வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவபுரம், பரந்தனைச் சேர்ந்த எஸ்.அருணோதயம் என்ற 32 வயது கைதி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சித்ததாக வவுனியா வைத்தியசாலையில் பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக வைத்தியசாலைக்கு சென்று கைதியை பார்வையிட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் உபதலைவர் தனஞ்சயநாதன் தலைமையில் பிரத்தியேக இடமொன்றில் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்கள், அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் பரவலாக நடைபெற்றுவரும் நியாயமற்ற நில ஒதுக்கீடுகள், காணி வழங்கல்கள், இன விகிதாசாரத்தை சீர்குலைக்கும் குடியேற்றங்கள், காடழிப்புகள், மண் அகழ்வுகள், முறையற்ற அரச வள ஆளணி உள்ளீர்ப்புகள் உள்ளிட்ட சமகால பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, மாவட்டத்தின் நிலம் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் தீர்மானங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டன.
இதில் முக்கிய தீர்மானமாக மாவட்டத்தில் திட்டமிட்டு நடைபெற்றுவரும் இனங்களுக்கிடையில் முரண்நிலையை தோற்றுவிக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்பை கண்டிப்பதோடு, குறிப்பாக பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் காணிகளுக்கு காணி பத்திரம் வழங்காமல் கால இழுத்தடிப்புகளை செய்துவிட்டு, தற்போது வன இலாகாவுக்கு சொந்தமானது எனக்கூறி, அங்கிருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிக் கொண்டிருப்பதையும், சமகாலத்தில் பாரியளவில் காடுகள் அசூர வேகத்தில் அழிக்கப்பட்டு உடனடியாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு இனங்களுக்கிடையில் விரிசலையும், கசப்புணர்வையும் உண்டுபண்ணும் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் கண்டித்து, இவை தொடர்பான தகவல்களை திரட்டி மாவட்ட அரச அதிபர் ஊடாக வரும் வாரமளவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 13.06.2013 அன்று கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியின் மாணவன் சிவசூரியகுமாரன் சரன்ராஜ்ஜை மீட்பது தொடர்பில் பெற்றோர் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பக்கபலமாக இருப்பதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய விசமிகளை வவுனியா பொலிஸார் உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், கடத்தப்பட்ட மாணவனை உடனடியாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து, தம் பிள்ளைகள் தொடர்பில் ஒவ்வொரு பெற்றோரிடமும் ஏற்பட்டிருக்கும் கவலைகள் மற்றும் பயப்பீதியைப்போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமெனவும் வவுனியா மக்கள் சார்பாக பிரஜைகள் குழு வலியுறுத்துகிறது.
நடிகை லலிதா குமாரியை விவாகரத்து செய்துவிட்டு பொலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவை மறுமணம் செய்துகொண்டார் பிரகாஷ்ராஜ். 45 வயதான இவர் தன்னைவிட 12 வயது இளையவரான போனியை திருமணம் செய்துகொண்டது பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: என் முதல் மனைவி லலிதாகுமாரியுடன் எனக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. எங்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன். இதில் மகன் இறந்துவிட்டான்.
லலிதாவை விவாகரத்து செய்யப்போவது பற்றியும் போனி வர்மாவை திருமணம் செய்யப்போவதுபற்றியும் என் மகள்களிடம் பேசினேன். அவர்களின் அனுமதி கேட்டேன். பிறகு இருதரப்பிலும் பெரியவர்களிடம் பேசினேன்.
முதலில் அதிர்ச்சி அடைந்தார்கள் பிறகு ஒப்புதல் அளித்தார்கள். சட்டப்படி லலிதாவை பிரிந்தாலும் எனது அலுவலகம் இன்னும் அவர் வீட்டில்தான் இயங்குகிறது. போனியை மணந்தபிறகு என் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. என் மகள்களுடன் அவர் பாசத்துடன் இருக்கிறார். என் வாழ்வில் மிகுந்த சோகத்தை தந்தது மகனின் இறப்புதான்.
முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும் இருவருக்கும் சண்டை சச்சரவு ஏற்பட்டது கிடையாது.
இருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.
