இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!!

இரண்டாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷோக சேனானி ஹேவகே தெரிவித்தார்.

நேற்று முன்தினமும் நேற்றைய தினமும் பாடசாலை சுற்றுச்சூழலில் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை சூழல், நுளம்புகள் மற்றும் குப்பைகளின்றி இருப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கார் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை!!

 

புதிய வகை கார்கள் நச்சு வாயுக்­களை முழு­மை­யாக வெளி­யேற்றத் தவறி வரு­கின்­றமை புதிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

காரொன்­றுக்குள் இருக்கும் ஒருவர் ஒரு­த­டவை சுவா­சிக்கும் போது 10 மில்­லியன் நச்சுத் துணிக்­கை­களை சுவா­சிப்­ப­தாக பிரித்­தா­னிய சுரே பல்­க­லைக்­க­ழ­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்வு தெரி­விக்­கி­றது.

குறைந்த காற்­றோட்ட வச­தி­யு­டைய காரில் பய­ணிக்கும் சார­தியும் பய­ணி­களும் வீதி நடை பாதையில் நடக்கும் போது சுவா­சிக்க நேரி­டு­வதை விட 10 மடங்கு அதி­க­மான நச்சுத் துணிக்கைகளை சுவா­சிப்­ப­தாக நச்­சுக்கள் தொடர்­பான பகுப்­பாய்­வா­ள­ரான நிக் மோல்டன் தெரி­வித்தார்.

கார்­களின் இயந்­தி­ரங்­களால் வெளிப்­படும் நச்சுப் புகை சரி­யாக வெளியேற்­றப்­ப­டாது காருக்குள் தேங்­கி­யி­ருப்­பதே மேற்­படி நச்சு துணிக்கைள் தேங்­கு­வ­தற்கு கார­ண­மா­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

நகர, கிராம வீதி­களில் 4 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைக் கழித்த கார்­களில் ஒரு கன சதுர சென்­ரி­மீற்றர் பகு­தி­யி­லுள்ள நச்சுத் துணிக்­கை­களின் அளவு இந்த ஆய்­வுக்­காக அள­வி­டப்­பட்­டது.

உங்கள் கார் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட வேளை அந்தக் காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்குமானால் காரு

க்குள்ளான நச்சுத் துணிக்கைகளின் செறிவு பல மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வில் பங்கேற்ற சுரே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறி யியலாளர் பேராசிரியர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

குறைந்த விலையுள்ள காரொன்றில் ஒரு கன சென்ரிமீற்றரில் காணப்படும் நச்சுத் துணிக்கைகளின் அளவு ஏனையகார்க ளுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக உள்ளமை கண்டறிய ப்பட் டுள்ளது. வளிமண்டல நச்சு காரணமாக வரு டாந்தம் 40,000 பேர் முன்கூட்டியே மரணத்தைத் தழுவுவதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.

திரு­டிய இடத்தில் விட்டுச் சென்ற மோட்டார் சைக்­கிளை எடுக்க வந்த போது பிடி­பட்ட திருடர்கள்!!

அநு­ரா­த­புரம், தலாவ, பிதுன்­கட பிர­தே­சத்தில் உள்ள வீட­மைப்பு திட்­ட­மொன்றின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள வீடு­க­ளுக்கு இடப்­பட்­டுள்ள எஸ்­பெஸ்டாஸ் கூரைத்­த­க­டு­களை கழற்றி திருடிச் செல்லும் கும்­ப­லொன்றைச் சேர்ந்த மூவரை கையும்­மெய்­யு­மாக பிடித்த பிர­தே­ச­வா­சிகள் அவர்­களை மரங்­களில் கட்டி வைத்­தி­ருந்து பின்னர் விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்­றுக்­காலை தலாவ பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைந்­துள்­ளனர்.

சில மாதங்­க­ளுக்கு முன்­பி­ருந்து தலாவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹிதோ­கம, பிதுன்­கட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள சந்­தி­ரா­ணி­கம வீட­மைப்பு திட்ட வீடுகள் சில­வற்றின் கூரைத்­த­க­டுகள் திரு­டப்­ப­டு­கின்­றமை தொடர்பில் பிர­தே­ச­வா­சிகள் அவ­தானம் செலுத்­தி­யி­ருந்த நிலையில் நேற்­று­முன்­தினம் இரவு வீடொன்­றி­லி­ருந்த 26 எஸ்பெஸ்டாஸ் கூரைத்­த­க­டு­களை சந்­தே­க­நபர்கள் திரு­டிச்­செல்ல முயற்­சித்த போது அவர்களை சுற்­றி­வ­ளைத்து பிடிப்­ப­தற்­காக பிர­தே­ச­வா­சிகள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

