உயர்தரப்பரீட்சை விண்ணப்பங்கள் 15 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது!!

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் நடவடிக்கைகள் இம்மாதம் 15ம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 15 ஆம் திகதிக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. அத்தோடு இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை : இறுதி ஒருநாள் போட்டி இன்று!!

தென்னாப்பிரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

இதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரையும் தென்னாபிரிக்கா கைப்பற்றி உள்ளது. அந்த அணி இதுவரை நடந்த 4 போட்டியிலும் வென்று 4-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை ரசிகர்கள் உள்ளனர்.

பெண்கள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க நடவடிக்கை!!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பெண்கள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் சில்மிஷங்களைத் தடுப்பது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த மாதம் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கை பொலிஸார், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து மக்களுக்கு இது குறித்து தௌிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!!

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து ஹட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியை சேர்ந்த ராஜரட்ணம் 55 வயது மதிக்கதக்கவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து டிக்கோயா பகுதியில் இடம்பெறவிருந்த திருவிழாவை கண்டுகளிக்க வந்து டிக்கோயா வனராஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்லும் வேளையில் டிக்கோயா தொழிற்சாலை கொங்கிறீட் பாதையில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 ஆண்கள் ஒரு சிறுவன், ஒரு பெண் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உயிரிழந்தவரின் சடலம் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் பாக்கியலெட்சுமி

                                                              மரண அறிவித்தல் அமரர்  மாணிக்கம் பாக்கியலெட்சுமி 

அமரர்  மாணிக்கம் பாக்கியலெட்சுமி 

யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட மாணிக்கம் பாக்கியலெட்சுமி அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை வவுனியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புமனைவியும்  காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளாரும் காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி மகேஸ்வரி செளபாக்கியவதி மற்றும் கணேசன் (முன்னாள் நீர்பாசன பொறியலாளர் ) (கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஆனப்பந்தி) சுப்பிரமணியம் ( CTB) மற்றும். கமலவேணி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துணியும் காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் விஜயராணி ( லண்டன்) ஶ்ரீபதிநாதன் (உரிமையாளர் அசோகன் அரிசி ஆலை வவுனியா ) ஜெயராணி (கனடா) விமலநாதன் ( கனடா)சுவேந்திர்ராணி (கனடா) காலஞ்சென்ற கோணேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன் (கனடா) ஞானேஸ்வரன் ( கனடா) மஞ்சுளாதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் பிரபாலினி தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரிகைகள் 10-02-2017 வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு தகனகிரிகைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள் .

தகவல்

சு.ஶ்ரீபதீநாதன்
( பெறாமகன் )
(அசோகன் அரிசி ஆலை )
வவுனியா.

தொடர்புகளுக்கு  0094242220417 /0774341905

வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்!!

 
வவுனியாவின் முதலாவது விநாயகர் ஆலயமான பிரசித்தி பெற்ற குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(09.02.2017) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கந்தசாமி குருக்களின் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேகத்தில் அடியார்கள் பலர் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

8 ஆம் திகதி எண்ணைக்காப்பு இடம்பெற்று இன்று காலை விசேட வழிபாடுகள் அபிசேகங்கள் இடம்பெற்று 9 மணிக்கு மகா கும்பாபிசேகம் இடம்பெற்றிருந்தது.

வவுனியாவில் இரும்புக் கம்பியிலான மின்கம்பத்தினால் ஆபத்தை எதிர்கொள்ளும் மக்கள்!!

 
வவுனியா இறம்பைக்குளம் வீதியிலுள்ள மின்சார கம்பங்கள் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதுடன் அப்பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

வவுனியா இறம்பைக்குளம் வீதியில் காணப்படும் இரும்புக் கம்பியிலான ஐந்து மின்கம்பங்களில் இருந்தே அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மின்கம்பங்களில் மழை காலங்களில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக விலங்கினங்கள் சில இறந்துள்ளதாகவும், இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் 30 வருடத்திற்கும் மேலாக குறித்த மின் கம்பங்கள் மக்கள் குடியிருப்பு பகுதியில் காணப்படுகின்றமையினால் எவ்வேளைகளிலும் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேரடி ஒளிபரப்பில் பன்றிக்கு பாலூட்டிய பெண் : அதிர்ச்சியடைந்த தொகுப்பாளர்!!

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதில் குறிப்பாக விலங்குகள் பண்ணை வைத்து நடத்தியவர்களின் விலங்குகள் பாதிக்கப்பட்டதால் அவர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள Lima என்ற நகரில் பண்ணை வைத்து நடத்தி வரும் பெண்மணியிடம், வெள்ளப்பெருக்கின் காரணமாக அவரது பண்ணைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அமெரிக்காவை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று பேட்டி எடுத்துள்ளது.

நேடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பண்ணையின் உரிமையாளரான அந்த பெண்மணி தனது பண்ணைக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பேசிக்கொண்டிருக்கையில், தனது கையில் வைத்திருந்த பன்றி குட்டிக்கு தனது ஆடையை விலக்கிவிட்டு பாலூட்டியுள்ளார்.

இவரின் இச்செயலால் நிலைகுலைந்த கமெராமேன், தனது கமெராவை வேறுபக்கம் திசைதிருப்பியுள்ளார், மேலும் தொகுப்பாளரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு ஒருவரிடம் பேட்டி எடுக்க சென்றுவிட்டார்.

வவுனியாவில் மேலும் ஒரு மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது!!

 
வவுனியா சந்தைசுற்றுவட்ட வீதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் ஒன்று இன்று (09.02.2017) பிற்பகல் 12.30 மணியளவில் மூடப்பட்டுள்ளது.

வவுனியாவில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த குறித்த மசாஜ் நிலையத்திற்கு இன்று திடீரென்று பார்வையிடுவதற்குச் சென்ற வவுனியா நகர சபை செயலாளர் ஆர்.தயாபரன் அங்கு அடிப்படை வசதிககள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றும் மின்பிறப்பாக்கி, தீ அணைக்கும் கருவிகள் போன்ற அத்தியவசியமான தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்ததுடன் தற்காலிகமாக மூடுவதற்கும் பணித்துள்ளார்.

அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் திறக்குமாறு பணித்துள்ளார். இதையடுத்து இன்று குறித்த மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

வவுனியா தனியார் பேரூந்துகள் பணிப் புறக்கணிப்பில்!!

 
வவுனியாவில் இன்று (09.02.2017) தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முற்றுமுழுதான பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த (03.02.2017) அன்று இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்கள் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை தங்களுக்கு வழங்கக்கோரி மாகாண ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்தபோது வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக அவரது கொடும்பாவியை எரித்தமையை கண்டித்தே இந்த பணிப்பகிஸ்கரிப்பும் கண்டனப் பேரணியும் இடம்பெறுகிறது.

வட மாகாணம் தழுவிய இப் பணிப் பகிஸ்கரிப்பானது வவுனியாவிலிருந்து மற்றும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து செல்லும் தனியார்பேரூந்து உரிமையாளர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்து கண்டனப்பேரணியை ஆரம்பிக்கவுள்ளனர்.

வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள தனியார் பேரூந்து நிலையத்திலிருந்து பதாதைகள் கட்டப்பட்ட பேரூந்துகள் இன்று காலையில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு செல்வதை காணக்கூடியதாக இருந்ததுடன் தனியார் பேரூந்து நிலையமானது வெறிச்சோடிக்காணப்பட்டது.

நீண்டகால தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் விரைவுபடுத்தப்படவேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!

 
நீண்டகாலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த தொண்டர் ஆசிரியர்களின் நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (07.02.2017) நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணம் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்குள்ள மாணவர்கள் வளப்பற்றாக்குறையுடன் கல்வி கற்கும் அதேவேளை ஆசிரியர் வளம் இன்றியும் மிகவும் கஸ்ரப்பட்டே தமது கல்வியைத் தொடர்ந்தனர். இதன்போது மாணவர்களுக்கு கல்வியைப் புகட்டுவதற்காக பல இளைஞர், யுவதிகள் தொண்டர் ஆசிரியர்களாக எந்தவித கொடுப்பனவும் இன்றி பணியாற்றியிருந்தனர்.

இவர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடுத்து தாம் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பலர் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தொண்டர் ஆசிரியர் பெயர் பட்டியலில் வவுனியா வடக்கில் உள்ள சிலர் விடுபட்டுள்ளனர். அவர்களையும் உள்வாங்கி அவர்களுக்கான நியமனத்தை விரைவுபடுத்த மத்திய, மாகாண கல்வி அமைச்சுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் செ.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் வன்னிப் பாரராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலை நுழைவாயில் பாராளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் வவுனியா வடக்கு உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மாயான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை!!

 
வவுனியா இறம்பைக்குளம் பகுதியிலுள்ள மயானத்தின் பாதை சீர் இன்றி காணப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை புனரமைத்துத் தருமாறும் வீதிக்கு குறுக்கேயுள்ள கால்வாய் திறந்த நிலையில் காணப்படுவதால் அதனைக்கடந்தே செல்லவேண்டியுள்ளதால் பலசிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் வீதியும் செப்பனிடப்படாமல் குண்டும்குழியுமாக காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்க்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கவனத்தில் எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

கூகுளுடன் கைகோர்க்கும் பேஸ்புக் : காரணம் இதுதான்!!

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும், முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கும் விரைவில் இணைந்து பணியாற்றக் காத்திருக்கின்றன.

