வவுனியா ஓமந்தை இராணுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி வாகனத்தில் கொழும்புக்குக்கு 154 கிலோ கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக ஒமந்தை இரானுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திடமான குறித்த வாகனத்தினை ஒமந்தை இராணுவ சாவடியில் இராணுவத்தினர் மறித்து சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 154 கிலோ கேரள கஞ்சாவினை இராணுவத்தினர் கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் கைது செய்து ஒமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒமந்தை பொலிஸார் வாகனம், கேரளா கஞ்சா, இரு சந்தேகநபர்கள் ஆகியோரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா நகரிலுள்ள 5 வர்த்தக நிலையங்கள் நள்ளிரவில் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகரின் கந்தசாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, மில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 வர்த்தக நிலையங்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு பின்னரான பகுதியில் உரிமையாளரினால் மூடப்பட்டு சென்ற நிலையில் இன்று (07.12.2021) காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட பணத்தினையே திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் சி.சி.ரி.வி காணோளி உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின் தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். இருப்பினும், 2வது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார். இதனால் இன்றும் நாளையும் மின் தடை அமுல்படுத்தப்படும் என சுலக்ஷனா ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மின் வழித்தடங்களில் ஏற்பட்ட கோளாறினால் இத்தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாள் தோறும் ஒரு மணிநேரம் மின்தடை ஏற்பட்டிருந்தது. எனினும், இன்று நிலைமை சீராகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது வவுனியா நகரப் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. நேற்று (06.12) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இரவு சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
குறித்த பெண் காஸ் சிலிண்டர் அண்மைக்காலமாக வெடிப்பதால் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உடனடியாக சிலிண்டரை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். குறித்த வெடிப்பின் போது எரிவாயு அடுப்பு உடைந்து சேதமாகியுள்ளது.
இருப்பினும், வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் இது தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பன்னல, ஹெத்திரிப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தலைக்கவசம் அணிந்திருந்தமையினால் தனக்கு காயம் ஏற்படவில்லை என அந்த வீட்டின் பெண் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நான் உணவு செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அடுப்பு வெடித்து சிதறியது. என் மீதும் அடுப்பின் துண்டுகள் விழுந்தன. நான் இந்த நாட்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டே சமைக்கின்றேன்.
நாட்டின் எல்லா இடங்களிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பதாக சொல்லப்படுகின்றது. எரிவாயுவை பயன்படுத்துவதை தவிர வேறு வழியும் இல்லை, தலைக்கவசம் அணிந்துகொண்டுதான் உணவு தயாரிக்கப்படுகிறது. இதனால் இன்று நானும் அதையே செய்தேன், உடல் உபாதை எதுவும் ஏற்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் மீண்டும் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 5 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தேவையற்ற விதத்தில் வீட்டில் இருந்து வெளியில் வருவதனை இயன்றளவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து சென்ற இளைஞர்கள் மூவர் முல்லைத்தீவு கடலில் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினமே ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நபரின் சடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மூன்றாவது நபரின் உடலம் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவரை தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது கடல் அலை இழத்துச் சென்ற நிலையில் மூவர் காணாமல் போயினர்.
அவர்களை கடலில் தேடியும் காணாமையால் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிசார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவரை தேடும் நடவடிக்கை தொடர்கிறது. அவர்களுடன் கூடச் சென்ற பெண் முல்லைத்தீவு பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மற்றும் காணாமல் போன இருவரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், கார் ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (04.12) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன்,
வர்த்தக நிலையத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விபத்துக்குள்னான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நாளை முதல் மீண்டும் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்று நிபந்தனைகளின் கீழ் குறித்த கொள்கலன்கள் விநியோகம் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கடந்த பல நாட்களாக எரிவாயுவுடன் தொடர்பான பல்வேறு வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து பொது மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டில் பல தொழிற்துறைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், உணவக உரிமையாளர்களும் கடும் சிக்கல் நிலையை எதிர்நோக்கியிருந்தனர். மேலும், சமைத்த உணவுகளை கடைகளில் இருந்து பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04.12) மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றிருந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாக கூறி குளத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் குளத்தில் இருந்து வெளியே வந்து வீடு நோக்கி சென்ற போது கூட வந்தவர் குளத்து ஓழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா, கல்நாட்டியகுளம், மதுரா நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இரு பகுதிகளையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர் இன்று (04.12) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்திற்கு செல்லும் வீதியில் உள்ள 2 ஏக்கர் அரச காணியாது உறவினர்கள் நான்கு பேருக்கு பகிரப்பட்டிருந்தது.
