வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!!

வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும். இதில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகள் அனைத்தும் தங்களை பாதுகாப்பு படுத்தி கொள்வதற்கு தயார் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐப்பான் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அதாவது அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் அனைவரும் வலுவான கான்கிரீட் இடத்தை கண்டு பிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் ஜன்னலுக்கு அருகில் யாரும் நிற்கவேண்டாம் எனவும் அதை விட்டு விலகியே இருக்கும் படியும் கூறியுள்ளது.

இதற்கு காரணம் கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்டதாகவும், அது சுமார் 1,600 கி.மீட்டர் கடந்து வந்து ஜப்பானின் Okinawa என்ற பகுதியில் வந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இது பறந்து வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடம் ஆகும். அதன் காரணமாகவே இந்த அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் மட்டும் வடகொரியா நான்கு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டதாகவும், அதில் மூன்று ஜப்பானின் கடல்பகுதியில் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கடந்த 23-ஆம் தேதி தான் அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை 5.7 மில்லியன் மக்கள் படித்துள்ளனர். இதனால் ஜப்பான் மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

மேலும் ஜப்பான் அரசாங்கம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்தால், எப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பொதுமக்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாய்,பிள்ளை உயிரிழப்பு!!

அநுராதபுரம் மரதன்கடவல பகுதியில் விவசாயக் கிணற்றில் வீழ்ந்து தாயும் பிள்ளையும் உயிரிழந்துள்ளனர்.

உறவினர் ஒருவரின் மரண சடங்கில் நேற்றிரவு கலந்து கொண்டு வீடு திரும்பிய போதே இருவரும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விபத்தில 37 வயதான தாயும் 6 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸபார் தெரிவித்தனர்.

இவர்களுடன் கிணற்றில் வீழ்ந்த 9 வயதாக சிறுமி பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கியூபாவில் மில்லியன் கணக்கான நண்டுகளின் படையெடுப்பு!!

 
கியூபாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு மில்லியன் கணக்கான நண்டுகள் படையெடுப்பதால் கரையோரங்களில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்திலான நண்டுகள் கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. பிக்ஸ் விரிகுடாப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நண்டுகளின் படையெடுப்பு நடைபெற்று வருகிறது.

இனப்பெருக்கம் காரணமாகவே இந்த நண்டுகள் கரைப்பகுதியை நோக்கி அதிகளவில் நகர்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை இவ்வாறு கரைப் பகுதியை நோக்கி நகரும் போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்க நேரிடுவதுடன், பறவைகளுக்கும் இரையாகின்றன.

கோக்கோ இன்றி பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் : ஆய்வில் ருசிகர தகவல்!!

கோக்கோவில் இருந்து சொக்லேட் தயாரிக்கப்படுவது தான் வழமை. ஆனால், பலாக்கொட்டையில் இருந்தும் சொக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சொக்லேட் தயாரிக்க 45 இலட்சம் தொன் கோக்கோ தேவைப்படுகிறது. ஆனால், அந்தளவு கோக்கோ பயிரிடப்படுவதில்லை. வெறும் 37 இலட்சம் தொன் கோக்கோ மட்டுமே பயிரிடப்படுகிறது. எதிர்காலத்தில் சொக்லேட்டின் தேவை அதிகரிக்கக் கூடிய நிலையில், கோக்கோவிற்கான தேவையும் அதிகரிக்கும்.

இந்த நெருக்கடியைக் கருத்திற்கொண்ட பிரேசிலைச் சேர்ந்த பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள், கோக்கோவின் நறுமணத்துடனும் சுவையுடனும் மாற்று வழியில் சாக்லேட் தயாரிக்கு முடியுமா என ஆய்வு செய்யத் தொடங்கினர்.

பலாக்கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்க முடியும் என தற்போது அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பலாக்கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதிலிருந்து சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் பொருளை உருவாக்க முடியும் எனவும் இதன் மூலம் கோக்கோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறியதாக நடிகர் மீது புகார்!!

