தனது மனைவியின் உடை குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தனது மனைவியின் புகைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்த ஷமி, `அழகான நேரங்கள்’ என வர்ணித்திருந்தார்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து வெளியிட்டனர்.
அதில், இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து, திங்கள்கிழமை கருத்து வெளியிட்டுள்ள முகமது ஷமி, “எனது குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் அழகை வெளிப்படுத்தும் வகையில் ஆடை அணிய மனைவியை அனுமதித்திருப்பது “வெட்கக்கேடானது” என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
“வெட்கக் கேடானது. ஒரு முஸ்லிமாக, உங்கள் மனையியை பர்தா அணியச் சொல்லுங்கள். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்,” என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள ஷமி, “எனது குழந்தையும், மனைவியும் என் வாழ்க்கைப் பங்காளர்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது எனக்குத் தெரியும். நாம் எவ்வளவு நல்லவர்கள் என்பதை, நாம் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷமியின் சமூக வலைத்தள பதிவுகளில் கருத்துக்களை வெளியிட்டிருப்போரை, கிரிகிக்கெட் வீரர் முகமது ஃகைப் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர். “அந்தக் கருத்துக்கள் மிக மிக வெட்கக்கேடானவை. முகமது ஷமியை முழுமையாக ஆதரிக்கிறேன். நாட்டில் எவ்வளவோ முக்கிய விடயங்கள் இருக்கின்றன,” என்று முகமது ஃகைப் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் 2.30 மணியளவில் 3 1/2 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவரைக்கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று ஞாயிற்றுக்கிமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பேரூந்தில் சிலாபம் பகுதிக்கு கேரளா கஞ்சாவினைக் கொண்டு செல்வதாக பொலிசாருக்கக் கிடைத்த தகவலலையடுத்து மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த பேரூந்தில் பொலிசார் மேற்கொண்ட சோதனையின்போது மூன்று கிலோ ஜந்நூறுகிராமிலான பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சாவினை மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட 35 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் இன்று திங்கட்கிமை காலை தெரிவித்துள்ளனர்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முதலாக பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவிடத்தில் இன்று (26.12.2016) சுனாமி பேரலையின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
நரசிங்கர் ஆலயத்தின் பரிபாலனசபையின் உறுப்பினர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற நினைவு தினத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், பிரதேச செயலாளர் கா.உதயராசா, நகரசபை செயலாளர் திரு.தயாபரன் உட்பட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
சுவிஸ்லாந்தில் காதலியை கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
23 வயதான தன் காதலியை கொடூரமான முறையில் கொலை செய்த நிலையில், சுவிட்ஸர்லாந்தில் இருந்து வெளியேறிய குறித்த சந்தேகநபர் போலி ஆவணங்களை தயார் செய்து நியூசிலாந்தில் குடியேறியுள்ளார்.
பின்னர் 2004ம் ஆண்டு அந்நாட்டு குடியுரிமையை பெற்றுக்கொண்டு, Auckland நகரில் குடியேறிய அவர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும், கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட காதலியின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மூலம் குறித்த தமிழர் தான் கொலையாளி என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 2015ம் ஆண்டு நியூசிலாந்து அரசின் அனுமதியுடன் சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு பிரதான செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த 26 வயதான மணிமாறன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரை பார்ப்பதற்காக பாரிஸ் வாகிரார்ட் மெட்ரோ புகையிரத நிலையத்தை வந்தடைந்த மணிமாறனை, இனந்தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த மணிமாறன் தனது நண்பர் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்திய மணிமாறன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்த நண்பர், மணிமாறன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான் உலக வரலாற்றில் கறுப்பு ஞாயிறு என பதியப்பட்ட 2004 டிசம்பர் 26
இலகுவில் மறந்திருக்க மாட்டோம். நத்தார் பண்டிகையை கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மறுநாளே தமது குடும்பத்தை இழந்து நின்ற மக்களின் கதை பேசும் நாள் இது.
சுனாமி எனும் இராட்சத அலைக்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து, அழுது புரண்ட நிமிடங்கள் உருண்டோடி இன்றோடு 12 வருடங்களை தொட்டு விட்டோம்.
