தந்தைக்காக காத்திருந்த 3 வயது சிறுவன் பேயென நினைத்து அடித்துக் கொலை!!

வீதி ஓரத்தில் தனது தந்தையின் வரவிற்காக காத்திருந்த 3 வயது சிறுவனை பேயென்று நினைத்து, அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள நாகோன் மாவட்டத்தின் சால்னா என்ற பகுதியில், தனது தந்தையின் வரவிற்காக வீதி ஓரமாக காத்திருந்த 3 வயது சிறுவனை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லஹ்மன் தாக்கூர் என்ற நபர், தனியாக நிற்கும் சிறுவனைப் பார்த்து பேய் என நினைத்து பயமடைந்து குறித்த சிறுவனை கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் லஹ்மனின் தாக்குதலில் நிலைகுலைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த உள்ளூர்வாசிகள் சிறுவனை அடித்துக் கொன்ற லஹ்மனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த லஹ்மன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை நிறைவடைந்த பின் குறித்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள் : பதற்றத்தில் வலய நாடுகள்!!(காணொளி)

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியாவிற்கு எதிராக செயற்படுவதற்காக ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றது.

குறித்த பயிற்சியை காரணமாக கொண்டு அமெரிக்காவின் ‘யு.எஸ்.எஸ். மிசிகன்’ ஏவுகணை தாங்கு நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவின் பூசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தோடு ஏற்கனேவே விமானம் தாங்கி கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள நிலையில் அந்நாட்டின் முதன்மை அணி நீர் மூழ்கி கப்பலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவதற்காக, மற்றொரு பாரிய விமானந்தாங்கி போர்க்கப்பல் கொரியா நோக்கி பயணிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் தோன்றியுள்ள போர் பதற்றநிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் மற்றும் ஜேர்மனி ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளநிலையில், தற்போது அமெரிக்க போர்க்கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 62வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 62வது நாளாகவும் இன்று (26.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

 
வடக்குகிழக்கு பகுதிகளில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறும் காணமற்போன உறவினரின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவர்களின் உறவுகளைக்கண்டு பிடிக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்குமான ஒருமித்த கருத்தினை வெளிப்படுத்துவதுடன்,

அழுத்தத்தினை வழங்குவதற்கு காணாமற்போன உறவுகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தி அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குமாறு இன்று (26.04.2017) காணாமற்போன உறவுகளைச் சந்தித்து மேலதிக காணாமற்போன உறவுகளின் விபரங்களையும் பெற்றுக்கொள்ளச் சென்று கலந்துரையாடிய வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

இவருடன் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் சென்றிருந்தனர்.

நாளை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழு ஆதரவு!!

அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் நிலையை அறியத்தரக் கோரி வட-கிழக்கில் பல பாகங்களிலும் உறவினர்களால் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அவை பற்றி நல்லாட்சி அரசு உரிய பதிலை வழங்கவேண்டுமென சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு வலியுறுத்துகிறது. என அவ் அமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டொன்பேஸ்கோ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா, மருதங்கேணி, திருகோணமலை, முல்லைத்தீவு என போராட்டம் தொடர்ந்து கொண்டு செல்கிறது. எனினும் அப்போராட்டத்திற்கான பதிலை வழங்காது நல்லாட்சி அரசாங்கம் காலத்தை இழுத்தடித்து வருகிறது.

காலத்திற்கு காலம் அப்போராட்ட காரர்களை சந்திக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள் காணமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைத் தந்தால் உரிய தரப்பிடம் கொடுத்து தீர்வு பெற்று தருவதாக சொல்லுகின்றார்களே அன்றி எதுவும் செய்ததாக இல்லை.

யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. நல்லாட்சி அரசு பதவிக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களைக் கூட அரசாங்கம் இன்னும் சேகரிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதிலைக் கூறும்படி கேட்டும் உறவுகள் இறக்கும் வரை காலத்தை இழுத்தடித்து பதில் கூறுவதிலிருந்து தப்பிவிடலாம் என்று அரசு நினைக்கிறதா?

இவர்கள் சனநெரிசலிலோ, திருவிழாவிலோ, வழிதவறி சென்றவர்களோ அல்ல அரச பாதுகாப்பு தரப்பினரின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அவர்கள் இறந்து விட்டார்களா? அப்படியாயின் இறந்தது எவ்வாறு என்பதையும் உயிருடன் இருந்தால் எங்கே இருக்கிறார்கள், எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்றும் உடனடியாக வெளியிடவேண்டும் என கோருகின்றோம்.

