பப்புவா நியூ குனியாவில் பயங்கர நிலநடுக்கம்..!

தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ குனியாவில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை4.35 மணிக்கு நியூ அயர்லாந்து தீவில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

தரைமட்டத்தில் இருந்து 379 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் நியூ அயர்ல்ந்து மற்றும் தரோன் பகுதிகள் கடுமையாக குலுங்கின.

இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நியூ பிரிட்டன் பகுதியில் உள்ள கண்ட்ரியன் நகரை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில்6.8 என பதிவாகிய இந்த நிலநடுக்கம் தரை மட்டத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்று அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஏற்பட்டதால் அதிகமான பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும்,சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் ‘நெருப்பு வளையம்’ பகுதிக்குள் அடங்கியுள்ள நாடுகளில் ஒன்று பப்புவா நியூ குனியா என்பது குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் ஆன்டி முர்ரே..!

இங்கிலாந்தின் 77 ஆண்டு கால சாம்பியன்பட்ட ஏக்கத்தைப் போக்கி, விம்பிள்டன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார் ஆன்டி முர்ரே.

பலமான, அனுபவசாலியான செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தியே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

முர்ரே, ஜோகோவிச்சை 6- 4, 7- 5, 6- 4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாதனை சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன் நகரில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முதற்தர வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 2-ம் நிலை வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவும் நேற்று மோதினர்.

உள்ளூர் இரசிகர்களின் பலத்த ஆதரவுடன் ஆடிய முர்ரேவின் ஆதிக்கம் படிப்படியாக தலைதூக்கியது. முதலாவது செட்டில், ஜோகோவிச்சின் 7-வது கேமை பிரேக் செய்து முதல் செட்டை தனதாக்கினார்.

முர்ரே.2-வது செட்டிலும் இதே யுத்தம் தொடர்ந்தது. இந்த செட்டில் ஜோகோவிச் நிறைய தவறுகளை இழைத்ததால், இந்த செட்டையும் முர்ரே வசப்படுத்தினார். இதையடுத்து 3-வது செட்டிலும் முர்ரே ஆதிக்கம் தொடர்ந்தது.

இதிலும் முர்ரே தனக்கே உரிய பாணியில் முத்திரை பதித்தார். மணிக்கு 131 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்ட முர்ரே, மொத்தம் 9 ஏஸ் சர்வீஸ்களும் போட்டுத் தாக்கினார்.

3வது செட்டில் இத்தனைக்கும் ஜோகோவிச் முர்ரேயின் சர்வீஸ் ஒன்றை முறியடித்து 4- 2 என்று முன்னிலை பெற்றிருந்தார். இருந்தபோதும் ஜோகோவிச் மேலும் தவறுகளைச் செய்து தன் சொந்த சர்வையே இழக்க சாம்பியன் பட்டமும் கைநழுவிப் போனது.

இறுதியில் முர்ரே வெற்றியை நெருங்கிய சமயத்தில், ஜோகோவிச் அவரது மூன்று சாம்பியன்ஷிப் பாயிண்டுகளை தடுத்தார். இதனால் 10-வது கேம் மட்டும் 10 நிமிடத்திற்கு மேலாக நகர்ந்தது. இறுதியில் ஜோகோவிச் பந்தை வலையில் அடித்து தவறு செய்ய, முர்ரே கழுத்தில் வெற்றிமாலை விழுந்தது.

இங்கிலாந்து வீரர் ஒருவர் விம்பிள்டன் பட்டத்தை வெல்வது 77 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு கடைசியாக 1936-ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பிரெட் பெர்ரி விம்பிள்டனை வென்றிருந்தார்.

26 வயதான முர்ரேவுக்கு இது 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஏற்கனவே 2012-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை கைப்பற்றி இருந்தார்.

2011-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆட்டத்தில் அளவுக்கு அதிகமான தவறுகளை செய்தார். குறிப்பாக பந்தை வெளியே அடித்து தானாக செய்யக்கூடிய தவறுகளை (அன் ஃபோர்ஸ்டு எரர்ஸ்) 40 முறை ஜோகோவிச் செய்தது தான், பெரும் பின்னடைவாகிப் போனது.

3300 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு..!