இன்னும் இரு மாதங்களில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெறவுள்ள தேர்தலின் போது போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது அதிகள அளவில் போலியான தகவல்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. இதற்கு பிரதானமாக பேஸ்புக் வலைத்தளமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதன் தாக்கத்தை உணர்ந்துகொண்ட பேஸ்புக் நிறுவனம் அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தவிர்ப்பதற்கான வசதிகளை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து CrosssCheck எனும் புதிய அடித்தளம் ஒன்றின் ஊடாக போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடிவு செய்துள்ளது. CrosssCheck ஆனது இம்மாதம் 27ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது

பயணிகள் விமானத்தை முற்றுகையிட முயன்ற பறக்கும் தட்டு? அதிர்ச்சி வீடியோ!!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றை பறக்கும் தட்டு ஒன்று அதிவேகமாக கடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றை வெள்ளை நிறம் கொண்ட மர்மப் பொருள் ஒன்று தொடர்ச்சியாக பின் தொடர்ந்துள்ளது. இதனால் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சப்பட்டது.
அதன் பின்னர் அது வேகமாக விமானத்தை கடந்து சென்றுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ எடுத்த நபர் கூறுகையில், நான் வானில் பறந்த பயணிகள் விமானத்தைப் பார்த்து அது இராணுவ வீரர்கள் விமானமாக இருக்கும் என்றும் பயிற்சிக்காக அவர்கள் மலைகளை சுற்றி வருகிறார் என்று தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்த போது அதன் பின்புறம் ஏதோ ஒன்று பின்பற்றுவது போல் இருந்தது. இதனால் அதைத் தான் சற்று அகலப்படுத்தி வீடியோ எடுத்தேன். பார்த்த போது கண்டிப்பாக அது ஜெட் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அது காண்பதற்கு UFO என்று கூறப்படும் பறக்கும் தட்டு போல் இருந்தது என்றும் அதன் பின்னர் அது விமானத்தை வேகமாக கடந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

சசிகலா குறித்து தெரியாது : பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு : நடிகர் கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!!

தமிழகத்தில் அரசமைக்க பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு சசிகலா மற்றும் முக்கிய அமைச்சர்கள் தான் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு வற்புறுத்தினர் என்று திடீரென பரபரப்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இன்று சசிகலா, பன்னீர் செல்வம் மீது குற்றம் சாட்ட, பன்னீர் செல்வம் சசிகலா மிது குற்றம் சாட்ட தமிழக அரசியலே பெரும் குழப்பத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், எனக்கும் அரசியல் சார்ந்த தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. தற்போதைய அரசியல் கீழ்த் தரமனதாக இருக்கிறது.

நான் பன்னீர் செல்வத்திற்கு நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவியாக பன்னீர்செல்வம் உள்ளார்.

தமிழக மக்களை போலவே சசிகலாவின் தகுதி குறித்து எனக்கும் தெரியாது. ஒருவர் கூட நீண்ட காலம் இருந்ததற்காக அவருக்கு அரசியலுக்கு வரும் தகுதி கிடையாது.

அரசியல்வாதிகள் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஒன்று கடவுள்கள் அல்ல. மக்களின் எண்ணங்களுடன் அவர்கள் விளையாடக்கூடாது.

குதிரை பேரத்திற்கு அனுமதிக்ககூடாது. பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று நான் எண்ணவில்லை. பன்னீர்செல்வத்தை அரசமைக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு!!

கடந்த ஒரு வாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு குடியிருப்பு மக்களுக்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு தமது ஆதரவைத் தெரிவிப்பதாக அவ்வமைப்பின் வவுனியா மாவட்டச் செயலாளர் சு.டோன் பொஸ்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்த போதிலும் குடிமக்களின் காணிகள் மீள அளிக்கப்படவில்லை. அக்காணிகளை மீட்பதற்காக பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். காணிகளை மீள வழங்குவோம். அரசியல் கைதிகளை விடுவிப்போம். பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம். காணாமல் போனோருக்கு பதில் கூருவோம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என வாக்குறுதி அளித்து தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்த போதும் மக்களின் கோரிக்கையை உதாசீனம் செய்து வருகின்றது.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றப் பின்னடிக்கின்றது. யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களது வாழ்வாதாரத்துக்கான நிலத்தை கையளிக்காதிருப்பது நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

அரசாங்கம் இம் மக்களின் கோரிக்கையை ஏற்று நிலத்தை அம்மக்களிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியாக இருப்பது தமிழ் மக்களின் எதிர்கால இருப்புக்கு ஆரோக்கியமான விடயமாக அமையாது என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே இம்மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை 10.02.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையம் முன்பாக நடாத்த தீர்மானித்துள்ளோம்.

அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், முற்போக்கு சக்திகள், தொழிற் சங்கங்கள், பொது மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளா