டோனிக்கும் எனக்கும் பிரச்சனையா? எங்களை யாரும் பிரிக்க முடியாது : கோஹ்லி!!

டோனிக்கும், தனக்கும் உள்ள உறவு மிகவும் முக்கியமானது என்றும், அதை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது என்று கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனக்கும், டோனிக்கும் இடையில் இருக்கும் உறவைப்பற்றி தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் கூறுகையில், எனக்கும் டோனிக்கும் மோதல் நிலவுவதாக நிறைய பேர் கதைகட்டி வருகின்றனர். சிறப்பு என்னவெனில் அத்தகைய கதைகளையோ செய்திகளையோ நானும் படிப்பதில்லை, அவரும் படிப்பதில்லை.

இத்தகைய செய்திகள் குறித்து நாங்கள் எங்களுக்குள்ளேயே சிரித்துக் கொள்வோம். திட்டமிடுதல், ஆட்டத்தில் என்ன நடக்கிறது, என்ன செய்யலாம் என்பது பற்றிய கூர்மையான கிரிக்கெட் அறிவில் டோனியை விஞ்சி நான் யாரையும் கண்டதில்லை.

10 முறைகளில் நான் 8-9 முறைகள் அவரது ஆலோசனையை நாடிய போதெல்லாம் அனைத்தும் சாதகமாகவே முடிந்துள்ளன.

டோனிக்கு எனக்கும் கிரீசில் நல்ல புரிதல் உண்டு, அவர் 2 ஓட்டங்கள் என்றால் நான் கண்ணை மூடிக்கொண்டு 2 ஓட்டங்களுக்கு ஓடி விடுவேன், காரணம் அவரது கணிப்பு தவறாது என்று கோஹ்லி கூறியுள்ளார்.

உலகின் மிகவும் வயதான நபர் : மறுக்கப்பட்ட கின்னஸ் சாதனை!!

 
சிலி நாட்டவரான 121 வயது முதியவர் உலகின் மிகவும் வயதான நபர் என்பது ஆவணங்களை பரிசோதித்த அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிலி நாட்டில் குடியிருந்து வரும் Celino Villaneuva Jaramillo என்பவரே அந்த முதியவர். 1896 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போதைய மிகவும் வயது முதிர்ந்தவர் என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான Nabi Tajima என்பவரை விட 4 ஆண்டுகள் முன்னதாக பிறந்துள்ளார்.

சிலி மக்களால் டான் செலினோ என் செல்லமாக அழைக்கப்படும் இவர் தமது 99 ஆம் வயதில் இருந்தே உறவினருடன் வசித்து வருகிறார்.

தமது வீடு தீக்கிரையானதால் பிறந்த நாள் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அதுவரையான சேமிப்பையும் இழந்து தவித்த செலினோ, படிப்படியாக பின்னர் வாழ்வாதாரத்தை மீட்டுள்ளார்.

இருப்பினும் சிலி அரசாங்க ஆவணங்களில் செலினொவின் வயது சந்தேகத்துக்கு இடமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1896 ஆம் ஆண்டு யூலை 25 ல் பிறந்த செலினோ இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அரசாங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத செலினோ, தமது 80வது வயது வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஒரு முதலாளியின் கீழ் வேலை பார்த்து வந்துள்ளார்.

பின்னர் வேறு நகரம் ஒன்றில் குடிபெயர்ந்த செலினோ அங்கு காய்கனிகளை விற்று பிழைப்பு நடத்தியுள்ளார்.

அப்போது அவரது குடியிருப்பு தீக்கிரையாகவே, அதன் பின்னர் தமது உறவினருடன் வசித்து வருகிறார்.

பூமியில் தற்போது அதிக வயதான நபர் என வாழ்ந்துவரும் செலினோவுக்கு 90 சதவிகிதம் பார்வை பறிபோயுள்ளது, மட்டுமின்றி கேட்கும் திறனையும் இழந்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லை என்பதால் செலினோ கின்னஸ் சாதனை பட்டியலில் இடன்பெறாமல் போயுள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுதங்களை எப்படி அழிக்க முடியும் : அமெரிக்கா வகுத்துள்ள வியூகம்!!