இப்போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் அமைப்புக்கள் இதனை தனியே காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் சட்ட வரம்புகளுக்கு அப்பால் சமூகத்திற்கு எதிராக புரியப்பட்ட மக்கள் விரோதச் செயற்பாடு என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், பரந்துபட்ட மக்களை இணைக்கும் வெகுஜன போராட்டமாக மாற்றவும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு தனிநபர்களோ உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளே தமது சுய இலாபத்திற்காக இப்போராட்டத்தை பயன்படுத்த கூடாது எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு காணி மீட்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோருக்கான தீர்வு, ஆகிய மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக வட கிழக்கில் நடைபெறும் முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு தமது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவ் அமைப்பு தெரிவிக்கின்றது.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!!

 
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் இன்று (26.04.2017) புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள செல்வாவின் சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அனுஸ்டிக்கப்பட்டது

வட மாகாண சுகாதார அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், வர்த்தக சங்கத் தலைவர் , வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபரை மாற்றாதீர்கள் எனக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய செ.தர்மரட்னத்தினை மாற்றாதீர்கள் எனக் கோரி பாடசாலை மாணவர்களால் இன்று(26.04.2017) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றுமு: பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்ததாகவும் இந் நிலையில் புதிய அதிபாக நித்தியானந்தம் நியமிக்கப்படுவதாகவும் அதனை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள் பாடசாலைககு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும் அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு நித்தியானந்தம் என்பவருக்கு அதிபர் நியமனம் வழங்கப்படவேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

இதன் பிரகாரம் வடமாகாண கல்வி அமைசசின் செயலாளரினால் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நித்தியானந்தம் என்பவரை கடமைகளை பெறுப்பேற்குமாறு கோரியிருந்ததுடன் நிமியக்கடிதமும் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த பாடசாலையின் பௌதீக அபிவிருத்தி கல்வி வளர்ச்சி என்பவற்றுக்காக இதுவரை சிறப்பாக பணியாற்றியதாக மாணவர்களால் கருதப்பட்ட அதிபரான செ.தர்மரட்ணம் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக மாணவர்கள் தமது பாடசாலைக்கு தர்மரட்னம் அதிபரே நியமிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்து இரண்டாம் தவணை ஆரம்பமான இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தனர். இதற்காக பெற்றோர் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளின் ஆதரவையும் கோரியிருந்தனர்.

புதிய அதிபர் கடமைகளை பெறுப்பேற்க இன்று வருகை தந்த நிலையில் பாடசாலைக்கு முன்பாக மாணவர்கள் பெற்றோர் பழைய மாணவர்கள் குழுமியிருந்த நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரினால் மாணவர்களை பாடசாலைக்கு செல்ல பணிக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று மாணவர்கள் பாடசாலைக்குள் சென்ற நிலையில் பாடசாலை முன்வாயில் மூடப்பட்டதுடன் பொலிஸாரும் கடமையில் ஈடபட்டிருந்தனர்.

எனினும் சிறிது நேரத்தில் முன் வாயிலை திறந்து வெளியேறிய மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக எமது அதிபரை மாற்றாதே, மாணவர்களின் உரிமைக்கு மதிப்பளி, அருவித்தோட்ட பாடசாலையின் தகரப்பந்தல் எங்கே, கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் வீதியின் மறுபுறத்தில் பெற்றோர் மற்றும் பழைய மணாவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பதாதைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ; கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏதுவான நிலைமைகள் காணப்படாது என்பதனையும் அதற்காக உள்ள நடைமுறை சிக்கல்களையும் எடுத்தியம்பி கலந்துரையாடியிருந்தனர்.

ஒல்லியாக இருப்பது அழகல்ல ஆபத்து!!

பொதுவாகவே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிக உடல் எடையினை கொண்டவர்கள் தங்கள் உடல் எடையினை குறைப்பதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற பல முயற்சிகளை மேற்கொள்வர்.

குண்டாக இருப்பது மட்டுமல்ல ஒல்லியாக இருப்பது ஆபத்து தான் என மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

சினிமா மற்றும் மொடலிங் துறையில் உள்ளவர்கள் ஒல்லியான உடல்வாகினை பெற்றிருப்பது தற்போது கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில் உடல் எடையினை குறைப்பதற்காக உணவினை சரியாக எடுத்து கொள்வது இல்லை.

பெரும்பாலான பெண்களும் டயட் என்னும் பெயரில் புரோட்டீன் அதிகமுள்ள பயறு போன்ற உணவுகளை எடையினை அதிகரித்துவிடும் என தவிர்த்து விடுகின்றனர். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து சரிவர கிடைக்காமல் போய் விடுகிறது.