அய்யப்பன் கோவிலில் ஆகமவிதிகளை மீறி பாடியதாக நடிகர் ஜெயராம் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள அரசிடம் இதுகுறித்து அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடு களும் காலம் காலமாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

10 வயதிற்கு மேல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. அதையும் மீறி தடை செய்யப்பட்ட வயதிற் குட்பட்ட பெண்கள் இங்கு சாமி தரிசனம் செய்ததாக அடிக்கடி சர்ச்சை எழுந்து வருகிறது.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த 50 வயதிற்கு உட்பட்ட 2 இளம் பெண்கள் சரிபமலையில் சாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரள தேவசம்போர்டு விஜிலன்ஸ் அமைப்பு விசாரணை நடத்தியது.

இதுதொடர்பான விசா ரணை அறிக்கையும் சமீபத் தில் கேரள தேவசம் போர்டு மந்திரி மற்றும் சபரிமலை சிறப்பு ஆணையரிடம் வழங்கப்பட்டது. அதில் தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் இந்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்று உள்ள இன்னொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கேரள தொழில் அதிபர் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தபோது பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் அன்று சபரி மலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது அவர் சபரிமலை கோவில் கலைஞர்கள் இசைக்கும் இசைக்கருவியான ‘இடக்கா’ கருவியை வாங்கி அதை இசைத்து பாட்டுப்பாடி உள்ளார். இது சபரிமலை ஐதீகத்தை மீறிய செயல் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அன்று தொழில் அதிபருக் காக சபரிமலை அய்யப் பனுக்கு விதிகளை மீறி சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் ஜெயராம் சபரிமலை யில் இசைக்கருவி இசைத்து பாட்டுப்பாட அனுமதித்தது தொடர்பாக தேவசம் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டத் தடை : முஸ்லிம் மக்கள் அதிருப்தி!!

முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது சீன அரசு. அதில், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர் வைப்பதற்கும் தடை விதிக்கும் சட்டமும் ஒன்று.

சீனாவின் தன்னாட்சி மானிலமாக விளங்குவது ஷிங்ஜியாங். இந்த மானிலத்தின் சட்ட சபை உறுப்பினர்கள் பல்வேறு சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் பலவும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் முகத்தை மூடும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்குத் தடை விதித்தும், அவ்வாறு ஆடையணிபவர்கள் குறித்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சமயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தாடி வளர்க்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டக்கூடாது என்றும் ஷிங்ஜியாங்கில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இது போன்ற சட்டங்கள் ஷிங்ஜியாங் மானிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வழக்கத்தில் இருந்தபோதும், தற்போது ஷிங்ஜியாங் மானிலம் முழுவதும் இச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்த தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

ஒரே பிரசவத்தில் நான்கு சிசுக்கள் பிரசுவித்த சம்பவம் ஒன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் தாமரை குளத்தை சேர்ந்த உதயபானு ஐங்கரன் எனும் தாயே இவ்வாறு 4 பிள்ளைகளை பிரசுவித்துள்ளார்நே ற்று அதிகாலை 4 மணியளவில் 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் பிரசுவித்துள்ளார்.

ஏற்கனவே இரு ஆண்பிள்ளைகள் இருப்பதாகவும் தற்போது 4 பிள்ளைகள் பிரசுவித்துள்ளதால் தனக்கு பாரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

இருப்பதற்கு கூட சரியான வசதியின்மையால் தங்களுக்கு உதவி செய்யுமாறு பிள்ளைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

வயிற்றில் இருந்தது 2 குழந்தைகள் : பிறக்கும் போது 3 ஆன அதிசயம்!!

பிரிட்டிஷ் பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை கருத்தரித்து, அவற்றை கருவில் சுமந்தபோது, இன்னொரு குழந்தையையும் கருத்தரித்ததாக மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இது தான் சூப்பர் கருத்தரிப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை கருத்தரித்து குழந்தையாக வளர்ந்து வருகின்ற கருவை கொண்டிருக்கும் பெண், பின்னர் இரண்டு வாரத்தில் அல்லது ஒரு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மனிதரில் இவ்வாறு நிகழ்வது மிகவும் அரிதான ஒன்று. கடந்த நூறு ஆண்டுகளில் இது போன்ற சூப்பர் கருத்தரிப்பு நடந்து பிரசவிப்பது ஆறாவது முறையே.

