விளையாடிக்கொண்டிருந்தபோது முடிந்த விதி.. பெரும் துயரத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை, சிறுவன் மீது வீழ்ந்ததில் அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த மூன்று அகவை நிரம்பில ஆதவன் லிதுசிகன் என்ற சிறுவன் வீட்டு படலையில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற் (இரும்பு படலை) சிறுவன் மீது வீழ்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுவனின் உயிரிழப்பு கேப்பாபிலவு கிராமத்தில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா.. மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

ரூபா..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும்(15.06.2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. எனினும், கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது.

அத்துடன் கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்ற நிலையில் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (15.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 247.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 356.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 335.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 417.00 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் வரை உள்ளூர் சேவைகள் : கலந்துரையாடலில் தீர்மானம்!!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று சேவையில் ஈடுபடவேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரத்தில் உள்ள சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (14.06.2023) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பழைய பேருந்து நிலையம் வரை உள்ளூர் பேருந்து சேவைகளை நடாத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வர்த்தகர் சங்கத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக அப் பகுதியில் அதிகளவான வியாபார நிலையங்கள் இருப்பதால் பொதுமக்கள் அங்கு வந்து செல்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக அரச, தனியார் பேருந்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கோரப்பட்டது. இதன்போது பழைய பேருந்து நிலையப்பகுதிக்குள் சேவையில் ஈடுபடுவதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த நடைமுறையை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக வடமாகாண ஆளுனர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தி மேலதிக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் அதிகளவான கட்டணங்களை வசூலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக முதலாவது கிலோமீற்றருக்கு 120 ரூபாயும் அடுத்து வரும் கிலோமீற்றர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர், தற்போது வவுனியாவில் முதலாவது கிலோமீற்றருக்கு 150 ரூபாயும் அடுத்து வரும் கிலோமீற்றர்களுக்கு 100 ரூபாயும் அறவிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றைவிட அதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் குறித்த முச்சக்கரவண்டிகள் தொடர்பாக எமக்கு தெரியப்படுத்தினால் அது தொடர்பாக நாம் விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை எடுப்போம்.

அத்துடன் எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் வாகன உதிரிப்பாகங்களின் விலை அதிகரித்து காணப்படுவதால் முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனினும் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக எமது சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வருவதாக தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, அபிவிருத்திக்குழு தலைவர் கு.திலீபன், நகரசபை செயலாளர், உதவி பிரதேச செயலாளர், வர்த்தகர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06.2023) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும்,

வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பல விமர்சனங்கள் வெளியாகியிருந்த நிலையில்,

கடந்த (30.05.2023) இரவு தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர், சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்றோர் என 10 பேரை கைது செய்திருந்தனர்.

எனினும் குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மேலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று (14.06.2023) காலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன்,

அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை உயர்தர மாணவர்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விடுமுறை : மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்கள் என்பவற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (14.06.2023) மதியம் 3 மணியளவில் வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உதவி பிரதேச செயலாளர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியர், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டு சில தீர்மானங்களை மேற்கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்குவதுடன் ஏனைய தினங்களில் மாலை 6.00 மணி வரை மட்டுப்படுத்துமாறு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தமையுடன் பல்வேறு காரணங்களையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பல வாதப்பிரதிவாதங்களுக்கு பின்னர் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்கள் என்பன திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை 1 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மாலை 6.30 மணியுடன் நிறுத்துவதுடன் கா.பொ.த உயர் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மாலை 7 மணியுடன் நிறுத்துமாறும்,

மேலும் ஞாயிற்று கிழமைகளில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தமையும் இவற்றை எதிர்வரும் 01.07.2023 ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்களை மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளில் பதிவு செய்வதற்குரிய ஆவணங்களை மேற்கொள்வதுடன் பொது சுகாதார பரிசோதர்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களில் காணப்படும் சுகாதார பிரச்சனை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

வவுனியாவை வந்தடைந்த 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் செல்லவுள்ள இரட்டையர்கள்!!

பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர்கள் இன்று (14.06.2023) அதிகாலை 4.00 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து 9 மணித்தியாலங்களில் மதியம் 01.00 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்து தொடர்ச்சியாக பயணித்தினை தொடர்ந்தனர்.

இரட்டையர்களான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன்,

கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மணமகளை தோளில் தூக்கி கொண்டு ஓடிய மணமகன் : இருவீட்டார்களுக்கு இடையே வெடித்த மோதல்!!

நாகர்கோவிலில்..