சூர்யா – கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா “ஸ்டுடியோ க்ரீன்” என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே நேரடியாகத் தயாரிக்கிறது. மற்ற படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.
அண்ணன் – தம்பியாக இருந்தாலும் சூர்யாவைவிட கார்த்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஞானவேல்ராஜா. குறிப்பாக, சூர்யாவைத் தேடி வரும் வாய்ப்புகளை கார்த்திற்கு மாற்றி விடுகிறார்களாம்.
வெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து “பிரியாணி”ஐ இயக்கி வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து “ஆல் இன் ஆல் அழகுராஜா” இயக்கி வருகிறார்.
“சிங்கம்-2” முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோவதைக் கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.
வாய்ப்புகள் பறிபோனாலும் பரவாயில்லை திறமையான சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம்வெதும்பிப் புலம்புகிறாராம் சூர்யா.
இதை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று கருதித்தான், சொந்தமாகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா. D – Diya, D – Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து ‘2D Entertainment’ என்று பெயரிட்டு இருக்கிறார்.
சினிமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த கையோடு தான் நடித்த “சிங்கம்-2” படத்தை பெரும்பாலான இடங்களில் சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறார் சூர்யா.
தற்போது “சிங்கம்-2” படத்திற்கு செய்த விளம்பரத்தைப் பார்த்து, தான் நடிக்கும் “பிரியாணி” படத்துக்கும் அதுபோலவே பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் கார்த்தி.
அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் அவுஸ்திரேலிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த ப்ந்து வீச்சாளரான வபத் அகமத் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்தார்.
பின்னர் பாகிஸ்தானில் பெண் கல்வி வளர்ச்சிக்காக உதவி செய்து வந்தார். இதற்கு தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால விசாவில் வந்தார் வபத் அகமத்.
பின்னர் அவுஸ்திரேலியா அணிக்காகவும் விளையாடினார். இதைத் தொடர்ந்து நிரந்தரமாக அவுஸ்திரேலியாவிலேயே தஞ்சமடையவும் அவர் முடிவு செய்தார். இதற்காக குடியுரிமை கோரி வபத் அகமத் விண்ணப்பித்தார்.
விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் வபத் அகமத்துக்கு விரைவாகவே குடியுரிமை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அவர் அவுஸ்திரேலிய அணியிலும் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி, வபத் அகமத்தின் வருகையால் அவுஸ்திரேலியா அணி புது பலம் பெறுகிறது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது மைதானத்தில் வைத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டதற்காக முதலில் சண்டையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜாவும், பதிலுக்கு வாயை விட்ட சுரேஷ் ரெய்னாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின்போது கேட்ச் பிடிப்பது தொடர்பாக ஜடேஜாவுக்கும், ரெய்னாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு விட்டது.
சீனியர் வீரரான ரெய்னாவை மைதானத்தில் வைத்தே ஜடேஜா திட்ட, பதிலுக்கு ரெய்னா திட்ட களேபரமாகி விட்டது. கேப்டன் கோஹ்லி தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தினார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நடந்த சம்பவம் தொடர்பாக அணி மேலாளரிடம் ஜடேஜாவும், ரெய்னாவும் பேசியுள்ளனர். நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதுமாதிரி மறுபடியும் நடக்காது என்று உறுதியளித்துள்ளனர். இருவரும் தேசிய கிரிக்கெட் வீரர்கள் என்ற தங்களது தகுதியை மறக்காமல் இனி நடந்து கொள்வோம் என்றும் சொல்லியுள்ளனர் என்றார்.
இதற்கிடைய இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அணி மேலாளர் எம்.வி.ஸ்ரீதரிடம் கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இருப்பினும் இரு வீரர்கள் மீதும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் இடைக்கிடை மைதானத்தில் இது போன்ற வாய்ச்சண்டையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவது என வாயில் சிகரெட்டை வைத்த படியே யோசிப்வர்களுக்கு மத்தியில் தனது கடின முயற்சியால் அந்த தீய பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் ஒருவர்.
இதற்காக அவர் தனக்குத் தானே விஷேட தலைக்கவசம் ஒன்றையும் தயாரித்துள்ளாராம். அதை நாள் முழுவதும் தலையிலேயே மாட்டி புகைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் இப்ராஹிம் யூசுல் என்ற 42 வயது துருக்கி மனிதர்.