தெற்காசிய கடலோர நாடுகளை சில மணி நேரங்களுக்கு உலுக்கி சுமார் 3 லட்சம் மனித உயிர்களை காவு கொண்டதுடன், பல லட்சம் மக்களை நொடிப் பொழுதில் இடம்பெயர வைத்து விட்டது.
சுனாமி எனும் பேரலையினால் எத்தனை கிராமங்கள் உலக வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டன. அந்த இழப்பின் வேதனைகளை தாங்கிக் கொள்ள முடியாது அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இன்று வரை மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
2004 டிசம்பர் 26 காலை 7 மணியளவில் உருவெடுத்த அலையானது பேரலையாக பொங்கி எழுந்து லட்சம் உயிர்களை காவு கொண்டு விட்டது.
சுமாத்திரா தீவுப்பகுதியில் தகட்டோடு விலகியதன் காரணமாகவே சுனாமி பேரலை உருவெடுத்தது என்று விஞ்ஞானிகள் பல விதமான ஆதாரங்களை முன்வைத்தார்கள்.
ஆனாலும் என்ன பயன்? கடந்த நாட்கள் மீண்டும் வரவா போகின்றது. இவற்றிலும் துரதிஷ்ட்டம் என்னவென்றால் இலங்கையை பொருத்த மட்டில் ஆழிப்பேரலை தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்ததன் பின்னரே பலருக்கும் தெரிய வந்தது இதுதான் சுனாமி என்று.
அன்றைய தினம் இலங்கை மட்டுமல்ல இந்தியா, இந்தோனேசியா, அந்தமான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்தது.
சுனாமி எனும் பேரலையின் கோரத்தாண்டவம் முடிவடைந்து இன்றோடு 12 வருடங்கள் நிவர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் அன்றைய தினம் அழுத மக்கள் ஒரு புறம்.
இன்றுவரை தினம் தினம் கண்ணீர் வீடும் மக்கள் ஒருபுறம் என சுனாமியின் தாக்கம் இன்று வரை இடைவிடாது தொடர்கின்றது.
எதிர்பாராத சோகத்தினால் இழந்த எமது சொந்தங்களையும், அவர்களின் நினைவுகளையும் மீட்டுப்பார்க்கும் நாள் இது, கண்ணீருடன் நினைவு கூறுவோம். அதேநேரம் இறைவனையும் பிரார்த்திப்போம் வரலாற்றில் இதேபோல் இன்னுமோர் சுனாமி வரக்கூடாது என்பதற்காக.
மீன், தேங்காய் மற்றும் அரசி ஆகியனவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
மீன் வகைகளின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தினால், மீன்களன் விலைகள் உயர்வடைந்துள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய வகை மீன்கள் கிலோ ஒன்று 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேங்காயின் விலையும் உயர்வடைந்துள்ளது.தேங்காயின் விலை 60 மற்றும் 65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அரசியின் விலையும் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அரிசி விலையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை ஹூங்கம கடற்கரையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 24 மணி நேரத்திற்குள் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
61 வயதான நெதர்லாந்து பெண்ணே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெளிநாட்டு பெண் பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119 தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து, ஹூங்கம பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் அடிக்கடி கடற்கரையில் உலாவும் நபர் என தெரியவந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வவுனியாவில் விறகு எடுக்கச் சென்ற இரு பெண்கள் மீது கரடி தாக்கியத்தில் இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சனிக்கிழமை (24.12.2016) மாலை 5.30 மணியளவில் மடுக்கந்தை, அட்டமஸ்கட பகுதியில் இரு பெண்கள் விறகு வெட்டுவதற்குச் காட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கு பதுங்கியிருந்த கரடி குணரத்தின சீலாவதி 56 வயது, சிறியலதா 53வயது ஆகிய இரு சகோதரர்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இரு பெண்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
அடுத்த வருடத்தின் தொடக்கப்பகுதியில் கூகுள் நிறுவனம் புதிய தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அன்ரொய்ட் கடிகாரங்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
கூகுள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு தொழிநுட்ப சாதன அறிமுகத்தை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே தற்போது நடைமுறையில் உள்ள அன்ரொய்ட் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் அன்ரொய்ட் ஒஎஸ் எனும் மென் பொருள் மூலம் குறித்த கடிகாரத்திற்கான தொழிநுட்ப செயற்பாடுகளை இயக்கியுள்ளது.