குறித்த காணிக்குரியவர்களில் ஒரு குடும்பத்தினர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று அங்குள்ள முகாமில் இருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தனர்.
நாடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு உரித்தாக இருந்த காணியும் இங்கு வசித்து வந்த அவர்களது உறவினர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
அவர்கள் தமக்கான காணியை வழங்குமாறு கோரிய நிலையில் இரு பகுதியினருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக வாய் தர்க்கம் இடம்பெற்று பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்ததுடன், இரு பகுதியினரையும் பிரச்சனைக்குரிய காணிக்குள் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணியை கடந்த காலங்களில் பராமரித்து வந்தவர்கள் அக் காணிக்கான வேலிகளை அடைத்த நிலையில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பியர்கள் அது தமது காணி எனவும் அதற்குள் தாம் கொட்டகை அமைக்கப் போவதாகவும் தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது. அதில் இரு பகுதியிலும் இருந்து 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றிருந்தனர். இது தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மீண்டும் இரு பகுதியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வவுனியா பொலிசில் மீண்டும் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து,
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இரு தரப்பினையும் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் அக் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் குறித்த பிணக்கை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரு மாதங்களுக்குள் தீர்வு வழங்குவதாக அவரால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அதிதீவிர சிகிச்சையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவரது உறவினர்கள் இன்று (04.12) குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்தில் சிக்கிய மூன்று மோட்டார் சைக்கிள்களும் வவுனியா பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டுள்ள போதும் இதுவரை எவரும் விபத்து தொடர்பில் கைது செய்யப்படவில்லை என விபத்தில் படுகாயமடைந்துள்ள இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து மன்னார் வீதி வழியாக குருமன்காடு குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில்,
பெண்ணொருவர் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வீதி ஒன்றில் திரும்ப முற்பட்ட போது இரு மோட்டர் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சுயநினைவை இழந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கடந்த இரு நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றார்.
வவுனியா கனேசபுரம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலசுப்பிரமணியம் டயாந்தன் என்பவரே சிகிச்சை பெற்று வருபவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரிடம் இளைஞரின் உறவினர்கள் முறைப்பாடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை என குடும்பத்தார் குற்றம் சாட்டிவருகின்றனர்.
குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிளில் வைத்தியர் என அடையாள முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது எனவும், ஆனால் அதில் பயணித்தது வைத்தியரின் மனைவி என்றும் குறித்த வைத்தியர் தனக்கு இருக்கும் செல்வாக்கால் விசாரணையை தடுத்து வைத்துள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் கருத்துக்களை தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்களால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரிக்கு குறித்த விடயம் தொடர்பில் இன்று (04.12) முறைப்பாடு செய்யப்பட்டதாகவும்,
இதையடுத்து சம்மத்தப்பட்ட போக்குவரத்து பொலிசாரை அழைத்து இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், விபத்துக்குள்ளான மூன்று மோட்டார் சைக்கிள்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும்,
பாதிக்கப்பட்ட இளைஞன் சுய நினைவு இல்லாமல் இருப்பதால் அவருடைய வாக்குமூலத்தை பெறமுடியவில்லை எனவும் இருந்தும் தாம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த விபத்து இன்று (04.12.2021) மதியம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து ஹொரவப்பொத்தானை வீதி வழியாக சென்ற கார் ஒன்று ராணி மில் வீதியில் திரும்பிய போது பின்னால் வந்த பாரவூர்த்தி குறித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான கார் அப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நின்ற மோட்டர் சைக்கிளுடன் மோதியுள்ளது. அத்துடன் கார் அருகில் இருந்த வர்த்தக நிலையத்திற்குள் புகுந்ததால் வர்த்தக நிலையத்தின் முன் பகுதியும் இடிந்து விழுந்து அதன் கூரைப் பகுதியும் சேதமைடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கார் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனங்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இலங்கையரொருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் – சீல்கொட் பகுதியில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட காரணம் உள்ளதென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக இயங்கும் வரை நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய நாளாந்தம் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மின்சாரம் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறைந்தது ஒரு மணி நேரமாவது மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியங்கள் உள்ளதென மின்சக்தி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.