இவர் கடந்த 26 வருடங்களாக, தினமும் இரண்டு பக்கெட் சிகரெட் பிடிக்குமளவிற்கு புகைக்கு அடிமையாக இருந்துள்ளார். அதில் மீள எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்ததாம்.
தனது பிறந்த நாள், தனது பிள்ளைகளின் பிறந்த நாள், மனைவியின் பிறந்த நாள், அவரது மணநாள், புத்தாண்டு என ஒரு நாள் விடாமல் சிகரெட்டை விட்டு விடப் போவதாக சபதம் எடுப்பாராம் இப்ராஹிம். ஆனால் அந்த மன உறுதியெல்லாம் நான்கைந்து நாட்களில் காணாமல் போய்விடுமாம்.
என்ன செய்யலாம் என ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கண்டறிந்தது தானாம் இந்த வயர் ஹெல்மெட். தானே அதனை வடிவமைத்தும் உள்ளார். இந்த வயர் ஹெல்மெட்டை காலையில் எழுந்ததும் தலையில் மாட்டிக் கொள்வாராம் இப்ராஹிம். பின் இரவுப் படுக்கப் போகும் போது தான் கழட்டி வைப்பாராம்.
இந்த ஹெல்மெட்டிற்கு இரண்டு சாவிகள் உண்டாம். ஒன்று அவரது மனைவியிடமும், மற்றொன்று அவரது மூத்த மகளிடமும் இருக்குமாம். சாப்பிடும் போது மட்டும் அவர்கள் திறந்து விடுவார்களாம். இப்ராஹிம்மின் தந்தை நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானாராம்.
தானும் அதுபோலவே தனது குடும்பத்தை தவிக்க விட்டு விடக் கூடாது என்பதாலேயே இந்த ஹெல்மெட் கண்டுபிடித்தாராம்.
பொது இடங்களில் இந்த ஹெல்மெட்டை அணிந்து செல்ல ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்ததாம்.ஆனால் இப்போது வெட்கமும் குறைந்து விட்டதாம் புகைப் பிடிக்கும் பழக்கமும் குறைந்து விட்டதாம்.
ஒரேயொரு அரச இலை இருந்தால் போதும். மொபைல் பேட்ரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.
நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மொபைல் சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம்.
காட்டுப்பகுதியில்கூட மொபைலை இலகுவாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும். ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ ஓட்டுனர் . இவர் 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார்.
அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. மொபைலில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் மொபைலை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.
அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக மொபைலை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். மொபைல் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.
மொபைல் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.
அரச இலை காம்பை பேட்டரிக்கும் மொபைலில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார்.
அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு மொபைல் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது மொபைலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.
பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை மொபைலின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் மொபைல் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது.
மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும். அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை மொபைலில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.
வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார்.
யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில், கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசில் வழங்கல். இந்திய அரசு இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் கற்பதற்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் 290 பேருக்கு புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் 120 பேருக்கும், ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் 25 பேருக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திர சுற்றுவட்ட புலமைப்பரிசில் இரண்டு பேருக்கும், பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு ஐந்து பேருக்கும், சார்க் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு மூன்று பேருக்கும், மௌலானா ஆஸாத் புலமைப்பரிசில் 50 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் வழங்கலில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இந்த 24 பேரில் 13 பேர் மூன்று வருட கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுநலவாய மற்றும் சார்க் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 7 பேருக்கு கலாநிதிப்பட்ட ஆய்வு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய துணைத்தூதுரகம் அறிவித்துள்ளது. இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்த செலவினக் கொடுப்பனவு, பாடநெறியின் காலப்பகுதி முழுமைக்குமான கல்விக் கட்டணம், தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் புத்தகங்கள், காகிதாதிகளுக்கான வருடாந்தக் கொடுப்பனவு ஆகியன வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் பெற்றவர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதார வசதி, இலங்கையிலிருந்து செல்லும் போது இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்துக்கான விமானப் பயணக் கொடுப்பனவு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கான கல்விச் சுற்றுலாக் கொடுப்பனவுடன் மேலும் பல உதிரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசாங்கமானது புலமைப் பரிசில்களை திறமை அடிப்படையில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வருவதாகவும், புலமைப்பரிசில் தெரிவுகள் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ஜானக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணியுடனேயே முடிவடைந் திருக்க வேண்டிய ரயில்வே வேலை நிறுத்தம் போக்குவரத்து துறையமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சுமுகமான பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இடைநடுவே கைவிடப் பட்டதாகவும் அவர் கூறினார்.
ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து நேற்று மாலை 5 மணியளவில் முதலாவது ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு முகாமையாளர் ரத்னநாயக்க கூறினார்.
பணிக்கு திரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கையினைப் பொருட்டே நேற்றைய தினம் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும் இன்று காலை முதலே அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்புமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நேற்று கூறினார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சின் அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலயங்களுக்கும் மேல் நடத்திய பேச்சுவார்த்தையினையடுத்து அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவு செய்யப்படுமென கூறியதனைத் தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் நேற்று இடைநடுவே தமது வேலை நிறுத்தத்தை கைவிட்டன.
உலகம் அழியும் நிலைமை உண்டாகி அனைத்து உயிரினங்களும் அழிந்தாலும், கடைசியாகத் தான் மூட்டைப்பூச்சி அழியும் என விஞ்ஞானி ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
சிறிய உயிரினமாக இருந்தாலும் மூட்டைப்பூச்சியின் சிறப்பு பற்றி அறிந்தால் ஆச்சர்யப் படுவீர்கள்.
உலகில் கடைசி வரை தாக்குப்பிடித்து வாழக்கூடிய சக்தி மூட்டைப்பூச்சிக்கு மட்டுமே உண்டு என லண்டன் விஞ்ஞானி ஒருவர் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.
சென்ட் அண்ட் ரூஸ் பல்கலைக்கழக வானவியல் உயிரின நிபுணர் ஜோக்.மல்லே ஜேம்ஸ் இன்னும் 280 கோடி ஆண்டுகளில் உலகம் அழியும் என கண்டுபிடித்துள்ளாராம்.
அப்போது, உலக வெப்பமயமாதல் காரணமாக சூரியனிடம் இருந்து மிக கடுமையான வெப்பம் பூமியை தாக்கும் என அவர் கூறுகிறார். அதன் மூலம் ஏற்படும் இரசாயன மாற்றம் காரணமாக ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன்டை ஆக்சைடு அளவு விகிதம் அதிகரிக்கும்.
இதனால் தாவரங்கள், மிருகங்கள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக அழிந்து போகுமாம். ஆனால், மூட்டைபூச்சிகள் மட்டுமே கடைசி வரை உயிர் வாழுமாம். ஏனெனில் இவை நீரின்றியும், அதிக வெப்ப சக்தியை தாங்கியும் வாழக் கூடிய உயிரினம் என தெரிவித்துள்ளார் ஜோக்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மீனவ சங்க பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை நிறுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த திங்கட்கிழமையில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மீனவர் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் முக்கியஸ்தர்களும்,மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினராகிய நான் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டரிந்து கொண்டேன்.
இது வரை எந்த ஒரு அரசாங்க அதிகாரிகளும் தம்மை வந்து பார்வையிடவில்லை என அவர்கள் என்னிடம் சுட்டிக்காட்டியதையடுத்து அரசாங்க அதிபரை சந்தித்து உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சங்க பிரதிநிதிகளுடன் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தேன்.
தமது கோரிக்கைகளை நேரிலும் எழுத்திலும் விரிவாக அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறிய மீனவ பிரதிநிதிகள் வெளிமாவட்ட மீனவர்களின் சட்ட விரோத மீன் பிடியினையும், அத்து மீறிய குடியேற்றத்தையும் உடன் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாது விட்டால் தமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என உறுதியுடன் அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடையம் தொடர்பாக மேலும் கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மீன் பிடித்துரை அமைச்சின் பனிப்புரைகளை மாவட்ட மீன் பிடி திணைக்களமே பொலிசாரே அமுல்படுத்துவது இல்லை எனவும் பாதுகாப்புத் தரப்பினர் அதிகாரம் மிக்கவர்களாக செயற்படுவதினாலும் ஒத்துழைப்பு வழங்குவதினாலும் வெளி மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாகவும் சட்டத்திற்கு முரணாகவும் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என கூறினார்.
அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் மீனவ பிரதிநிதிகளுக்குமிடையிலான நீண்ட கலந்துரையாடலின் பின் அரசாங்க அதிபர் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினிருக்கு அறிவித்து ஏற்ற ஒழுங்குகளை செய்வதாகவும் கூறிச் சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.
சோமாலியக் கடற்கொள்ளையர்களால் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் முன்னர் கைப்பற்றப்பட்ட மலேசியப் பதிவு பெற்ற சரக்குக் கப்பல் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கடலில் மூழ்கியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களில் சில இலங்கையர்களும் இருந்தனர். இவர்களில் பலர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக முதலில் வந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்கள் இவர்களை விடுவிக்க பணயத்தொகைக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கப்பல் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் அந்தக் கப்பலில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த மொஹமது பிஸ்தாமி என்ற கப்பல் பொறியாளரும் ஒருவர்.
அவரது நிலை குறித்து தற்போது மாலத்தீவில் வசிக்கும் ,அவரது மகளான பர்ஹானா பிஸ்தாமி தெரிவித்ததாவது,
தனது தந்தை ஜுன் மாத இறுதியில் தன்னிடம் பேசியதாகவும் அப்போது கப்பல் மூழ்குவதாக அவர் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறினார். ஆனால் இந்த செய்தி கிடைத்த பின்னர் ஐரோப்பிய கடற்படையினருடன் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் தாங்கள் இதுவரை இந்தக் கடற்பகுதியில் தேடியபோது எந்த உடலும் கிடைக்கவில்லை என்று கூறியதாகத் தெரிவித்தார்.
ஆனாலும், தொடர்ந்து இந்த கப்பலைக் கைப்பற்றிய கடற்கொள்ளையர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும் இது குறித்த தகவல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இலங்கை அரசு கப்பலில் பணயக்கைதிகளாகப் பிடிபட்ட இலங்கைப் பிரஜைகளை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் பர்ஹானா.
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து – அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் முறையாக இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (ஓவல் மைதானம்) டெஸ்ட் போட்டியில் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் திகதி வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணியின் இந்த முதல் தோல்வியை அந்த நாட்டு பத்திரிகை ஒன்று கடுமையாக விமர்சித்து இருந்தது.
அதில் இங்கிலாந்து கிரிக்கெட்டை, அவுஸ்திரேலிய அணி கொன்று அதன் பிணத்தை எரித்து சாம்பல்களை (ஆஷஸ்) அதன் சொந்த நாட்டுக்கு எடுத்து சென்று விட்டது என்று குறிப்பிடப்பட்டது.
அன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இரு நாடுகள் இடையேயான பாரம்பரியமும், கௌரவமும் மிக்க இந்த போட்டி தொடருக்கு இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் நிலவுகிறது.
இந்த டெஸ்ட் போட்டி தொடர் தற்போது 5 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி அதிக வெற்றிகளை குவித்தாலும், பின்னர் அவுஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது.
ஆனால் கடந்த 2009-ம் ஆண்டு (2-1), 2011-ம் ஆண்டு (2-1) ஆகியவற்றில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தொடரை கைப்பற்றி வலுவாக விளங்குகிறது.
இந்த ஆண்டுக்கான ஆஷஸ் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் அலஸ்டயர் குக் தலைமையில் இங்கிலாந்து அணியும், மைக்கேல் கிளார்க் தலைமையில் அவுஸ்திரேலிய அணியும் கோதாவில் குதிக்கின்றன.
இரு தலைவர்களும் தலா 92 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர். இருவருமே தங்களது அறிமுக டெஸ்டில் சதம் கண்டதுடன் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களாக விளங்கி வருகிறார்கள்.
இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றும் இருப்பதால் இந்த போட்டி தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூரில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
டெஸ்ட் தர வரிசையில் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும், அவுஸ்திரேலிய அணி 4-வது இடத்திலும் உள்ளன.
