செயற்றிட்ட அறிக்கை ஏற்க மறுத்த விரிவுரையாளரை தாக்கிய மருத்துவ மாணவர்..

arrest

பெண் விரிவுரையாளரை தாக்கி காயப்படுத்திய நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் மாணவன் சிவஞானசுந்தரம் சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று 19 பிற்பகல் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவனின் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது.

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டபீட விரிவுரையாளரே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியரான சிவஞானசுந்தரம் சுரேந்திரன், விரிவுரையாளர் குறிப்பிட்ட தினத்திற்குள் பாடம் தொடர்பான செயற்றிட்டத்தை சமர்ப்பிக்க தவறியுள்ளார்.

இந்நிலையில் பிறிதொரு நாளில் அவரால் வழங்கப்பட்ட செயற்றிட்டத்தை விரிவுரையாளர் ஏற்க மறுத்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னதாக சிவஞானசுந்தரம் சுரேந்திரன், விரிவுரையாளரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விரிவுரையாளரை தாக்கியதன் சுரேந்திரன் பல்கலைக்கழகத்தில் ஒருவகை மருந்தை உட்கொண்ட நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் வைத்து மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம் -மகேள ஜெயவர்தன..

Mahela Jayawardene

சம்பியன்ஸ் கிண்ண அரை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் மகேள ஜெயவர்தன கூறியுள்ளார்.

கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி, காடிப் மைதானத்தில் நாளை இந்தியாவுடன் மோதுகிறது. இந்த போட்டி குறித்து ஜெயவர்தன நேற்று தெரிவிக்கும் போது

அரை இறுதியில் இந்திய அணியை வீழ்த்த ஆவலாக உள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோற்றது பற்றி கவலைப்படவில்லை. இது மிகப் பெரிய தொடர். அரை இறுதி ஆட்டம் மிக முக்கியமானது. அதில் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

இந்திய அணி தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. அவர்களின் துடுப்பாட்ட வரிசை மிக வலுவானதாக உள்ளது. அதை கவனத்தில் வைத்து வியூகம் அமைப்போம்.

ஒருநாள் போட்டிகளில் 11,000 ரன் கடந்ததில் திருப்தி அடைகிறேன். மற்றபடி அதை பெரிதாக நினைக்கவில்லை. அணி வெற்றி பெற எனது ஆட்டம் உதவியது என்பதே முக்கியம்.

அரை இறுதியோ, இறுதியோ எல்லா ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறேன். அந்த முனைப்புடன் ஒருங்கிணைந்து விளையாடினால் இலங்கை அணியால் நிச்சயம் சாதிக்க முடியும். இவ்வாறு ஜெயவர்தனே கூறியுள்ளார்.

 

வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டார்..

Harbajan Singh

இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிக் கொண்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மீட்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குடும்பத்துடன் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி சென்று இருந்தார். புகழ் பெற்ற குருத்வாராவில் வழிபாடு நடத்தி விட்டு அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

இந்தநிலையில், சமோலியில் அலகாநந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரத்தில் இருந்த கட்டிடங்கள், ஹோட்டல்களை வெள்ளம் சூழ்ந்தது.

ஹர்பஜன்சிங் தங்கி இருந்த விடுதியையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதில் ஹர்பஜன்சிங் மற்றும் நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர்.

துணை இராணுவப் படையினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் சென்று அவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட ஹர்பஜன் சிங் கூறியதாவது…

வெள்ளத்தில் தவித்த எங்களை துணை இராணுவப் படையினர் திறமையாக செயல்பட்டு மீட்டனர். அவர்களுக்கு எங்கள் நன்றி. பாபாவின் அருளால் நாங்கள் மீட்கப்பட்டுள்ளோம்.

எங்களைப் போல் ஏராளமானோரை அவர்கள் மீட்டுள்ளனர். அவர்களது பணி பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.

 

மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய வவுனியா ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

கடந்த கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் வன்னி பெரு நிலப்பரப்பில் வவுனியா சைவ பிரகாச கல்லூரி முதலாம் இடத்தை பெற்றிருந்தது.

முதலாம் இடத்தை பெறுவதற்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக பாடசாலை அதிபரான செல்வி உமா இராசையா அவர்களின் ஏற்பாட்டில் மதியபோசன நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்வி பணிப்பாளர் செல்வி அன்னமலர் முத்துசாமி, வவுனியா நகரகோட்டகல்வி பணிப்பாளர் திரு M.P நடராஜா, நகர கிராம சேவையாளர் திரு .வீ.ஜெகசோதினாதன், மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கணித பாட செயற், திட்டபொறுப்பாசிரியர், ஏனைய பாட ஆசிரியர்கள் பிரதி அதிபர்களும் கலந்து கொண்டனர்.

 

36186865

கடந்த ஆண்டில் மாத்திரம் 80 லட்சம் புதிய அகதிகள் – ஐநா

refugee

தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.

ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும்.
கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.

இது மிகவும் மோசமான நிலைமை என்றும் சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறிகின்றது.

அனைத்து 4.5 கோடி அகதிகளில் அரைவாசிப் பேர் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக், சிரியா மற்றும் சுடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

நீண்ட கால மோதல்களை தீர்க்க முடியாத அல்லது புதிய மோதல்கள் உருவாவதை தடுக்க முடியாத சர்வதேச சமூகத்தின் இயலாமையையே இந்த அதிகரிப்புக்கள் காண்பிப்பதாகவும் ஐநா கூறுகிறது.

 

வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் கடற்படையிடம் சிக்கினர்..

asylum

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் பயணித்த படகை திருகோணமலை துறைமுகத்திற்கு எடுத்துவருவதற்கான நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டுள்ளது.

இந்த படகில் பயணித்தவர்களது எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை.

 

கோச்சடையான் தாமதம் – அடுத்த படத்திற்கு தயாராகின்றார ரஜினி?

rajinikanth

கோச்சடையான் படம் வெளிவருவதற்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும், இதுகுறித்த ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது கோச்சடையான். இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோன் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் படத்தின் ட்ரைலரே இன்னும் வெளியாகவில்லை. காரணம், ரஜினி எதிர்ப்பார்த்த சர்வதேச தரத்துக்கு ஏற்ப படத்தை மெருகேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான படம் தொடர்ந்து தள்ளிப் போவதுதால் இரசிகர்கள் சோர்ந்து போகாமலிருக்கவே இந்த முடிவு என்கிறார்கள்.

இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அண்மையில் இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் அழைத்து பேசிய ரஜினி, முத்து, படையப்பா பாணியில் நகைச்சுவை, அதிரடி கலந்த கதையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம்.

மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போது நிபந்தனை போட்டிருக்கிறாராம்.

ஏற்கனவே இருவரும் இணைந்த படங்களான ஜக்குபாய், ராணா ஆகிய இரண்டு படங்களும் பூஜையுடன் நின்றுவிட்டன. அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்களாம்.

 

இவற்றையும் கொஞ்சம் பாருங்கள்!!!

நாம் தினசரி நிறைய பொருட்களை பயன்படுத்துகிறோம் ஆனால் அவற்றிள் ஒரு கலைநயம் என்பது நிச்சயம் இருக்காது. இங்கு சில பொருட்கள் உள்ளன அவற்றை ஒரு முறை பாருங்கள் இவை வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது. எவ்வளவு வித்தியாசமாக அது உள்ளது என்று பாருங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1920

பவர்ஸ்டாரின் அடுத்த நாயகி ஸ்ருதி ஹாசன்??

sruthi hasan

பொலிவுட்டில் “லக்” என்ற படத்தின் மூலம் முதல் முறையாக வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார் ஸ்ருதி ஹாசன்.

ஆனால், “லக்” திரைப்படம் ஸ்ருதிக்கு லக்கைத் தேடித் தரவில்லை. இந்தநேரத்தில் தெலுங்குத் திரையுலகில் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாணுடன் நடித்த, “கப்பர் சிங்” என்ற தெலுங்கு படம் ஆந்திராவின் மூலை முடுக்குகளிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ருதி.

தற்போது பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா, டி-டே போன்ற படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், “கப்பர் சிங்” படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க திட்டமிட்டு உள்ளனர். இதிலும் பவன் கல்யாண் தான் கதாநாயகன். காஜல் அகர்வாலை கதாநாயகியாக்க பேச்சு நடத்தப்பட்டது. ஆனால் அவர்கேட்ட சம்பள தொகையால் தலை தெறிக்க ஓடி வந்து விட்டாராம், படத் தயாரிப்பாளர்.

இதனால், மீண்டும் ஸ்ருதி ஹாசனை ஓப்பந்தம் செய்துள்ளனர்.

 

சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது பெற்ற சுந்தர் சி.!

இயக்குனர் சுந்தர் சி.க்கு சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. சுந்தர் சி.க்கு நமக்குத் தெரியாமல் எப்பொழுது ஒஸ்கார் விருது கொடுத்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

அவரின் தீயா வேலை செய்யணும் குமாரு படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் அவரது மகிழ்ச்சி அதிகரித்துள்ளதற்கு அவரது மகள் தான் காரணம்.

சுந்தரின் மகள் சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை ஒரு பேப்பரில் வரைந்து அதை அவருக்கு அளித்து சந்தோஷப்படுத்தியுள்ளார்.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது சிறந்த தந்தை மற்றும் இயக்குனருக்கான ஒஸ்கார் விருதை சுந்தர் சி. அவரது மகளிடம் இருந்து பெற்றார். இதை விட அவருக்கு வேறு எதுவும்வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

oscar

 

மென்மையான உதடுகளை பெற வழிகள்.