மேற்­படி வீட்­டி­லி­ருந்து தக­டு­களை ஏற்­றிச்­சென்ற லொறியின் டயர்­களின் தடத்­தினை பின்­தொ­டர்ந்து சென்ற பிர­தே­ச­வா­சிகள், குறித்த லொறி அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள வீடொன்­றுக்கு முன்­பாக தரித்­தி­ருந்து புறப்­பட்டு சென்­றுள்­ள­தனை ஊகித்­துக்­கொண்டு அவ்­வீட்­டா­ரிடம், எவ­ரேனும் லொறியில் வந்­த­னரா என வின­வி­யுள்­ளனர்.

அதன்­போது, இளை­ஞர்கள் நால்­வரும் வயோ­தி­ப­ரொ­ருவர் வந்­த­தா­கவும் அவர்­க­ளு­டைய மோட்டார் சைக்­கிளை தமது வீட்­டுக்கு முன்­பாக விட்டுச் சென்­றுள்­ள­துடன் அதனை பின்னர் வந்து எடுத்துச் செல்­வ­தா­கவும் அவர்கள் கூறிச் சென்­ற­தாக அவ்­வீட்டார் தெரி­வித்துள்ளனர்.

அதற்­க­மைய பிதுன்­கட கிரா­மத்தை சேர்ந்த 20க்கும் மேற்­பட்ட இளை­ஞர்கள் கூரைத்­த­க­டு­களை திரு­டிய சந்­தே­க­ந­பர்­களை கைது செய்­வ­தற்­காக மறை­வான பகு­தி­களில் பதுங்­கி­யி­ருந்த நிலையில் சந்­தே­க­ந­பர்கள் மூவர் தாம்­விட்டுச் சென்ற மோட்டார் சைக்­கிளை எடுத்துச் செல்­வ­தற்­காக வந்­தி­ருந்த போது பதுங்­கி­யி­ருந்த இளை­ஞர்கள் அவர்­களை சுற்­றி­வ­ளைத்து வீதி­யோ­ரத்­தி­லி­ருந்த மின்­கம்­ப­மொன்றில் கட்­டி­வைத்து தலாவ பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்­ளனர்.

அதற்­க­மைய சம்­பவ இடத்­துக்கு விரைந்த பொலிஸார் சந்­தேக நபர்­க­ளான 25 வயது இளை­ஞர்கள் இரு­வ­ரையும் 55 வய­தான நப­ரொ­ரு­வ­ரையும் கைது செய்­த­துடன் சந்­தேக நபர்­க­ளது மோட்­டார்­சைக்­கிள்கள் இரண்­டை­யும் கைப்­பற்­றி­யுள்­ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஜயசிறிபுரவிலுள்ள வீடொன்றிலிருந்து, களவாடப்பட்ட கூரைத்தகடுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர்!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா நமசிவாயம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

பொன்னையா நமசிவாயம் மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் திகதி பொன்னையா, சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார்.

தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை 1945 ஆம் ஆண்டு திருமணம் செய்த பொன்னையா நமசிவாயம், 1946 ஆம் ஆண்டு கிராம சேவையாளராக கடமையேற்றி ஓய்வுபெற்றார். இவருக்கு 11 பிள்ளைகளும் 33 பேரப்பிள்ளைகளும் 12 பூட்ட பிள்ளைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியா வந்தடைந்தது : மேலும் பதற்றம்!!

வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது.

ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடியது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே ஏற்பட்ட சொற்போரால் சமீபத்திய வாரங்களில் இந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது.

முன்பு கடைபிடித்துள்ள சில ஆண்டு நினைவு கொண்டாட்டங்களின்போது, அணு ஆயுத அல்லது ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியுள்ளதால், அது மேலதிக சோதனைகளை நடத்தலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இருப்பினும், தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், “வழக்கத்துக்கு மாறான நிலைமைகள் எதையும் கண்டறியவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.

மாறாக, வென்சான் நகரை சுற்றி வட கொரியா தாக்குதல் பயிற்சியை நடத்தியுள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.

“வட கொரிய ராணுவத்தின் நகர்வை எமது ராணுவம் நெருக்கமாக கண்காணித்து வருகிறது” என்று தென் கொரியா கூறியுள்ளது.

ஏப்ரல் 16 ஆம் தேதி வட கொரியா நடத்திய தோல்வியில் முடிந்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை, அதிபர் டொனால்ட் டிரம்பை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்க துணை அதிபர் மைக் பென்ஸை தூண்டியது.

வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக, அமெரிக்க செனட் அவை உறுப்பினர்கள் அனைவரும் புதன்கிழமை நடைபெறும் வட கொரியா பற்றிய விளக்க கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் புசான் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. இது இந்த கப்பலின் வழக்கமான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆற்றலால் இயக்கப்படும் இந்த நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் 154 டோமாஹாக் ஏவுகணைகளையும், 60 அதிரடி படைப்பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகளையும் கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியாவின் சோசுக் இல்போ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

காரல் வின்சன் போர்க்கப்பல் அணியோடு ராணுவ பயிற்சியில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரல் வின்சன் போர்க்கப்பல் அணிதான், அந்த பிராந்தியத்தில் “தயார் நிலையை பராமரிக்க” இந்த மாதத்தின் தொடக்கத்தில் வட கொரியாவுக்கு அனுப்பப்படுவதாக அமெரிக்க தெரிவித்தது.

அப்போது, அந்த பிராந்தியத்திற்கு கடற்படைத் தொகுதியை அனுப்புவதாகவும், அமெரிக்கா மிகவும் சக்தி வாய்ந்த, விமானந்தாங்கியை விட சக்தி மிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை கொண்டிருப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.

தென் கொரியாவுக்கு வருகின்ற விமானந்தாங்கியை மூழ்கடித்து விடுவோம் என்றும், அமெரிக்காவின் தாக்குதல் என்று அது கூறுவதற்கு எதிராக, “முன்கூட்டியே மிகப் பெரிய தாக்குதலை” நடத்துவோம் என்றும் மிக கோபமாக வட கொரியா பதிலளித்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க போர்க்கப்பல்கள் சில குழப்பங்களை விளைவித்தன. இந்த அறிவிப்புக்கு பின்னர் வட கொரியாவை நெருங்கிச் செல்லாமல், எதிர்ப்புறமாக அது பயணித்ததால் கிண்டல்களுக்கு இரையானது. என்றாலும், ஆணையிட்டதைபோல அந்த பிராந்தியத்திற்கு இப்போது செல்வதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா, வடகொரியாவின் ஒரேயொரு கூட்டாளியாகவும். முக்கிய வர்த்தக பங்கு வகிக்கின்ற நாடாகவும் விளங்குகிறது. வட கொரியாவுக்கு சீனா அழுத்தங்கள் வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வந்தது.

திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளை தணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

-பிபிசி-

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது!!

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி பொலிசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பொலிஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் 4 நாட்களாக டெல்லி பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி குற்றவியல் பொலிசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தினகரனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் டெல்லி பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக 4-வது நாளான நேற்று டெல்லி பொலிசார் தினகரனிடம் நடத்திய சுமார் 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்தும் நிலவுகிறது!!

இலங்கையானது மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும், இந் நோயின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகின்றது. இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக மலேரியா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்ற நிலையில், இந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வருகை தரும் சற்றுலா பயணிகள் அல்லது அந்நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் சிலர், இந்நோய் தொற்றுக்கு உள்ளாகியது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் 1990இல் மலேரியா ஓழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2016 செப்டம்பர் மாதம் உலக சுகாதார மையத்தினால் மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தையும் பெற்றது.

2006 – 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள் நாட்டில் வருடமொன்றுக்கு ஆயிரம் மலேரியா காய்ச்சல் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை பூஜ்யம் என கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை காரணமாகவே, பிரதானமாக மலேரியா அச்சுறுத்தலுக்கு மீண்டும் முகம் கொடுக்க வேண்டியிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார் என, பிபிசி செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு கூடுதலான நிதி செலவிடப்படுவதாகவும் அவர் மேலும்

வவுனியாவில் நாளை பூரண ஹர்த்தால் : அனைத்து பொது அமைப்புக்களும் ஆதரவு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (27.04.2017) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வவுனியாவிலும் நாளை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பபடவுள்ளது. இதற்க்கு பெரும்பாலான பொது அமைப்புக்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.

2 மாதங்களைக் கடந்து இடம்பெறும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஆதரவுடன் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கல்!!

 
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு நேற்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000  நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர் விஜயநாதன் ரட்ணகுமார் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதனின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவருமான சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன், உறுப்பினர் ஜெ.இந்துஜன் மற்றும் ரவி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா செட்டிக்குளம் உணவகத்தில் தீ விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகமொன்றில் நேற்று (25.04.2017) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலினால் குறித்த கடை சேதமடைந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

செட்டிகுளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது. கடையின் முன் பகுதியில் அதிகளவான தீ பரவிய நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் ஒன்றுதிரண்டு தீயை கட்டுக்குள்கொண்டு வந்துள்ளனர்.

