காடிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்..

pro

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த காடிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.

இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இருதடவைகள் இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
இலங்கையில் கொமன்வெல்த் பிரஜைகள் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தம்வசம் வைத்திருந்தார்கள்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஒரு தடவையும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் போதும் இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
இப்படியாக மைதானத்தில் நுழைந்து போராட்டம் நடத்தியவர்கள் 8 பேரை தாம் கைது செய்துள்ளதாக வேல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

-BBC தமிழ்-

 

இலங்கையை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

India
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 38 ஓட்டங்களையும் மத்தியூஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

182 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி சார்பாக கோலி 58 ஓட்டங்களையும் தவான் 68 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிகோலினர்.

 

தமிழ் நாடு, திருநெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு..!

தமிழ் நாடு, திருநெல்வேலியை பூர்விகமாகவும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும்.

இதில் ஒரு நீதிபதியாக அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஸ்ரீனிவாசன் சாதித்து காட்டியுள்ளார்” என்று புகழ்ந்தார்.

ஸ்ரீனிவாசன் பேசுகையில், “உங்களின் பாராட்டுகள் என்னை மிகவும் கௌரவப்படுத்தி உள்ளன. உங்களின் பேராதரவு என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது” என்றார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் கடந்த ஆண்டு ஜூன் 11ம் திகதி, ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜனவரியில் செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், ஒபாமாவின் பரிந்துரை மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல், அந்த பரிந்துரை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், ஒபாமா மீண்டும் ஸ்ரீனிவாசனை இப்பதவிக்கு பரிந்துரைத்தார். இதில், அரிதிலும், அரிதாக 97,0 என்ற ஏகோபித்த செனட் சபை ஆதரவுடன், ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிறினிவாசன் ஹவாய் சட்டக் கலூரியில் பயின்றவர். இவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அமெரிக்காவில் விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பிற்காக சிவகார்த்திகேயனுடன் வடிவேலு..!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த அளவிற்கு அவரது பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன.

அவரது கொமடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது கொமடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து கொமடி செய்திருந்தார் வடிவேலு.

தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர்.

ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு..!!

அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்தியசாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

thathi

அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று, ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும், அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும், பட்டதாரி தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனத்தை வழங்கு, சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.

இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டிக்கு விசேட பாதுகாப்பு..!

பிரித்தானியாவில் இன்று இடம்பெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பொலிஸாரிடம் விடுத்துள்ளார்.

விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மூலமாக ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியின் போது தமிழ் உணர்வாளர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின்போதும் இலங்கை அணிக்கு எதிரான நடவடிக்கைகள் பிரித்தானியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே இன்றைய போட்டியின் போதும் குழப்பமான சூழ்நிலை நிலவப்பெறும் பட்சத்தில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!!

கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக காலி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்களுக்கும் கடற் பிரதேச மக்களுக்குமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடற் பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என அவ் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிற்கும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிற்கும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குண்டாக இருந்தால் விமானத்தில் கூடுதல் கட்டணம்..!!

samao

குட்டித் தீவு நாடான சமோ உடல் பருமனானவர்களுகாக பெரிய இருக்கைகளை தமது விமானங்களில் அறிமுகப்படுத்துகிறது.

நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது அவர்களின் வசதிக்காக பெரிய இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று பேர் அமரக்கூடிய ஒரு இருக்கை எப்படி இருக்குமோ அவ்வகையில் இந்த விமான இருக்கைகள் இருக்கும் என சமோ ஏர் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.

உடல் பருமன் காரணமாக பெரிய இருக்கைகளை பதிவு செய்துள்ளவர்கள் விமானத்தில் ஏறவும் அதிலிருந்து இறங்கவும் உதவி செய்வதற்காக தரையிலிருந்து ஒரு சாய்வுதளப் பாதை அமைக்கப்படும் எனவும் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு பதிலாக உடல் எடைக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கும் முறையை அந்த விமான சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

உலக அளவில் கூடுதல் எடை பருமனைக் கொண்டவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சமோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

உடல் எடையின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிப்பதை சமோ எர் நிறுவனத்தின் தலைவர் நியாப்படுத்தியுள்ளார்.

விமான இருக்கைகளின் அடிப்படையின் விமான சேவைகள் நடைபெறுவது இல்லை என்றும், அவை எடையின் அடிப்படையிலேயே செயல்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தமது முடிவு சில குடும்பங்கள் மற்றும் சிறார்கள் குறைவான கட்டணங்களை செலுத்த வழி செய்யும் எனவும் சமோ ஏர் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

இதன் மூலம் நாட்டில் உடல் பருமனை குறைக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமோ ஏர் பெரும்பாலும் உள்ளூர் சேவைகளையும் அருகிலுள்ள அமெரிக்க சமோவுக்கு மட்டுமே விமானங்களை இயக்குகிறது.

