உயிரிழந்த பெண் 25 நாட்களின் பின் உயிருடன் வீடு திரும்பிய அதிர்ச்சி சம்பவம்!!

நுவரெலியாவில் பெண் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், களுகங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு, குறித்த சடலம் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் உயிருடன் வந்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணை காணவில்லை என கடந்த மார்ச் 24 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி களுகங்கையில் இருந்து அடையாளம் தெரியாத சடலமொன்றை பொலிஸார் மீட்டு நாகொடை வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்தனர்.

இந்த சடலம் தனது மகளுடையது என காணாமல் போன பெண்ணின் தந்தையார் அடையாளம் காட்டியுள்ளார். தொடர்ந்து குறித்த சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் 25 நாட்களின் பின் வீடு திரும்பியுள்ளார். 28 வயதுடைய குறித்த பெண் அவரது குழந்தையுடன் காணாமல் போயிருந்த நிலையில், திரும்பி வரும் போது குழந்தையுடனேயே வந்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக நபரொருவருடன் தகாத உறவை ஏற்படுத்திக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி நுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் குறித்த இளைஞருடன் தங்கியிருந்ததாக குறித்த பெண் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இளைஞர் ஒருவரின் சடலம் வாய்க்காலில் இருந்து மீட்பு!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு இந்து மயானத்திற்கு முன்னால் உள்ள வாய்க்காலில் மிதந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மங்களதீபன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாய்க்காலுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியொன்று கிடப்பதையும் வாய்க்காலில் சடலமொன்று மிதப்பதையும் வயலுக்குச் சென்றவர்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்தும், சடலத்தை மீட்ட மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதென அவரது தந்தை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், அந்த இளைஞர் வலிப்பு வந்து வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!!

 

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்த குறித்த சிறுமி மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது என யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி தொடர்பில் எவ்வவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் முள்ளியவளையில் வசிக்கும் குறித்த சிறுமியின் தாயார் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் தனது 15 வயது மகளை கண்டுபிடித்து தரும்படி இன்று கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் விவகாரத்தால் வளாகம் மூடப்பட்டது!!

 

வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை வைக்க முற்பட்டதையடுத்து யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்தில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தளம் அமைப்பதற்கான திட்டம் உள்ளபோதிலும் தற்போது அவ் வளாகம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதனால் இதுவரை எந்த மத தலங்களும் வைக்கப்படவில்லை.

இந் நிலையில் சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் புத்த விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததுடன் அதற்கான பொருட்களையும் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக் மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என்பதனை அடிப்படையாக கொண்டு வளாக நிர்வாகம் அதனை தடுத்ததுடன் கொண்டு வரப்பட்ட பொருட்களையும் தமது கட்டுப்பாட்டினுள் எடுத்துச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவர்கள் நிர்வாகத்தினருடன் முரண்பாடான நிலையை உருவாக்கியிருந்தமையினால் வவுனியா வளாகத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் நேற்று மாலை 6 மணிக்கு முதலும் பெண் மாணவர்கள் இன்று காலையும் வெளியேற வேண்டும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வளாகமும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக நிர்வாக கட்டிடத்தொகுதிக்கு சிங்கள மாணவர்கள் சூழ்ந்திருந்ததுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வவுனியாவில் அரச பேரூந்தினை எரிக்க முற்பட்ட நபரினால் பரபரப்பு!!

 

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை எரிக்க முயன்ற நபரினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான நிலை காணப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இ.போ.ச ஊழியர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர், குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இ.போ.ச பேரூந்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதன் போது அவ்விடத்தில் நின்ற நபரோருவர் அருகேயுள்ள மோட்டார் வாகனம் திருத்துமிடத்தில் ஒரு போத்தலினை பெற்று எரிபொருளினை கொள்வனவு செய்து பேரூந்தினை எரிக்க முற்பட்டார்.

சம்பவ இடத்தில் நின்ற போக்குவரத்து பொலிஸாரினால் இவ் சம்பவம் தடுக்கப்பட்டதாக சம்பவ இடத்தில் நின்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இ.போ.ச – இளைஞர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில்!!

 

வவுனியா குருமன்காடு கலைமகள் மைதானத்திற்கு அருகே நேற்று (23.04.2018) மதியம் 2 மணியளவில் இ.போ.ச ஊழியர்களுக்கும் இளைஞனுக்கும் இடையே இடம்பெற்ற கருத்து முரன்பாடு மோதலாக மாறியதில் இ.போ.ச ஊழியர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

செட்டிக்குளத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தும் அதே பாதையில் பயணித்த தனியார் பேரூந்தும் போட்டிக்கு சென்றுள்ளது. குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இ.போ.ச பேரூந்து வீதியினை விட்டு விலகி வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை மோதும் வகையில் சென்றுள்ளது.

