சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் உறுதியளித்திருக்கிறார்.
கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய திணைக்களங்களில் சிற்றூழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட வைபவம் நடைபெறவிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா வைத்தியசாலையில் இருந்து வவுனியா நகரசபை மண்டபம் வரையில் பேரணியாகச் சென்றனர்.
அங்கு நுழைவாயிலில் வைத்து அவர்களை வழி மறித்த பொலிசார் அவர்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்த விரும்புவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை அமைச்சரிடம் அழைத்துச் சென்றனர்.
அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, தகுதியுள்ளவர்கள் என்று நேர்முகப் பரீட்சையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக அமைச்சரிடம் இந்தப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்களிடம் உறுதியளித்து அதற்கு ஆதாரமாக வடமாகாண ஆளுனருக்குப் பெயர் விபரங்களுடன் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் வழங்கியிருப்பதாக அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவர்களில் ஒருவராகிய நடேசன் பார்த்திபன் தெரிவித்தார்.
இந்த வருடத்திற்கான அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலகின் முன்னணி பத்திரிக்கையான போப்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 100 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி 16வது இடத்தை பெற்றுள்ளார்.
இவர் கடந்த வருடம் மட்டும் 31.5 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் 440 கோடி) தொகையை பரிசு மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுள்ளார் என்று போப்ஸ் பத்திரிக்கை கணக்கிட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டோனி 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் உலகின் தலை சிறந்த கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் 71.8 மில்லியன் டொலர் தொகையுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முதல் நிலை டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு மட்டும் 71.5 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். 61.9 மில்லியன் டொலருடன் அமெரிக்க கூடைப் பந்தாட்ட வீரர் கோபெ பிரியன்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
காலி பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு கடலுக்கு சென்ற 20 படகுகளில் 18 படகுகள் கடும் காற்று வீசியமையால் கடலுக்குள் மூழ்கிவிட்டன. அந்த படகுகளில் இருந்த மீனவர்களில் இருவர் கரைக்கு நீந்திவந்து சம்பவத்தை விபரித்துள்ளனர்.
இதனையடுத்தே மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினருடன் இணைந்து விமானப்படை ஹெலிக்கொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் மூன்று கடற்படை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடலுக்குச் செல்ல வேண்டாம்
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மன்னார், பொத்துவில், காலி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது
மீனவர்கள் போராட்டத்தால் தெஹிவளையில் பதற்றம்
தெஹிவளை பகுதியில் ரயில் வீதியை மறித்து மீனவர்கள் சிலர் போராட்டம் மேற்கொள்வதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற சில மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியே மீனவர்கள் போராட்டம் செய்கின்றனர். இங்கு சிலர் மீன் பிடி படகுகளை ரயில் தண்டவாளத்தில் தரித்துவைத்து ரயில் போக்குவரத்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் ரயில் போக்கவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு
சீரற்ற வானிலையால் காணாமல்போன நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி, பேருவளை, பெந்தோட்டை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.காணாமல்போயுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு மீனவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள விமானப்படை ஹெலிக்கொப்டர்கள் மூலம் மூன்று மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.பேருவளை கடலில் விபத்துக்குள்ளான மீனவர் ஒருவரும் தெஹிவளை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இரண்டு மீனவர்களும் காப்பாற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் எயார் கொமடோ அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஆறு மீனவர்களுடன் தெஹிவளை கடற்பரப்பில் படகொன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராயும் நடவடிக்கையை விமானப்படை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான மீனவர்களை காப்பாற்றுவதற்காக ஜய சாகர என்ற கப்பலை ஈடுபடுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
பேருவளை, மொரட்டுவை, தெஹிவளை ஆகிய கடற்பரப்புக்களில் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் படகுகளில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக நந்திமித்திர மற்றும் சயுர கப்பல்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பாக வவுனியா நகரசபை மண்டபத்தில் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது.
வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆனுசரணையுடன் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் காணியற்றோர், காணி இழந்தவர்களுக்கான உரிமைகள், காணிப்பிரச்சனைகள், எல்லைப்பிரச்சனைகள், ஆவண இழப்பு, காணி உரிமைப் பிரச்சினை என்பன தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களின் காணி தொடர்பான பிரச்சனைகளுக்கும் செய்யப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா கிராம சேவகர்கள், பொது மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்த இக் கருத்தரங்கில் ஓய்வுபெற்ற ஆணையாளரும் வட மாகாண சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆலோசகருமான க. குகநாதன் கருத்துரைகளை வழங்கியிருந்தார்.
