60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா!!

 
திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார்.

திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார்.

மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு தலாய்லாமா நரேன் சந்திரதாஸை சந்தித்துள்ளார்.

திபெத்தியர்களை மீட்பதற்காக பணிபுரிந்த அசாம் ரைப்வல்ஸ் இராணுவப்படையின், ஓய்பு பெற்ற உறுப்பினரான தாஸ் உள்ளிட்ட இந்தியாவிற்குள் தன்னை பாதுகாப்பாக அழைத்து வந்த குழுவின் ஒரு பகுதியை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு அனைவர்க்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனாவை, தலாய் லாமாவின் வருகை கோவப்படுத்தியுள்ளதோடு, எல்லை பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் வகையில் இந்தியா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாமெனவும், தலாய்லாமா உள்ளிட்ட குழுவைச் சேர்ந்த பிரிவினைவாத ஆர்வலர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என, சீன வெளியுறவுதுறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் எச்சரித்திருந்த நிலையில், குறித்த பிரதேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் தலாய்லாமா பங்குபற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷால் பெரேராவின் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!!

குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான 77 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கட்டுகளால் வங்கதேசத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு -20 போட்டி மழை காரணமாக தடைப்பட்டு 42 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமாகியது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர் ஆகியன சமநிலையில் முடிவடைந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் மழை குறுக்கிட்டது. இந்நிலையில் மழையால் தடைப்பட்ட போட்டி 42 நிமிடங்கள் கழித்து தாமதமாக ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பித்த முதல் ஓவரிலேயே பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை இலங்கை அணியின் லசித் மாலிங்க வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தை எதிர்த்தாடிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் ஆட்டமெதனையும் பெறாது போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதே ஓவரின் 6 ஆவது பந்தில் சௌமிய சர்க்கர் கொடுத்த பிடியை லசித் மாலிங்க தவறவிட்டார். இந்நிலையில் பங்களாதேஷ் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 50 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் சீரான ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட, இறுதியில் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக மொஸ்டாக் ஹுசைன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மொட்டர்ஷா 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பிச்சை எடுக்கக் கூடாது என்ற நோக்கத்திற்காக பூமாலை விற்கும் மூதாட்டி!!

 
கண்டி வீதியில் (A9) மூன்றுமுறிப்பு பிள்ளையார் கோயிலடியில் பெரியண்ணன் ரத்தினம் என்ற 71 வயதையுடைய மூதாட்டி தினமும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மாலைகள் விற்று முடியுமட்டும் பை நிறைய பூ மாலைகளுடன் அமைதியாய் உட்காந்திருப்பார்.

தினமும் அதிகாலை எழுந்து பூக்களைப் பறித்து ஏழு, எட்டு மாலைகளுடன் 15 ரூபா பணம் கொடுத்து பேருந்தில் ஏறி மூன்றுமுறிப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து பிள்ளையாரை வணங்கி விட்டு தான் கொண்டு வந்த மாலைகளுடன் பிள்ளையார் வாயிலில் மாலையுடன் அமர்ந்திருப்பார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்..

ஒரு மாலையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்வேன். ஆனால் சிலர் இரண்டு மூன்று மாலைகளை வாங்கி பணத்தினையும் தருவார்கள். எல்லா மாலையையும் விற்றால் மட்டுமே எனக்கு 30 0ரூபா அல்லது 350 ரூபா பணம் கிடைக்கும். சில நேரம் மாலைகள் விற்பனை செய்யபடாமல் இருக்கும் பின் அந்த மாலைகளை நான் பிள்ளையாருக்கு போட்டு விட்டு நடந்தே செல்வேன்.

எனது கணவர் இறந்து விட்டார். நான் எனது மகளுடனே வாழ்ந்து வருகின்றேன். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகின்றோம். நான் உழைத்து கொண்டு வரும் பணத்தினையே வாடகை வீட்டுக்காக சேர்த்து மாதம் 10,000 ரூபா கொடுக்கின்றோம். வீட்டில் இருந்து வரும் போது சமையல் செய்து சாப்பாடுடன் தான் வருவேன். ஆனால் பசிக்காது கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடாமல் திரும்ப வீட்டுக்கே கொண்டு செல்வேன். எனவும் கவலைபட கூறினார்.

இந்த வயதிலும் பிச்சை எடுக்காது உழைத்து வாழ நினைக்கும் இவரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

வவுனியாவில் தமது காணியை தம்மிடம் வழங்கக்கோரி நஞ்சுப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தாய்!!