வடகொரியாவுடன் தரைவழி தாக்குதல் மட்டுமே சாத்தியம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

வடகொரியா மீது தடை விதிப்பதற்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான் என்பதால் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால் அமெரிக்கா தென் கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வடகொரியாவைத் தாக்குவதற்கு தொடர்ந்து வியூகங்களை அமெரிக்க ராணுவ தளமான பெண்டகன் வகுத்து வருகிறது.

இதுகுறித்து பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வடகொரியாவின் அணுஆயுதங்களை தரைவழித் தாக்குதலால் மட்டுமே அழிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தாயை உயிரோடு தீவைத்து எரித்த மகள்: அதிர்ச்சிக் காரணம்!!

பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன் (21) வசித்து வருகிறார். கற்பகஜோதி தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்த நிலையில் உடன் பணிபுரியும் ஒருவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

இது பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ள நிலையில் இது சம்மந்தமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய கற்பகஜோதி துணிந்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் இருந்த மண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்ப, அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், புகாரின் பேரில் பொலிசார் கற்பகஜோதியை கைது செய்துள்ளனர்.

புதுயுகம் படைப்போம் : ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு!!

வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று மாத காலமாக டுவிட்டரில் அரசியல் குறித்த கருத்துகளை தெரிவித்துவருகிறார்.

மட்டுமின்றி, அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனால், அவர் பிறந்தநாளான நவம்பர் 7ம் திகதி அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயலி மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது, தனது பிறந்தநாளுக்கு கேட் வெட்டுவதை விட, கால்வாய் வெட்டுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார்.

தற்போது, தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாளை நான் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடிந்து கொண்ட நண்பர்களுக்கு என்று குறிப்பிட்டு, ‘நாளை என்பது மற்றொரு நாளே, வேலை கிடக்குது ஆயிரமிங்கே, கோலையுங் குடியையும் உயரச்செய்வோம். வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

வடக்கில் கடந்த 9 மாதங்களில் 90 சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடக்கு மாகாணத்தில் இந்த வருடத்தின் கடந்த ஒன்பது மாதங்களில் 90 சிறார்கள் பல்வேறு வகையில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காப்பகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அங்கு முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய யாழ் மாவட்டத்தில் 30 சிறார்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறார்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறார்களும், வவுனியா மாவட்டத்தில் 17 சிறார்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 27 சிறார்களும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த காலத்தில் வடக்கில் 27 சிறார்களுக்கு பாலியல் விடயங்களை அடிப்படையாக கொண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

சில சம்பவங்கள் அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு காரணங்களினால் பொலிஸாருக்கோ, ஏனைய தரப்புக்கு தெரியவருவதில்லை எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

காதலை தெரிவித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

நீரோடையொன்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வித்தியாசமாக காதலை தெரிவித்த இளைஞரை அண்மையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பிபிலை பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிபிலையைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் அந்த பெண்ணிடம் வித்தியாசமாக காதலை தெரிவிப்பதாக கூறி தகாத முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இளைஞர் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 1500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணம் செலுத்தாவிடின் ஒரு மாத கடூழிய சிறை தண்டனையை ஏற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், 10000 ரூபா வந்திப் பணமும் செலுத்துமாறும் பிபிலை மஜிஸ்திரேட் நதீரா போகாஹாதெனிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பு மற்றும் விருது வழங்கி பாராட்டப்படும் புகைப்படத் தேர்ச்சியாளருக்கான விருதை [EFIAP] இலங்கை புகைப்படவியலாளரான ஜமுனீ றஸ்மிகா பெரேரா பெற்றுள்ளார்.

பிரான்ஸின் புகைப்படக்கலை சம்மேளனத்தினால் ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு பெண் புகைப்படப்பிடிப்பாளர் இவ்வாறான விருதை பெற்றுக்கொண்டமை இதுவே முதற்தடவையாகும்.

உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் தொழில் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான விருது இதுவாகும்.

