இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 633 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். முன்னதாக நேற்று மாலை 314 தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 259 பேர் தொற்றாளிகளின் இணைப்புக்களில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவில் மேலும் 319 தொற்றாளிகளின் அறிக்கை வெளியானது.
இதில் 83 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 236 பேர் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 10424ஆகஉயர்ந்துள்ளது. 6123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4282பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தின் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுவிலில் தாய் மற்றும் 10 அகவையைக்கொண்ட மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு – மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் நேற்று முன்தினம் மாதிரிகள் பெறப்பட்டன. அவை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு – வெள்ளவத்தையில் இயங்கும் விருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30.10.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு அநுராதபுரம் சென்ற லொறியொன்று சிறுவன் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில் சிறுவன் கானிற்குள் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்துள்ளார்.
இதேவேளை சிறுவனை காப்பாற்ற முற்பட்ட லொறியின் சாரதி லொறியை மறுபக்கம் திருப்பியமையினால் லொறியும் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த மதுரங்க மலித் (15 வயது) என்ற சிறுவனே காயமடைந்துள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று (30.10.2020) இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பாணிப்புடன் செயலாற்றும் பொது சுகாதார பரிசோதர்களுக்கு அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக மத்திய வங்கியின் நிதி உதவியில் சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 12 சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அப்பாச்சி ரக மோட்டர் சைக்கிள்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், தொற்று நோயியல் வைத்திய நிபுணர் எஸ்.லவன், ஆகியோரினால் இவ் மோட்டார் சைக்கிள்கள் சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் குறித்த இளைஞருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி குறித்த இளைஞருக்கு மீண்டும் ஒரு தடவை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்றும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்முடிவு வெளியாகிய பின்னரே தொற்று தொடர்பில் கூற முடியும் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.
விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.ஈ.கமலராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.
அதற்குப் பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கொழும்பு 12ஐச் சேர்ந்தவர் எனவும், இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 27ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125 பேருக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்த கஹதுடுவ பிரதேச மீன் விற்பனையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
அவர் அந்த சலூனிற்கு வந்தமையினால் சலூன் உரிமையாளரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மீன் வர்த்தகர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் முடிவெட்டும் நபர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போதே இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
28 வயதான முடிவெட்டும் நபர் ஹொரன பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரது வீடு உட்பட 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரன சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை (30.10) குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, வெள்ளைவானில் க டத்தப்பட்டவர்களுக்கு பதில் தா, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சுமார் அரை மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.
கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பில் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களும் யாசகர்கள் வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு சென்று யாசகத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுடாக கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே யாசகர்களை வர்த்தக நிலையம் , வீட்டு வளாகத்தினுள் உள்வாக்குவதை தவிர்த்து கொள்வதுடன் தேவையேற்படின் முழுமையான பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்களுடான கலந்துரையாடல் , பணம் வழங்குதல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் மேலும் கோரியுள்ளனர்.
வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகம் செய்பவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடைமுறையினை வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சமூக பரவலை தடுப்பதற்காக சுகாதார திணைக்களத்தினர் கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெடுங்கேணி, அதனை அண்டியுள்ள பிரதேசங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு சுகாதார பிரிவினர் விடுத்த வேண்டுகோளிக்கினங்க கடந்த 25ம் திகதியிலிருந்து அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நெடுங்கேணி பிரதேசம் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதுடன் வீதி அபிவிருத்திப் பணியினை மேற்கொண்ட 82 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் அதிகளவில் வருகைதரும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நேற்று 29.10) தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் பிரதேச செயலக கட்டிடம், அலுவலகங்கள், மாநாட்டு மண்டபம் என்பன மருந்தும் வீசி தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு பொதுநோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து அக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் ஈர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்மடு பாடசாலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று (30.10) இடம்பெற்றது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்மடு கிராம அலுவலர் பிரிவில் கல்மடு, சாளம்பன், பூம்புகார், முல்லைக்குளம், ஈஸ்வரிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இக் கிராம அலுவலர் பிரிவுக்கு என பிரதேச செயலகத்தால் ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பணத்தில் இக் கிராம அலுவலர் பிரிவுக்கான பொதுவான கட்டடமாகவுள்ள பொதுநோக்கு மண்டபத்தை புனரமைக்க ஐந்து கிராம மக்களும் இணங்கினர்.
