வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!!

வவுனியா காளிகோவில் வீதியில் நேற்று (21.08.2017) இரவு 11 மணியளவில் இனந்தெரியதாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டு வீதியில் வசித்துவரும் குறித்த குடும்பஸ்தரின் வீட்டிக்குள் நேற்று இரவு இனந்தெரியதாக நபர்கள் புகுந்து குறித்த நபர் மீது சரமாரியாக வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிலையும் சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மாட்டுத்தொழுவத்தில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

ஹட்டன் – எபோட்சிலி தோட்டம், புளோரண்ஸ் பிரிவில் பழைய மாட்டுத்தொழுவம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், இராமசாமி இராமஜெயம் எனும் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாட்டுத் தொழுவம் உள்ள பகுதிக்கு நேற்று காலை சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து தொழுவத்தை திறந்து பார்க்கையில் அந்த நபர் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு மிக நீண்ட காலமாக தனது சொந்த மாட்டுத் தொழுவத்தில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பையில் உணவு தேடும் யானைகளின் பரிதாபம்!!

 
மனிதர்களின் சுற்றாடலுக்கு செய்யும் தீமைகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தம்புள்ளை, திகம்பத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்படும் குப்பைகளை உண்ண வரும் யானைகள் உயிரிழக்கும் ஆபத்து பல வருடங்களாக நீடித்து வருகிறது.

தம்புள்ளை நகரில் சேரும் குப்பைகள் திகம்பத்த காட்டுப் பகுதியிலேயே கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் உணவு தேடி பெரும் எண்ணிக்கையிலான யானைகள் வருகின்றன.

25 முதல் 30 யானை கொண்ட கூட்டத்தை அங்கும் அடிக்கடி காண முடிவதாகவும் அந்த இடத்தில் உணவு கிடைக்காத நேரங்களில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடர்ச்சியாக ஒளிரும் புகையிரதக் கடவை சமிச்சை : மக்கள் விசனம்!!

 
வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை கடந்த நான்கு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஒளி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று காலையில் இருந்து குறித்த ஒளிச் சமிஞ்சை தன்னிச்சையாக ஒளி எழுப்பி சிவப்பு விளக்கு ஒளிர்ந்தபடி உள்ளது.

இதனால் அப் புகையிரதக் கடவையூடாக வேலைக்குச் செல்வோர், உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் புகையிரதம் வருகின்து எனக் கருதி அவ்விடத்தில் காத்து நின்றதுடன் அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அவ்விடத்திற்கு வந்து போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோருக்கும் தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நிலமையை பார்வையிட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்து பொலிசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தனர்.

தொடர்ந்தும் ஒளிச்சமிஞ்சை இயங்கு நிலையில் இருப்பதால் புகையிரதத் திணைக்களத்தின் வடக்குக்கான பிரதான கட்டுப்பாட்டு பிரிவான அனுராதபுரம் புகையிரத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை இப்பகுதியிலேயே கடந்த வாரம் புகையிரத விபத்து ஏற்பட்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதுடன், வடக்கில் பொருத்தப்பட்டுள்ள புகையிரதக் கடவை ஒளிச் சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து நீக்கப்பட்டவை என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக்கொண்டு நல்லூருக்கு வந்த காவடி : வியப்பில் பக்தர்கள்!!

 
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நிறைவுற்றதைத் தொடர்ந்து இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி காவடிகள் படையெடுத்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இதுவரை யாரும் செய்யாத ஒரு நேர்த்திக்கடனை பக்தர் ஒருவர் செய்துள்ளார்.

பறவை காவடி, தூக்கு காவடி, பால் காவடி, இவ்வாறு பல காவடிகளை இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இன்றைய திருவிழாவில் ஒரு இளைஞன் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக்கொண்டு காவடி எடுத்து வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன. இதுவரை இவ்வாறான ஒரு நேர்த்திக்கடன் செலுத்துவதையும், அரிவாள்களுக்கு மேல் படுத்து காவடி எடுப்பதையும் பார்த்ததில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தீர்த்த திருவிழாவிலேயே இப்படியான புதுவிதமான பறவை காவடியை காண்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பறவை காவடியை ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த பக்தர்கள் அனைவரும் வியப்புடன் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பக்தர் வேஷ்டியுடன், 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக் கொண்டு பறவை காவடி எடுத்து நல்லூரை நோக்கி வருகைத்தந்துள்ளார்.

தமிழனுக்கு கோமாளி குல்லா: கமலின் காட்டமான டுவீட்!!