கருவள நிபுணர் பேராசிரியர் சைமன் பிஷெல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இவ்வாறு நடைபெறக் கூடாது. ஆனால் நடந்து விடுகிறது” என்கிறார்.

“1865 ஆம் ஆண்டு முதல்முறை இவ்வாறு நடைபெற்றது. பத்தாண்டுகளில் அவ்வப்போது ஒரு சில இவ்வாறு நடைபெறுவதாக செய்தி வெளியாகிறது” என்று அவர் தெரிவித்தார்.

பெண்ணொருவர் ஒருமுறை கருத்தரித்து விட்டால் அவ்வளவு தான் என்று எண்ணுகிறோம். ஆனால், 1978ல் ஆம் ஆண்டு முதல்முறையாக சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிரசவிக்க உதவிய இந்த மருத்துவர் அவ்வாறு கருதவில்லை.

“பரிணாம வளர்ச்சி குறிப்பாக பெண்கள் ஒருமுறை கருத்தரித்து விட்டால், அவர்களிடம் இன்னொரு கரு முட்டை வெளிப்படாது போகும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

“எப்போதாவது அவ்வாறு நடைபெற்றால், அந்த கரு முட்டை சிசுவாக உருவாக முடியாது. ஆணின் விந்து அதனுள் செல்ல முடியாது என்பதே இதற்கு காரணம்” என்று அவர் கூறுகிறார்.

அவ்வாறு நடந்து விட்டாலும், கரு வளரத் தொடங்கி மாற்றங்கள் உருவாக தொடங்கிவிட்டதால், கருப்பையின் சுவர் இன்னொரு கரு முட்டையை ஏற்றுகொள்ள முடியாது”.

சூப்பர் கருத்தரிப்பு நடப்பது அபூர்வமானது. ஆனால், எப்போதும் மகிழ்ச்சியான முடிவு ஏற்படுவதில்லை.

“வளர்ந்து வருகின்ற ஒரு கருவின் வளர்ச்சி நின்றுபோய், கருப்பையிலேயே வளர்ந்து வரும் இன்னொரு கரு இறந்துள்ளதும், மிக முன்னதாகவே பிறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது” என்கிறார் பேராசிரியர் சைமன் பிஷெல்.

கருப்பையில், இந்த வளர் கருக்கள் எப்படி சமாளிக்கின்றன என்பதும், உணவு பெற்றுகொள்வதில் அவை போட்டியிடுமா? என்பதும் கேள்விகளாக எழுகின்றன.

“இது கருவளர் படலப்பையை (தொப்புள்கொடி) பொறுத்தது. இதுதான் வளர்கின்ற கருவுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கும், வளர்கின்ற குழந்தை காணும் வளர்ச்சி மேம்பாட்டிற்கும் மிகவும் முக்கியமானது” என்று சீமோன் பிஷெல் மேலும் தெரிவித்தார்.

“இந்த தொப்புள்கொடி இயல்பாக வளர்ந்து மேம்படுகிறது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. சூப்பர் கருத்தரிப்பு நிலைமைகளில், இது சரியாகவே செயல்பட்டுள்ளது”.

கொறித்து உண்ணும் விலங்குகள், முயல்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளிடம் இது பரவலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதரில் இவ்வாறு நடைபெறுவது மிகவும் அரிது என்றாலும், இத்தகைய அற்புத பிறப்புகள் நிகழவே செய்கின்றன. சிலவேளைகளில் இது மிக தீவிரமாக இருக்கலாம்.

“சில ஆண்டுகளுக்கு முன்னால், ரோமில் ஒருமுறை இத்தகைய சூப்பர் கருத்தரிப்பு நடைபெற்றபோது, அது 3 முதல் 4 மாத இடைவெளியில் நிகழ்ந்ததாக கணித்திருந்தனர்” என்கிறார் பேராசிரியர் சைமன் பிஷெல்.

வவுனியா பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு செய்த வயோதிபர் பொலிசாரால் மீட்பு!!

