2வது மனைவியின் 1வது பிள்ளை : 62 வயதில் கலக்கும் மிஸ்டர் பீன்!!

 
மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் தனது இரண்டாவது மனைவியின் மூலம்.

62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சுனேத்ரா சாஸ்திரி என்ற ஒப்பனைக் கலைஞரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு லில்லி, பெஞ்சமின் என்று ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர்.

சுனேத்ராவுடனான 24 வருட திருமண வாழ்க்கை 2015ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தனது சக நடிகையான லூயிஸ் ஃபோர்ட் (33) என்பவருடன் காதலில் விழுந்த ரோவன், சுனேத்ராவை விவாகரத்துச் செய்த ஓரிரு வாரங்களில் போர்டை மறுமணம் செய்துகொண்டார். தற்போது ரோவன் தனது புதிய மனைவியுடனும் மகன் பெஞ்சமினுடனும் வாழ்ந்து வருகிறார்.

எனினும், தனது தந்தையின் செயலால் கோபம் கொண்ட லில்லி (22) அவரது பெயரில் இருந்து அட்கின்ஸன் என்ற பெயரை சட்ட ரீதியாக விலக்கிக்கொண்டதுடன், தனது தாயின் பெயரில் இருக்கும் சாஸ்திரி என்ற பெயரைச் சேர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் ரோவனின் புதிய மனைவி ஃபோர்ட், தனது முதல் குழந்தையை ஈன்றெடுக்கவுள்ளார்.

3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி!!

உலகின் பிரபலமான முன்னணி ஒன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது.

சீனாவில் ‘சிங்கிள்ஸ் டே’ ,சீன மொழியில் கவுன்கன் ஜி என்ற தினம் ஆண்டுதோறும் நவம்பர் 11 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சீன மக்கள் தாங்கள் சிங்கிளாக இருப்பதை நினைத்து பெருமை கொள்ளும் வகையில் அதனை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த தினத்தில் நண்பர்களுடன் இணைந்து பொருட்கள் வாங்குவது, விருந்தில் பங்கேற்பது என பல கொண்டாட்டங்கள் இடப்பெறும். இதனையொட்டி சீனாவின் பிரபல ஒன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா நிறுவனம் விற்பனையை அறிவித்தது.

இந்தச் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டு மூன்று நிமிடத்தில் மட்டும் 10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஒன்லைனில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு : 130 பேர் பலி!!

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற பாரிய புவியதிர்வில் 130 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் சுமார் 500 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.

வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் கைது : இரு மாணவர்கள் மீது வலைவீச்சு!!

 
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் நேற்று (12.11.2017) மதியம் 1 மணியளவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன் இரு மாணவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகே அமைந்துள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் (முதியவர்) தொலைவிலுள்ள பொருளை காட்டி அதனை எடுத்துத்தருமாறு கேட்டுள்ளனர்.

அதனை வர்த்தக நிலைய உரிமையாளர் எடுத்துவரச் சென்ற சமயத்தில் ஒரு மாணவன் வர்த்தக நிலையத்திலிருந்த நூடில்ஸ் பொதியினை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த மாணவர்களை மடக்கி பிடித்த சமயத்தில் இரு மாணவர்கள் தப்பித்து ஒடியுள்ளனர்.

உடனடியான வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த மாணவனை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்துவைப்பு!!

 
வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (12.11.2017) மாலை 4.30 மணியளவில் சாளம்மைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இச் செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, பிரதேச சபை உறுப்பினர், கிராம சேவையாளர், பொதுமக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகத்தினால் (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு) ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் நிதியில் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

 
வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வடமாகாணசபையின் 2017ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் நான்கு லட்சத்தி எட்டாயிரம் ரூபாய் நிதியில் 24 துவிச்சக்கரவண்டிகள் நேற்று (11.11.2017) காலை 9 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியலாயத்தில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் வழங்கி வைக்கப்பட்டன.

சத்தியலிங்கத்தின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுபாசினி சிவதர்சன், வவுனியா வடக்கு வலய ஆலோசகர் சி.மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 14 மாணவர்களும் வவுனியா தெற்கு வலயத்திலிருந்து 10 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றனர் : ப.சத்தியலிங்கம் கேள்வி!!