 
தமது காணியை ஒப்படைக்குமாறு கோரி இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் இணைந்து விசப் போத்தலுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நேற்று (04.04.2017) மாலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வவுனியா, தோணிக்கல், சேக்கிழார் வீதியில் கடந்த 1978 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து வசித்து வந்த குடும்பம் ஒன்று நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991ம் ஆண்டு இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்தது. அதன்பின் அவர்களது காணியில் உள்ள வீட்டில் ஒரு குடும்பம் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்கியிருந்தது.

அவர்களால் குறித்த காணியில் பிறிதொரு வீடும் கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குடும்பம் கிளிநொச்சியில் வசித்து வரும் நிலையில் தமது உறவினர் எனக் கூறி ஒரு குடும்பத்தை குறித்த காணியில் குடியேற்றியுள்ளார்.

இந்நிலையில் இடம்பெயர்ந்து இந்தியா சென்ற காணி உரிமையாளரும் அவரது மகனும் கடந்த 23ம் திகதி வவுனியாவிற்கு வந்த நிலையில் தமது காணிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த காணியில் வசிப்பவர்கள் அது தமது காணி எனவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அவர்களது காணியையும், அவர்களது வீட்டையும் கொடுக்க மறுத்து வருகின்றனர்.

ஆனால் இந்தியாவில் இருந்து வந்தவரிடம் அவரது காணி தான் என்பதற்கான ஆதாரங்கள் 1976ம் ஆண்டு முதல் உள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம் என சென்று தமக்கான நீதி கிடைக்கவில்லையென தெரிவித்து தமது காணி வேண்டும் அல்லது இவ்விடத்திலேயே நஞ்சருந்தி சாவேன் எனத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர் தமது காணி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

சுமார் ஒரு மணிநேரம் வரை இந்த போராட்டம் இடம்பெற்றது. இதன்போது அக்காணிக்கு அயலில் உள்ள மக்களும் அவ்விடத்திற்கு வந்து தாம் இங்கு இருந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களே இருந்ததாகவும், அது அவர்களது காணி எனவும் தெரிவித்ததுடன் அருகில் உள்ள காணி உரிமையாளர்களின் காணி ஆவணங்களிலும் குறித்த காணி இந்தியாவில் இருந்து வந்தவர்களது காணியே எனவும் எல்லையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து நஞ்சு மருந்துப் போத்தலைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் இன்றைய தினம் வவுனியா பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோருடன் பேசி தீர்வைத் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை இடைநிறுத்திய அவர்கள் அயலில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளனர்.

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது!!

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்று (04.04.2017) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்த்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி அன்று இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இது தொடர்பில் கைது செய்துள்ளனர்.

வவுனியா தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு உதவி பொறுப்பதிகாரி ஜெய ஸ்ரீ பெனாண்டோ, பொலிஸ் பரிசோதகர் இரத்தின திலக்க மற்றும் பம்பரதேனியா, ஜேசுதாஸ், ஜயத்திலக்க, கருணாதிலக்க, ஜீவானந்தம், வீரசேன, சமந்த ஆகிய பொலிஸ் குழுவே குறித்த விசாரணையினை மேற்கொண்டு சந்தேக நபரான இளம் பெண்ணை கைது செய்துள்ளது.

குறித்த பெண்ணை இன்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிகள்!!

 
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நொச்சிக்குளம் இல 01 கனிஷ்ட உயர்தர வித்தியலாயத்தில் இன்று (04.04.2017) மாலை 2 மணியளவில் பாடசாலை அதிபர் கு.ஜெயக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பின் கோடீஸ்வரன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வடக்கு கல்வி வலயப்பணிப்பாளர் வி.ஸ்ரீரங்கநாதன், வடக்கு கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாதேவி உமாதேவன், ஆசிரிய ஆலோசகர்கள், கிராமசேவையாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி. அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பல கிராமங்களை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டுக்கள், முட்டி உடைத்தல், சறுக்குமரம் ஏறுதல், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், கிராமிய நடனம், சிறுவர்களின் பலூன் உடைத்தல். கிளித்தட்டு பெண்கள், ஆண்கள், யானைக்கு கண்வைத்தல், தலையனைச்சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றது.

இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா மூன்று முறிப்பு தமிழ்க் கலவன் பாடசாலையில் நான்கு மாணவிகள் விசேட சித்தி!!