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான். பிறந்த குழந்தை அவரவர் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் எடையானது இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
எடை குறைவினால் ஏற்படும் பிரச்சனைகள்

* இயல்பான உடல் எடையினை விட குறைவாக இருந்தால் மன அழுத்தம் மற்றும் பசியின்மை அதிகரிக்கும்.

* உடல் எடையின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம்.

* இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் உண்டாகி நோய் எதிர்ப்பு சக்தியானது குறையும்.

*உடல் எடையினை குறைக்க எடுத்து கொள்ளும் மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயமுள்ளது.

தாடி, மீசையுடன் வாழும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்!!

 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் 24 வயதான அல்மா டோர்டெஸ் என்னும் இளம்பெண் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நோயினால் ஒழுங்கற்ற மாதவிடாய், தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் தாடி, மீசை முளைத்தல், உதிர போக்கு, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இதனால் இதய கோளாறுகள், எடை அதிகரிப்பு, தூக்கமின்மை போன்ற உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

அல்மா தனது 16 வயதில் இருந்து இந்நோயினால் பாதிக்கப்பட்டதால் அவர் முகத்தில் அடர்த்தியாக தாடி, மீசை வளர ஆரம்பித்தால் வீட்டிற்குள் முடங்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கே வந்தார்.

ஆனால் அவரது காதலர்,” தாடி, மீசையுடன் அழகாக உள்ளாய். இப்படி இயற்கையாகவே இருந்துவிடு. எனக்கு பிரச்சனை இல்லை”, எனக் கூறி தன்னம்பிக்கை அளித்துள்ளார்.

அதன் பின் வெளியுலகிற்கு வர ஆரம்பித்த அல்மா அனைவரின் கேலிக்குள்ளான போது மனம் தளராது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.

இது குறித்து,” ஐந்து ஆண்டுகளாக என் காதலர் எனக்கு நம்பிக்கை அளித்து வருகிறார். வெளியிடங்களுக்கு செல்லும் போது நேரிடையாக எதுவும் சொல்லாவிட்டாலும் மொபைலில் படம் பிடிப்பர்.

தாடி, மீசை எனக்கு ஒரு குறையாக தெரியவில்லை. நோயை எதிர்த்து போராடுவதை தவிர்த்து மற்றவர்கள் நினைப்பதை பற்றி யோசிப்பது கொடுமையானது,” என அல்மா கூறியுள்ளார்.

பார்பி பொம்மையாக மாறி போன இளம்பெண்!!

 
அனைவருக்குமே பொம்மைகள் என்றால் பிடிக்கும், அதிலும் பார்பி பொம்மைக்கென்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.

பார்த்து ரசிப்போர்க்கு மத்தியில் தன்னை ஒரு பார்பி பொம்மையாகவே மாற்றி கொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலினை சேர்ந்தவர் ஓபிலியா வானிட்டி(30). சிறுவயது முதலே பார்பி பொம்மை மீது தீராத காதலை கொண்டவர். இதற்காக அறுவை சிகிச்சை மூலம் தன்னை பார்பி பொம்மையாக மாற்றி கொண்டுள்ளார்.

முதன் முதலில் 2009 ஆண்டில் தன் முகத்தினை பொம்மையினை போன்று உணர்ச்சியற்றதாக மாற்றி பார்த்து அதில் ஈர்க்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையின் மூலம் உதடு, மார்பு மற்றும் பின்புறத்தினை பொம்மை போல் மாற்றியுள்ளார். இதற்காக அவரது விலா எலும்பில் நான்கினை நீக்கியுள்ளார்.

பொம்மையினை போன்று முடியின் நிறத்தினை பெறுவதற்காக மாதம் இருமுறை அவரது முடியினை ப்ளீச்சிங் செய்து பொன்நிறமாக மாற்றி வருகிறார்.

ஒரு நாளில் குறைந்தபட்சமாக மூன்று மணி நேரம் பொம்மை போன்று மேக்கப் போட்டு கொள்வதற்கு செலவழிப்பதாக கூறியுள்ளார். இயற்கையாகவே பெரிதாக உள்ள அவரது கண்களில் லென்சினை பயன்படுத்துகின்றார்.

மேலும் இவர் மாடலிங் துறையிலும் வேலை பார்ப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் தனது வருமானத்தில் 35,000 டொலரை மேக்கப்பிற்காக மட்டும் செலவழிப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!!

