யாழ்ப்பாணம், காரைநகரில் ஊரடங்கு அமுலாகியுள்ள நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 சிறுவர்கள் உள்ளிட்ட 34 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார். வவுனியா – மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த செபமாலை இராசதுரை (வயது 73) என்ற தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் இராசதுரை விஜி 2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்து சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே மரணமடைந்தார்.
வவுனியாவில் 1668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார். இந்நிலையில் 27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளமையினால், அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,அவருக்கு கோவிட்தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (8) ஆண் குழந்தை ஒன்றும் ,பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 95.8 சதவீத கோவிட் தொற்றுக்கள் டெல்டா வைரஸால் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, வடக்கு மாகாணத்தில் 199 பேரின் மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்திய போது 113 பேர் டெல்டா திரிபினாலும், 10 பேர் அல்பா திரிபினாலும் பாதிக்கப்பட்டமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் நுண் உயிரியல் துறையினால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வில் இது தெரியவந்துள்ளது. பேராசிரியர் நீலிகா மாளவிகே மற்றும் மருத்துவர் சந்திம ஜீவந்தர ஆகியோரால் ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு மாகாணத்திலும் டெல்டா வைரஸ் திரிபு 84 முதல் 100 சதவிகிதம் வரை பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட 881 பேரின் மாதிரிகளில் 592 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு உள்ளமை தெரியவந்துள்ளது.
மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (10.09) இரவு வெளியாகின. அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை டெல்டா வைரஸ் தொற்று பரவல் அடைவதால் மக்கள் விழிப்புணர்வுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (10.09) 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.
தோணிக்கல், கூமாங்குளம், மதவுவைத்தகுளம், ஓமந்தை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.
இந்நிலையில் மரணித்த 4 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியாவில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (10.09) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றினால் 131பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன்,
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,995ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த பல நாட்களாக கோவிட் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றில் 200ஐத் தாண்டிச் சென்ற நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான இத்தாலியில் பெற்றோர் வசித்து வரும் நிலையில் இலங்கையில் மகன் செய்த மோசமான செயற்பாடு தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாரவில பிரதேசத்தில் வீடியோ கேம் விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தில் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாகிய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து அதனை விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில – கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இந்த மாணவன் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவனின் தாய் மற்றும் தந்தை இத்தாலியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தம்பதியின் ஒரே மகனான இவர் இணையத்தளம் ஊடான விளையாட்டில் தீவிரமாக அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பணத்தை அவர் விளையாட்டிற்காக மாத்திரமே செலவு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென காணாமல் போள்ளமை தொடர்பில் அந்த மாணவனின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது குறித்த மாணவன் குறைந்த விலைக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், இந்த மாணவன் தனது தாய் தந்தை மற்றும் பாட்டிக்கு சொந்தமான 5 லட்சம் ரூபாய் பெறுமதி தங்க நகைகளை திருடி விற்பனை செய்துள்ளார்.
அத்துடன் அவர் மேலும் பல லட்ச ரூபாய் பணத்தை அதற்காக பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. அந்த பணத்தை இணையத்தள வீடியோ விளையாட்டிற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பொது மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.
இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் போது நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’
எனவே, இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுமாறும், முகக்கவசம் அணிவதோடு, வீடுகளிலே இருக்குமாறும் சுகாதார அமைச்சர் நாட்டு மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் திருமணமான பெண் ஒருவரின் தலையில் கொடூர தாக்கபட்ட நிலையிலும், கணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சுதந்த கன்தகே என்ற 39 வயதுடைய நபர் ஒருவரும் பியுமி மதுஷிகா லியனவடு என்ற 28 வயதுடைய கணவன் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த கணவனால், தனது தந்தை மற்றும் சகோதரிக்கு எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் அறையின் தரையின் கீழ் காணப்பட்டுள்ளது. அவரது தலையில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. அதிக அளவு இரத்தம் வெளியேறியதனால் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த கணவனின் சடலம் வரவேற்பு அறையின் ஒரு பகுதியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவனால் இந்த கொலை செய்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தனது சகோதரனின் உடல் தொங்குவதனை அவதானித்த சகோதரியினால் பொலிஸாரிடம் இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டெல்டா மாறுபாடு பரவுவதால் கர்ப்பம் தரிப்பதை, ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சொய்சா மகப்பேறு மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷா அத்தபத்து, நேற்று விடுத்த வேண்டுகோள் தொடர்பில், சுகாதார சேவைகள் துணைப்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில், இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சின் அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.அவர்கள் தங்கள் கருத்துக்களையே தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், தற்போதைய நிலையில் இது ஒரு நியாயமான கோரிக்கையாகும் என்பது தமது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு பயங்கரமான டெல்டா மாறுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது கர்ப்பத்தை தாமதப்படுத்த யாரையும் கட்டாயப்படுத்துவது அல்ல, ஆனால் கர்ப்பிணிப் பெண்களை மோசமாகப் பாதிக்கும் தொற்றுநோயின் தீவிரத்தை மக்களுக்குப் புரிந்துகொள்ள உதவுவதாக ஹேரத் கூறியுள்ளார்.
தென்னிலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான அட்டையில் பதிவிட்டு சென்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து தடுப்பூசி பெறாமல் தடுப்பூசி அட்டையில் பதிவிட்டு செல்ல சிலர் முயற்சித்துள்ளனர்.
குறித்த மோசடியாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி எத்திலிகொட மற்றும் கொன்கஹ பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தடுப்பூசி நிலையத்திற்கு வருகைத்தந்து அட்டையில் மாத்திரம் பதிவிட்டு செல்லும் போது அங்கிருந்த சுகாதார அதிகாரி இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரியப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர்களை தடுத்து வைத்து பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் காணாமல்போன 25 வயதான இளம் யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கடந்த ஐந்தாம் திகதி விறகு வெட்ட சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தது.
இந்த நிலையில் காணாமல்போன தனது மகள் பல நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னர் சில சந்தர்ப்பங்களில் அவர் காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த யுவதியை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கிகிளியாவ பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தின் உதவியுடன் ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு இன்று (10.09) ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
கொரோனா பரம்பல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் முதியவர்கள் தமது ஓய்வூதியத்தை வங்கிகளுக்கு சென்று பெற முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் ஏற்பாட்டில் பேரூந்துகள் மற்றும் பிக்கப் வாகனங்களில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓய்வூதியம் பெறுவர்கள் வவுனியா நகரப்பகுதியில் உள்ள அரச வங்கிகளுக்கு வருகை தந்து தமது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஓய்வூதியப் பணத்தினைப் பெற்றுச் சென்றனர்.
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (10.09) வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சார் உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
சுகாதாரப் பிரினரின் ஏற்பாட்டில் ஒரு நாளில் 500 பேருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.
அத்துடன், அதிகளவிலான ஆசிரியர்கள் முதல் நாளிலேயே தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வருகை தந்தமையால் நீண்ட வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.