வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் அவசரக் கூட்டம்!!

வவுனியாவில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று(04.05) இடம்பெற்றது.

வவுனியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஓர் பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் பாடசாலை சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு தொடர்பான போன்ற பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் உள்ள 180 பாடசாலைகளின் அதிபர்கள், மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வளாகத்தின் கல்விசெயற்பாடுகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!!

யாழ் பல்கலைழக வவுனியா வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடும் என்று வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த அவர்,

நாட்டின் தென்பகுதியிலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தபட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் வாரம் வளாகத்தின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதற்கமைய வியாபாரகற்கைகள் பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கள் கிழமை 6 ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளதுடன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசெயற்பாடுகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை 7 ஆம் திகதி ஆரம்பிக்கபடுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் விடுதிகளில் தங்கிநிற்கின்ற வியாபாரகற்கைகள் பீடத்தின் மாணவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிக்குள்ளும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணிவரைக்கும் விடுதிகளிற்குள் அனுமதிக்கபடுவர்.

அத்துடன் மாணவர்கள் எடுத்துவரும் பொதிகளும் பாதுகாப்பு பிரிவினரால் சோதனைக்குள்ளாக்கபடும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டிலும் தொடரும் அதிரடி கைதுகள் : தற்கொலைதாரி சஹ்ரானின் மைத்துனர் கைது!!

கொழும்பில் தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மௌலான ரீலா என்பவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மௌலானா ரீலா மற்றும் போலி பெயரில் சவுதியில் தஞ்சமடைந்த அவருக்கு நெருக்கமான இன்னொருவரையும் சவுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல், இந்தியாவின் கேரள பிராந்தியம் மற்றும் தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கள் அதிகாரிகள் குழுவொன்றை விசாரணைக்காக சவுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் விபத்து!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த புகையிரதம், உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்தள்ளது. விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்துள்ளதுடன், சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ரி 56ரக துப்பாக்கியின் மகசீனுடன் தோட்டாக்கள் மீட்பு!!

வவுனியா மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை இன்று (04.05) காலை மடுகந்தை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மடுகந்தை குளத்திற்கு அருகில் பட்டம் விடுவதற்காகச் சென்ற சிறுவன் ஒருவன் இப்பொருட்களை அங்கு அவதானித்துள்ளார். இதையடுத்து விமானப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

பொலிசார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் அங்கு காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் மகசீன் மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பனவற்றை மீட்டுள்ளதுடன் அப்பகுதியில் மேலும் வெடி பொருட்களைத் தேடி தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் மேற்கொண்டனர்.

எனினும் சந்தேகத்திற்கிடமான வேறு எவ்விதமான பொருட்களும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமாக காதலனை துரத்தி சென்ற இளம்பெண் : தண்டனை பெற்றுத்தந்த வீடியோ!!

லண்டனில் முழு நிர்வாணமாக தனது காதலனை துரத்திச் சென்று தாக்கிய ஒரு இளம்பெண் CCTV கெமராவில் சிக்கியதையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

லண்டனிலுள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் Amelia Oxenford (21) என்னும் இளம்பெண் முழு நிர்வாணமாக தனது காதலனான Alex Buttigiegஐ துரத்திச் சென்று தாக்கும் காட்சிகள் சிக்கின.

அந்த ஜோடி மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருக்கும்போது, Amelia யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்.

அது யார் என்று விசாரிக்கும்போது, சிறிது காலம் காதலர்கள் இருவரும் பிரிந்திருக்கும்போது, Amelia வேறொரு நபரை சிறிது காலம் காதலித்திருக்கிறார், அந்த நபருக்குதான் தற்போது அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அறைக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் அறைக்கு செல்ல, கதவு பூட்டியிருக்கிறார்கள். அப்போது Amelia ஆடையின்றி முழு நிர்வாணமாக இருந்திருக்கிறார்.