நேபாளத்தில் 3,300 ஆண்டுகள் பழமையான கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.புத்தர் பிறந்த லும்பினி பகுதி இப்போது நேபாளத்தில் உள்ளது. அப்பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் அனைத்தும் மன்னர் அசோகர் காலத்தைச் சேர்ந்தவையாகவே இதுவரை கருதப்பட்டு வந்துள்ளன. அவர் கி.மு. 3ஆவது நூற்றாண்டில் லும்பினியில் ஒரு தூணையும்,கோவிலையும் கட்டினார். இப்பகுதியில் புத்த மததத்தைப் பரப்புவதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில், லும்பினி பகுதியில் சமீபத்தில் நேபாள மற்றும் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் சமீபத்தில் நடத்திய அகழாய்வின் மூலம், அசோகர் காலத்துக்கு முன்பே அங்கு கோவில் இருந்தது தெரிய வந்துள்ளது. அங்கு 3,300 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிராமமும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலின் சிதிலங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து நேபாள சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை செயலாளர் சுஷீல் கிமிரே, காத்மாண்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,இப்பகுதியை உலகளாவிய மதிப்பு மற்றும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற நேபாள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

லும்பினியில் புத்தர் பிறந்த பகுதிக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் கி.மு.1,300ஆம் ஆண்டில் இந்த கிராமம் இருந்துள்ளதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேற்றங்கள் நடந்துள்ளன. இது குறித்து பிரிட்டனின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபின் கோனிங்ஹாம் கூறுகையில், தெற்காசியாவில் முதன் முறையாக, அசோகர் காலத்துக்கு முந்தைய, செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் இருந்திருப்பது அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்றார்.

லும்பினி வளர்ச்சி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஆசார்ய கர்மா சாங்கோ ஷேர்பா கூறுகையில், தொன்மையான கோவில், கிராமம் ஆகிய இரண்டும் கண்டறியப்பட்டுள்ளது பெரிய நடவடிக்கையாகும். இவை, புத்தரின் வாழ்க்கை மற்றும் லும்பினியின் முக்கியத்துவம் ஆகியவற்றை நாம் நன்கு புரிந்து கொள்ள உதவும் என்றார்.லும்பினி கடந்த1997ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மழையினால் நிறுத்தப்பட்ட போட்டி இன்று தொடரும்..!

cricket

முத்தரப்பு கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5வது லீக் போட்டி இன்று தொடரவுள்ளது.

முத்தரப்பு கிரிக்கெட்டில், 5-வது லீக் போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று  போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை முடக்கம்: பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை..!

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறு போக்குவரத்துச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வரை பகிஸ்கரிப்பை கைவிடுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

என்னுள் இசையாகிறாய்..

திஸ்ட்ட நடையில்
துள்ளித்திரிந்தேன்
உனைப்பார்த்ததும்
சதுஸ்ட்ட நடையாகி
கல்யானி இசைக்கிறேன்..

ராகமாலிஹாவாய்
குளைகின்றாய்
நீலாம்பரியாய் தோளிடுகின்றேன்
வளைந்து மடியில்
வீணையாகின்றாய்
என் விரல் மூக்கின் நுணிபட
மூச்சு மோகனம் பாடுகிறது..

நான் தட்டிடுவேனெ
தவிலாகின்றாய்
தொட்டிட மனம்
நாயனமாகின்றது
விரல் முட்டிட முட்டிகள்
தபேலாவாகின்றது
இசை கொட்டிட மெட்டிட
உன் கண்களில் வரி தேடுகிறேன்..

எதுகையும் மோனையுமாய்
கண்கள் தொடங்கி
கண்டைக்கால் வரை
கவிதை பெருகுகின்றது..

உலகிலேயே நீளக்கானமென
கின்னஸ் குழு
எனைத் தேடுகின்றது.

-திசா.ஞானசந்திரன்-

சவுதியில் வேகமாக பரவி வரும் மர்ம நோய்..!

சவுதி அரேபியாவில் சார்ஸ் போன்ற விஷக்கிருமி தொற்றுக்கு நேற்று இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸ் கிருமி தொற்று நோய்க்கு சுமார் 800 பேர் பலியாகினர்.

இந்நோயின் முதல்கட்ட அறிகுறியாக லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். பின்னர், இடைவிடாத காய்ச்சலாக மாறி சில நாட்களுக்குள் நோயாளி மரணம் அடைய நேரிடும்.