நடிகர் கமல்ஹாசன் தமிழன் தலையில் கோமாளி குல்லா என அரசியல் நிலவரம் குறித்து டுவீட் செய்துள்ளார்.

திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தனது அரசியல் கருத்துக்களை டுவிட்டரில் கூறிவருகிறார், தற்போது மீண்டும் ஒரு டுவீட்டை கமல் பதிவிட்டுள்ளார்.

அதில், காந்திக்குல்லா, காவிக்குல்லா, காஷ்மீர்குல்லா, தற்போது கோமாளிக்குல்லா தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா என பதிவிட்டுள்ளார்.

அதிமுக-வின் இரு அணிகளும் இணையவுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கமல்ஹாசனின் டுவிட் வைரலாக பரவி வருகிறது.

18 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனையாவெளிப்பிரதேசம் யாட் அடைவீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு இன்று முற்பகல் 11 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் முரண்பட்டுக்கொண்டதாகவும், பின்னர் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் தாயார் தெரிவித்தார்.

அத்துடன் 10 மணிதொடக்கம் 10.30 வரையிலான காலப்பகுதில் தற்கொலை செய்துகொண்ட நபர், அவசரமாக தொலைபேசி மீள்நிரப்பு அட்டை ஒன்றை கொள்வனவு செய்து போனதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் தொலைபேசி லொக் செய்யப்பட்டிருப்பதனால் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்தி மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக கலந்துரையாடல்!!

 
வவுனியா கூமாங்குளத்தில் நேற்று (20.08.2017) கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் புஸ்பராஜா தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் துணைத் முதல்வருமான சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து கொண்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தனர்.

அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் S.புஸ்பராஜா, செயலாளர் மா.சுரேந்திரன், கூமாங்குளம் மரண உதவிச் சங்க தலைவர் பி.கணேசன், பொருளாளர் வே.நந்தபாலன், கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், கூமாங்குளம் கிரம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் சோ.துரைராஜ், மு.குருசாமி ஆகியோருடன் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

பிரான்ஸ் கடற்கரைக்கு அருகில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் உள்ள நைஸ் நகருக்கு அருகில் உள்ள கடலில் சரக்கு கப்பல் ஒன்று தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
கரும்புகையை வெளியேற்றிக்கொண்டு இருந்த இக்காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் 6 படகுகளில் சென்ற 66 தீயணைப்பு வீரர்கள் கப்பலில் சிக்கியிருந்த 11 பயணிகளை பத்திரமாக கரைக்கு மீட்டுள்ளனர்.

எனினும், இவ்விபத்தில் காயம் அடைந்த ஒருவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிற்பகல் நேரத்தில் நிகழ்ந்த தீவிபத்தை தொடர்ந்து இரவு 10 மணியளவில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியுள்ளது.

கப்பல் மூழ்கியதை தொடர்ந்து அதில் இருந்த சில பொருட்கள் தண்ணீருக்கு மேல் மிதப்பதால் அவ்வழியாக கப்பல் மற்றும் படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

40 மீற்றர் நீளமுள்ள இக்கப்பல் தற்போது சுமார் 650 மீற்றர் ஆழத்தில் தரையில் மோதி நின்றுள்ளது.

இத்தாலி நாட்டை சேர்ந்த இக்கப்பலில் தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!!

ஊவா, பரணகம திம்புலன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திம்புலன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த பெண்ணின் காதலன் குறித்த பெண்ணை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன் கணவர் வருகை தருவதை கண்டு ஓடியுள்ளதாக பொலிஸாரிடம் பெண்ணின் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன் பிள்ளைகள் அவர்களின் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பதுளை மாவட்ட பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், 1.5கிலோ மீற்றர் தூரம் சென்ற மோப்ப நாய், 37 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபரின் வீட்டை சென்றடைந்துள்ளது.

எனினும் 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரும் அவரது மனைவியும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபரின் வீட்டின் முன் சுவற்றில் இரத்தக் கறை படிந்திருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் தொடர்பான மரண விசாரணைகள் வெலிமடை நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் பெண்ணின் மீது காதல் கொண்ட இலங்கையருக்கு ஏற்பட்ட அவலநிலை!!

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் இரு வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டமையால் 31 வயதான சுவேதன் என்ற இலங்கை இளைஞன் சட்டரீதியான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.