அமெரிக்காவில் பாலியல் ரீதியாகத் பெண்ணைக் தாக்கி கொலை செய்த இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் மாநிலத்தில் ஒரே இரவில் இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

52 வயது நிரம்பிய ஜேக் ஜோன்ஸ் என்பவரும், 46 வயது நிரம்பிய மார்செல் வில்லியம்சும் ஊசி மூலம் விஷம் செலுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதில் வில்லியம்ஸ் என்பவர் 1997ம் ஆண்டு 22 வயதுடைய ஸ்டாசி எரிக்சன் என்ற பெண்ணைக் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திக் கொலை செய்துள்ளார்.

இதே போல் ஜோன்ஸ் என்ற குற்றவாளி 1995ம் ஆண்டு 34 வயது மேரி பிலிப்ஸை கடத்திப் பாலியல் தாக்குதல் நடத்திக்கொலை செய்துள்ளார்.

லிட்டில் ராக்கில் அருகே உள்ள சிறைச்சாலை ஒன்றில் மூன்று மணிநேர இடைவெளியில் இரண்டு பேரும் மரணமடைந்ததை சிறை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

கணவனை காப்பாற்ற மனைவி எடுத்த முடிவு!!

திரிபுரா மாநிலத்தில் தனது கணவரின் உயிரை காப்பாற்ற தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் விற்பனை செய்துள்ளார்.

ஹல்தியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர், அன்றாடக் கூலிவேலை செய்துதான் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கணவருக்கு, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. தனது கணவனை பாதிப்பில் இருந்து மீட்க போராட்டி வந்தார். ஆனால் அடிப்படைச் செலவுகளுக்குக் கூட பணமில்லாமல் இருந்து வந்துள்ளது.

கணவனின் நோய் ஒருபுறமும், வறுமை மறுபுறமும் வதைத்து வந்த நிலையில் ஓர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனாலும் கணவரின் நோய்க்கு முன் ஆண் மகனைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியை அந்த வறுமைத் தாயால் அனுபவிக்க இயலவில்லை.

பிரசவித்த உடம்போடு கணவனின் சிகிச்சைக்காக உதவிகேட்டு அலைந்து திரிந்த அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. கணவன் உயிரைக் காப்பாற்ற வேறு வழியே இல்லையா என நிர்க்கதியற்று தவித்தவருக்கு தனது குழந்தை மட்டுமே கணவரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய துருப்புச்சீட்டு என்ற முடிவுக்கு வந்தார்.

பிறந்து 11 நாட்களே ஆன தனது குழந்தைக்கு விலையாக 5000 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டது. பணமும் குழந்தையும் கைமாறியது. சிலநாட்கள் கழித்து விஷயத்தை கேள்விப்பட்ட தனியார் தொண்டு நிறுவனமான சைல்டு லைன் ஃபவுண்டேசன் குழந்தையை மீட்டிருக்கிறது.

தற்போது அந்தக் குழந்தையை அரசு காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

ஒரு வாழை மரத்தில் இரண்டு வகை பழங்கள்!!

இயற்கையின் அற்புதங்கள் குறித்து பல்வேறு செய்திகள் கேள்விப்படுகின்ற போதிலும் தற்போது நேரில் அவ்வாறான ஒன்றை காணமுடிந்துள்ளது.

பொதுவாக கப்பல் பழ மரக்கன்று ஒன்று நட்டு வைத்தால் அதில் அதே ரக பழங்கள் மாத்திரமே காய்க்கும் என்பது பொதுவான ஒரு விடயமாகும்.

எனினும் தற்போது கப்பல் பழ மரத்தில் செவ்வாழை காய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வென்னப்புவ லுனுவில கிரிமெட்டியான பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலேயே இந்த அரிய வகை வாழைப்பழங்களை காண முடிந்துள்ளன.

தற்போது இந்த மரத்தை பார்வையிடுவதற்கு பிரதேச மக்கள் பலர் அங்கு வருகைத்தருவதாகவும், அவர்களிடமிருந்து இதனை பாதுகாப்பதற்கு சிரமமாக உள்ளதென அதனை வளர்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகப்போர் பதற்றம் : அமெரிக்கா படைகளில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் : வடகொரியா எச்சரிக்கை!!

வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது.

ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியா கடந்த சில வாரங்களாக கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு உள்ளதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே எதிர்பாராத விதமாக வடகொரியா தொடர்பாக பேசுவதற்கு நாளை அனைத்து செனட் உறுப்பினர்களும் வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும் என டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்து உள்ளார்.

பாதுகாப்பு அரணாக அமைந்து உள்ளநிலையிலும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்தது. எந்தஒரு நேரத்திலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தொடங்க வடகொரியா தயாராக உள்ளது என தென் கொரியா தெரிவித்தது.