 
வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்த வயோதிபர் ஒரவர் நேற்று (26.04.2017) மாலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்று (26.04.2017) மாலை மத்திய பேருந்து நிலையத்தில் வயோதிபர் ஒருவர் வியாபார நிலைய கட்டடத்தொகுதியில் அமர்ந்திருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

இதையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டு தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று வயோதிபரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியதுடன் சுகயீனமுற்று இருப்பதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் A9 வீதியினை மறித்து போராட்டம் : பொலிஸார் குவிப்பு!!

 
வவுனியா A9 வீதியினை இன்று (27.04.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலயம் மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டநிலை காணப்பட்டதுடன் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

போராட்ட இடத்திற்கு வந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீதியை வழிமறித்து போராட்டம் மேற்கொள்ளவேண்டாம் உங்களுடைய போராட்ட இடத்திலிருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து ஒருமணி நேரம் மேற்கொண்ட வீதி மறிப்பு போராட்டத்தினை கைவிட்டு தமது போராட்ட இடத்தில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பூரண ஹர்த்தால் : வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் : மக்களின் இயல்புநிலை முடங்கியது!!

 
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடகிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளன. தனியார் மற்றும் இ.போ.சபை பேருந்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை. இருப்பினும் தூர இடங்களுக்கான போக்குவரத்தினை இ.போ.சபை பேரூந்துக்கள் மேற்கொள்கின்றன.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையால் வவுனியா நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. மக்களின் இயல்பு நிலை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன் வீதிகளில் பொலிசார் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்படுகின்றது.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பல தரப்பினரிடமிருந்தும் பூரண ஆதரவு வவுனியாவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் : பொலிசார் குவிப்பு!!

 
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இன்று(27.04.2017) பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பொது அமைப்புக்களின் ஆதரவுடன் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் கடைகள் அடைக்கப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்தும் இடம்பெறாதநிலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது.

இந்நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் காணாமல் போனோரின் உறவினர்கள் தபால் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்னாலும் A9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

இன் நிலையில் வவுனியாவில் பெருமளவிலான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை கைதுசெய்யமுடியும் என எச்சரித்துள்ளனர்.

வவுனியா வேப்பங்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (26.04.2017) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நெளுக்குளத்திலிருந்து வவுனியா நோக்கி பயணத்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் ( எல் போட் பொருத்திய) முச்சக்கரவண்டியினை முந்திச் செல்ல முற்ப்ட்டது. இதன்போது மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியும் மோட்டார் சைக்கிலில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

நாளை வட பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!!

வட மாகாணத்தில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி நாளை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வட மாகாணத்திற்கான பேரூந்து சேவைகள் இடம்பெறாது என வடக்கு மாகாண இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ரி.இராஜேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அரசு வெளிப்படுத்தக்கோரியும் நாளைய தினம் வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுவதை தவிர்க்கவுள்ளனர்.

எனவே வட மாகாணத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதுடன், தென் பகுதியில் இருந்து வரும் பேரூந்துகளும் வவுனியாவுடன் மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பயணிகளுக்கு இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்காக வருந்துவதுடன் எமது மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளமையை கருத்தில் கொண்டு இந் நடைமுறையை கைக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!!

 
வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் நேற்று தமிழ், சிங்கள புதுவருட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரவு நிகழ்விற்கு வருகை தந்த ஒருவருடைய முச்சக்கர வண்டியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது.

இவ்வாறு காணாமல் போயிருந்த முச்சக்கர வண்டி மன்னார் வீதியில் பம்பைமடு பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் சாதனை படைத்த 15 வயது இலங்கை மாணவன்!!

இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றிய இலங்கை மாணவர் ஒருவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனி Stuttgart பகுதியில் இடம்பெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டிலேயே குறித்த மாணவனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

நலந்தியன் ரகிந்து விக்ரமரத்ன (Nalandian Rakindhu Wickremeratne) என்ற 15 வயது மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த 300இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஆஸ்துமா நோய்க்கு தீர்வு ஒன்றை குறித்த மாணவர் மாநாட்டில் முன்வைத்துள்ளார். இந்த நிலையிலேயே குறித்த மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானிகளின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றிய ரகிந்து, இலங்கையில் தேசிய இளம் விஞ்ஞானிகள் சங்கத்தின் 2016/2017 ஆண்டிற்கான சிறந்த இளம் விஞ்ஞானி விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.