வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவுற்று, மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் 15, 17, 19 வயது இருபாலாருக்குமான கால்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் மன்னார் சென்.சேவியர் அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றிஸ் அணி பெற்றுக்கொண்டன.
19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை மாதகல் சென்.ஜோசப் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் ஜி.ரி.எம்.எஸ் உம் பெற்றுகொண்டன.
இன்று வெள்ளிக்கிழமை எஞ்சிய பிரிவு அணிகளுக்கிடையிலான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
வடமாகாண கல்வித் திணைக்களத்தால் 2013ஆம் ஆண்டுக்கான மாகாணப் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று வியாழக்கிழமைவரை இடம்பெற்ற போட்டியில்; யாழ். வலயம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வடமாகாண வலயங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வருமாறு
நிலை வலயம் புள்ளிகள்
01 யாழ்ப்பாணம் 421
02 வலிகாமம் 250
03 வடமராட்சி 212
04 கிளிநொச்சி 114
05 முல்லைத்தீவு 99
06 வவுனியா வடக்கு 68
07 மன்னார் 65
08 தென்மராட்சி 63
09 வவுனியா தெற்கு 53
10 தீவகம் 27
11 துணுக்காய் 14
12 மடு 00
மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் திலகரத்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் காயமடைந்ததன் காரணமாகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 28ம் திகதி, மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரியை வரும் ஜூன் 25ஆம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது.
கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக் கருதுகிறது. தமிழர்களின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது. தமிழக அரசும், தமிழ் நாட்டில் மான உணர்வுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் இந்தத் துரோகச் செயலுக்குப் பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்ததையும் காங்கிரஸ் அரசு பொருட்படுத்தவே இல்லை.
கடந்த மே 27-ஆம் திகதியில் இருந்து சிங்கள இராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல; அக்கொடியோருக்கு நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவையும் நடத்தி இருக்கிறது.
ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாளும் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கிறது. நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம்; மானமும் வீரமும் அழிந்து விடவில்லை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது தலையாயக் கடமையாகும்.
எனவே, 25-ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிடுவோம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம்.
எங்கள் தொப்புள்கொடி உறவுகளை, தமிழ்க்குலச் சொந்தங்களைக் கொன்று குவித்த இரத்தம் தோய்ந்த கரங்களோடு உலவுகிற சிங்களக் கொடியோருக்கு எங்கள் மண்ணிலேயே பயிற்சியா? இந்திய அரசே! அக்கொடியோரை உடனே வெளியேற்று! எனும் கோரிக்கையை முன்வைத்து முற்றுகைப்போர் நடத்துவோம். நானும் உங்களோடு பங்கேற்கிறேன். இந்திய அரசுக்கு பாடம் புகட்ட, தமிழகத்தை ஆயத்தப்படுத்த இந்த அறப்போர் களத்தில் அணிதிரள்வோம் வாரீர்”.
இவ்வாறு வைகோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 3 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர், மோதரை பகுதியைச் சேர்ந்த, 58 வயதான மொஹமட் பரூஸ் எனத் தெரியவந்துள்ளது.
எனினும் இவர் தீவைத்துக் கொண்டமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங், சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் பொண்டிங், தாம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலக இதுவே சரியான தருணம் என தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது, பொண்டிங் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
இதுவரை அவுஸ்திரேலிய அணி சார்பில் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பொண்டிங் 13,378 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அத்துடன் 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களை விலாசியுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அணி மூன்று உலகக் கிண்ணங்களை சுவீகரிக்க இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, அதில் இரண்டு போட்டிகளுக்கு இவர் தலைமை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் ஒரு சிறுமிக்கு உடலின் முதுகு ,கை ,முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் பூனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது.
சீனாவின் தெற்குப்பகுதியான பென்கை எனும் பகுதியில் வசித்துவரும் 7 வயது நிரம்பிய லை சுயவான் என்ற சிறுமிக்கே இவ்வாறு காணப்படுகின்றது.
இது பற்றி மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில் இச்சிறுமி பிறக்கும் போது சிறிய மச்சமாகவே காணப்பட்டது. ஆனால் இவர் வளர வளர அதுவும் வளர்ந்து இன்று உடல் முழுவதும் பரவியுள்ளது. சாம்பல் நிறத்தில் காணப்படும் சிறிய ரோமங்களாக அது காணப்படுகிறது.
இது பற்றி குறித்த பெண் கூறுகையில் எனது உடலின் அரை வாசிக்கு இந்த மாற்றம் காணப்படுகிறது. இதனால் என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு ஏனைய சிறுவர்கள் மறுக்கின்றார்கள்.அவர்கள் எல்லோரும் என்னை பூனைப்பெண் என்று தான் அழைக்கின்றனர் என இந்த அதிசயச் சிறுமி தெரிவித்தார்.
