வவுனியாவில் பல்வேறு இடங்களில் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாக்கியங்களைத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது.
அச் சுவரொட்டிகளில் மின்சாரம் எண்ணெய் சுயாதிபத்தியத்தைக் காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்து செய், அமெரிக்க – சீன – இந்திய மரணப்பொறியில் மக்களைச் சிக்கவைக்கும் ஏகாதிபத்திய சார்பு ஆட்சிக்கு எதிராவோம் போன்ற வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த சுவரொட்டிகளுக்குத் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் முன்னிலை சோஷலிஸக் கட்சி என்பன உரிமை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆடை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் கெமராவை பொருத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் முக்கிய நகரம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண்கள் ஆடைகளை கொள்வனவு செய்ய கடைகளுக்கு சென்று உடைகளை மாற்றும் போது, அந்த இடம் குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முக்கியமான நகரங்களில் உள்ள பெரிய ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட வர்த்தக நிலையங்களில் பெண்கள் உடை மாற்றும் இடங்களில் கெமராக்களை பொருத்தி படங்களை எடுக்கும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதுடன் இவ்வாறான பல சம்பவங்கள் கடந்த காலத்தில் நடந்துள்ளன. இதனால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் சரியான தெரிவுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ மக்கள் பிரதிநிதியே அநீதிக்கு துணை போகாதே, வீடுகளுக்கு மண் வீதி காடுகளுக்கு காபெற் வீதியா, மக்களின் தேவைகளை அறியாதவர் வட்டார பிரதிநிதி பதவியில் இருந்து விலகு, மக்களுக்கு மண் வீதி யானைகளுக்கு காபெற் வீதி’ என எழுத்தப்பட்ட சுலோக அட்டைகனைளயும் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திரக்கட்சியின் (சிறிரெலோ) பிரதேசசபை உறுப்பினர் யூட் கருத்து தெரிவித்த போது, செட்டிகுளம் பிரதேசத்திற்குள் இடம்பெற்று வரும் அநியாயங்களால் எமது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இதனை தட்டிக்கேட்கின்ற அதிகாரத்தினை கொண்டிருக்கும் தவிசாளர் கண்மூடித்தனமாக இருப்பதையிட்டு மனவேதனையடைகின்றோம்.
குறிப்பாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பிழையான தெரிவுகள் இடம்பெற்றுள்ளது. மக்கள் குடியிருக்காத, காடுகள் வயல்களுக்கு செல்கின்ற வீதிகளை திருத்தப்பணிகளுக்காக தெரிவு செய்திருக்கின்றார்கள்.
ஒரு குடும்பம், இரு குடும்பம் இருக்கின்ற வீதிகளையும் தெரிவு செய்திருக்கின்றார்கள். அந்த வீதிகளை மாற்றி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் தவிசாளரால் வழங்கப்படவில்லை.
எனவே, அவ் வீதிகளுக்கு பதிலாக மக்களால் கோரிக்கை விடுக்கப்படும் வீதியினை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம் என்றார்.
மக்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் விதத்திற்கு அமைய மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். மக்கள் கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு வழங்கும் பங்களிப்பின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
மக்கள் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு அமைய நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த துரதிஷ்டவசமான நிலைமையை நாட்டில் இருந்து ஒழிக்க முடியும். உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வைரஸ் கட்டுப்பாட்டில் சிறந்த நிலைமைக்கு வந்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடந்துள்ளதால், மக்கள் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
தொற்று நோய் நிலைமையானது மிக நீண்டகாலத்திற்கு தொடர்ந்தால், அது பல பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கலாம். இதனால், பலம் துன்பங்களை அனுபவிக்க நேரிடும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் ஒமந்தை கிராம அலுவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து இன்று (11.11) வவுனியாவில் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா, ஓமந்தைப் பகுதி கிராம அலுவலர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தென்னிலங்கையில் தனது மனைவியை அடித்து கொலை செய்த கணவர் பிள்ளையை கடத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, மாலிம்பட பிரதேசத்தில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாலிம்பட வடக்கு பிரதேசத்தை சேர்ந்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 33 வயதுடைய ஹர்ஷா நிஷானி களுஆராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொரவக்க பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய கணவர் கடந்த 9 ஆம் திகதி இரவு தனது மனைவி மற்றும் மாமியாருடன் ஏற்படுத்திய வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றுள்ளது. மாமியாரை கடுமையாக தாக்கிவிட்டு மனைவியை கொலை செய்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் இந்த சம்பவத்தின் பின்னர் 2 வயதுடைய பிள்ளையுடன் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மனைவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகதொழுவ பகுதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பேருந்து ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் ஹட்டன் பகுதியிலிருந்து நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்ற இ.போ.ச க்கு சொந்தமான பழுது பார்க்கும் (பிரேக் டவுன்) பேருந்து ஒன்றுமே இவ்வாறு இன்று காலை 7 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, பேருந்தின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் கினிகத்தேனை – கண்டி வீதி ஊடான போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. குறித்த கனரக வாகன சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனதால்,
இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூளையில் ஏற்பட்ட கட்டியினால் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 44 வயது பெண்ணுக்கு அபூர்வ சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அபூர்வ சத்திரசிகிச்சை மூலம் மூளை கட்டி அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையில் சத்திர சிக்சைக்குட்படுத்தப்பட்ட பெண் முழுமையாக மயக்கமடைய செய்யாமல் அவருடன் உரையாடிக்கொண்டே சித்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்திர சிகிச்சை பதுளை வைத்தியசாலையின் நரம்பியல் வைத்தியர் லக்மால் ஹேவாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்ணுக்கே பதுளை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது அவரது தலையில் 3 – 4 சென்றிமீற்றர் அளவு பெரிய கட்டி ஒன்று வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இந்த கட்டிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைமை காணப்பட்டுள்ளது. 4 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது நோயாளி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சத்திரசிகிச்சை இலங்கையில் இடம்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் அநுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளியை முழுமையாக மயக்கமடைய செய்யாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் 16 அடியாக உயர்வடைந்துள்ளது என மத்திய நீர்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கே.இமாசலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக உயர்வடைந்து வருகின்றது.
