இந்திய கிராமமொன்றில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஆரம்பப் பாடசாலையொன்று இயங்குகிறது. 90 வயதானோரும் இப்பாடசாலையில் அனுமதிக்கப்படுவர்.
ஒரே நிறத்திலான சேலையை சீருடையாக அணிந்துகொண்டு, முதுகில் புத்தகப் பையை சுமந்தவாறு இப் பெண்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். வாசிக்கவும் எழுதவும் கணக்குக்கூட்டவும் பழகுவதுடன், சிறார்கள் போன்று நேர்சரி பாடல்களையும் இவர்கள் உற்சாகமாகப் பாடுகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் “தானே” மாவட்டத்திலுள்ள பன்கனே எனும் கிராமத்தில் வயோதிப் பெண்களுக்கான இந்த ஆரம்பப் பாடசாலை உள்ளது. “அஜி பாய்ன்ச்சி ஷாலா” என இப் பாடசாலைக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
யோகேந்திர பான்கர் என்பவர் கடந்த வருடம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இப்பாடசாலையை ஆரம்பித்தார். 45 வயதான யோகேந்திர பான்கர், பங்கனே ஸீலா பிரசாத் ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர் ஆவார். தனது வீட்டிலிருந்து தினமும் 75 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்து, அஜி பாய்ன்ச்சி ஷாலா பாடசாலைக்குச் செல்கிறார் இவர்.
“மோட்ரியம் சரிட்டபிள் ட்ரஸ்ட்” எனும் தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து இப் பாடசாலையை யோகேந்திர பான்கர் ஆரம்பித்தார். இந் நிறுவனம் இப் பாடசாலை மாணவிகளான பெண்களுக்கு மென்சிவப்பு வர்ண சேலை சீருடை, பாடசாலைப் பை, ஸ்லேற், சோக், மற்றும் கரும்பலகை ஆகியவற்றை வழங்கியுள்ளது.
30 பெண்கள் இப் பாடசாலையில் கல்வி கற்கின்றனர். சிறார்களுக்கான பாலர் பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்படும் ஏறத்தாழ அனைத்து நடைமுறைகளும் இப் பாடசாலையிலும் பின்பற்றப்படுகின்றனவாம்.
மராத்திய மொழி அரிச்சுவடி, ஆரம்பக் கணிதம், பாலர் பாடல்கள் முதலானவை இப் பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன. 60 வயதான மாணவி காந்தா என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், இப் பாடசாலையில் சேர்வதற்கு ஆரம்பத்தில் தான் மிகவும் தயங்கியதாகவும் ஆனால், தனது வயதையொத்த மற்றொருவர் இப் பாடசாலைக்கு செல்வதைக் கண்டு தானும் இணைந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது என்னால் எனது தாய் மொழியில் எழுதவும் வாசிக்கவும் முடிகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துகொண்டுள்ளேன். எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. வங்கி ஆவணங்களில் நான் முன்னர் கைவிரல் அடையாளத்தையே இடுவேன். இப்போது என்னால் கையெழுத்திட முடியும்.
மற்றவர்களின் உதவி எனக்குத் தேவையில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப் பாடசாலையிலேயே மிகவும் வயதான மாணவியாக 87 வயதான ரமாபாய். தனக்கு முறையாக காது கேட்காத போதிலும், ஆரம்பக் கல்வி கற்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்.
சிறு வயதில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது என்னால் வாசிக்கவும் எழுதவும் முடிகிறது” என்கிறார் ரமாபாய் பாட்டி.
இந்த முதியோர் கல்வித் திட்டத்தின் மூலம், மேற்படி கிராம மக்களின் எழுத்தறிவு ஏறத்தாழ 100 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக யோகேந்திரா பான்கர் தெரிவித்துள்ளார்.
அது மாத்திமல்லாமல், இக் கல்வித்திட்டத்தின் காரணமாக, இக்கிராமத்தின் சுகாதார துறையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. திறந்த வெளியில் மலம்கழிக்கும் வழக்கம் இப்போது அங்கு இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிவறை உள்ளது” எனவும் அவர் கூறுகிறார். கல்விக்கு வயது தடையில்லை என்பதை பன்கனே கிராம பாட்டிமார்கள் உணர்த்தியுள்ளனர்.



































