வடகொரியா மேலும் ஒரு அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருகிறது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை அமெரிக்காவின் செயற்கைகோள் காண்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா நகர்வை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் அமெரிக்க படைகளை முற்றிலும் அழிப்போம் என வடகொரியா சபதமிட்டு உள்ளது. அணு ஆயுத போர் வெடிக்கும் என்றால் அனைத்து எதிரிகள் படையையும் அழிக்கப்படும் என வடகொரியா சபதமிட்டு உள்ளது.

எதிரிகள் மீது இரக்கமற்ற அழிவுத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என வடகொரிய ராணுவம் ஏற்கனவே அறிவித்துவிட்டது, அவர்கள் பொறுப்பற்ற முறையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள், உயிர்பிழைக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவால் கற்பனை செய்யமுடியாத ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும், ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என குறிப்பிட்டு உள்ளது.

எமது போராட்டத்திற்கு மாகாண அரசே முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் : வேலையற்ற பட்டதாரிகள்!!

மத்திய அரசை விட மாகாண அரசு தான் எமது முதல் சேவையாளர்கள். எனவே மாகாண அரசு எமது இப்போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என காரைதீவில் சத்தியாக்கிரகப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றோடு அவர்களின் போராட்டம் தொடங்கி 58வது நாளை அடைந்துள்ளது. இந்நிலையில் பெரும் ஆதங்கத்தில் இருக்கும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது போராட்டம் இன்று 58வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் காலை முதல் எமது விவகாரம் பேசுபொருளாக இருந்திருக்கிறது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம் முதலில் எமக்காக குரல் எழுப்பியிருந்தார். சுகாதார அமைச்சர் நசீரும் எமக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார். இன்னும் பலர் பேசியதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனால் கிழக்கு மாகாண சபை இதுவரை எம்மிடம் எவ்வித வாக்குறுதிகளையோ உத்தரவாதத்தினையோ தரவில்லை.

மக்களால் தெரிவு செயய்யப்பட்ட எமது மாகாண சபை படித்த எமக்கு வேலை வழங்கும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லையாயின் இன்னும் அது தேவையா? எனக் கேட்கத்தோன்றுகின்றது.

நாம் எமது பட்டத்திற்கான அரச தொழிலையே கேட்கின்றோம். அந்தந்த வருடங்களில் பட்டதாரிகள் வெளியேறுகின்றபோது தொழிலை வழங்கினால் இவ்வாறானதொரு பாரிய பிரச்சினை எழுந்திருக்காது.

தொழிலுக்குப் பொருத்தமான பாடநெறிகளை அரசாங்கமே முன்வைக்கவேண்டுமெ தவிர நாங்களல்ல. இனிமேலாவது எங்களுக்கான தொழில் கிடைக்கும்வரை எமது சாத்வீகப் போராட்டம் தொடரும் என்றனர்.

கம்பளிப்பூச்சியை பயன்படுத்தி சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த முடியும் : ஆய்வில் தகவல்!!

பிளாஸ்டிக்கை அரிக்கக்கூடிய கம்பளிப்பூச்சி உள்ளிட்ட சில உயிரினங்களை பயன்படுத்தி சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேன்கூடுகளின் மெழுகை உண்ணும் விட்டில் பூச்சியின் புழுக்கள் பிளாஸ்டிக்கை அழிக்கக்கூடியவை என கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த பூச்சியினங்கள் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயன பிணைப்புக்களை இலகுவாக உடைக்கக்கூடியவை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் ஒவ்வொரு வருடத்திலும் 80 மில்லியன் டொன்கள் பிளாஸ்ட்டிக் பொலித்தீன் உற்பத்தி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிளாஸ்டிக் பொலித்தீன் வகைகள் பொலித்தீன் பைகள் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதுடன் இவை முற்றாக உக்குவதற்கு பல நூற்றாண்டு காலம் செல்கின்றது.

இருப்பினும் விட்டில் பூச்சிகளின் புழுக்கள் சுமார் 1 மணித்தியாலத்திற்குள் பிளாஸ்டிக் பையில் துளைகளை உருவாக்கி விடுகின்றன.

இந்த செயற்பாட்டை மேலும் நுணுக்கமாக ஆராய்ந்து பிளாஸ்டிக் கழிவுகளால் உலகில் நிலவும் சிக்கலை குறைப்பதற்கான தொழிலுநுட்பத் தீர்வை வழங்க தாம் தயாராகவுள்ளதாக ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் பிளாஸ்டிக்கின் இயற்கை பிரிந்தழிகையின் பின்னணியில் உள்ள இரகசியங்களை கண்டறிந்து அந்த செயன்முறையை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.