Alex ஹொட்டல் ரிசப்ஷனுக்கு சென்று மாற்று சாவி வாங்கி வரச் செல்ல, தன்னை வேண்டுமென்றே நிர்வாணமாக விட்டுச் சென்றதாக எண்ணிய Amelia, Alex திரும்பி வரவும் கோபத்தில் கையிலிருந்த மதுபாட்டிலை உடைத்து அதை வைத்து அவரை தாக்க துரத்தியிருக்கிறார்.

தாக்குதலில் Alexஇன் மூக்கில் காயம்பட்டதோடு, அவரது கண்ணாடியும் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகள் ஹொட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளன. இன்று நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த நிலையில், CCTV காட்சிகள் திரையிடப்பட்டன.

நீதிபதி வீடியோ காட்சிகளைப் பார்த்தபின், Amelia ஏற்படுத்திய நஷ்டத்திற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 12 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு 10 நாட்கள் மன நல மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

அந்த நிர்வாண வீடியோவை வெளியிடுவது முறையாக இருக்காது என்று கூறி, அதை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டனர்.

பல முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.. மாமியாரை இளம் திருநங்கையுடன் சேர்ந்து கொன்ற மருமகள்!!

இந்தியாவில் மாமியாரை, திருநங்கை உதவியுடன் கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பீனா சர்மா (62). இவரின் மருமகள் பிரியங்கா.

பீனா வீட்டுக்கு பின்பக்கத்தில் சுனிதா என்ற இளம் திருநங்கை குடியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீனா தனது படுக்கையறையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது சுனிதாவுடன் அங்கு வந்தார் பிரியங்கா. பின்னர் பிரியங்கா தனது மாமியார் பீனாவின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்ட நிலையில் சுனிதா அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தார்.

பின்னர் பீரோவில் இருந்த நகைகளை பிரியங்கா எடுத்து கொண்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதையடுத்து காலையில் பீனா சடலமாக இருப்பதை பார்த்த பிரியங்காவின் கணவரும், பீனாவின் மகனுமான விஷாந்த் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விசாரித்தனர். அப்போது பிரியங்கா மணிக்கட்டில் அணிந்திருந்த நகையின் ஒரு பகுதி பீனா சடலம் அருகில் இருந்ததை கண்டுபிடித்த பொலிசார் பிரியங்காவிடம் விசாரித்தனர்.

அப்போது மாமியார் பீனாவை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், பீனா என்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதோடு, என் பெற்றோர் வீட்டுக்கு செல்ல கடந்த 3 ஆண்டுகளாக அனுமதிக்கவில்லை.

இதோடு கடந்த சில வருடங்களில் பல முறை என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது, இதையடுத்தே சுனிதா உதவியுடன் பீனாவை கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து கொலையாளி இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

215 கிலோவிலிருந்து 130 கிலோ எடையை குறைத்தது எப்படி? பிரித்தானியாவை சேர்ந்த 42 வயது நபர் சந்தித்த கஷ்டங்கள்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய 215 கிலோ எடையிலிருந்து தற்போது 130 எடை குறைத்து சாதித்து காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் Hampshire பகுதியைச் சேர்ந்தவர் Jon Vidler. 42 வயதான இவர் தன்னுடைய 215 கிலோ எடையிலிருந்து கடினமான உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் இப்போது 130 கிலோ எடை குறைத்து 84 எடை அளவிற்கு குறைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னுடைய ஆரம்பகால கட்டத்தில் அளவிற்கு அதிகமாக உணவு எடுத்து கொள்வேன். உடல் எடை அதிகரித்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால் இதற்கு எடை குறைப்பதற்கு முயற்சிகள் என்னவென்று கேட்ட போது, சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை ஆபத்தானவனை என்று தெரியவந்தது.

இருப்பினும் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாக உடல் நிலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் வெறும் 60 கிலோ எடையை மட்டுமே குறைத்துள்ளார். அது போன்ற நிலையில் தான் இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய இடி விழுந்துள்ளது. இவருடைய தாய் அப்போது இறந்து போக மீண்டும் எடை அதிகரிக்க ஆரம்பித்தது.

