22 வயது பெண்ணை திருமணம் செய்த 92 வயது முதியவர்!!

thaatha

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள சமாராவை ஒட்டியுள்ள குப்பான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி முகம்மது அல்-முஜ்மாயி. தற்போது 92 வயதை கடந்த இவர், பூர்வீகமாக விவசாய தொழில் செய்து வந்தார். இவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி 58வது வயதில் காலமானார்.

இதே வேளை தன்னை விட 70 வயது குறைவான 22 வயது இளம்பெண்ணை நேற்று மாலை திருமணம் செய்து உள்ளூர் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த தாத்தா.இதில் வேடிக்கை என்னவென்றால், இவருடன் இவரது பேரன்கள் இருவருக்கும் நேற்று ஒரே மேடையில் திருமணம் நடந்தது என்பதுதான்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த திருமண விழாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுதல் என்ற அனைத்து கேளிக்கை அம்சங்களுடனும் ஆடம்பரமாக அரங்கேறியது.
எனது பேரன்களுடன் ஒரே மேடையில் திருமணம் செய்துக்கொண்ட அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. 20 வயதே ஆன இளைஞனாக என்னை உணர்கிறேன்´ என்று நமட்டு சிரிப்புடம் கூறுகிறார், புது மாப்பிள்ளை முசாலி முகம்மது அல்-முஜ்மாயி.

இந்திய புத்தகயா – மகாபோதிக்கு அருகில் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு..

bomb
இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் உள்ள மகாபோதி விகாரைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மகாபோதி விகாரைக்கு அருகில் இன்று காலை 6 வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குண்டு வெடிப்பில் கோயிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை..

பௌத்த மதத்தினரின் முக்கிய விகாரையாக மகாபோதி கோவில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான முதல் காஷ்மீர் வீரர்..

rasool

இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

இஸ்லாமியரான 24 வயது பர்வேஸ் ரஸூல் சிம்பாவேவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் கிரிக்கெட் அரங்கம் ஒன்றுக்கு வெளியே தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தபோது, பொலிசார் ரஸூலை விசாரித்திருந்தனர். ஆனால் அவர் மீது குற்றச்சாட்டு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

தான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனே ஒழிய பயங்கரவாதி அல்ல என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக பர்வேஸ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர இளைஞர்களும் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று பரைசாற்றுவதாக ரஸூலின் தேர்வு அமைந்துள்ளது என அவருடைய ரசிகர்கள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய கடும் மழை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படுகிறது. இதனால் கரையோர பிரதேசங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை ஆரம்பித்த இந்த காற்றுடன் கூடிய மழை இன்னும் தொடர்வதாக அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கும் எமது மட்டக்களப்பு செய்தியாளர் சேதவிபரங்கள் முழுமையாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

குவைத்தில் எஜமானின் பணத்தை திருடிய இலங்கையர் கைது..!

குவைத் – ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரிக்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டு ஆடை மாற்றுவதற்கு வீட்டுக்குள் சென்றவேளை தனது பணம் திருடப்பட்டதாக தொழில் தருணர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் வெட்டோரி தற்காலிக ஓய்வு..!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான டேனியல் வெட்டோரி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டார். சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முடிந்ததும் காயத்துக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வரும் கிரிக்கட் பருவ காலத்துக்கான நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தத்தை ஏற்க வெட்டோரி திடீரென மறுத்து விட்டார். அது ஏன் என்பது குறித்து நேற்று நிருபர்களிடம் விளக்கி கூறினார்.

´காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து மறுபடியும் எப்போது கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை என்னால் இப்போது உறுதியாக கூற முடியாது. இத்தகைய சூழலில் ஒப்பந்தத்தை நான் ஏற்றுக் கொண்டால், அது தவறானதாக அமைந்து விடும்.

காயத்தில் இருந்து சீராக, அடுத்த 6 மாத காலத்திற்கு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். இந்த காலக்கட்டத்தில் முழு உடல்தகுதியை எட்டுவதில் கவனம் செலுத்துவேன்.

அதன் பிறகு தான் எனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு செய்ய முடியும். கோடை கால பருவத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதே எனது இலக்காகும்´ என்றார்.

மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் – 19 பேர் பலி..!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் கடந்த 2008ம் ஆண்டிலிருது ஷியா-சன்னி பிரிவினருக்கு இடையே இனமோதல்கள் தலைவிரித்தாடுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்ற பல்வேறு இனமோதல் சம்பவங்களில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்களில் 19 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தின் கிரையத் பகுதியில் உள்ள ஹுசைனி அலி பாஷா மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்தபோது திடீரென்று உடலில் கட்டிய குண்டுகளுடன் தற்கொலைப்படை தீவிரவாதி உள்ளே நுழைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குண்டை வெடிக்கச் செய்ததில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 15 ஷியா முஸ்லிம்கள் உடல் சிதறி பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர்.

பாக்தாத்தில் இருந்து 95 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சமாரா அருகே ஷியா பிரிவினர் நடத்திய பேரணிக்குள் சீறிப் பாய்ந்த குண்டுகள் நிரப்பிய வாகனம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலியாகினர் 8 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றைய தாக்குதல்களில் மட்டும் பாக்தாத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிகை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நடிகை ரோஜா 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை..!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார்.

இதையொட்டி விசாகபட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஷர்மிளா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 1 ஆண்டாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அரசியல் வாழ்க்கையில் அவர் தலை தூக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவரை பழிவாங்குகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் உடந்தையாக உள்ளது. அவர் ஜெயிலில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் 16 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.2014-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

ஷர்மிளா 200 நாள் பாதயாத்திரை சென்றதை தொடர்ந்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதியும் நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தேசம்மா கோவில் எனப்படும் சிவசக்தி அம்மன் கோவிலில் 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார்.

2014-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதி வேட்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நடிகை ரோஜா கூறியதாவது:-

ராஜசேகர ரெட்டி 1470 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். அவரது மகள் ஷர்மிளா தந்தையை மிஞ்சி 2664கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஷர்மிளா பாத யாத்திரையின் போது பொது மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டதால் ஜெகன் மோகன் ரெட்டியால் மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை இன்று 6.4அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சன்கைபெனு நகரத்திற்கு தென்மேற்கே 154 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 23 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4300கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மீட்புப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொப்பையை குறைக்க எளிய வழிகள்..!

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.

அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பின்பு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பு..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியும் அவரது பாரியரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த மாலைத்தீவு ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

slmal

மனிதனின் நீண்ட ஆயுளின் இரகசியம்..!

நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.

இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.

பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம். இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர்  “டாங் சே கெய்” [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது. ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில்NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.

நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது. NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.

NF -kB ஹைபோதாலமஸில்GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது. ”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு.

“குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது” என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்). இந்த ஆய்வு குறித்து “நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.

இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய்,வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் ) திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70சதவீதம் நீட்டிக்கிறதாம். பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற பரிந்துரை..!

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

அசைய முடியாத தாவர நிலையில் தொடர்ந்து இருப்பதால், அவர் சுவாசிப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றை அகற்றிவிடுவது பற்றி யோசிக்குமாறு மண்டேலாவின் வைத்தியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில மருத்துவ தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏ.எப்.ஃபி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வேதனையுடன் சுவாசத்தை தொடர்வதிலும் பார்க்க இது சிறந்த முடிவு என மருத்துவர்கள் கூறியுள்ளனராம். எனினும் இந்த அறிக்கைகள் குறித்து மருத்துவர்களோ, மண்டேலாவின் குடும்பத்தினரோ தகவல் எதுவும் பின்னர் வெளியிடவில்லை.

மண்டேலா இன்னமும் தான் யார் எனும் நினைவுகளை இழக்கைல்லை.  அவர் மிக மோசமான உடல்நிலையில் இருக்கிறார். ஆனால் சுயநினைவை இழக்கவில்லை. நாம் பேச முயற்சிக்கும் போது அவர் தனது கண்களையும், வாயையும் அசைத்து எம்முடன் பேச முற்படுகிறார் என மண்டேலாவின் நெருங்கிய நண்பர் டெனிஸ் கோல்ட்பேர்க் தெரிவித்துள்ளார்.

95 வயதாகும் மண்டேலா கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

9,10,11 திகதிகளில் கிளிநொச்சியில் நடமாடும் சேவை..!

தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நபர்களுக்காக கெபே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும்09, 10, 11 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றும் அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு வசதி செய்து கொடுக்கவென இந்த நட மாடும் சேவை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களம், நீதியான தும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் என் பன இணைந்து இந்நடமாடும் சேவையை நடாத்தவுள்ளன

2012 வாக்காளர் இடாப்புக்கு அமைய வட மாகாணத்தில் 85,000 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப் பதாகவும் அவர்களில் பலருக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியா திருப்பதற்கு அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாமையே காரணம் என தெரியவந்துள்ளது.

2013.07.09 காலை 9.30 – 4.00 ஸ்கந்தபுரம் பொது சந்தை தொகுதி கட்டடத்தில் வன்னேரிகுளம், ஆணைவிழுந்தான்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம்,கண்ணகைபுரம், கோனாவில், ஊற்றுபலம், புதுமுறிப்பு மக்களுக்கு நடமாடும் சேவையில் இடம்பெறவுள்ளது.

2013.07.10 காலை 9.30 – 4.00 கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் பொன்னகர், பாரதிநகர், மலையாள புரம்,விவாகனந்த நகர், கிறிஸ்ணபுரம், உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, அம்பால்குளம்,செல்வநகர், ஆனந்தபுரம், தொண்டமான் நகர், கனகாம்பிகை குளம், ஆம்பல் நகர்,திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம் கிளி – நகரம், பன்னன்கண்டி, கங்காபுரம்,துறைநகர் தெற்கு, துறைநகர் வடக்கு, கணேசபுரம், ஜெயந்தி நகர், பெரிய பரந்தன்,உருத்திரபுரம் வடக்கு, உருத்திரபுரம் தெற்கு, உருத்திரபுரம் மேற்கு, சிவநகர் மக்கள் கலந்து கொள்ள முடியும்.

2013.07.11 – காலை 9.30 – 4.00 வட்டக்கச்சி கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் மாவடியம்மன், ராமநாதபுரம், சிவிக் நிலையம்,மாயவனூர் பகுதி மக்கள் கலந்துகொள்ள முடியும்.

சிம்பாவே, இந்திய தொடர்-டோணிக்கு ஓய்வு..கோஹ்லி தலைவர்!

zimbabwe

சிம்பாவேக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாவேக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணித் தலைவராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். கோஹ்லி தலைமையிலான் இந்த அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, புஜாரா, தினேஷ் கார்த்திக், ராயுடு, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி அகமது, வினய் குமார், ஜெயதேவ் உனாட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி சிம்பாவேயை எதிர்கொள்ளப் போகின்றது!

 

பிரபுதேவா- ஸ்ருதிஹாசன் மோதல்!!!

prabhu-deva
“ராமய்யா வத்சவய்யா” படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம் . இதனால், படத்தின் புரமோஷனில் ஜக்குலினை முன்னிறுத்தி செயல்படுகிறாராம் பிரபுதேவா.

நடன இயக்குனராக அறிமுகம் ஆகி மெல்ல நடிகராகி தற்போது பிரபல இயக்குனரான பிரபுதேவா ஹிந்தியில் “ராமய்யா வத்சவய்யா” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழிலும் தெலுங்கிலும் வெளி வந்து வெற்றிப்படமான, “சம்திங் சம்திங்” படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் கிரீஷ் நாயகனாகவும் ஸ்ருதி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவா சொல்லிக் கொடுத்த நடனத்தை ஸ்ருதி சரியாக செய்யவில்லையாம். இதனால் ஸ்ருதியை பிரபுதேவா கண்டித்ததற்கு பதிலுக்கு பதில் பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இருவருக்கும் இடையில் அப்போது உருவான மனஸ்தாபம் இன்னும் தொடர்கிறதாம். இந்நிலையில் ராமைய்யா வத்சாவய்யா வரும் 19ம் திகதி வெளியாகவுள்ளது.

படத்திற்கான புரமோஷன் வேலைகள் எதிலுமே ஸ்ருதி பங்கு கொள்வதில்லையாம். அதனால், பிரபுதேவா சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டிய ஜாக்குலினை வைத்து மீதமுள்ள வேலைகளை முடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.