 

lips-care-in-winter

நம்முடைய எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த கண்கள் எப்படி முக்கியமோ அப்படியேதான் உதடுகளும்.
ஒரு பெண்ணின் முழு அழகும் வெளிப்பட உதடுகளும் ஒரு காரணம். எனவே உதட்டில் வெடிப்பு, பிளவு ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.

இளஞ்சூடான நீர், குளிர்ந்த நீர் இவற்றை மாறி மாறி 10 நிமிடங்களுக்கு உதடுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி கிழமைக்கு இரண்டு மூன்று முறை கொடுத்து வந்தால் உதடுகள் மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும்.

சிலருக்கு உதடுகளின் இரு ஓரங்களிலும் புண்கள் போல் வெள்ளையாக இருக்கும். இது விட்டமின் குறைவினால் ஏற்படக்கூடியது. விட்டமின் “பி” உள்ள உணவு பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இதை நிவர்த்தி செய்யலாம்.

உதடுகளில் காணப்படும் வெடிப்பிற்கு நெய் அல்லது வெண்ணெயை தொடர்ந்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

பத்து கிராம் ரோஜா இதழை 10 கிராம் தேயிலை உடன் சிறிது தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். ஆறியதும் உதடுகளுக்கு அந்த நீரை ஒத்தடம் கொடுத்தால் உதடுகளிலுள்ள கருப்பு மறையும்.

அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி தயாரிப்பு..

தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.

Eurocopter X3 எனப்படும் இப்புதிய உலங்கு வானூர்தியானது Eurocopter EC155 எனும் பழைய உலங்கு வானுர்தியின் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இது 263 நொட்ஸ் அல்லது மணிக்கு 300 மைல்கள் எனும் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.

தற்போது இது 19 இருக்கைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 2020ம் ஆண்டளவில் 30 தொடக்கம் 40 வரையான இருக்கைளை உடையதாக மெருகூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


eurocopter_X31 eurocopter_X3

பவர்ஸ்டார் வேடத்தில் நடிக்கிறார் டி.ஆர்!!!

T_Rajendar

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக மளமளவென்று புதிய படங்களில் ஒப்பந்தமானார் பவர்ஸ்டார் என்கிற சீனிவாசன். இதில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை சந்தானத்துடன் இணைந்து தயாரித்த டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி ஆர்யா சூர்யா என்றொரு படத்தை இயக்கினார்.

படமும் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் பாதி வழியில் சென்று கொண்டிருந்தபோது மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் இப்போது பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில் இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம். மேலும், இதில் பவர் ஆடவிருந்த ஒரு குத்துப்பாட்டு இப்போது டிஆருக்கு கிடைத்திருக்கிறது.

அவரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இராமநாராயணன். டி.ஆரே பாடலாசிரியர் பாடகர் என்பதால் அந்த பாட்டை நீங்களே எழுதி பாடிவிடுங்கள் என்று சொல்ல படு உற்சாகமாக பாட்டெழுதி பட்டைய‌‌ை‌ கிளப்பும் வகையில் பாடி அமர்க்களப்படுத்தியுள்ளாராம் தாடிக்காரர். ஆக அடுத்து, டி.ஆரின் குத்தாட்ட ரவுண்ட் ஸ்டார்ட் ஆகிறதாம்.

 

இந்தியாவில் தொடரும் சீரற்ற காலநிலை -131 பேர் பலி!

nature

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெள்ளம் காரணமாக இமயமலைத் தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட்டில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.

 

சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – பயணிகள் பதற்றம்..

plane

சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு நேற்று மாலை 5 மணிக்கு 182 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதை உடனே விமானி கண்டுபிடித்தார்.

இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தொடர்பு கொண்டு விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்றும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர்.அதன் பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு இரவு 8 மணி அளவில் விமானம் கொழும்பு புறப்பட்டு சென்றது.

 

வவுனியாவில் வயல் விழாவும் கண்காட்சியும்

vayal

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தினுடைய விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் வயல் விழாவும் கண்காட்சியும் கனகராயன்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் ஏற்படும் பீடை தாக்கக் குறைவு, பயிராக்கல் முறையினூடாக நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்தல், தூவல் நீர்ப்பாசனத்தினூடாக நோய்த்தாக்கத்தை குறைத்தல் என்பவற்றை முன்வைத்து கண்காட்சி நடைபெற்றது.

பயிர்களை பயிரிடும் முறை, குறைந்த செலவில் அதிக இலாபம் பெறும் வகையில் தாவரங்களை நாட்டும்; முறை, வாழை இலையினால் வேலி அடைக்கும் முறை, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு ஆகியன தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டன.

கனகராயன்குளத்திலுள்ள கருமூல தாய் தாவர பழத்தோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.