இந்த விருதிற்காக 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் தமது ஆக்கங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இது வரையில் ஜமுனீ றஸ்மிகாவினால் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் எண்ணிக்கை 513 ஆகும்.

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படப் போட்டி மற்றும் கண்காட்சி மற்றும் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு ஜமுனீ றஸ்மிகாவினால் முடிந்துள்ளது.

இதுவரையில் இவர் 48 விருதுகளை பெற்றுள்ள இவர், 2nd International Photo Competition and EXHIBITION MYSTIC 2017 சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு சர்வதேச பாராட்டை பெற்றுள்ளார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், சீனா, ஈரான், ஓமான் இங்கிலாந்து, துருக்கி, ஏமன், ஐக்கிய அரபு இராச்சியம், பல்கீரியா, உக்ரேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற புகைப்படக் கலைஞர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் சர்வதேச புகைப்படக்கலைஞர்கள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள ஜமுனீ, பிரான்ஸில் சர்வதேச புகைப்படக்கலைஞர் சம்மேளத்தினால் வழங்கப்படும் AFIP விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தம்பதியினரின் சட்டவிரோத செயற்பாடு : பொலிஸாரால் கைது!!

 
யாழ். கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய இரு அச்சு இயந்திரங்களையும், மடிக்கணினி ஒன்றினையும், வருடி(scaner) ஒன்றினையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

மேலும் 5,000ரூபா நாணயத்தாள்கள் 400, 1,000ரூபா நாணயத்தாள்கள் 148 உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

முதலில் சந்தேக நபரின் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், பின்னர் குறித்த 24 வயதுடைய குறித்த சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளதோடு, இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் பல நாட்களாகத் துன்பங்களை அனுபவித்து வரும் தாயாரொருவர் கண்ணீருடன் புலம்பல்!!

 
யாழில் கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையால் வீட்டின் சமையலறைக்குள்ளும், அடுப்புக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்திருப்பதால் அன்றாடச் சமையல் வேலைகளில் ஈடுபடாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாயாரொருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கூலி வேலை செய்து பிள்ளைகள் வழங்கும் சிறுதொகைப் பணத்தில் உணவு வாங்கி உண்கின்றோம். வீட்டுக்குள் வெள்ளம் புகுந்திருப்பதால் நிம்மதியாக உறங்கவும் வழியின்றித் தவிர்த்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மழைப் பாதிப்பால் பல நாட்களாகத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் இதுவரை எங்களைக் கிராம சேவையாளரோ அல்லது அரச அதிகாரிகளோ, அரசியல் வாதிகளோ வந்து பார்வையிடவில்லை.

யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு யாழ்.வலி வடக்கிலிருந்து யாழிலுள்ள பல்வேறு முகாம்களிலும் வாழ்ந்து வரும் மக்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாகப் பாதிக்கப்பட்டடனர்.

குறிப்பாக மல்லாகம் கோணாப்புலம் முகாமைச் சூழ வெள்ள நீர் தேங்கிக் காணப்படுவதுடன் சில வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இதன் காரணமாக இந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் குறித்த முகாமில் அமைந்துள்ள வீடொன்று மழை வெள்ளநீரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பாதிப்புத் தொடர்பில் குறித்த வீட்டைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான பெண்மணியிடம் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு கவலை வெளியிடடுள்ளார்.

எனது கணவர் மீன் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிகாலை வேளை தொழிலுக்குச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

இதனால், என் கணவர் முன்னரைப் போன்று தற்போது தினமும் தொழிலிலுக்குச் செல்வதில்லை. இதன் காரணமாக எமது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எங்களைச் சொந்தவிடத்தில் குடியமர அனுமதித்தால் நாங்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டியதில்லை. இராணுவம் எங்கள் காணிகளை மீண்டும் விடுவிக்காத காரணத்தால் தான் நாங்கள் முகாம்களில் அவல வாழ்க்கை வாழ வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகத் தான் கடந்த 27 வருட காலத்திற்கும் மேலாகத் துன்பத்துக்கும் மேல் துன்பம் அனுபவித்து வருகிறோம்.