தொடர்ந்து அவ்வப்போது உடல்நிலை வேறு சரியில்லாமல் போயுள்ளது. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த இவர் 2015-ஆம் ஆண்டும் மீண்டும் தன் எடையை குறைப்பதற்கு சபதம் எடுத்துள்ளார்.

அதன் படி இவரின் நண்பர் உதவியுடன் Slimming World -ல் சேர்ந்த இவர் தன் உடல் எடையை மெல்ல மெல்ல குறைத்துள்ளார். எப்படி என்றால் தினந்தோறும் காலையில் நடைபயணம் மேற்கொள்வது, தானே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொள்வது என்று தன்னுடைய இலக்கை அடைய ஓடியுள்ளார்.

இவர் எடை குறைப்பதற்கு தந்தையும் மிக முக்கிய காரணமாக இருந்தார். முதலில் நாள் ஒன்றிற்கு 2.5 மைல் ஓடிய இவர் தற்போது 10 கி.மீற்றர் வரை ஓடுகிறார்.

மேலும் Jon Vidler தற்போது நான் என் எடையை குறைத்துவிட்டேன், ஆனால் என்னுடைய இந்த நிகழ்வுகளை பகிர்வதற்கு ஒரு ஆள் வேண்டும் என்று கூறியுள்ளார்.

எடை குறைப்பதற்கு முன்பு Jon Vidler சாப்பிட்ட உணவுகள் : சாக்லேட், சாண்ட்விச், சாலட், மைக்ரோவேவில் செய்யப்பட்ட உணவுகள், சிப்ஸ்கள் மற்றும் அவ்வப்போது ஏதேனும் ஒன்றை சாப்பிடுவது போன்று இருந்துள்ளார்.

எடை குறைத்த பின்பு அவர் சாப்பிடும் உணவுகள் : வேகவைத்த காளன் மற்றும் காய்கள் மதிய வேளையில் பாஸ்தா உணவுகள், இனிப்பு சேர்க்காத பழச்சாறு, பழங்கள் மற்றும் சின்ன சாக்லெட் பார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை!!

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் இளைஞன் ஒருவர் அம்மாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பரசுராமன் 5- வது தெருவைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா (55). இவரது மகன் மன்சூர் (25). இவர் மாடன் லைன் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த மன்சூருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் இவருக்கு திருமணம் நடக்கவிருந்தது.
இந்நிலையில் இவர் நேற்று திடீரென்று தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலில், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த மன்சூர், பணம் இருந்தால் தான் மனிதனுக்கு மதிப்பு, இல்லாவிட்டால் பிணம் என்று விரக்தியில் பேசியுள்ளார். ஏதோ கவலையில் பேசுகிறார் என நண்பர்கள் சாதாரணமாக இருந்துள்ளனர்.

அதன் பின் வீட்டிற்கு வந்த அவர் தனியாக அறையில் படுத்து உறங்கியுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காததால், பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, தாயின் சேலையில் தூக்கிட்ட நிலையில் மன்சூர் பிணமாகத் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில் அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் நண்பர்களின் வாட்ஸ் அப்பில் ஷேர் ஆனது. அதில் அவர் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது வாட்ஸ் அப்பில், என்ன வாழ்க்கைடா இது. காசு இல்லைன்னா யாரும் நம்மல மதிக்கமாட்டாங்க இந்த வாழ்க்கைக்கு குட் பை… டியர் ஆல் லவ் யூ ஸோ மச் என்ற வாசகங்கள் இருந்தன. இதைப் பார்த்த நண்பர்கள் துயரமடைந்துள்ளனர்.

வாழ்க்கைக்குப் பணம் தேவைதான். ஆனால் பணத்தை வைத்து மட்டும் வாழ்வதல்ல வாழ்க்கை என்பதைப் புரியாமல் மன்சூர் வாழ்க்கையை முடித்துக்கொண்டாரே என அவரது உறவினர்கள், நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண் மருத்துவர்… சிசிடிவியால் சிக்கிய ஆண் மருத்துவர்!!