காதல் கொண்ட பெண்ணின் கணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் திருமணமான பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்டமை குற்றச்சாட்டுகளாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையருக்கு எதிராக நேற்று முன்தினம் மலேசிய நீதிவான் Salamiah Salleh முன்னிலையில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார். இதன் பின்னர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் இருமுறை குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசித்துள்ளார்.

தன்னால் ஈர்க்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையே அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டாகும்.

கடந்த 12ஆம் திகதி காலை 9.15 மணியளவில் இந்த அச்சுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

தண்டனைக்குரிய 506ஆம் பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்படும்.

இரண்டாவதாக, தவறான நோக்கத்துடன் திருமணமான பெண்ணை தன் மீது வசியப்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குற்றவியல் தண்டனை 498ஆம் பிரிவின் கீழ் அதே இரண்டு வகையான தண்டனைகள் அவருக்கு விதிக்கப்படும்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டவர் எனவும், அவர் விமானத்திற்கு ஆபத்தானவர் எனவும் அவருக்கு பிணை வழங்கக்கூடாதெனவும், பிரதி பொது வழக்கறிஞர் Mary Phoon Keat Mee தெரிவித்துள்ளார்

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாதக் குழந்தை!!

பொகவந்தலாவ, குயினா பிரதேசத்தில் 2 மாத பெண் குழந்தை ஒன்றை அடுப்பில் தவறி விழுந்ததாகக் கூறி தீக்காயங்களுடன் இன்று மாலை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலையில் குழந்தை தவறி விழுந்ததாக பொலிஸாரிடம் குழந்தையின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான 2 மாத குழந்தையான அனுஷாகுமாரி மேலதிக சிகிச்சைக்களுக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் நாவலபிட்டிய வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது தாயும், அவரின் மற்றுமொரு குழந்தையும், தீக்காயங்களுக்குள்ளான குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சமையல் அறையில் தொங்கவிடப்பட்டிருந்த தொட்டிலில் குழுந்தை உறங்கிக்கொண்டிருந்தபோது தீ பற்றியிருக்கலாம் எனவும் இதனால் குழந்தை தீக்காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் பொகவந்தலாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

லண்டனில் சாதித்த இந்திய வம்சாவளி சிறுவன் : வியப்பில்  இலட்சக்கணக்கான பார்வையாளர்கள்!!

 
தெற்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு ‘சிறார் மேதை’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை 12 வயதான சேர்ந்த ராகுல் தோஷியின் அறிவுதிறமை பல இலட்சக்கணக்கான பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய நாட்டின் பிரபல தொலைக்காட்சி சேனலான “சேனல்-4” கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கான அறிவுத்திறன் சார்ந்த வினா-விடை நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளது.

“சிறார் மேதை” (‘Child Genius) என்ற பட்டத்துக்காக கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் 12 வயதுக்குட்பட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் அந்நாட்டை சேர்ந்த ரோனன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகுல் தோஷி (12) ஆகியோர் மோதியுள்ளனர்.

இந்த இறுதிச் சுற்று நேரடி ஒளிபரப்பை நேற்றைய தினம் அந்நாட்டில் உள்ள பல இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.

இதன்போது, கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்த ராகுல் தோஷி, 10-4 என்ற புள்ளிகள் கணக்கில் தனது போட்டியாளரான ரோரனனை வென்றார்.

பிரித்தானியாவில் 18ஆவது நூற்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ராகுல் முன்வைத்த கருத்துகள் பார்வையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைவிட அதிகமான அறிவாற்றல் நிறைந்த மாணவராக கருதப்படும் ராகுல் ஏற்கனவே ‘மென்ஸா கிளப்’ எனப்படும் அறிவுசார் கழகத்தில் உறுப்பினராக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

‘சேனல்-4’ நடத்திய இறுதிச்சுற்றுப் போட்டியில் 19ஆம் நூற்றாண்டுகால கலைஞர்களான வில்லியம் ஹோல்மேன் ஹன்ட் மற்றும் எவெரெட் மில்லய்ஸ் தொடர்பாக ராகுல் அளித்த விளக்கமான பதில் அவரை வெற்றியாளராக அறிவிக்கச் செய்தது. இதையடுத்து ’சிறார் மேதை’ என்ற பட்டம் ராகுல் தோஷிக்கு வழங்கப்பட்டது.

தெற்கு லண்டன் பகுதியில் வசித்துவரும் ராகுலின் தந்தை மினேஷ் தோஷி, தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளராகவும், தாயார் கோமல் தோஷி மருந்தாளுநராகவும் அங்கு பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது!!