இந்த நோய்க்கு மாற்று மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சவுதி அரேபியாவில் சார்ஸ் கிருமியைப் போன்றே கண்ணுக்கு புலப்படாத நோய் கிருமி தொற்றினால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக இந்நோயினால் பாதிக்கப்பட்ட 36 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மேலும் 2 பேர் பலியானதையடுத்து இந்த மர்ம நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இளவரசனின் மரணம் காதல், வீரத்தை போற்றும் தமிழ் இனத்துக்கு ஏற்பட்ட இழிவு..!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் மட்டுமின்றி, காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் வாழ்வில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியில்கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன, காதலை மையக்கருவாக வைத்து வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன.

இப்படி தமிழரின் வாழ்வில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால், சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக இளைய சமுதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

சூடுவெந்தபுலவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு ..!

வவுனியா மாவட்டத்தில் சூடுவெந்தபுலவு  மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால் நேற்றுமுன்தினம்  நாட்டி வைக்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இதற்கான நிதியினை பெற்றுக் கொடுத்திருந்தார்,வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன்,அமைச்சரின்வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி,வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கருத்துரைக்கையில்-

வன்னி மாவட்டத்தில் கற்ற சமூகத்தினை உருவாக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பணி இம்மாவட்ட மாணவ சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷமாகும்.

இனம்,மதம் என்பவைகள் கடந்து ஆற்றப்படும் பணிக்கு சகலரும் முழுமையான ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும்.மாணவர்களின் இலட்சியம் கல்வியிலேயே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஒத்தாசைாயக இருக்க வேண்டுமே அன்றி,உபத்திரோகமாக இருக்க கூடாது.கற்கின்ற வேண்டும் என்ற ஆசையும்,வேட்கையுமே மாணவர்களின் கண் முன் தோன்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

vavuniya

பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத்தண்டனை – சீன அரசு அதிரடி நடவடிக்கை..!

வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும், என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில், கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 60 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 17 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, வரும் 2030ல் இருமடங்காக, அதாவது, 34 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது, வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு, தங்கள் குடும்பம், பணி என்று இருக்கும் கலாசாரம் வெகுவாக பரவி வருகிறது.இதைத் தடுக்கவும், முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சீன அரசு முடிவு செய்துள்ளது.

பிள்ளைகள், பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும்; அல்லது அடிக்கடி சென்று அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், பெற்றோரை கண்டிக்கக்கூடாது. மீறினால், சிறைத் தண்டனை அளிக்கப்படும். இவ்வாறு, சீன அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்த தகவல்கள், அந்நாட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வயதான பெற்றோரை மதிப்பதாக கூறும் அந்நாட்டு மக்கள், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்.மேலும், இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகாமல், உணர்வுபூர்வமாக அணுக வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.

விஸ்வரூபம் 2 புதிய செய்திகள்..

viswaroopam

விஸ்வரூபம் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. கமல், சேகர் கபூர், ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

விஸ்வரூபம் 2 படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டே படத்தினை வெளியிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் கமல். செப்டம்பரில் படத்தினை வெளியிட அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறாராம் கமல். கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்தினை தயாரித்து வருகிறது ஓஸ்கர் நிறுவனம்.

விஸ்வரூபம் படத்தில் இல்லாத 2 பேரை விஸ்வரூபம் 2வில் இணைத்து இருக்கிறார் கமல். வாஹாதே ரஹ்மான் மற்றும் ஆனந்த் மஹாதேவன் ஆகிய இருவரும் விஸ்வரூபம் 2வில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி விஸ்வரூபம் படம் 2:20 மணி நேரப் படம். ஆனால் விஸ்வரூபம் படத்தின் நீளத்தினை 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

சென்னையில் நடைபெற்ற விஸ்வரூபம் 2 இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. சுமார் 90% படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சில காட்சிகளை டெல்லி, புனேவில் படமாக்க இருக்கிறார்கள்.

விஸ்வரூபம் 2 படத்தினைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல்.

 

 

மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!

Director Selvaraghavan Photos Pictures Stills

இயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.

ஆர்யா நடித்துள்ள “இரண்டாம் உலகம்” பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு முன்பு “இரண்டாம் உலகம்” படப்பணிகளில் இருந்த போது நெஞ்சுவலிப்பதாகக் கூற, பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறி உள்ளனர். அதோடு வயிறு தொடர்பான தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருக்கின்றனர்.

இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள செல்வராகவன் மனைவி, “மிகப்பெரிய அபாயம் எதுவும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

மது, சிகரெட் இரண்டையும் தொடவே கூடாது என மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். “மதுவும், சிகரெட்டும் இல்லாமல் எப்படி அருமையாக இருக்கிறேன் என்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை” என டுவிட்டரில் தட்டியிருக்கிறார் செல்வராகவன்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள செல்வராகவன், மறுபடியும் “இரண்டாம் உலகம்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஓகஸ்ட்டில் ரிலீஸ் செய்யும் வகையில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அஸ்தமனத்தை நோக்கி செல்லும் yahoo??

yahoo

இணையத் தேடல் உட்பட பல சேவைகளை வழங்கிவரும் முன்னணி நிறுவனமாகத் திகழும் Yahoo ஆனது அதன் சில சேவைகளை நிறுவத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன் படி Yahoo Axis, Browser Plus, Citizen Sports, Webplayer, FoxyTunes, RSS Alerts மற்றும் AltaVista போன்ற தேடுபொறி ஆகியவற்றினை நிரந்தரமாக நிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் டம்ளர் தளத்தினை கொள்வனவு செய்திருந்த நிலையில் தற்போது இந்த அதிரடி முடிவை யாகூ நிறுவனம் எடுத்துள்ளது.

இதேபோன்று கூகுள் நிறுவனமானது நேற்றைய தினத்துடன் தனது கூகுள் றீடர்(Google Reader) சேவைக்கு விடைகொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா?

நீங்கள் பயன்படுத்தும் நாணய குற்றிகள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்று தெரியுமா? கீழே உள்ள காணொளியை பாருங்கள்..

13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – இந்தியா..

Salman Khurshid
இலங்கையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் சரத்துக்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவற்றை நீர்த்துப் போகச் செய்யாமல் அவற்றுக்கு அப்பாலும் சென்று அந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா இலங்கைக்கு கூறியுள்ளது.
தமிழர்கள் அதிகமாக வாழும் வட மாகாணத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இந்தியாவின் இந்த கூற்று வந்திருக்கிறது.

இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித்தை சந்தித்துள்ளார். அப்போது இலங்கையின் வட மாகாணத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயத்தை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பசில் ராஜபக்ஷ தெரிவித்த போதே, இந்தியாவின் இந்தக் கருத்தை குர்சித் அவர்கள் இலங்கை அமைச்சரிடம் கூறியுள்ளார்.

வடமாகாண தேர்தல் அறிவிக்கப்பட்டமை குறித்து தனது வரவேற்பை தெரிவித்த இந்திய அமைச்சர் குர்சித் அவர்கள், அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அதற்கும் அப்பாலும் சென்று இலங்கையில் அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எதுவும் செய்யப்படக் கூடாது என்றும் அவர் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது பங்குக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்கள் குறித்து இலங்கை அமைச்சர் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார். இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மிகவும் சிறப்பாக செயற்படுவது குறித்து, குறிப்பாக இந்தியாவின் வீடமைப்புத் திட்டம் குறித்து, இலங்கை மக்கள் மத்தியில் பரந்துபட்ட வரவேற்பு இருப்பதாகவும் இலங்கை அமைச்சர் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடமாகாண தேர்தலுக்கு முன்னதாக, மாகாணங்களுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக வந்த செய்திகள் பற்றிய கவலைகள் பற்றி அண்மையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் குர்சித் அவர்கள், 13வது திருத்தம் மாற்றப்படாமல் இருப்பதன் தேவை குறித்து அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தச் சட்டம் தொடர்பாக இலங்கை முன்னதாக தெரிவித்த கரிசனைகளுக்கு மாறாக, இலங்கை எதுவும் செய்யக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார். பசில் ராஜபக்ஷ அவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

-BBC தமிழ்-

மேற்கிந்திய தீவு அணியுடன் இலங்கைக்கு இன்று பலப்பரீட்சை..

sl

முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற இருக்கும் 5-வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

2 வெற்றியுடன் 9 புள்ளிகளுடன் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

மாறாக இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதில் நெருக்கடி அதிகரிக்கும்.

இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகிறது.

இங்கு இன்று மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.