WhatsApp ஐ தடை செய்யும் சவுதி அரேபிய அரசு..

whatsappசவுதி அரேபிய அரசு இன்னும் சில வாரங்களில் வட்ஸ் அப்-ஐ தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சவுதி அரேபிய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணையம் வைபருக்கு இந்த மாதம் தடை விதித்தது.

இந்நிலையில் வட்ஸ் அப்-க்கும் தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. வட்ஸ் அப் மூலம் மக்கள் செலவின்றி தகவல்களை பரிமாறிக் கொள்வதால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது.

இதனால் சவுதி அரசு இன்டர்நெட், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை விதிக்க முயல்கின்றது. வைபர், வட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் உள்நாட்டு விதிகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எப்படி விதிகள் மீறப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சவுதி தொலைத்தொடர்பு விதிகளுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யுமாறு வட்ஸ் அப்-க்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இதையடுத்து வட்ஸ் அப் பதில் அளிக்காவிட்டால் வரும் ஜூலை மாதம் 9ம் திகதிக்குள் அதற்கு தடை விதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலிய சட்டத்தினால் திணறும் இலங்கைத் தமிழர்..

FEE APPLIES Asylum seekers arrive and are processed on Cocos Island today, Sunday 8th July. Pic Karen Willshaw.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகலிட கோரிக்கையாளர்கள் தொழில் செய்ய முடியாது, குடும்பத்தை அவுஸ்திரேலியாவுக்கு எடுக்க முடியாது மற்றும் பணம் அனுப்பமுடியாது ஆகிய மூன்று நிபந்தனைகளுடனேயே தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது.

2012.08.13ம் திகதிக்கு பின்னர் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்களுக்கே இவ்வாறான நிபந்தனைகளுடன் தற்காலிக விஸா வழங்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு தனது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்த கடல் வழியான அவுஸ்திரேலியா பயணமாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடல் மார்க்கமாக பயணிப்பது என்பது ஒரு மனிதனின் மரணப் பயணமாகவே அமைகின்றது. தமிழ் அகதிகள் தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இவ்வாறான பாதுகாப்பற்ற இந்த கடல் பயணத்தை தொடர்கின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், தற்போது அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களமானது தனது சட்டத்தில் பாரிய திருத்தங்களை எற்படுத்தி உள்ளது. இந்த திருத்தங்களுடன் வழங்கப்படும் தற்காலிக விஸாவானது தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எவ்வளவோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பல இலட்சக்கணக்கான பணத்தை கடனாகப் பெற்று இன்று ஒரு சந்தோசமற்ற சூழ்நிலையில் குடும்பத்தார் நடுத்தெருவில் நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கடல் பயணத்தினை எவரும் மேற்கொள்ளாதிருப்பது சிறந்த செயலாகும் என்பதே எமது அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொண்ட நல்ல படிப்பினையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

ஆட்கடத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் வகையில், அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ஆட்கடத்தல் சம்பந்தமான சட்டங்களை ஒருங்கிணைப்பது பற்றிய மாநாடொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தில் ஆட்கடத்தல் பற்றிய திருத்தங்களின் நிலைமை, ஆட்கடத்தலுக்கு எதிரான சட்ட அமுலாக்கல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல், ஆட்கடத்தல் சட்டங்களை மேலும் ஒருங்கிணைப்பதற்கு அவுஸ்திரேலியாவும், இலங்கையும் இணைந்து பணியாற்றக்கூடிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்ற விடயங்கள் குறித்து இரு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடினர்.

2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் கைச்சாத்திடப்பட்ட இடம்பெயர்வோரைக் கடத்துவதற்கெதிரான ஒத்துழைப்பு பற்றிய அவுஸ்திரேலிய – இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான சட்ட அமைப்புக்களில் உள்ள குறைபாடுகளை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டு ஆட்களைக் கடத்துவதற்கெதிரான சட்டவரைபுகளை பலப்படுத்தி ஒருங்கிணைக்கவென அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து பணியாற்றி வருகின்ற நிலையிலும் ஆட்கடத்தல் நடைமுறைகள் அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மலைப்பாம்புடன் உறவாடி மலைக்க வைக்கும் இலங்கை மங்கை!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது அந்தக்காலம்.பெண் என்றால் பாம்பும் மயங்கும் என்பது இந்தக்காலம் என்று பழமொழியை மாற்றும் அளவுக்கு பாம்புக்கும் பெண்களுக்குமுள்ள உறவு வலுப்பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

இங்கே மலைப்பாம்புடன் கடற்கரையிலே உல்லாசமாக போஸ் கொடுப்பவர் வேறு யாருமல்ல. நம்நாட்டு நங்கையான பிரியங்கா என்ற மொடல் அழகி தான்.