இந்தியாவில் இளம்பெண் மருத்துவர் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த சம்பவத்தில் ஆண் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லியை சேர்ந்தவர் கரிமா மிஸ்ரா (25). மருத்துவரான இவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கரிமா சடலமாக கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் விசாரித்த நிலையில் கரிமா அருகில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி உடைக்கப்பட்ட நிலையில் இரத்தம் படிந்து இருந்தது.

மேலும் கரிமா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மருத்துவர் சந்திர பிரகாஷ் மாயமானதும் தெரியவந்துள்ளது. சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது சந்திர பிரகாஷ் வீட்டிலிருந்து பையுடன் வெளியில் சென்றது உறுதியானது.

இதையடுத்து சந்திர பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து உத்தரகாண்டில் அவரை பொலிசார் இன்று கைது செய்தனர்.
பொலிசார் கூறுகையில், நாங்கள் சந்திர பிரகாஷை பிடிக்க முயன்ற போது அருகில் இருந்த கால்வாயில் குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் அவரை மீட்டு கைது செய்தோம், கரிமாவை கொலை செய்ததை சந்திர பிரகாஷ் ஒப்பு கொண்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கரிமா, சந்திர பிரகாஷை நல்ல நண்பராகவே பார்த்துள்ளார், சம்பவத்தன்று இருவருக்கும் ஏதோ ஒரு விடயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கரிமாவை சந்திர பிரகாஷ் கொன்றிருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

வீடியோவால் வந்த வினை… வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூரின் பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் கனிமொழி (40). இவர் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறார்.

கடந்த 23ஆம் திகதியன்று கனிமொழி சிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக பாபாநாடு காவல் நிலையத்தில் கனிமொழி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த கனிமொழியை பொலிசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

600க்கு மேற்பட்ட பெண்கள் : எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில் 3 சிறுமிகள் மற்றும் ஒரு பாலியல் தொழிலாளியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் ஹாஜிபூர் கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் சிராவனி என்னும் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி காணாமல் போனார்.

இது குறித்து பொலிஸ் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிராவனியின் பை சீனிவாச ரெட்டிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே கிணற்றில் சிராவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. இதனால், சீனிவாச ரெட்டியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் சீனிவாச ரெட்டி அந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தி கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டான். அதோடு, கிணற்றில் இருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அது அதே பகுதியை சேர்ந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மணீஷா என்னும் மாணவியின் எலும்புக்கூடு என கண்டிபிடிக்கப்பட்டது.

இதுவரை மொத்தமாக 3 சிறுமிகள் மற்றும் 1 பாலியல் தொழிலாளியை சீனிவாச ரெட்டி கொலை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சீனிவாச ரெட்டி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கும் நிலையில், அவனது சமூக வலைத்தளபக்கத்தை ஆராய்ந்த பொலிசார் அதிர்ந்தனர். காரணம் அதில் 600-க்கு மேற்பட்ட பெண் நண்பர்கள் மட்டுமே அவனுக்கு இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் பல பெண்கள் அந்த பகுதியில் காணாமல் போனதாக தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் அவர்களை தேடி வருகிறார்கள். ஆனால் வழக்கில் பொலிசார் மெத்தனம் காட்டுவதாகவும், தீவிரமாக விசாரிக்கவில்லை என்றும் பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் காணாமல் போன பெண்களை கண்டுப்பிடிப்பதில் துரிதமாக செயல்படவேண்டும் என உயர் அதிகாரிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர்.

என்னுடைய சாவுக்கு இவர்கள் தான் காரணம் : தற்கொலை செய்து கொண்ட பொறியியலாளர்!!

இந்தியாவில் தன்னுடைய சாவிற்கு யார் காரணம் என்று இன்ஜினியர் ஒருவர் பிரிட்ஜில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி எத்தனை சோகம் இருக்கிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அஸ்ஸாமில் ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் கீழ் நாகோன் என்ற ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை கடந்த 2015-ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த ஆலை மூடப்பட்ட போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அதன் பின் 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மூடப்பட்ட ஆலை திறக்கப்படும் என்று பா.ஜ.க வாக்குறுதி கொடுத்தது.

