்களையும் விலாசியுள்ளனர்.

இதன்படி 308 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்டு தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

சிறையில் மறந்துவிடப்பட்ட அமெரிக்கருக்கு 40 லட்சம் டொலர்!!

us

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு 40 லட்சம் டொலர்களுக்கும் அதிக பணத்தை இழப்பீடாகக் கொடுப்பதற்கு அமெரிக்காவின் நீதி அமலாக்கத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் போலிஸ் சிறைக்கூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இளைஞனை அதிகாரிகள் முழுமையாக மறந்துபோன நிலையில் கைவிட்டிருந்தனர்.

இதனால் நான்கு நாட்களாக தண்ணீரும் உணவுமில்லாமல் தவித்த இளைஞன் தனது சிறுநீரையே குடிக்க நேர்ந்துள்ளது.போதைப்பொருள் தேடலின்போதே இந்த இளைஞனையும் போலிஸார் பிடித்துச் சென்றிருந்தனர்.

ஆனால் அவர் கைது செய்யப்படவும் இல்லை. குற்றச்சாட்டுக்கள் எதுவும் அவர்மீது பதிவு செய்யப்படவும் இல்லை. ஆனால் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரை எவருமே கவனிக்கவில்லை.

தான் சுவரில் உதைத்து கத்தி கூக்குரலிட்டதாக அந்த இளைஞன் கூறுகிறார். 4 நாட்களாக சிறைக்கூடத்தில் நீரின்றி தவித்த இளைஞன் பின்னர் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதில் 3 நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவிலும் இருந்துதான் அவர் மீண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் வருத்தமடைந்துள்ளதாக அமெரிக்க போதைப் பொருள் தடுப்பு போலிசார் கூறியுள்ளனர்.