வருடம் தோறும் மாரி காலத்தில் நாங்கள் மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறோம் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல்வேறு நோய்களுக்கும் உள்ளாக வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த இடம்!!

உலகில் மிகவும் வேலைப்பளு மிக்க துறைமுகங்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு 25வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் சீனத்துறைமுகங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அந்த வகையில், சினாவின் ஷங்காய் துறைமுகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தினை சிங்கப்பூர் துறைமுகம் தக்கவைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீட்டு வளாகத்தில் புகுந்த பாரிய முதலை!!

 
திருகோணமலை – சம்பூரில் குடியிருப்புக் காணியொன்றுக்குள் சுமார் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்துள்ளது.

இந்நிலையில், கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையை பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது, கிணற்றடியில் பாரிய முதலை ஒன்று இருப்பதை கண்டு சத்தமிட்டு, அயலவர்களை அழைத்துள்ளார்.

இதன் போது, முதலை ஓட முற்பட்டுள்ளது. எனினும், வீட்டின் முன்னால் உள்ள வடிகானுக்குள் முதலை வீழ்ந்தது.
இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் முதலையை பாதுகாப்பாக மீட்டெடுத்துச் சென்றுள்ளனர்.

அமெரிக்கா மீது வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தும் : பென்டகன் வெளியிட்ட தகவல்!!

வடகொரியா மீது அமெரிக்கா படையெடுக்குமாக இருந்தால் அணு ஆயுத தாக்குதல் உள்ளிட்ட பல ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தரைவழி படையெடுப்பின் மூலம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தின் அனைத்து கட்டமைப்புக்களையும் மொத்தமாக அழிக்க முடியும் எனவும் பென்டகன் கூறியுள்ளது.

குறித்த விடயங்களை அமெரிக்க படைகளின் கூட்டுத் தளபதியின் சார்பில் ரியர் அட்மிரல் மைக்கேல் டுமாண்ட், அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெட் லியுவிடம் தெரிவித்துள்ளார்.

இதன்படி இரு நாடுகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றால், முதல் சில மணி நேரங்களில் என்னென்ன நடைபெறும் என்பது குறித்த தகவல்களை டுமாண்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரைவழி படையெடுப்பின் மூலம் வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தின் அனைத்து கட்டமைப்புக்களையும் அழிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் படையெடுப்பால் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் ஒன்றை வட கொரியா நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்பட பல ஆபத்துகள் ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மாளிகை!!

திருகோணமலையில் நிலத்தடி மாளிகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை de redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் போது இந்த நிலத்தடி அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தடி அறையின் விசேட பகுதி ஒன்றுக்கு கொங்கிறீட் கலவை பயன்படுத்தப்பட்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்ணின் ஊடாக அதற்குள் நுழைவதற்கான கதவு ஒன்று வைத்து மூடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கதவு கருங்கற்களினால் கட்டி மூடப்பட்டுள்ள நிலையில், தோன்றியுள்ள நிலத்தடி அறை மற்றும் ஆங்கில காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பீரங்கித் தாங்கி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களினால் கொங்கிறீட் கல், மணல் ஆகியவைகள் பயன்படுத்தி ஆரம்ப மாற்றங்கள் மேற்கொண்டு நிர்மாணிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது அந்த பகுதிகளில் மணல் மற்றும் பெற்றோலினால் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரளவு நவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், நிர்மாணிப்புகள் சீமெந்து பயன்பாட்டில் நிறைவு செய்யப்பட்டிருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று(06.11.2017) முற்பகல் 11.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு இ.போ.ச பேருந்தில் 4 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவினை எடுத்து வந்த நபரை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் கஞ்சாவினை எடுத்து வந்த யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 55 வயதுடைய அப்பு அரியரத்தினம் என்பவரை விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு!!

 
வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன் காரணமாக இன்று பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முச்சக்கரவண்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையைடுத்து வவுனியாவிலும் இன்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.