பேருவளை கடற்கரையில் உள்ளுர் புகைப்பட பிடிப்பாளர் ஒருவரின் கெமராவில் “கிளிக்”செய்யப்பட்டவை தான் இந்த மங்கையும் மலைப்பாம்பும்.

படங்கள்

1 2 3

இந்திய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

srilanka team
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இன்று நடக்கும் அரையிறுதியில் தீவு நாடான இலங்கை, தீபகற்ப நாடான இந்தியா மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காடிப்பில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி இந்தியாவை சந்திக்கிறது. கடந்த 2011 உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு பின் இரு அணிகளும் முக்கிய தொடரில் மோதுகின்றன.

இந்திய அணி இரண்டு பயிற்சி மற்றும் லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவு, பாகிஸ்தானை வீழ்த்தி, 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இலங்கை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இலங்கை அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் அனுபவ வீரர்களான சங்ககார, ஜெயவர்தன இருவரும் முதுகெலும்பாக உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் 333 ரன்கள் சேர்க்க உதவிய துவக்க வீரர்கள் பெரேரா, தில்ஷன் நல்ல நிலையில் உள்ளனர். பின்வரிசையில் கைகொடுக்க அணித் தலைவர் மத்யூஸ், சண்டிமால், திரிமான உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் மிரட்டுவதற்கு மலிங்க காத்திருக்கின்றார். தவிர, குலசேகரவும் சிறப்பாக பந்து வீசுகின்றார்.

இந்திய அணி துடுப்பாட்டம் பந்துவீச்சு இரண்டிலும் சிறந்த நிலையில் உள்ளது. எனவே இரு சமபல அணிகள் மோதும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் சவாலாகவும் விறுவிறுப்பு  நிறைந்ததாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் மழை வர 70 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கை அணி வெளியேறும்.

முக்கிய புள்ளிவிபரங்கள்..

**இலங்கைக்கு எதிராக சாஜாவில் 2000ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி குறைந்தபட்சமாக 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

**1984ல் இலங்கை அணி 96 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு எதிராக குறைந்த ஓட்டங்களை பதிவு செய்தது.

**இலங்கை, இந்தியா அணிகள் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 75 ல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 52ல் வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகளுக்கு முடிவில்லை.

**இரு அணிகள் மோதிய போட்டிகளில், இந்திய அணி அதிகபட்சமாக 414/7 ஓட்டங்களையும் (ராஜ்கோட், 2009) எடுத்தது. இதே போட்டியில இலங்கை அணி அதிகமாக 411/8 ரன்கள் எடுத்தது.

 

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா-(படங்கள் இணைப்பு)

வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த திருவிழா 11ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இன்றைய தினம்(19.06) தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்திருவிழாவில் கலந்துகொண்டனர்.நாளையதினம் தீர்த்தத் திருவிழா நடைபெறவுள்ளது.

20130619_130050 20130619_125430 20130619_124232 20130619_124021 20130619_123933

20130619_130054

படங்கள்: கலைத்தேவன்.

 

தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…

england

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்துடன் தென் ஆப்பிரிக்கா அணி மோதியது.

நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் தென் ஆப்பிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 38.4 ஓவர்களில் 175 ஓட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து அணி 37.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறவுள்ள இலங்கை, இந்திய அணிகளுகிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.

 

 

அய்யய்யோ சந்தானமா??? விழுந்து விழுந்து சிரிக்கும் ஹன்சிகா..

hansika

ஹன்சிகா தான்னுடன் நடித்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார். இன்றைய திகதியில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா.

தமிழின் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அவர் சூர்யாவுடன் நடித்துள்ள சிங்கம் 2 விரைவில் வெளியாகவுள்ளது. பிரியாணி பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்தநிலையில் அவர் தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி கூறுகையில்,

தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா. சூர்யா எப்படி என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிங்கம் என்றார். எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி குறும்புத்தனம் என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு எப்படிப்பட்டவர் என்று கேட்டதற்கு வாலு என்று பதில் கூறினார் ஹன்சிகா. அப்ப சேட்டை நாயகன் ஆர்யா என்று கேட்டதற்கு வேடிக்கையானவர் என்று ஹன்சிகா தெரிவித்தார்.

ஹன்சிகாவின் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானம் பற்றி கேட்டதற்கு அய்யய்யோ… அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் என்றார்.

 

சந்திரனில் மறைந்து கிடக்கும் 280 எரிமலைகள்!

Full Moon

சந்திரனில் 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற்கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்ல எட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பெண்கள். செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தீவிர பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.