ஆனால் பா.ஜ.க ஆட்சியையும் கைப்பற்றியும் அந்த ஆலை திறக்கப்படவில்லை. மாறாக 2017-ஆம் ஆண்டு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மற்றொரு யூனிட் மூடப்பட்டது.

இதனால் ஏராளமான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். 2018-ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டத்தை ஊழியர்கள் நடத்தினர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, எங்கள் வாழ்க்கையைக் கண்ணியமாக வாழ முடியவில்லை என்றால் இறப்பதே மேல் என்று கடிதம் எல்லாம் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் பிஸ்வாஜித் மஜும்தார் என்பவர் இதே பேப்பர் நிறுவனத்தில் சீனியர் இன்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 28 மாதங்களாக இவருக்கு ஊதியம் கொடுக்கப்படாத காரணத்தினால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் நாகோன் ஆலைக்குச் சொந்தமான ஊழியர்களின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 29-ஆம் தேதி நீண்ட நேரமாகியும் இவரது வீட்டின் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்த ப்ரிட்ஜ் கதவில் தற்கொலைக்காக காரணத்தை எழுதியுள்ளார்.

அதில் நான் செல்கிறேன், எனது மரணத்துக்கு இந்திய அரசாங்கம்தான் காரணம் என எழுதியிருந்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மரணத்துக்கு முந்தைய நாள் தான் அதே காகித ஆலையில் பணியாற்றிய டெக்னீசியன் ஒருவர் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற முடியாமல் இறந்துள்ளார்.

இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், நிதி சிக்கலே இந்த மரணத்துக்குக் காரணமாக உள்ளன.

கடந்த 28 மாதங்களாகச் சம்பளம் இல்லை. எங்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. எங்களுடன் பணியாற்றிய சக ஊழியர்கள் கண்முன்பே மரணிப்பது வேதனையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த பேப்பர் மில்லால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 51 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சோகம் : ஆசையாய் விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்பட்ட வெளிநாட்டு சகோதரர்கள்!!

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த பிரித்தானிய சகோதரரும், சகோதரியும் இன்று அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியவில் இருந்து இலங்கை வந்த டேனியல் (19) என்ற இளைஞரும் அவரின் தங்கையான அமெலியும்(15) உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற இலங்கை குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளனர்.

இருவரும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓடி விளையாடிய கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்பட்டுள்ளனர். இறுதியாக கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர்கள் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையில்தான் கொண்டாடியுள்ளனர்.

இதேவேளை, அவர்களது தந்தை அமெரிக்காவில் பிறந்தவர் என்பதோடு, டேனியலும், அமெலியும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமையுடையவர்கள் என்பதாலும் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா பரநாட்டங்கல் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராமத்தில் 29.04.2019 அன்று மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் இன்று (03.05) நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மினி சோறாவளியால் 26 குடும்பங்களை சேர்ந்த 94 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் 26 வீடுகள் சேதமடைந்திருந்தது.

பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களுக்கு இன்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்ப்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தறப்பாள், நுளம்புவலை, பாய் மற்றும் போர்வைகளை ‘கியுமெடிக்கா ரிலீப்’ என்ற நிறுவனம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளை வவுனியா அனர்த்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ரி.சூரியராஜா, நிவாரணங்களை வழங்கிய அரசார்பற்ற நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பார்வையிட்டு அம்மக்களுக்கான மலசல கூடங்கள், மற்றும் குடிநீர் தேவைகள் உள்ள வீடுகளையும் பார்வையிட்டிருந்தனர்.

வவுனியா தோணிக்கல் இளைஞர்களால் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல் காரணமாக மரணமடைந்த மக்களுக்கு வவுனியா, தோணிக்கல் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

உதவும் இதயங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா, தோணிக்கல் ஐயா சனசமூக நிலையத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இளைஞர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி குண்டுத் தாக்குதலில் மரணித்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் சுகம்பெற வேண்டியும் மௌனப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.