இந்த போட்டி குறித்து அவுஸ்திரேலிய அணி தலைவர் மைக்கேல் கிளார்க் கூறுகையில்,
“இந்த போட்டி தொடர் எனது தலைமைத்துவ திறனை முடிவு செய்யும் என்று சொல்வதை நான் நம்பவில்லை. எல்லா நேரங்களிலும், எந்த அணிக்காகவும் விளையாடினாலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.
அந்த மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஷஸ் தொடருக்கு கடுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லா முறையும் அணி வெல்ல வேண்டியது என்பதே எனது விருப்பமாகும்” என்றார்.
இதேவேளை, இங்கிலாந்து தலைவர் அலஸ்டயர் குக் கூறுகையில், “இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் இருக்கிறது. அதற்காக இந்த போட்டி கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைக்கவில்லை. ஆஷஸ் தொடரை வென்ற பசுமையான நினைவுகள் உள்ளன. அந்த வெற்றியை தொடர முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஷஸ் தொடருக்கான இரு நாட்டு அணிகள் வருமாறு:-
அவுஸ்திரேலியா: மைக்கல் கிளாக் (தலைவர்), பிராட் ஹாடின், ஷேன் வட்சன், எட்கோவன், டேவிட் வார்னர், பில் யூக்ஸ், ஸ்டீவ் சுமித், உஸ்மான் ஹவாஜா, மத்யூ வேட், ஜேம்ஸ் பவுல்க்னெர், நாதன் லயன், பீட்டல் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்செல் ஸ்டார்க், ரையான் ஹாரிஸ், ஜாக்சன் பேர்டு.
இங்கிலாந்து: அலஸ்டயர் குக் (தலைவர்), ஜோ ரூட், ஜோனதன் டிராட், கெவின் பீட்டர்சன், இயன்பெல், பேர்ஸ்டோவ், மாட் பிரையர், டிம் பிரிஸ்னன், ஸ்டூவட் பிராட், ஸ்வான், ஸ்டீவன் பின், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரகம் ஆனியன்ஸ்.
ஜம்மு எல்லை கட்டுப்பாட்டு பகுதியான லடாக்கில் சீன துருப்புகள் மீண்டும் அத்துமீறி நுழைந்து, இந்திய வீரர்களிடம் ஹிந்தியில் எல்லையை விட்டு போக சொல்லி மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய சீன எல்லை பகுதியின் லடாக் இந்திய எல்லை கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. இந்த பகுதியில் சீன துறுப்புகள் தொடர்ந்து அத்துமீறி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 3ம் திகதி இரு நாட்டு படைகளும் கொடி அமர்வு பேச்சில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் சீனப் படைகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு லே-லடாக் எல்லையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அங்குள்ளவர்களை ஹிந்தி மொழியில் மிரட்டியுள்ளனர்.
மேலும் அங்கு இந்திய இராணுவம் வைத்திருந்த உயர் தொழில் நுட்ப கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இந்திய இராணுவத்தினருக்கும் சீன இராணுவத்தினருக்கும் கடுமையான, வாக்குவாதமும் ஏற்பட்டதாம். இதனையடுத்து ஃபிளாக் மீட்டிங்கில் கமரா ஒப்படைக்கப்பட்டதாம்!
மேலே குறிப்பிட்ட சீனாவின் அராஜக கமரா உடைப்பு சம்பவம், ஜூன் 17ஆம் திகதி தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்திற்கு அருகில் உள்ள சுமூர் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது. அது எங்கள் இடம் என்று சீனா கோரியுள்ளது. இதனை இந்திய உளவு அமைப்பு இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை இந்திய-திபெத்திய பொலிஸும் உறுதி செய்துள்ளது.
சீன அரசியலில் நடைபெறும் உள்குத்துதான் இத்தகைய ஊடுருவலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் மக்கள் விடுதலை இராணுவ நேவி அமைப்புக்களுக்கு இடையே நடைபெறும் அதிகார மோதல்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் சீனா தெற்குக் கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்து செயல்பட்டு வருகிறது. அதாவது கட்சியில் நான்தான் பெரிய ஆள் என்று நிரூபிக்க இத்தகைய ஊடுருவல்களும், ஆதிக்கங்களும் தேவைப்படுவதாக தெரிகிறது.