 
வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ராமராஜ் யாழினி என்ற மாணவி 8AC சித்திகளைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் ஆப்பாடசாலையை சேர்ந்த விஜியபாஸ்கரன் தனுசியா 6ஏ பி சி எஸ், பாலசுப்பிரமணியம் யதுஸ்யா 6ஏ,2பி, கனகலிங்கம் அனுசியா 5ஏ,4பி, செல்வதாஸ் சனிசியா, 3ஏ,3சி,2எஸ் ஆகிய மாணவர்கள் சிறந்த பெறு பேறுகளை பெற்று பாடசாலைக்க பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் இப்பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 25 மாணவர்கள் தோற்றி 15 மாணவர்கள் கணித பாடத்துடன் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

2016 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் அதிக சித்திகளை பெற்ற மாணவி ராமராஜ் யாழினி கருத்து தெரிவிக்கையில், எனது கல்வி வளர்ச்சிக்கு உறுதுiணாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வரவேண்டுமென்பதே எனது இலட்சியம் என தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் க.பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், எமது பாடசாலையில் 2016 ஆம் ஆண்டு அதிக சித்திகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதற்காக விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டதுடன் பெற்றோர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தியிருந்தேன் எனது முயற்சிக்கு வலயக்கல்வி பனிமனையும் உறுதுணை வழங்கியது கடந்த ஆண்டை விட 2016 இல் அதிக மாணவர்கள் சித்திகளை பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி!!

 
வவுனியா பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் நோக்கில் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று (04.04.2017) காலை 9.30 மணியளவில் ஒரு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008.06.30ம் திகதி இரானுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு இரு சகோதரர்கள் இவரின் ஒரு சகோதரர் முன்னால் விடுதலைப்புலி உறுப்பினராவர். இவர் கடந்த யுத்தகாலத்தில் மரணமடைந்துள்ளார். இவரின் மற்றைய சகோதரனும் இறுதி யுத்தத்தில் செல் வீச்சு காரணமாக மரணமடைந்துள்ளார். இவரின் தந்தையும் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் தாயுடன் வாழ்ந்து வருகின்றார்.

இவரின் வாழ்வதாரத்தினை மேற்படுத்து நோக்குடனே கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகளின் (Truck Drivers) ஒழுங்கமைப்பில் மொன்றியில் துர்க்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபகாரர்களினால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 40 ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 40 ஆவது நாளாகவும் இன்று (04.04.2017) தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலையின்மையால் பட்டதாரி பெண் தற்கொலை : வடமாகாண பட்டதாரிகள் அஞ்சலி!!

 
தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரிக் காலவரையற்ற போராட்டம் மேற்கொண்டு வரும் வேலையற்ற பட்டதாரிகள் அவரது உருவப்படத்தை வைத்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

அத்துடன் அவரது நினைவாக அஞ்சலிப் பதாதைகள் தொங்கவிட்டு 36ஆவது நாள் போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுத்தனர்.

இதன்போது கலந்து கொண்ட பட்டதாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் திருகோணமலையைச் சேர்ந்த எங்கள் சகோதரியொருவர் அகால மரணமடைந்ததையொட்டி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளோம். அவரது நினைவாக உணர்வு பூர்வ அஞ்சலி நிகழ்வை நடாத்தியுள்ளோம்.

ஒவ்வொரு பட்டதாரிகளும் தங்கள் கனவுகளைச் சுமந்த வண்ணம் எங்களுக்கு இனியாவது ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை . இதனால் தான் ஒரு சகோதரியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

அவர் அரசாங்க வேலைவாய்ப்பில்லாத காரணத்தால் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உட்பட்ட நிலையில் இருந்துள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். இவ்வாறான முடிவுகளை ஏனைய பட்டதாரி மாணவர்களும் எடுக்காதிருப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி!!

அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ யாய – 5 பிரசேதத்தில் இடி மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் 32 வயதான கர்ப்பிணி பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 34 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பெண் முதலில் கலேன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் விஷ வாயு தாக்குதல் : குழந்தைகள் உட்பட 58 பேர் பலி!!

சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் கலவரக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த கான் ஷேக்குதீன் பகுதியில் விமானங்கள் மூலம் விஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 58 பேர் பலியாகியுள்ளனர். பலரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ வாயு (இரசாயன) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையை சிரியாவில் மனித உரிமை மீறல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இத்தாக்குதலுக்கு எந்த மாதிரியான நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.