வவுனியாவில் நேற்று (11.11.2017) இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குதுவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த வரவு செலவு திட்டத்தில் முன்னேற்றகரமான திட்டங்கள் வந்திருக்கிறது. பெண்களை தலைமைத்துவங்களை கொண்ட குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேன்மை படுத்துவதற்கு இந்த வரவு செலவு திட்டத்தில் வந்திருக்கின்றது.

வீட்டுத்திட்டம் வந்திருக்கின்றது, இங்கே படித்த இளைஞர்கள், யுவதிகள் வேலை வாய்ப்புக்காக சில அபிவிருத்தி திட்டங்களை இங்கே கொண்டு வருவதற்கும் இருக்கின்றார்கள். சின்னச்சின்ன தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்குமுரிய முன்மாதிரிகள் இந்த முறை வரவு செலவுத்திட்டத்திலே கொண்டுவந்திருக்கின்றார்கள்.

ஆனால் வவுனியாவிலே எந்த ஒரு முன் மொழிவையும் காணவில்லை. எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்து போடுபடவில்லையா? அல்லது எங்கடைய ஆட்கள் கொடுக்காமல் விட்டினமோ தெரியவில்லை.

பாராளுமன்றத்திற்கு போனால் மக்கள் பிரதிநிதிகளும் கதைப்பது பிரயோசனம் இல்லாத கதைதானே. எந்த நேரமும் வவுனியாவில் இருந்து எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்டங்களை கொண்டு போய் கொடுத்திருக்க வேண்டும். வவுனியா மாவட்டத்திலே என்ன என்ன தொழில் திட்டங்கள் எங்களுக்கு வேண்டும் என்று கொடுத்திருக்க வேண்டும்.

கேட்டார்களா? கேட்கவில்லையா என்பதை இந்த முறை எங்களுடைய வரவு செலவு திட்டத்திலே வவுனியா என்ற வார்த்தையே காணவில்லை. ஆனால் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வந்திருக்கின்றன.

அபிவிருத்தி என்று பார்க்கும் போது வவுனியா என்ற சொல்லையே காணவில்லை. எங்கடைய ஆட்கள் கொடுத்தினமோ கொடுக்கலையோ தெரியவில்லை. இப்படியான விடயங்களை கொடுக்க வேண்டும். பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய பாடசாலை மாணவிக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

 
மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் தாய், தந்தையினை இழந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அண்ணனுடன் வாழ்ந்து வரும் 10 வயதுடைய சிறுமிக்கு வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஊடக நண்பர் ராஜ்குமார் அவர்களினால் உடைகள், பாடசாலை செல்வதற்கான புத்தகப்பபை, சாப்பாத்து, 300 0ரூபாய் பணம் என்பனவும் வெளிச்சம் அறக்கட்டளையினால் கற்றல் உபகரணங்களும் சாய் மெபைல் நெற் (இரண்டாம் குறுக்குத்தெரு , வவுனியா) அவர்களினால் 3000 ரூபாய் பணமும் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்களுக்கான பொருட்களை வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் பாஸ்கரன் கதீஷன், செயலாளர் பாக்கியநாதன் லம்போதரன், அக்கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ரஜீவன் குறித்த சிறுமிக்கு வழங்கி வைத்தனர்.

இலங்கை அணியின் குட்டி முரளிதரன் இவர் தானாம்!!

 
19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் கெவின் கொத்திகொட எனும் இளம் வீரர் வித்தியாசமான முறையில் பந்துவீசி அசத்துகிறார்.

முத்தையா முரளிதரன், மெண்டிஸ் மற்றும் மலிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக களம்கண்டிருக்கிறார் கெவின் கொத்திகொட எனும் இளம் பந்துவீச்சாளர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டியின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இவரது பந்துவீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் Chinaman Paul Adams யின் பந்து வீச்சு போல, கெவினின் பந்துவீச்சு மிகவும் வித்தியாசமாக இருந்ததாக Cricket Fraternity தெரிவித்துள்ளது.

கெவின் காலியில் உள்ள மகிந்த கல்லூரியின் கிரிக்கெட் அணியில் விளையாடி, அந்த அணி  கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தைக்கு தானம் செய்து ஹீரோவான இளம்பெண்!!