இதனையடுத்து அவ் இளைஞர்கள் இ.போ.ச ஊழியர்களை பார்த்து திட்டியுள்ளார். இதனை அவதானித்த இ.போ.ச பேரூந்தின் சாரதி அவ்விடத்தில் பேரூந்தினை நிறுத்தி இ.போ.ச பேரூந்தில் பயணித்த பயணி ஒருவர், நடத்துனர், சாரதி குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இளைஞனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச் சம்பவத்தினால் காயமடைந்த இளைஞன், இ.போ.ச சாரதி, நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவரும் சமாதானமாக செல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது : இருவர் தப்பியோட்டம்!!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.04.2018) அதிகாலை புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சங்குளம் வயல் பகுதியினை அண்டிய காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி தலமையிலான குழுவினர் குறித்த இடத்தினை முற்றுகையிட்ட சமயத்தில் புதையல் தோண்டிய நபர்களில் இருவர் தப்பித்து சென்றுள்ளதுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஓமந்தை, கிளிநொச்சி, தேவகுளம் பகுதியினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்த தெரியவருவதாகவும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி , அலவாங்கு, சவல் போன்ற பொருள்களை கைப்பற்றியுள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேகநபர்களையும் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டிய மன்னர்!!

கனடாவைச் சேர்ந்த ”பிளாஸ்டிக் மன்னர்” என்று அழைக்கப்படும் ராபர்ட் பெஸூ, உலகின் முதல் பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார். பனாமாவின் Bocas del Toro தீவில் அவர் இந்த பிளாஸ்டிக் மாளிகையைக் கட்டியுள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் உயிரிகள் பாதிக்கப்படுவதைக் கண்ட ராபர்ட் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாக எறியப்படுவதைத் தவிர்க்க அவற்றைக் கொண்டு வீடுகள் கட்ட திட்டமிட்டார். மனிதர்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு குறைந்த செலவில் உறுதியான வீடுகளைக் கட்ட முடியும் என்பதை அவர் செய்து காட்டியுள்ளார்.

இதே முறையைப் பயன்படுத்தி ஒரு சுற்றுச்சூழல் கிராமத்தையே அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ராபர்ட் இந்த திட்டத்திற்காக பனாமாவில் சுற்றுச்சூழல் சிறப்பு விருது ஒன்றைப் பெறும் முதல் வேற்று நாட்டவராவார்.

40,000 பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கட்டியுள்ள தனது நான்கடுக்கு மாளிகைக்கு சிறுவர்களை வரவேற்கும் ராபர்ட் இந்த தலைமுறை உலகுக்கு செய்துள்ள தீமையை சுட்டிக்காட்டி அவற்றை நல்ல வழியில் பயன்படுத்துவதற்காக ஒரு முன்மாதிரியாக இதைச் செய்கிறார்.

கனடிய நபரை அடித்தே கொன்ற கிராம மக்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

 

பெரு நாட்டில் மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக கூறி கனேடிய நபர் ஒருவரை அங்குள்ள மக்கள் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் உள்ள அமேசான் பகுதியில் கிராமத்து மருத்துவராக செயல்பட்டு வருபவர் 81 வயதான Olivia Arevalo Lomas. குறித்த கிராமத்தில் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மூதாட்டி ஒலீவியாவின் சிகிச்சை முறை மிகவும் பிரசித்தம் எனம் கூறப்படுகிறது.

இவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார் கனேடியரான Sebastian Paul Woodroffe(41). இந்த நிலையில் கடந்த வியாழனன்று ஒலீவியா மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் செபஸ்டியானுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பிய கிராம மக்கள், சிகிச்சை பெற்று வந்த அவரை வலுக்கட்டாயமாக சிறை பிடித்துள்ளனர்.

பின்னர் கடுமையாக தாக்கி அவரை கழுத்தில் கயிறு கட்டி தூக்கிலேற்றியுள்ளனர். கொல்லப்பட்ட மூதாட்டி குடியிருந்த வீட்டுக்கும் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் செபஸ்டினானின் சிதைக்கப்பட்ட உடல் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

செபஸ்டியான் மற்றும் மூதாட்டி ஒலீவியா கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

2 கொலை தொடர்பாக உண்மையான குற்றவாளியை கைது சேய்யும் வரை இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஒலீவியாவின் இழப்பு பெரு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமின்றி அமேசான் பகுதியை குறிவைக்கும் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

பயணிகள் விமானத்தை இடைமறித்த ராணுவம் விமானம் : நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!!

ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானம் ஒன்றை கட்டார் ராணுவம் விமானம் இடைமறித்து அச்சுறுத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரத்தில் ஐக்கிய அமீரக விமானியின் சாமர்த்தியத்தால் 86 பயணிகள் உயிர் தப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் பயணிகள் விமானமானது பஹ்ரைன் வான் எல்லை வழியாக சென்றுள்ளது. அப்போது கட்டார் ராணுவத்தின் போர் விமானம் ஒன்று மிக அருகாமையில் வந்து பின்னர் விலகிச் சென்றுள்ளதாக ஐக்கிய அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயணிகள் விமானம் வலுக்கட்டாயமாக பாதை மாறிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஞாயிறு அன்று நடந்த இச்சம்பவத்திற்கு பஹ்ரைன் விமான சேவை நிர்வாகமும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கட்டார் ராணுவத்தின் போக்கை விமர்சித்துள்ளது.

சர்வதேச வான் எல்லையில் இருந்த போது குறித்த பயணிகள் விமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது கவலை அளிப்பதாக பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இது சர்வதேச ஒழுங்குமுறையை மீறும் செயல் எனவும் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பஹ்ரைன் மற்றும் அக்கிய அமீரகம் உள்ளிட்ட பல்வேறு அரேபிய நாடுகள் கட்டார் மீது தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி கடும் பொருளாதார தடை விதித்தது. மட்டுமின்றி அரேபிய நாடுகளில் கட்டார் விமானங்களை அனுமதிக்கவும் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், கட்டார் விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையில் கடக்க நேர்ந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது

மருமகளுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த மாமனார், மாமியார் : நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் விதவையான மருமகளுக்கு அவரின் மாமனாரும், மாமியாரும் சேர்ந்து இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் தஹிமா. இவர் மகன் பெட் பிரகாஷ் (30) என்பவருக்கும், ராஷ்மிரிகா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 2014 யூன் 29-ஆம் திகதி பிரகாஷ் சாலை விபத்தில் மரணமடைந்தார். அப்போது கர்ப்பமாக இருந்த ராஷ்மிரிகா தனது மாமனார் வீட்டில் தங்கியவாறு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து மருமகளை பட்டப்படிப்பு படிக்க வைத்த ராஜேஷ் அவரை ஆசிரியை பணியிலும் சேர்த்து விட்டுள்ளார்.

இந்நிலையில் இளம் வயதிலேயே ராஷ்மிரிகா விதவையாகி விட்டதால் அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க ராஜேஷும், அவர் மனைவியும் முடிவு செய்தனர்.

இது குறித்து ராஷ்மிரிகா பெற்றோரிடம் அவர்கள் பேச, சம்மதம் கிடைத்தது. இதையடுத்து சுமித் அகர்வால் (32) என்ற நபரை ராஷ்மிரிகாவுக்கு மணமுடிக்க முடிவெடுக்கப்பட்டது.

சுமித்துக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சுமித் – ராஷ்மிரிகா திருமணம் இரு தினங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் புடைச்சூழ நடைபெற்றது.

தாய், தந்தை ஸ்தானத்தில் இருந்து ராஷ்மிரிகாவுக்கு அனைத்து சடங்குகளையும் அவரின் மாமனாரும், மாமியாரும் செய்தார்கள்.

திருமணத்துக்கு பின்னர் ராஜேஷ் கூறுகையில், ராஷ்மிரிகா எங்கள் மருமகளாக இருந்தாலும் மகளை போல தான் பார்த்து கொண்டோம். அவளுக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

தெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய இலங்கை!!