தாக்குதலில் பலியான 58 பேரில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்களே. இவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.

இதற்கிடையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாக்குதலின் வீரியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

உலகின் அழகான பெண்கள் யார் தெரியுமா?

உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் அழகான பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 30 பேர் கொண்ட பட்டியலில் பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

பிரபல பாப் பாடகி பியோன்ஸ் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். பொலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள பிரியங்கா, ஹாலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உலகின் அழகான பெண்களின் பட்டியலில் வந்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜீலி, எம்மா வாட்சன் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி பிரியங்கா இரண்டாம் இடித்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு,

1. பியோன்ஸ்
2. பிரியங்கா சோப்ரா
3. டெய்லர் ஹில்
4. எம்மா வாட்சன்
5. டகோடா ஜான்சன்
6. ஹிலாரி கிளிண்டன்
7. மார்கோட் ராஃபி
8. அஞ்சலினா ஜுலி
9. பஃரியே எவ்சன்
10. அலெக்சாண்ட்ரா டடாரியோ

உலகிலிருந்து நிலவுக்கு மின்தூக்கி கண்டுபிடித்த தமிழன் : நாசா விருது!!(வீடியோ)

உலகத்தையும், நிலவையும் மின்தூக்கி (லிப்ட்) போன்ற அமைப்பின் மூலம் இணைக்கும் திட்டத்தை வௌியிட்ட தமிழ் மாணவனுக்கு நாசா பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

நாசா ஆராய்ச்சி நிறுவனம் மனிதர்கள் நிலவில் வாழத் தகுதியான சாத்தியக் கூறுகளை எப்படி அமைப்பது என்ற தலைப்பில் உலகளவில் உள்ள மாணவர்களுக்கு போட்டி வைத்தது. இதில் சாய் கிரண் என்னும் 12 ஆம் வகுப்பு மாணவர் கலந்து கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் சாய் கிரணுக்கு பூர்வீகம் தமிழகத்தின் சென்னை தான். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்தே சாய் Connecting Moon, Earth and Space மற்றும் HUMEIU Space Habitats என்னும் பெயரில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இதன் முக்கிய அம்சமே பூமியையும், நிலவையும் லிப்ட் போன்ற அமைப்பின் மூலம் இணைப்பது தான்

இந்த ஐடியாவை அவர் நாசாவிடம் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயலை பார்த்து வியந்த நாசா அவருக்கு இந்த போட்டியில் இரண்டாம் பரிசு வழங்கியுள்ளது.

இதன் முதல்கட்டமாக நிலவுக்கும், பூமிக்கும் இடையே மனித போக்குவரத்துக்கு பாதை அமைக்க வேண்டும் என கிரண் தெரிவிக்கிறார்.

ஆனாலும், இந்த விடயம் பொருளாதார ரீதியாக தற்போது சாத்தியமில்லை.

சென்ற மாதத்திலிருந்து சென்னையில் குடியேறி இந்த ஆராய்ச்சியை சாய் கிரண் தற்போது தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தெற்காசியாவில் முதன் முதலாக இலங்கையில் 5G வசதி!!

தெற்காசியாவில் முதன் முதலாக 5G இணைய வசதிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சானது புதிய நிறுவனம் ஒன்றுடன் 5G இணைய கேந்திரத்தினை அறிமுகப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

மேலும், இலங்கையில் டிஜிட்டல் மற்றும் அறிவு சார்ந்த சமுதாயத்தினை உருவாக்கும் முகமாகவும் போதியளவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் வழிகாட்டியாகவும் இந்த சேவை அமையப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இந்த சேவையை மக்களுக்கு வழங்குவதானது, வீட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை வளர்க்கவும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனைக் கொலைசெய்த மனைவி : ஒரு மாதத்திற்கு பின்னர் வெளியான உண்மை!!

திஸ்ஸமஹாராம – யோதகண்டிய பகுதியில் மனைவியொருவர் கணவனை கொலை செய்து புதைத்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண்ணொருவர் தனது கணவரை (35) காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில் காணமல் போனதாக கூறப்படும் குறித்த பெண்ணின் கணவரது சடலம் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெண்ணின் வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்தததை பொலிஸார் கண்டுபிடித்து, மீட்டுள்ளனர்.

இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண் கணவரை முள்ளுத் தடி ஒன்றினால் தாக்கி கொலைசெய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த பெண் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பெண்ணை இன்று திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.