வட இந்திய மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரம் தானம் செய்ததன் மூலம் ரியல் ஹீரோ என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

Pooja Bijarnia என்ற இளம்பெண் தனது தந்தைக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டிருப்பதை அறிந்து தானே கல்லீரம் தானம் செய்ய முன்வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தந்தைக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. இவர்கள் இருவரும் நிற்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு மருத்துவர் Rachit Bhushan Shrivastva கூறியிருப்பதாவது, மிகவும் தைரியமான மகள். பெண் குழந்தை பிறந்தால் அவர்கள் உபயோகமில்லதாவர்கள் என கூறும் சமுதாயத்தினருக்கு இப்பெண் பதில் கொடுத்துள்ளார்.

தனது தந்தைக்கு தானம் செய்ததன் மூலம் ரியல் ஹீரோவாகியுள்ளார். இப்பெண்ணை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

சிறையில் நிர்வாண சோதனை: மரத்தில் ஏறி கைதிகள் செய்த செயல்!!

தமிழகத்தில் இரண்டு கைதிகள் சிறையில் இருக்கும் மரத்தில் ஏறி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள மத்திய சிறையில் இரண்டு கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் சிறை அதிகாரிகள் ஸ்டீபன் ராஜ், பிரகாஷ் என்கிற இரண்டு கைதிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் இல்லை என்று மறுத்ததை அடுத்து அவர்களின், ஆடையை கலைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த கைதிகள் திடீரென்று அங்கிருக்கும் மரத்தின் மீது ஏறி, உடலில் பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தனர்.

அதன் பின் சிறைத்துறை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கைதிகள் இருவரும் மரத்தில் இருந்து கீழிறங்கி வந்தனர்.

அதிகரித்துள்ள கடலின் சீற்றம் : காணாமல்போன மாணவனை மீட்கும் பணி தீவிரம்!!

மழைகாலம் நிலவி வருவதால் அம்பாறையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ள நிலையிலும் காணாமல் போன மாணவனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சஹாப்தீன் இன்சாப் எனும் மாணவரே காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகளில் மீனவர்களின் உதவியுடன் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

சாய்ந்தமருது, முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் நேற்று மாலை கல்முனை சாஹிராக் கல்லூரியில் கல்வி பயில்கின்ற ஆறு மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் குளிக்கச் சென்ற மாணவர்களில் ஐவர் மீட்கப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாணவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் காணாமல் போன மாணவரின் குடும்பத்தினர் கல்முனை பொலிஸில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளனர்.

யாழில் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்த கடல் : திடீர் மாற்றத்தால் குழப்பம்!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். கோப்பாய் பிரதேச பகுதியிலுள்ள நீர் மட்டம் 4.5 அடி உயிரத்திற்கும் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அந்தப் பகுதி மக்கள் பதற்றம் அடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீடீரென கடல் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை பார்வையிடுவதற்காக அந்த பகுதி மக்கள் கடலுக்கு அருகில் சென்றுள்ளனர்.

எனினும் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

வடக்கில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

 
திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற 6 வயது சிறுவன் போகாவத்தை ஓயாவில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய ராஜேந்திரகுமார் அஸ்வின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5 மணிமுதலில் இருந்து சிறுவனை வீட்டில் காணாததால் உறவினர்களும், தோட்ட மக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர், இதன்போது குறித்த சிறுவன் வீட்டின் அருகில் உள்ள போகாவத்தை ஓயாவில் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்!!

 
வவுனியா கிராமம் ஒன்றில் தெலுங்கு முறையில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது.

பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர்.

வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கு வித்தை காட்டுதல், பாம்பு வித்தை காட்டுதல் போன்றவை இவர்களின் சம்பிரதாய தொழிலாகும். தற்போது இவர்கள், பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல், மீன் பிடித்தல் அல்லது பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திருமணத்தின் பின்னர் மணமகளின் தந்தையினால் இருவருக்கும் பாம்பு மற்றும் பாம்பு பெட்டி ஒன்று சீதனமாக வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

வவுனியாவில் 12 மணித்தியாலத்தினுள் 92 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!!

 
வவுனியாவில் இன்று (12.11.2017) காலை முதல் பிற்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இருவேறு பகுதிகளில் 92 கிலோ கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சொகுசு தனியார் பேரூந்தினுள் பயணப்பொதியினுள் வைத்து 90 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை இன்று (12.11.2017) காலை 5.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இன்று காலை 9.30 மணியளவில் புளியங்குளம் பகுதியில் பேரூந்தினுள் 2 கிலோ கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வவுனியாவில் கைப்பற்றப்பட்ட 92 கிலோ கஞ்சாவினையும் சந்தேக நபர்கள் மூவரையும் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.