இத் தீவிபத்துக்கு எரிவாயு கசிவே காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

வவுனியா சேமமடு சண்முகானந்தா.ம.வியில் சர்வதேச பூகோள தினம் அனுஸ்டிப்பு!(படங்கள்)

சர்வதேச பூகோள தினத்தை முன்னிட்டு சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர் பாராளுமன்ற விவசாய அமைச்சின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அதிபர் ள.சசிகுமார் தலைமையில் 25.4.2017 செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் பூகோள தின நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வின் ஆரம்பத்தில் பாடசாலை அதிபர் மற்றும் புவியியல் ஆசிரியரினால் இன்று புவி எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் அவற்றின் பாதுகாப்பு முக்கியத்துவம் எடுத்து கூறப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை சூழலை தூய்மையாக்கி புவிச்சூழலை சுத்தமாக வைத்திருக்க சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன்பாடசாலையில் சேரும் குப்பைகளை உரிய முறையில் பயன்படுத்தி கூட்டெரு தயாரிக்கும் முறையும் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை சூழலை அழகுபடுத்தி புவியை பாதுகாத்து இயற்கை சமனிலையை பேண மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

வவுனியாவில் நாளை மறுதினம்(27.04) பூரண கடையடைப்பு : வர்த்தக சங்கம்!!

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக இன்று(25.04.2017) இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியா வர்த்தக சங்கம் இன்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆதரவினை வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.​

வவுனியாவில் 27ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இ.போ.சபை தொழிற்சங்கம் ஆதரவு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, பட்டதாரிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்பவற்றை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன,மத, மொழி பேதங்களைக் கடந்து நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு நாமும் ஆதரவு வழங்குகின்றோம்.

அன்றைய தினம் நாமும் எமது செயற்பாடுகளை முடக்கி பாதிக்கப்பட்ட அவர்களுக்காக குரல் கொடுப்போம் என அத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வயோதிபர் விளக்க மறியலில்!!

மது போதையில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வயோதிப நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

காலிமுகத்திடலில் பெண் அமர்ந்திருந்த போது இந்த நபர் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தாக குறித்த பெண் கோட்டை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது தரப்பு வாதி துஷ்பிரயோகம் செய்யும் எண்ணத்தில் இருக்கவில்லை எனவும் அதிகமான மதுபோதையில் இருந்தால், இந்த சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாய தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள்!!

 
இன்று (25.04.2017) காலை 6.30 மணியளவில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான 15 கிலோமீற்றர் சைக்கில் ஓட்டப்போட்டியினை வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னக்கொன் ஆரம்பித்து வைத்தார்.

மரதன் ஓட்டப்போட்டியினை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமரா ஆரம்பித்து வைத்தார். பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி, முட்டி உடைத்தல், யானைக்க கண் வைத்தல், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் என இடம்பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் இரவு பொலிசாரின் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

லண்டன் மீதான மோகம் : முகவரை நம்பி உயிரை பறிகொடுத்த ஈழத்து இளைஞர்கள்!!

சட்ட விரோதமான முறையில் லண்டன் செல்ல முற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் செம்மலை மற்றும் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். லண்டனில் தொழில் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூர் முகவர் ஒருவரின் ஊடாக குறித்த இருவரும் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவு உப்புக்குளத்தில் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான பேரம்பலம் மைதிலிபாலன் மற்றும் முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த 23 வயதான விஜயகுமார் பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி லண்டன் நோக்கி குறித்த இரு இளைஞர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதே மாதம் 19ஆம் திகதி குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.

இதில், “தாங்கள் ஈரான் நாட்டில் இருப்பதாகவும், அங்கிருந்து வேறு நாட்டிற்கு செல்லவுள்ளதாகவும்” தங்களுக்கு தகவல் வழங்கியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், 19ஆம் திகதிக்கு பின்னர் தங்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வெளிநாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு குடும்பத்தினர் விபரமறிந்துள்ளனர்.

இதன் போது ஈரான் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு இளைஞர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்களின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர். குறித்த புகைப்படம் சரியாக அடையாளம் காட்டக்கூடிய வகையில் இருக்கவில்லை.

இதனையடுத்து, வீட்டில் உள்ள குறித்த இருவரின் புகைப்படங்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது மேற்படி இரு இளைஞர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.