தமிழகத்தின் நாகர்கோவிலில் மயங்கி விழுந்த மணப்பெண்ணை மணமகன் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் நாகர்கோவில் மாவட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற திருமண விருந்து உபசரிப்பு விழாவில் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மணமகளின் உறவினர் சிலர் மது போதையில் திருமண மண்டபத்தில் குத்தாட்டம் போட்டதுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எழுந்த வாக்குவாதத்தில் இருவீட்டார் இடையிலும் மோதல் வெடித்தது, அத்துடன் திருமண மண்டபத்தில் இருந்த கண்ணாடிகள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை மோதலில் இரு வீட்டாரும் அடித்து உடைத்தனர்.

இந்நிலையில் இரு வீட்டாருக்கும் இடையே நடைபெற்ற சண்டையை வேடிக்கை பார்த்த மணமகள் அதிர்ச்சியில் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மணமகன் உடனடியாக மணமகளை தோளில் தூக்கி கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார் மோதல் சம்பவம் குறித்து இருவீட்டாரிடம் விசாரணை நடத்தினர்.

பாலியல் கொடுமையால் மாணவி தற்கொலை… ஆசிரியரின் மனைவி கைது!!

கோவையில்..

கோவையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவி தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் மாணவி குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினர். அதன்படி, மாணவி படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்து நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கவர்த்தியின் மனைவி அர்ச்சனாவை தற்போது மகளிர் காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்தும் காவல்துறைக்கு புகார் தெரிவிக்காததால் இருந்த குற்றச்சாட்டில் அர்ச்சனாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அதாவது, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் செல்போனை போலீசார் தடயவில் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கபட்ட மாணவி, இது குறித்து ஆசிரியர் மிதுனின் மனைவியான ஆசிரியர் அர்ச்சனாவிடம் கூறியது தெரியவந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் தெரிந்தும் காவல் துறையிடம் தெரிவிக்காததால் அர்ச்சனாவையும் போலீசார் கைது கோவை சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக கூறி 3000 பேரை ஏமாற்றிய நபர்!!

தென் கொரியாவில்..

தென் கொரியாவில் வேலை தருவதாகக் கூறி விண்ணப்பங்களை பெற்று பணம் வசூலித்து ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பேராதனை, கெட்டம்பே பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற போதிலும், தென்கொரியாவில் தொழில் வழங்குவதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது நேர்முகத் தேர்வுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு நபர்களின் 275 கடவுசீட்டுகள், 615 வேலை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் சான்றிதழ்கள், கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய கோப்பு, கொரியாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதைக் குறிக்கும் பேனர் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சந்தேகநபரின் மோசடியில் 3000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்!!

நெதர்லாந்தில்..

நெதர்லாந்தில் நீரில் மூழ்கிய நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது.

பிரான்ஸில் இருந்து சென்ற நண்பர்கள் குழுவுடன் இணைந்திருந்த வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது. நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால்,

அவரை காப்பாற்ற நீரில் இறங்கிய அனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு அவர் தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார் அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

மீட்புப் பணியாளர்கள் 90 நிமிடங்கள் தேடுதலின் பின்னர் அனுசன் கண்டெடுக்கப்பட்டார். மீட்பு பணியாளர்கள் அவரது உயிரை மீட்க போராடியும் தோல்வியில் முடிந்தது . இவருடன் நீரில் மூழ்கிய மற்றவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் கோர விபத்து.. யாழ்.தமிழர்கள் மூவருக்கு நேர்ந்த சோகம்!!

லண்டனில்..

இங்கிலாந்தின் தென் கிழக்கு பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாகவும், விபத்தில் சிக்கிய ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மற்றைய காரில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உயிரிழந்துள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாகவும் லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பயணம் செய்த பி.எம்.டபிள்யூ காரை செலுத்தி சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர்.

வவுனியாவில் பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று(13.06.2023) இடம்பெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

அந்தவகையில் தனியார் மருந்தகங்களில் பதிவுசெய்யப்பட்ட மருந்தாளர்கள் இல்லாமல் மருந்துகள் வழங்கபடுகின்ற விடயம் தொடர்பாக பரீசீலிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியாவில் 19 தனியார் மருந்தகங்கள் உள்ளது.
அவற்றில் 8 மருந்தகங்கள் பதிவுசெய்யப்படவில்லை.
அவற்றில் 5 மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனைய மூன்று மருந்தகங்கள் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை எமக்கு வழங்கியுள்ளனர்.

