வவுனியா கண்டி வீதியில் புதிதாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து நடைமுறை!!

போக்குவரத்து நடைமுறை..

வவுனியா கண்டி வீதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வரையிலான பகுதியில் தினசரி 3க்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

இதனையடுத்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க ஆலோசனைக்கமைய கண்டி வீதியில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் வரையிலான வீதிப்பகுதியில் வாகனம் முந்திச்செல்ல தடை விதிக்கப்பட்டு சுமார் 1கிலோ மீற்றர் தூரத்திற்கு வீதியில் தொடர் வெள்ளைக்கோடு இடப்பட்டுள்ளது.

அத்துடன் அதிக விபத்துக்கள் இடம்பெறும் இடம் அவதானமாக வாகனத்தினை செலுத்தவும் என்ற வாசகத்தை தாங்கிய விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்!!

குளத்திலிருந்து..

வவுனியா பொன்னரசங்குளம் ஈச்சங்குளம் குளப்பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை பொலிசார் இன்று (01.11.2020) காலை மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக தேசிய புலனாய்வுபிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிசார் மண் அகலப்பயன்படும் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கி மற்றும் 6 கைக்குண்டுகள் ,மற்றும் இரண்டு மகசின்களை பொலிசார் மீட்டனர். மீட்கப்பட்ட கைக்குண்டுகள் விசேட அதிரடிபடையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தொடர்பில் வெளியான செய்தி!!

ஊரடங்கு தொடர்பில்..

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயலணியில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை மற்றும்; குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு!!

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர் மற்றும் 10 தாதியர்களை பொலனறுவை கொரோனா வைத்தியசாலைக்கு கடமைக்கு வருமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர். இவ்வாறான நிலையில் பொலநறுவையில் உள்ள கொரோனா நோயாளர் வைத்தியசாலைக்கு வவுனியா வைத்தியசாலையில் இருந்து வைத்தியர், தாதியர்களை அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து இரு வைத்தியர், 10 தாதியர்கள் பொலநறுவையில் உள்ள கொரோனா வைத்தியசாலைக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 14 நாட்கள் அங்கு கடமை புரிந்த பின்பு, 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர். இவர்கள் மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு வந்த பின்னர் அடுத்த குழு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் இளைஞரின் கொரோனா தொற்று பீ.சி.ஆர் முடிவுகள் வெளியாகியது!!

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (30.10.2020) கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்முடிவு நேற்று (31.10) இரவு வெளியாகிய நிலையில் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வெளியாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையினால் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

இலங்கையின் நேற்று மட்டும் 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா தொற்று..

இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 633 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். முன்னதாக நேற்று மாலை 314 தொற்றாளிகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 55 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 259 பேர் தொற்றாளிகளின் இணைப்புக்களில் இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவில் மேலும் 319 தொற்றாளிகளின் அறிக்கை வெளியானது.

இதில் 83 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 236 பேர் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்தும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாட்டுக்குள் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 10424ஆகஉயர்ந்துள்ளது. 6123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4282பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

வட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி : வைத்தியர் த.சத்தியமூர்த்தி!!

கொரோனா..

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுவிலில் தாய் மற்றும் 10 அகவையைக்கொண்ட மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று முன்தினம் மாதிரிகள் பெறப்பட்டன. அவை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு – வெள்ளவத்தையில் இயங்கும் விருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்!!

விபத்து..

திருகோணமலை – ஹொரவபொத்தானை பிரதான வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (30.10.2020) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு அநுராதபுரம் சென்ற லொறியொன்று சிறுவன் பயணித்த துவிச்சக்கரவண்டியுடன் மோதிய நிலையில் சிறுவன் கானிற்குள் தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

இதேவேளை சிறுவனை காப்பாற்ற முற்பட்ட லொறியின் சாரதி லொறியை மறுபக்கம் திருப்பியமையினால் லொறியும் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் மஹதிவுல்வெவ – புபுதுபுர பகுதியைச் சேர்ந்த மதுரங்க மலித் (15 வயது) என்ற சிறுவனே காயமடைந்துள்ளார். சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு!!