இருப்பினும் குறித்த கடிகாரத்தை கூகுள் நிறுவனம் தயாரிக்கவில்லையாம். பதிலாக மூன்றாம் நிலை நிறுவனம் தயாரிக்குமெனவும், குறித்த கடிகாரத்திற்கு கூகுள் மென் பொருள் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு தொடு திரை வசதிகளுடன் சில செயலிகளை தயாரிக்கவும் உதவுகிறதாக கூகுளிற்கான அன்ராய்ட் உற்ப்த்திகளுக்கான முகாமையாளர் செப் ஜாங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கிடையில் குறித்த கடிகாரத்தை சந்தைக்கு கொண்டு வருவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. குறித்த கடிகாரமானது 2.0 அன்ரொய்ட் செயலிகளை கொண்டுள்ள தோடு குரல் கட்டுபாட்டிற்குட்பட்டதாகவும், அன்ரொய்ட் போன்கள் மற்றும் அப்பிள் தொலைபேசிகளில் சில செயற்பாடுகளுக்கு கட்டுப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுளின் உற்பத்திகளான அன்ரொய்ட் தொலைபேசிகள், கூகுள் பிக்ஸல் என்பன பாவனையில் வெற்றி கண்டுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தின் உத்தரவாத்தில் வரும் கூகுல் அன்ராய்ட் கை கடிகாரம் இற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகின்றது.
தமிழகத்தில் அம்மா திமுக என்ற புதிய அரசியல் கட்சி நேற்று முன்தினம் சனிக்கிழமை உதயமாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத். இவர் அம்மா திமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட சகோதரரான ஈ.வி.கே.சம்பத், திமுகவின் ஆரம்பகாலத்தில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சம்பத்தின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி சுலோச்சனா சம்பத்துக்கு எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டங்களில் சுலோச்சனா சம்பத்துக்கு வாரியத் தலைவர், மகளிர் அணித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் பொறுப்புகளையும் தந்து சிறப்பித்தித்தார் ஜெயலலிதா.
கடந்த 2015 ஜூலை 5ம் திகதி சுலோச்சனா சம்பத் காலமானார். சுலோச்சனா சம்பத்தின் மகன்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இனியன் சம்பத், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய இனியன் சம்பத், 1989-இல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின் மாநில செயலாளராகவும் பதவி வகித்தார்.
பின்னர் அதிலிருந்தும் விலகி 2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். ஓராண்டுக்கு முன்பு தனது கட்சியை பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து கொண்டு பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
பின் இனியன் சம்பத், அங்கிருந்து விலகி கடந்த ஜூன் மாதம் 28-ஆம் திகதி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இவருக்கு மிக முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற யூகம் நிலவி வந்த வேளையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் திகதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தோழியான சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக சசிகலாவை ஆதரித்து பல இடங்களில் போஸ்டர்களும் தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சசிகலாவை எதிர்ப்பவர்கள் அந்த போஸ்டர்களை கிழித்து எறிவதும், அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்தும் போஸ்டர்கள், தட்டிகள் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சென்னையில் அதிமுக கொடியில் அண்ணா படத்துடன் ஜெயலலிதா, தீபா படத்தை இணைத்து கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபாவை அதிமுகவிற்கு தலைமையேற்க அழைப்பு விடுத்து ஜெ. தீபா பேரவையும் தொடங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது சாவில் நாளுக்கு நாள் பல சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் மவுனமாயிருப்பதை பார்த்து அடிமட்டத் தொண்டர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் பலரும் அதிமுகவில் இருந்து வெளியேறலாம் என்றும், அதிமுக கட்சி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்று எதிர்க்கட்சிகள் காத்துக்கிடக்கின்றன. மேலும், அதிமுகவில் முக்கிய பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவை மையப்படுத்தி அவரது அடைமொழியான அம்மா என்பதை முன்வைத்து ‘அம்மா திமுக’ என்ற புதிய கட்சியை தந்தை பெரியாரின் 43-வது நினைவு தினமான நேற்று சனிக்கிழமை தொடங்கி உள்ளதாக இனியன் சம்பத் தெரிவித்துள்ளார்.