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8/6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான நியமனம், சுகாதார மற்றும் விவசாய திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கான நியமனங்களே இவ்வாறு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜெயரட்ன, வட மாகாண பிரதம செயலாளர் ர. விஜயலட்சுமி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, சிறிடெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர்களான ச. கனகரட்னம், சி. கிசோர், பி. சுமதிபால உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு
Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.
தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உணவு பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கோ அதிசயமான உணவு பழக்கம் இருக்கிறது.
அங்குள்ள வெல்லிங்பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் என்ற 23வயது பெண்ணுக்கு அவரது குழந்தை பருவத்தில் இருந்தே சாதாரண உணவின் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு விட்டதாம்.
இவருடைய முழு பசியையும் போக்கும் உணவு எதுவென்றால் உருளைக்கிழங்குகள் தான். உருளைக்கிழங்குடன் பாலாடைக்கட்டியை சேர்த்து உணவு தயாரித்து சாப்பிடுகிறார். இத்துடன் முட்டைக்கோசையும் அவ்வப்போது சேர்க்கிறார்.
இதுவரையில் இவர் ஏராளமான கூடைகள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு மற்ற உணவை கண்டாலே குமட்டல் வந்து விடுகிறதாம்.
இது குறித்து அவர் கூறுகையில்இ ‘உருளைக்கிழங்கை மட்டும் உண்பதால் உடலுக்குரிய போஷாக்கு போதாது தான் என்பதை உணருகிறேன். அதேநேரத்தில் புதிய உணவை சாப்பிட பயமாக இருக்கிறது.
இதனால் நோய் வந்து விடுமோ என அஞ்சுகிறேன். பிறந்த நாள் ‘கேக்’கை கூட சாப்பிட மாட்டேன். என்றாலும் என்னுடைய தாய் விருப்பத்துக்காக ஆண்டு தோறும் கேக் மட்டும் வெட்டி கொண்டாடுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சாப்பாட்டு விசயத்தில் சிலர் படு கில்லாடியாக இருந்தாலும் சாப்பாடு என்றாலே முகத்தைச்சுழிக்கும் சில இளசுகளும் எம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள் எனவே இந்த கிழங்குப்பிரியையான பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்லவே?
இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல பயணிகளோடு யாழை நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து அதிகால 4:20 மணியளவில் கொடிகாமம் – மிருசுவில் இடைப்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் இருந்த பனையுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பேரூந்தில் பயணித்த பயணிகள் 20க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
படுகாயம் அடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் சாரதி தூங்கியதால் இவ் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
யாழ். வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தனியார் கண் பரிசோதனையென்ற பெயரில் மாணவர்களிடம் பெரும் தொகைப் பணத்தை அபகரிப்பதில் ஒரு தனியார் கண்ணாடி நிறுவனம் ஈடுபட்டுவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு கண்பரிசோதனையை இலவசமாக மேற்கொள்வதாகக் கூறி பாடசாலைகளுக்குள் பிரவேசிக்கும் குறித்த நிறவனம் மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்துவிட்டு கண்ணாடி போட வேண்டும் என கூறுகின்றனர்.
அதனை அடுத்து குறிப்பிட்ட தொகையை கொண்டுவந்து முதலில் கட்டுங்கள் என்று கூறி பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் விசனமடைந்துள்ளனர்.
கடந்தாண்டும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த குறிப்பி;ட்ட நிறவனம் அரச திணைக்களங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பணிமனைகளுக்குச் சென்று இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டதுடன் தரமற்ற கண்ணாடிகளை வழங்கிச் சென்றதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டதை தெரிந்த அதிபர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்காத போதிலும் பின்தங்கிய இடங்களில் உள்ள அதிபர்கள் நிலைமை தெரியாது அனுமதித்து சிக்கலில் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்கள் தேவைப்படுமென கூறப்படுகின்றது.
டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார்.