இதற்கமைவாக கல்மடு மாதர் அபிவிருத்திச் சங்கம் அதற்கான கட்டட புனரமைப்பு ஒப்பந்தத்தைப் பெற்று அதனை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரான மங்களராஜா என்பவருக்கு வழங்கியிருந்தனர்.
கட்டட புனரமைப்பின் போது பொது நோக்கு மண்டபத்தில் இருந்து ஓடுகள் கழற்றப்பட்டு தற்போது சீற் போடப்படுகின்றது. இதன்போது அதற்கு பயன்படுத்தும் மரங்கள் இக்கட்டடத்தில் இருந்த 15 வருட பழமையான மரங்கள். புதிய மரங்கள் முழுமையாக மாற்றப்படவில்லை.
இதனால் சில காலங்களில் கூரை உடைந்து விழும் அபாயமுள்ளது. இதனால் தமது மண்டபத்தை சரியான அளவில் மரங்களைப் போட்டு புனரமைத்து தருமாறும் அதற்கு ஒதுக்கிய பணத்தை சரியாக பயன்படுத்துமாறும் கோரியே ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்களுக்கு தெரியப்படுத்திய போதும் அவர் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அம் மக்கள் குற்றம்சாட்டினர்.
ஆர்ப்பட்டம் நடைபெற்ற போது, அங்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன், குறித்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், பொது நோக்கு மண்டபத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் ஒப்பந்தத்தைப் பெற்ற மாதர் சங்கத்தினருடனும் கலந்துரையாடினார். இதனையடுத்து குறிதத விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது குறித்த வேலை தொடர்பில் கட்டடங்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் மதிப்பீட்டிற்கு பணித்துடன், அது வரை நடைபெறும் வேலைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த கட்டட புனரமைப்பு நடவடிக்கைகள் சரியென ஒப்பந்தத்தை பெற்று பிரதேச சபை உறுப்பினரிடம் வழங்கிய மாதர் சங்கத்தினர் தெரிவித்திருந்தமையுடம் குறிப்பிடத்தக்கது.
வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியாவில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது என தெரியவருகின்றது.
கொவிட்19 பரம்பலைத் தொடர்ந்து தொடரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டிரும்கின்றது, இதைத் தொடர்ந்து வடபகுதிக்கான தபால்கள் அனைத்தும் வவுனியா தபால் நிலையத்தில் தேக்கிக் கிடப்பதாக அறிய முடிக்கின்றது.
தென்பகுதிக்கான தபால்கள் அனைத்தும் வ்வுனியாவில் இருந்து அனுப்பப்படுகின்ற போதிலும் வட பகுதிக்கான தபால்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக வவுனியாவிற்க்கான தபால்கள் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் ஏனைய வடபகுதிற்கான விநியோகங்கள் தடைபட்டிருக்கிறது.
வாகனவசதிகள் இருக்கின்ற பொழுதும் அவை தபால் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகவும் காணப்படுகிறது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதன் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரசபை மைதானம் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக நகரசபைத் தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காராணமாக நகரசபை மைதானம் மற்றும் அப் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் பூப்பந்து மைதானம், வலுவூட்டல் நிலையம் என்பவற்றை பயன்படுத்துவதற்கு மறுஅறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தருபவர்கள் காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனை வெளிப்படுதி சுவரொட்டி மூலம் நகரசபை வாயில்களில் நகரசபைத் தலைவரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்ய சென்ற பலரும் இன்று ஏமாற்றதுடன் திரும்பிச் சென்றிருந்தனர்.
இதேவேளை, நகரசபையின் பொதுப்பூங்கா தொடர்ந்தும் இயங்கி வருகின்றமையும், அங்கு அதிகளவிலான மக்கள் சென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இன்னும் சில வாரங்கள் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையில் கம்பஹாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொற்றின் தொடர்பாளர்கள் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை நாட்டில் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.