இதே போல் சீனாவில் இன்னுமொரு சிறுவனும் காணப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.இதனால் பேசவும் உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன்.
* வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும்.இதனால் வாய்ப்புண் சரியாகும்.
* இரண்டு கோப்பை தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும்.10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
* ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
* கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
* மஞ்சள் மருந்து அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண் வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். மறுபடியும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
* தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
* நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர வாய்ப்புண் குணமாகும்.
* புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும்.
* வாழைப்பூ, வாழைப்பழம் துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும்.வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
* வாய்ப்புண்ணுக்கு மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு மட்டுமே வலி குணமாகும். அதேசமயம் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிரந்தர குணம் கிடைக்கும் என்பதே உண்மை
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் சிவசூரியகுமார் சனராச் என்ற மாணவன் கடந்த 13 ஆம் திகதி காலை பாடசாலைக்கெனச் சென்ற இடத்தில் காணாமற் போயுள்ளதாகவும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, மனிதஉரிமைக்குழுவுக்கோ அல்லது 0243248887, 0773369084 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கற்கும் நான்கு சக மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன்.
தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் இரண்டாவது நிலைப் பட்டியலில் அந்த நாடு பட்டியலிடப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு கட்டாய வேலைகளுக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது கணிசமாக தொடர்வதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது.
16 முதல் 17 வயது வரையிலான சிறார்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பல இலங்கையர்கள் சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பஹ்ரைன், லெபனான், இராக், ஆப்கான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிர்மாணப்பணியாளர்களாக, வீட்டு வேலையாட்களாக, ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களாக கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நடமாடுவதற்கான சுதந்திரத்தை இவர்களில் சிலர் இழந்துள்ளதாகவும், சிலரிடம் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜன்சிகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல முகவர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களிடம் கணிசமான வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறுவதாகவும், பெண்கள் பலர் தமக்கு கிடைக்கும் சம்பளத்தில் இந்தப் பணத்தையும் பிடித்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் அது கூறுகிறது.
பல ஏஜன்சிகள் ஒரு வேலைக்காக ஒப்பந்தத்தை செய்துவிட்டு அதனிலும் குறைவான சிரமமான வேலைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், அனுமதி பெறாத பல துணை முகவர்கள் இதில் உதவுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் உள்நாட்டிலேயே பல இடங்களில் சிறார்கள் தொழிலாளர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்படுவதாகவும், மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பு போன்ற இடங்களில் வீட்டுப் பணியாளர்களாக பலவிதமான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதாகவும் அமெரிக்க அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
இந்த மலையக சிறார்கள் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அது கூறுகிறது. இப்படியான முறையற்ற ஆட்கடத்தல்களுக்கு பெருமளவில் போர் விதவைகளும், பதிவு செய்யப்படாத பெண் தொழிலாளர்களும் இலகுவில் ஆட்படுவதாகவும் அது கூறுகிறது.
சீனா, தாய்லாந்து மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் இலங்கையில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருகின்ற போதிலும், அவை போதுமான பலனை இதுவரை தரவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது
இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி அதன் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையிலேயே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு கடந்த புதன்கிழமை 58.72 ஆக இருந்தது. ஆனால் இப்போது 59.93 ரூபாவாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரத்துக்குள் பணத்தை முதலிடும் அமெரிக்க மத்திய வங்கியின் திட்டத்தின்மூலம் உலகில் முன்னேறிவரும் பொருளாதார நாடுகளுக்கும் பணம் வந்துகொண்டிருந்தது.
இந்திய பொருளாதாரம் அந்நிய நிதி வருமானத்தில் பெருமளவில் தங்கியிருக்கின்றமையை இப்போதைய நாணய மதிப்பின் வீழ்ச்சி காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து வெளியில் செல்லும் பணத்துக்கும் உள்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கும் இடையில் ஏற்படும் இடைவெளி கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்திய ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிக்கான செலவினம் அதிகரிக்கின்ற போதே இந்த பற்றாக்குறை ஏற்படுகின்றது.
இந்த பற்றாக்குறையாலும் அதிகரித்த பணவீக்கத்தாலும் இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவிந்ர பெனாண்டோ தெரிவித்தார்.
உயர் நீதிமன்றில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை தமிழ் மொழியிலும் வெளியிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்தில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.
வவுனியா – கொக்குவெளி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மிக மோசமாக காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.