இவைகளை 123 சப்பாத்து பெட்டிகளில் கவனமாக வைத்துள்ளார். Guinness World Records இடம் பெற்றிருக்கும் அதிக அளவான வைன்- லேபிள்களின் தொகை 16,349 என்றும் அதனால் தான் அந்த ரெக்கார்டை உடைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவர் லேபிள்களை அவை உற்பத்தி செய்யப்பட்ட நாடுகளின் வரிசையிலும், கருப்பொருளின் அடிப்படையிலும் ஒழுங்குபடுத்தி வைத்துள்ளார்.
இவரது சேகரிப்பில் மிக பழமையானது ஜேர்மனி நாட்டின் 1859ம் வருடத்தைச் சேர்ந்ததாகும். சில தற்போது பாவனையில் இல்லாதவை.சேகரிப்பதை தான் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
வடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்திற்கும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
வடமாகாணத்தில் புகை பரிசோதனை திட்டம் இதுவரையில் நடைமுறையில் இல்லாததால் அங்கு சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து அவதானம் செலுத்த வேண்டி உள்ளது.
இந்த நிலையில் புகைப்பதிவினை மேற்கொள்ளாத வாகனங்களின் பதிவுகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆணையகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் புகைப்பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் இருக்கின்ற நிலைகளில் இந்த விடயத்தில் வடமாகாணத்தில் சிக்கல் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படாதுள்ள நிலையில், வடமாகாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி வருகின்ற வாகனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், தேவாலயம் கட்டுவதற்காண நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை வளர்ச்சி சமூகமும் என சுமார் நூற்றுக்கணக்காணவர்கள் ஒன்றினைந்து, இன்று காலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்து இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
தற்போது பறப்பாங்கண்டல் கிராமத்தில் 260 குடும்பங்கள் வழ்ந்து வருகின்றனர். இதில் 200 குடும்பங்களின் கருத்துகளுக்கு மாறான வகையில், குறித்த விளையாட்டு மைதானத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று கட்டுவதற்காண நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றது.
இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும், மாணவர்களின் கல்விச் சரிவையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இது புனித கார் மேல் மாதா ஆலய சபையின் தன்னிச்சையான முடிவேயாகும்.
இக்காணியில் ஆலயம் அமைக்க வேண்டும் தீர்மானம் எந்த பொதுக் கூட்டத்திலும் தீர்மானிக்கப்படவில்லை.
இவ் ஆலயம் கடந்த கால போர்ச் சூழலினால் சேதமாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு 6ம் மாதம் நடைபெற்ற ஆலய சபை பொதுக் கூட்டத்தில் இருந்த இடத்திலேயே இவ் ஆலயம் கட்டுவதெனவும், குடும்பத்திற்கு 2000 ரூபாய் வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
பெரும்பாலான மக்களுக்கு விருப்பமில்லாத வகையில் இந்த செயல் இடம்பெற்று வருகின்றது. எனவே குறித்த ஆலயம் ஏற்கனவே இருநத இடத்தில் கட்டப்பட வேண்டும் எனவும், பாடசாலை மைதானத்தில் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடபர்பாக பாடசாலை வளர்ச்சி சமூகம் என்ற பெரில் மகஜர் ஒன்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
கோடை காலத்தில்தான் மிக மிக அழகாக இருக்கிறார்களாம் மனிதர்கள். இந்த காலகட்டத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிக்கிறார்களாம். ஆய்வு ஒன்று இதைக் கூறுகிறது. குளிர்காலத்தை விட கோடைகாலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிப்பதாக கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். மேட்ச்.கொம் என்ற இணையதளம் எடுத்த கருத்துக் கணிப்பி்ல்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 சதவீதம் பேர் வெயிலில்தான் அழகு..
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 73 சதவீதம் பேர் தாங்கள் வெயில் காலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
குளிரை விட வெயில் நல்லாருக்கே..
இவர்கள் குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் தாங்கள் நல்ல தோற்றத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.
நம்பிக்கையும், ஆரோக்கியமும் அதிகம்..
கோடை காலத்தில் நம்பிக்கையும் உடல் ஆரோக்கியமும் அதிகரிப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.
அழகோ அழகு..
ஆண்களை விட பெண்கள்தான் கோடை காலத்தில் அழகுடன் ஜொலிப்பதாக கூறியுள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்களை பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதுவிடயம் தொடர்பில் தாம் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
வவுனியாவில் 2100 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக 3000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு உடனிருந்தார்.