அந்தவகையில், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழான பாவற்குளம் 19.4 அடி நீர் கொள்ளளவைக் கொண்டுள்ள நிலையில் அதன் நீர்மட்டம் தற்போது 16 அடியாக உயர்வடைந்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருதனால் அதன் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைக் கூடிய நிலையே உள்ளது. எனவே, அதன் கீழ் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்துடன், முகத்தான்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 5 அங்குலமாகவும், மருதமடுக்குளம் 12 அடி 3 அங்குலமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் இரு குளங்களினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் கீழ் பகுதிகளில் இருக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஈரப்பெரியகுளம் 10 அடி 9 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 11 அடியாகவும் உயர்வடைந்துள்ளது. அருவி ஆறு 6 அங்குலம் நீர் பாய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிரபல முன்னணி நடிகையான ரேகா மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகை ஆவார் மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிதும் புகழப்பட்ட பிரபலமடைந்த ஒரு நடிகர் மக்கள் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்து இருக்கிறார் இவர் நடித்த படங்கள் அனைத்துமே பல வெற்றிகள் பெற்றது.
மேலும் இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். தென்னிந்திய திரை துறையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் ஒரு ரேகா.
இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார் இவர் தமிழ் திரை மற்றும் மலையாள திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகையாகவும் வலம் வந்தார்.
இவர் நடித்த பல படங்கள் நல்ல முறையில் வெற்றி பெற்றது புன்னகை மன்னன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு கடலோர கவிதைகள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் ஒரு கேரளத்தைச் சேர்ந்தவர்.
ரேகா கடலோர கவிதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என பல பிரபல நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர்.
கடலோர கவிதைகள் இவர் டீச்சராக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் பின்பு அவர் நடித்த புன்னகை மன்னன் அவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தியது நடிகை ரேகா மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் என்ற திரைப்படத்திற்காக வாங்கியுள்ளார் இவர் கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு கடல் உணவு ஏற்றுமதி அவரை திருமணம் செய்தார் இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பின்பு தொலைக்காட்சிகளில் இவர் 2006 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரில் நிச்சயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பெரிதும் பேசப்பட்ட ஒரு நடிகையானார் பின்பு 2019ஆம் ஆண்டு கொக்கு வித் கோமாளி இவர் பங்கேற்றார்.
இவர் 2020ஆம் ஆண்டு பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டார் இதிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது தற்போது ரேகா அவருக்கென்று ஒரு சமாதியை கட்டி அதை பராமரித்து வருகிறார்
இதைக் கேட்கும் போதே மிகவும் அதிசயமாக இருக்கிறது உயிரோடு இருக்கும்போதே தனக்கு சமாதி கட்டி அதை பராமரித்து வரும் ரேகாவிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்னவென்றால். நடிகை ரேகாவுக்கு அவரது தந்தை என்றால் மிகவும் பிடிக்குமாம் மேலும் அளவு கடந்த பாசம் அவர் தந்தை மீது வைத்திருக்கிறாராம்.
ஆனால் இவர் திரைப்படத்திற்கு நடிக்க சென்றது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லையாம் எனவே மிகவும் கோ பமாக இருந்து எட்டு மாதங்கள் வரை ரேகாவிடம் பேசாமல் இருந்திருக்கிறார்.