மோட்டார் சைக்கிள்கள்..

கொவிட் -19 தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முகமாக வவுனியா மாவட்ட சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நேற்று (30.10.2020) இந்நிகழ்வு இடம்பெற்றது.

கொவிட்-19 நோய் தொற்றை தடுக்கும் வகையில் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பாணிப்புடன் செயலாற்றும் பொது சுகாதார பரிசோதர்களுக்கு அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைவாக மத்திய வங்கியின் நிதி உதவியில் சுகாதார அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 12 சுகாதார பரிசோதகர்களுக்கு இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது. 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அப்பாச்சி ரக மோட்டர் சைக்கிள்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், தொற்று நோயியல் வைத்திய நிபுணர் எஸ்.லவன், ஆகியோரினால் இவ் மோட்டார் சைக்கிள்கள் சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா சந்தேகத்தில்..

வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் குறித்த இளைஞருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி குறித்த இளைஞருக்கு மீண்டும் ஒரு தடவை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்றும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்முடிவு வெளியாகிய பின்னரே தொற்று தொடர்பில் கூற முடியும் என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நபர் அண்மையில் கொழும்பு சென்று வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி!!

மின்னல்..

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.ஈ.கமலராஜன் ஸ்தலத்திற்கு விரைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.

அதற்குப் பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 20 ஆவது கொரோனா மரணம் பதிவு : அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!!

கொரோனா மரணம்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கொழும்பு 12ஐச் சேர்ந்தவர் எனவும், இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 27ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

125 பேருக்கு தலைமுடி வெட்டியவருக்கு கொரோனா!!

கொரோனா..

கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125 பேருக்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்த கஹதுடுவ பிரதேச மீன் விற்பனையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

அவர் அந்த சலூனிற்கு வந்தமையினால் சலூன் உரிமையாளரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மீன் வர்த்தகர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பின்னர் முடிவெட்டும் நபர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போதே இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

28 வயதான முடிவெட்டும் நபர் ஹொரன பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவரது வீடு உட்பட 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹொரன சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை (30.10) குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, வெள்ளைவானில் க டத்தப்பட்டவர்களுக்கு பதில் தா, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

சுமார் அரை மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர்.

வவுனியா யாசகர்கள் தொடர்பில் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

யாசகர்கள்..

கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகத்தில் ஈடுபட்டுள்ளோர் தொடர்பில் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு சுகாதார பிரிவினர் முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

குறிப்பாக வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரு தினங்களும் யாசகர்கள் வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு சென்று யாசகத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுடாக கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே யாசகர்களை வர்த்தக நிலையம் , வீட்டு வளாகத்தினுள் உள்வாக்குவதை தவிர்த்து கொள்வதுடன் தேவையேற்படின் முழுமையான பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்களுடான கலந்துரையாடல் , பணம் வழங்குதல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட சுகாதார பிரிவினர் மேலும் கோரியுள்ளனர்.

வெளி மாவட்டத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்து யாசகம் செய்பவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய நடைமுறையினை வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் வர்த்தக நிலையங்கள்!!

நெடுங்கேணி..

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தனியார் வீதி ஒப்பந்த பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சமூக பரவலை தடுப்பதற்காக சுகாதார திணைக்களத்தினர் கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெடுங்கேணி, அதனை அண்டியுள்ள பிரதேசங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்படும் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தினையும் மூடுமாறு சுகாதார பிரிவினர் விடுத்த வேண்டுகோளிக்கினங்க கடந்த 25ம் திகதியிலிருந்து அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நெடுங்கேணி பிரதேசம் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுவதுடன் வீதி அபிவிருத்திப் பணியினை மேற்கொண்ட 82 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.