இலங்கையில் இந்த சூரிய கிரகணம் தென்படாது எனவும் வட அமெரிக்காவிற்கு முழுமையாக தென்படவுள்ளதாக இலங்கை கோள்மண்டலம் அறிவித்துள்ளது.

அதேபோல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், தென்னமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் அரைச் சூரிய கிரகணமாக தென்படவுள்ளது.

அடுத்த சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி தென்னமெரிக்க நாடுகளுக்கு மாத்திரம் தென்படவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 9.17 க்கு சூரிய கிரகணம் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூரிய கிரகணத்தை நாசா வானிலை ஆய்வு மையத்தின் www.nasa.gov என்ற இணையத்தளத்தினூடாக நேரடியாக பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

வட அமெரிக்காவில் இன்று தென்படவுள்ள சூரிய கிரகணத்தை நிழற்படம் எடுத்து நேரலையில் காண்பிப்பதற்கு 80,000 அடி உயரத்தில், கமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்கவிடுவதற்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் நாசாவுடன் மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 80,000 அடி உயரத்தில் பறக்கும் 50 பலூன்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த அவலம்!!

காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளவாய, யௌவனகுமாரபுர பிரதேசத்தைச் சேர்ந்த, குமாரபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ருஷிர கேஷான் எனும் மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மாலை வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்ய முற்பட்ட போது மாணவரின் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.

வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்த போது, அது பிள்ளையின் கையிலே தவறுதலாக வெடித்ததன் காரணமாக பிள்ளையின் கை காயமடைந்தது என்று பிள்ளையின் தந்தை கூறினார்.

இலங்கையில் ஆண்டு தோறும் 200க்கும் மேற்பட்ட யானைகள் இறப்பதாக தகவல்!!

இலங்கையில் யானை – மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யானை – மனித மோதல்களின் பின்புலத்தில் துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டல், மின்சார தாக்குதல், பொறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட மனித செயற்பாடுகளினால் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை காண முடிகின்றது.

65 சதவீதமான யானைகளின் மரணங்கள் துப்பாக்கிச் சூடு மரணங்கள் என பதிவாகியுள்ளதாக கூறுகிறார் வன ஜீவராசிகள் துறை இயக்குநர் நாயகம் எம்.ஜி.சி. சூரியபண்டார.

“துப்பாக்கிச் சூடு பட்ட யானையை இலகுவில் அடையாளம் காண முடியாது. அதன் சோர்வடைந்த நிலை, காலை நொண்டியவாறு நீர் நிலைகளை நோக்கி செல்லல் ஆகிய அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுதான் அவை அடையாளம் காணப்படுகின்றன.

யானை அடையாளம் காணப்படும் வேளை அவை மோசமான தொற்றுக்குள்ளாகியிருக்கும்” என வன விலங்கு சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் தாரக பிரசாத் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இறுதியாக 2011-ம் ஆண்டு யானைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் போது 5,800 யானைகள் உள்நாட்டில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னரான ஆய்வுகளின்படி, வருடமொன்றுக்கு 80 முதல் 110 யானைகள் வரை பிறந்துள்ள போதிலும், 205 – 280 யானைகள் மரணமடைவதாக கூறப்படுகின்றது.

யானைகளை கொல்வது தண்டணைக்குரிய குற்றமாகும். குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும். அல்லது 2 முதல் 5 வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு சட்டம் கூறுகின்றது.

சட்டத்தில் அவ்வாறு கூறப்பட்டாலும் ஆண்டுதோறும் 200ற்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்படுவதாக வன ஜீவராசிகள் இலாகா தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

குறிப்பாக 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான ஐந்து வருடங்களில் 1,171 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 104 யானைகள் மட்டும்தான் இயற்கையாக மரணமடைந்துள்ளன. 1,067 யானைகள் விபத்துகள், யானை – மனித மோதல்கள் உள்ளிட்ட காரணங்களினால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பிட்ட 5 வருட காலத்தில், கடந்த ஆண்டிலே கூடுதலான யானைகளின் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 35 இயற்கை மரணங்கள் அடங்கலாக 279 யானை மரணங்கள் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச் சூடு – 52, பொறி துப்பாகிச் சூடு – 47, மின்சார தாக்குதல் – 26, வேறு காரணங்கள் – 30 , காரணம் கண்டறிப்படாதவை – 35 என 2012 -2016 வரையிலான 5 வருடங்களில் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

-பிபிசி-