மேலும் நடிப்பில் வெளியான படங்களில் ஒரு படம் மட்டும் தான் அவர் பார்த்து இருக்கிறாராம் பின்பு அவர் தந்தை இ றந்து விட்டார் எனவே அவரது கல்லறைக்கு பக்கத்திலே இவரும் சமாதி கட்டி அதை பராமரித்து வருகிறார் மேலும் நான் இ றந்தால் இதில் தான் என்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே இருப்பாராம்.
சிறுவர்கள் சில மனநோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் இவ்வாறு சிறுவர்களுக்கு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல் ஒன்றை ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மனநிலைகளில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவது அத்தியாவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து கனமழை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது. அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நிலையத்தினால் வெளியிட்ட ஆலோசனைகளை மீறி செயற்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெள்ள நீரில் மீன் பிடித்தல் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டமையினால் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
எனினும் இன்றைய தினம் வெள்ள நிலைமை ஓரளவு குறைவடைந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது. வெள்ள நீர் குறைவடைந்து வருகின்றது.
300 குடும்பங்கள் வரையில் அனர்த்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வீடுகள் முழுமையாக சேதடைந்துள்ள 700 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக சுமார் 50,000 வீடுகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் கனமழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அநுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிலவிய கடும் வெள்ள நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர், நீர் முகாமைத்துவ பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பதுளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (10.11) வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை நேற்றையதினம் 42 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த இரு நாள்களாக பெய்து வந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கடந்த 48 மணி நேரத்தில் அதாவது நேற்றுமுன்தினம் (8ஆம் திகதி) முதல் இன்று 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 288 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
களுத்துறையின் பரகொட, இரத்தினபுரி புதிய நகரம், காலியின் உடமலத்த, பாலவிய வணாத்தவில்லு, எலுவன்குளம், மன்னார் வீதி, கல்பிட்டி, உடுபத்தாவ, தாரவில்லுவ, கொடதெனியாவ, புத்தளம், குருநாகல் ஆகிய இடங்களில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு மற்றும் வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய நிலைமையில் இருப்பதாக வவுனியா மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் அனர்த்த முன் எச்சரிக்கை நிலைமை தொடர்பாக மாவட்டசெயலக வளாகத்தில் இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று (10.11.2021 இடம்பெற்றது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
மாவட்டத்தில் எதாவது ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றால் அதிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது. அது தொடர்பான தந்திரோபாயங்களை வகுப்பது தொடர்பாக இன்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அந்தவகையில் அவ்வாறான அனர்ததங்கள் ஏற்ப்படும் பட்சத்தில் அதனை இராணுவத்தினரின் உதவியுடன் நிவர்த்திசெய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்தகால அனர்த்த நிலைமைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்றபோது வெங்கலசெட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் சில பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கின்றது. காரணம். அந்த பிரதேசங்களின் பூகோள அமைவிடம் மற்றும் வறுமைநிலை என்பன அதில் செல்வாக்கு செலுத்துகின்றது.
மல்வத்துஓயா பெருக்கெடுப்பதன் விளைவாக மன்னாரின் சில பகுதிகள் மற்றும் அதன் எல்லைப்பகுதியான வெங்கலசெட்டிகுளம் பிரதேசத்தின் சில பகுதிகள் பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது.
அதேபோல நெடுங்கேணியில் மருதோடை, காஞ்சூரமோட்டை ஆகிய பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது.
அத்துடன் வவுனியா பிரதேசசெயலகப் பிரிவில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கமானது தற்போது வழிந்தோடும் தன்மையில் இருக்கின்றது.
மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அதன் வான் கதவுகள் திறக்கப்படவேண்டிய நிலமை ஏற்படலாம். இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் பாவற்குளமானது தனது முழுகொள்ளளவை எட்டும்போது அதனை அண்டிய பகுதிகளும் பாதிப்படையக்கூடிய நிலமை இருக்கின்றது. எனவே அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாவட்டத்தில் எந்தவிதமான அனர்த்தங்கள் ஏற்ப்படின் அதனை சமாளிப்பதற்கு மாவட்டசெயலகமும் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் தயார் நிலையில் இருக்கின்றதென்பதை தெரிவித்துகொள்கிறேன் என்றார்
கலந்துரையாடலில் பொலிசார், இராணுவத்தினர், அரச திணைக்களங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வவுனியா மாவட்ட அனர்த்தநிலை மற்றும் அனர்த்த முன்னேற்பாடுகள் குறித்த அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று (10.11) இடம்பெற்றது. மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், குளங்களின் நீர்மட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செலகங்களுடன் இணைந்து கிராம மட்டத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்து வரும் நிலையில், திடீரென ஏற்படும் அனர்த்தங்களை தடுக்க இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை இராணுவத்தினரின் உதவியுடன் நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டது.
மேலும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஐ.இன்பராஜா, இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், நீர்பாசன திணைக்கள பொறியலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டன.