அத்துடன் இங்கு இரண்டு மொத்த வியாபார மருந்தகங்கள் உள்ள நிலையில். அதில் ஒன்று பதிவுசெய்யப்படவில்லை. அதற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றார்.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தகங்கள் உரிய நேரத்திற்கு முன்பாகவே மூடப்படுவதாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

பாம்பு கடித்து மகளுக்கு நேர்ந்த பரிதாபம்.. ஓடும் பேருந்தில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த தாய்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் – நாகலட்சுமி (31) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி சிவானி (4) என்ற 5 பெண் குழந்தைகள் உள்ளன.

கணேசன் கோவையில் உள்ள பஞ்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 8ஆம் வகுப்பு வரை படித்துள்ள நாகலெட்சுமி, தனக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதை சுட்டிக்காட்டி வேலைவாய்ப்பு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

அதனை ஏற்று அவருக்கு சொந்த கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டது. தொடர்ந்து அப்பணியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் மையிட்டான் பட்டியில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, ஓடும் அரசு பேருந்தில் இருந்து நாகலட்சுமி குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோரே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் நாகலட்சுமியின் குழந்தைகள் மதுரையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேரை பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

மற்றொரு 9 வயதான குழந்தை விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் அந்த பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அழிப்பதாக கூப்பிட்ட காதலன்.. நம்பி சென்ற காதலிக்கு நடந்த சோகம்!!

கன்னியாகுமரியில்..

தான் காதலித்தப் பெண்ணைக் கொலைசெய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டிய இளைஞர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்த சமயத்தில், கல்லுத்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த பெர்ஜின் ஜோஸ்வா (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அவர்கள் இருவரும் காதலித்திருக்கின்றனர். இருவரும் பல இடங்களுக்குச் சென்று சேர்ந்து போட்டோ எடுத்திருக்கின்றனர். அந்தப் பெண் தற்போது மேற்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களாக பெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இது பெர்ஜின் ஜோஸ்வாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் லேப்டாப்பில் இருப்பதாகவும், `அவற்றை இருவரும் சேர்ந்து டெலிட் செய்யலாம் வா…’ எனக் கூறி இளம்பெண்ணை போனில் அழைத்திருக்கிறார் பெர்ஜின் ஜோஸ்வா.

இருவரும் மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறமுள்ள தென்னை தோப்பில் சந்திப்பதாக முடிவானது. நேற்று மதியத்துக்கு மேல் இளம்பெண் அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு நின்றிருந்த பெர்ஜின் ஜோஸ்வா, தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இளம்பெண் அலறியதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதைத் தொடர்ந்து பெர்ஜின் ஜோஸ்வா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கு திரண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மார்தாண்டம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பெர்ஜின் ஜோஸ்வாவைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக மார்த்தாண்டம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அது பெர்ஜின் ஜோஸ்வா எனத் தெரியவந்தது. அவருடைய உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

“காதலியைக் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த பெர்ஜின் ஜோஸ்வா, இளம்பெண்ணை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த கோட்டயம் – நாகர்கோவில் ரயில் மோதியதில், பெர்ஜின் ஜோஸ்வா தலை துண்டாகி இறந்துவிட்டார்” என்கிறார்கள் போலீஸார். போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நடக்காத விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஜார்கண்ட்டில்..

ஜார்கண்ட் மாநிலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு டக்கென்று நினைவுக்கு வருவது சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிதான். தோனியின் சொந்த ஊர் அதுதான் என்பதால் ஒரு பிணைப்பு. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் முடிவு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஸ்வேதா (23) என்ற இளம்பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். இவரை 3க்கும் அதிகமான மாப்பிள்ளை வரனாக பார்த்துசென்றும் திருமணம் முடிவாகவில்லை.

மேலும், பெண்மணி குள்ளமாக இருந்த காரணத்தால், மணமகன்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஸ்வேதாவுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்த ஸ்வேதா விபரீத முடிவை எடுத்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தமது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீடு திரும்பிய பெற்றோர் மகளின் நிலையை பார்த்து கதறி அழுதனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஸ்வேதா தற்கொலை முடிவுக்கு வேறுஏதும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை நடத்துகின்றனர்.

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள நீரேந்து பிரதேச ஆக்கிரமிப்புக்கு நடவடிக்கை!!

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளம் பகுதியின் நீரேந்து பிரதேசம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருந்துததுடன் இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாட்டையும் பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த ஆக்கிரமிப்புக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியருந்தார்.

இதற்கு பதில் கூறிய மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றிற்கு முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.