‘தமிழக அரசியல் கட்சிகளில் எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டில் இம்மியளவும் மாறாமல் உறுதியாக இருந்து அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தார். அந்த திசை வழியில் செல்வதற்காக தொண்டர்களை ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என இனியன் சம்பத் கூறினார்.
இக்கட்சியின் இதர பொறுப்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்கான பெயர்ப் பலகையை, தனது வீட்டிலேயே நிறுவியுள்ள இனியன் சம்பத், இதற்கான ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
“அம்மா திமுக” என்ற பெயரை சுருக்கமாக எழுதும்போது, அதிமுக என்றே எழுத முடியும் என்பதால், இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எது எப்பாடியோ ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டாம்தான்.
வவுனியா நகரின் மத்தியில் காணப்படும் கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக குளத்துடன் இணைக்கும் செயற்திட்டம் ஒன்று யுனொப்ஸ் நிறுவனத்தின் நிதி உதவியுடன் எட்டு கோடி ரூபா செலவில் மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது என இச்செயற்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.
நீர்பாசான திணைக்களமும், நகரசபையும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ் வேலைத்திட்டங்கள் யாவும் முடிவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களிற்குள் கையளிக்கவுள்ளதாகவும் இவ் வேலைத்திட்ட பொறுப்பாளர் தெரிவித்தார்.
இக் கழிவுநீர் தாங்கியானது 5 தொட்டிககளை கொண்டுள்ளது. 3 தொட்டியினுள் கழிவுநீரை சுத்தப்படுத்தி மற்றைய இரு தொட்டியினுள் சென்று பின்னர் குளத்தினுள் நன்னீராக சென்று வவுனியா குளத்தினுள் இணைகின்றது. இச் சுத்திகரிப்பானது பெரும் மழைவீழ்ச்சி ஏற்பட்டாலும் சுத்திகரிக்க கூடிய மோட்டார் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வவுனியா நகரின் மத்தியில் உள்ள கழிவுகள், எண்ணை பதார்த்தங்கள், நச்சுப் பொருட்கள் போன்ற கழிவுப் பொருட்கள் குளத்தினுள் செல்வதால் குளம் மாசடைகின்றது. அத்துடன் நகரின் மத்தியில் துர்நாற்றம் வீசுவதானாலும் இத்திட்டம் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் பெருமையுடன் நடாத்திய இளைஞர்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்வுகளும், வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பும் நேற்று (25.12.2016) கழகத்தின் தலைவர் க.சிம்சுபன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி அஜித் சந்திரசேன, வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் பிரதித் தலைவர் வி.ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
வவுனியா நீலியாமோட்டை, சின்னத்தம்பனை பகுதியில் நேற்று (25.12.2016) காலை 9.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நீலியாமோட்டை சின்னத்தம்பனை பகுதியில் நேற்று காலை 9.30 மணியளவில் வெடிபொருட்கள் இருப்பதனை அவதானித்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனடியாக வவுனியா விமானப்படையினருக்கு அறிவித்தலை வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமான படையினர் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினருக்கு தகவலை வழங்கியதையடுத்து கைக்குண்டு ஒன்று, மோட்டார் குண்டு ஒன்று, மிதிவெடி 41 போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா சகாயமாதபுர சண் இளைஞர் கழக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று முன்தினம் (24.12.2016) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அனுசரணையில், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வழங்கப்பட்டது.
சண் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.ஸ்ரெனின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி திரு.அஜித் சந்திரசேன, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளருமான ஸ்ரீ.கேசவன், உபதலைவர் பி.கெர்சோன், அமைப்பாளர் வ.பிரதீபன், கலாசார பிரிவின் ஒழுங்கமைப்பாளர் தே.பிரகாஸ்கர் ஆகியோருடன் இன் நிகழ்வில் சண் இளைஞர் கழகத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களும், மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.