இலங்கை தெற்காசிய பிராந்தியத்தின் தங்க கடத்தில் மத்திய நிலையமாக மாறியுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மும்பை நகருக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டதை அடுத்த இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களிடம் இருந்து 91 லட்சத்து 13 ஆயிரத்து 850 பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த கணவனும் மனைவியும் நேற்று அதிகாலை 5.45 அளவில் புறப்பட்டுச் செல்லவிருந்த ஜெட் எயாரவேஸ் விமானத்தில் மும்பை நோக்கி புறப்படவிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் பெருமளவிலான தங்க கடத்தலை கட்டுப்படுத்தவே, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் பெறுமதிக்கு அமைய 15 வீத சுங்க வரியை அறவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த சுங்க வரி அறிமுகப்படுத்தப்படுவதால், தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என சுங்க திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தங்கம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதால், நாடு, பெருந்தொகையான பணத்தை மட்டுமல்லது, வெளிநாட்டு அந்நிய செலாவணியையும் இழந்து வருவதாக சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த 9 வீத மானிய வரியை பயன்படுத்தி பெருந்தொகையான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது. தங்கம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் நாட்டில் தங்கத்தின் விலை குறையவில்லை என்பதுடன் ஏற்றுமதியும் அதிகரிக்கவில்லை.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதே இதற்கு காரணம் எனவும் சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாகவும் விமானம் மூலம் பெருந்தொகை தங்கம் கடத்தப்படுகிறது. மிகவும் சூட்சுமமான முறையில் இந்த தங்க கடத்தல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கணவரை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

 

கேரளாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயம் மாவட்டம் கொடுங்கத்தூரை சேர்ந்தவர் மீரா (24). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.

பாலக்காடு கோல்பாடம் பகுதியை சேர்ந்தவர் நவ்பல் (32). இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்நிலையில் மீராவுக்கும், நவ்பலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் குடும்பத்தை தவிக்க விட்டு கொச்சிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

அங்கு இருவரும் வாடகை வீட்டில் குடியேறிய நிலையில் மீராவின் நடத்தையில் நவ்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மீரா இரு தினங்களுக்கு முன்னர் கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

இது குறித்து கோபமான நவ்பல் வீட்டுக்கு வந்து மீராவிடம் சண்டை போட்டார். பின்னர் நவ்பல் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்ய போகிறேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து சகோதரி தனது நண்பரை நவ்பல் வீட்டுக்கு அனுப்பிய நிலையில் மீரா ரத்த வெள்ளத்திலும், நவ்பல் மணிக்கட்டு அறுத்த நிலையில் தூக்குப்போட்டும் இறந்து கிடந்தனர்.

மீராவின் 1½ வயது குழந்தை மட்டும் தாய் இறந்தது தெரியாமல் அங்கேயே இருந்தது. இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய அவர்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு பேர் படுகொலை!!

கடந்த 24 மணித்தியால காலப் பகுதியில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய, ராகம, மஹியங்கனை, குருணாகல், நிட்டம்புவ போன்ற பகுதிகளில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன.

தெல்தெனிய குபுக்கந்துர பிரதேசத்தில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மொஹமட் அக்ரம் என்ற 35 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.

ராகம, மஹர நுகேகொடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் துவான் உஸ்மான் ரஹீம் என்ற 55 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார். மஹியங்கனை மாபாகடவெவ பகுதியில் தாய் ஒருவரும் அவரது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

குருணாகல் யன்தம்பலாவ பகுதியில் ஜயலால் புஞ்சிஹோவ என்ற 56 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், அத்தனகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரத்ன தேவப்பிரிய என்ற 37 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.

ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல் : அச்சத்தில் மக்கள்!!

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன்காரணமாக 2ஆவது நாளாகவும் நேற்றைய தினம் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் நேற்று ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை கடல் உள்வாங்கிய நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், கடல் உள்வாங்கிய விடயம் தொடர்பாக தொடர்பாக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் கொலை : கனடாவிற்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்!!

கனடாவில் தொடர் கொலையாளி புரூஸ் மெக்ஆத்தரினால் இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் கொலை செய்யப்பட்டமையானது கனடாவில் புகலிடக் கோரிக்கை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் மரணம், கனடாவின் புகலிட சட்டம் மாற்றப்பட வேண்டும் என்பதற்கான கசப்பான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளதாக இந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர வதிவிட வசதியை அளித்திருந்தால் கிருஸ்ணகுமார் கொல்லப்பட சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது என்பதை அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செய்ட் ஹசன், கனடாவின் செய்தி இணையத்துக்கு வழங்கிய செவ்வியில் கிருஸ்ணகுமாரின் மரணம் புகலிடக் கோரிக்கையாளர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புகலிடக் கோரிக்கையாளர்களை தொடர் கொலை செய்து வந்த புரூஸ் மெக்ஆத்தரின் இறுதி இலக்கு இலங்கைத் தமிழரான கிருஸ்ணகுமார் கனகரட்னம் என்ற செய்தி கடந்த வாரமே கனேடிய காவல்துறையினரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.