நெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது.
எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பண்டிகை காலத்தில் மது போதையின் கீழ் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வது தொடர்பில் விசேட திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையக பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,சாரதிகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு சிவில் ஆடைகளுடன் பல பொலிஸ் அதிகாரிகளை ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவுத் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பண்டிகை காலத்தில் விடுதிகள் மற்றும் உணவகங்களை கண்கானிப்பதற்கும் விசேட குழுக்கல் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் ஆய்வாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் விடுதிகள் மற்றும் உணவகங்களை கண்கானிப்பதற்கு 2,100 பேர் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார சேவைகள் ஆய்வாளர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும், மனிதப் பாவனைக்கு தகாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் குறித்து 011-263-5676 என்ற தொலைபேசி இலக்கத்தினூடு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களின் நலன் கருதி அவசர அழைப்பு 24 மணித்தியாலங்கள் சேவையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்திற்குள் கூரிய வாள் ஒன்றுடன் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் மீது பொலிஸார் விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.
சுமார் 2 அடி நீளமுள்ள கூரிய வாள் ஒன்றை தனது குடைக்குள் அவர் மிக சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மாணவரை சோதனைக்கு உட்படுத்திய போது வாள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவருக்கு இன்று பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவரின் செயற்பாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்த பிரனாவ் தானவாடேவை கைது செய்து மும்பை பொலிஸ் அவமானப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர்) பிரனவ் தனவாடே 1,009 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் அவர் கிரிக்கெட் வரலாற்றில் 116 ஆண்டு கால சாதனையை தகர்த்து எறிந்து வரலாறு படைத்தார்.
தற்போது இந்த சாதனை வீரருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது மும்பை பொலிஸ்.
மும்பை கல்யாண் பகுதியில் உள்ள சுபாஷ் மைதானத்தில் தான் கடந்த 12 ஆண்டுகளாக பிரனவ் தானவாடே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவ்டேகர், கல்யாண் பகுதிக்கு வரவுள்ளார். அதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க முடிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் மைதானத்தில் ஹெலிபேட் அமைக்க தானவாடே மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
ஹெலிபேட் அமைக்கும் இடத்தை மாற்றுமாறு பிரனவ் தானவாடே மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் பிரனவ் தானவாடே உள்ளிட்ட வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கோபமடைந்த பொலிசார் பிரனவ் தானவாடேவின் கொலரை பிடித்து தர தரவென இழுந்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இதன் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவரை விடுவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்பிறகே பிரனவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரனவின் கைதுக்கு அவரது பயிற்சியாளரான மொபின் ஷேக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சார விழா 2016 இன்று 18.12.2016 பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்வாக நடைபெற்றது.
கா.உதயராசா (பிரதேச செயலாளர் வவுனியா ) தலைமையில் ஆரம்பமான இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ரிஷாட் பதியுதீன் (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்), முதன்மை விருந்தினர்களாக சிவசக்தி ஆனந்தன் (வன்னி பாராளுமன்ற உறுப்பினர்), சி.சிவமோகன் (வன்னி பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் விஷேட விருந்தினராக ப.சத்தியலிங்கம் (வட மாகாண சுகாதார அமைச்சர்), சிறப்பு விருந்தினர்களாக ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, கே.பி.ஜெயதிலக, செந்தில்நாதன் மயூரன் ஆகிய வட மாகாண சபை உறுப்பினர்களும்,
வவுனியா மாவட்ட மேலதிக அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் கௌரவ விருந்தினர்களாக வனஜா செல்வரட்ணம் (பண்பாட்டலுவல்கள் திணைக்களம்), மு.இராதகிருஸ்னன் (வலயகல்வி பணிப்பாளர் வவுனியா தெற்கு) மற்றும் அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கலைஞர்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கௌரவப்படுத்தினார். தமிழர் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (18.12.2016) காலை 10 மணிக்கு நயினாமடு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட தலைவருமாகிய வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் கலந்து கொண்டதுடன்
வவுனியா வடக்கு பிரதேச கிளையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற நிகழ்வில் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவும் நிர்வாகசபைக் கூட்டமும் இடம்பெற்றது.
நான்காவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட 7 வேட்பாளர்களில் ஸ்ரீகரன் கேசவன் 390 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இதன்படி வவுனியா தெற்கில் 17வாக்குகளும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 65 வாக்குகளும், செட்டிகுளம் பிரிவில் 8 வாக்குகளும் , வவுனியா கோவிற்குளத்தில் 133 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வவுனியா பிரதேச செயலக வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 250
அளிக்கப்ட்டவாக்குகள் – 177
நீராகரிக்கப்பட்ட வாக்குகள் -3
செல்லுபடியான வாக்குகள் – 174
கோவிற்குளம் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 441
அளிக்கப்ட்டவாக்குகள் – 141
நீராகரிக்கப்பட்ட வாக்குகள் -3
செல்லுபடியான வாக்குகள் – 138 என வவுனியா பிரதேச கணக்காளர் ப.ஜெயபாஸ்கர் ஊடகங்களுக்கு தேர்தல் முடிவுகளை தெரிவித்தார்.
வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70 வயதுடைய வயோதிபத் தாய் இன்று (18.12.2016) மாலை 5.30 மணியளவில் பொலிசாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்துவந்த 70 வயதுடைய வயோதிபப் பெண்ணின் கணவன் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு சென்றுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண் கடந்த சில தினங்களாக அருகிலுள்ள கடையில் சாப்பாடு எடுத்துச்சாப்பிட்டு வந்துள்ளார். எனினும் நேற்றும் இன்றும் குறித்த வயோதிபர் வெளியே செல்லாததால் சந்தேகம் ஏற்பட்ட பக்கத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிசாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் பெண் பொலிஸாரின் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்றபோது குறித்த வயோதிபப் பெண் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்து சில நாட்களில் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழையுடன் பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், சேதங்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல் பத்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி விலை அதிகரிப்பை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மரக்கறி சாப்பாட்டின் விலை 110 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் ஏனைய அனைத்து உணவுகளும் தற்போது விற்கப்படும் விலையிலும் பார்க்க 10 ரூபா அதிகரிக்கப்பட்டு விற்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது,
உணவுப் பொதிகளுக்கு கட்டுப்பாட்டு விலை கிடையாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக உணவுப் பொதியின் விலை அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் இன்று (18.12.2016) இடம்பெற்றுவரும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் 5 வாக்கெடுப்பு நிலையங்களில் 7 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
மொத்தம் 3960 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வவுனியா பிரிவில் 1291 பேரும், வவுனியா தெற்கில் 603 பேரும், வவுனியா வடக்கு நெடுங்கேணியில் 553, செட்டிகுளம் பிரிவில் 1526 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று (18.12.2016) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவு பெற இருப்பதாக வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இன்றைய இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பெருமளவு இளைஞர்கள் யுவதிகள் காலையிலே வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
வவுனியாவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கிராமமட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்த கலந்துரையாடல் ஒன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அவரது காரியலாயத்தில் இன்று (18.12.2016) இடம்பெற்றது.
இனப்படுகொலை மற்றும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றத்திற்கு சர்வதேச விசாரணையை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மூன்று முக்கியமான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் அவர் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்கள் எமக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தது. அந்த வகையில் அம்மையாரின் இழப்பு என்பது ஈழமக்களுக்குப் பேரிழப்பாகும் என இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதிநிதிகளினால் எதிர்வரும் சனிக்கிழமை (24.12.2016) காலை 10மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வை நடாத்துவதற்கு இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதுடன் ஏற்பாடுகளையும் கலந்து கொண்ட அமைப்புக்கள் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், கல்விச் சமூகங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் இதனை தனிப்பட்ட அழைப்பாக எற்றுக்கொள்ளுமாறும் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் கடந்த (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் (அகிலேஸ்வரன் வயது 35, பிரியதர்சினி வயது 30, திஷா வயது 05, திஷாளன் வயது 02) படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அவசர சிகிச்சை பெற்று வந்த அகிலேஸ்வரன் என்ற குடும்பத்தலைவர் நேற்று (17.12.2016) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையில் பணிப்பாளர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா பிரதேச செயலகமும், கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாச்சாரவிழா 2016 வவுனியா பிரதேச செயலககலாச்சார மண்டபத்தில் கலா குமரப்பா அரங்கில் நேற்று (17.12.2016) காலை 9 மணிக்கு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் (உப தலைவர் பிரதேச கலாச்சார பேரவை) தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆய்வரங்கும் இயலரங்கும் எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கில் தொல்லியல் ஆய்வாளர் அருணா செல்லத்துரை வவுனியா பிரதேச தொல்லியல் வரலாறு, நா. தியாகராஜா வவுனியா பிரதேச கிராமிய கலைகள். கலாபூசணம் சி. தயமந்தி தமிழ்க்கவி வவுனியா பிரதேசத்தின் நாட்டுக்கூத்தும் நாட்டாரிசையும், ஞா. ஜெயகாந்தன் வவுனியா பிரதேசத்தின் ஊர்ப்பெயராய்வு சு. ஜெயச்சந்திரன் வவுனியா பிரதேசத்தின் பண்பாட்டு வழக்காறுகள். கேள்வி நேரம் , கவியரங்கம், பட்டிமன்றம் என்பன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரு திரேஸ்குமார், சிறப்பு விருந்தினராக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்பின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
டுபாயில் இறந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் சனிக்கிழமை மாலை சந்திவெளியிலுள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இளையதம்பி சூரியகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராக தெரியவருகிறது.
இவர் தொழில் நிமித்தம் காரணமாக டுபாயில் ஒரு கம்பனியில் வேலை செய்ததாகவும், விபத்தொன்றின் மூலம் உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கை கிடைக்க பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் இரண்டாம் திகதி அவர் இறந்த தகவல் சக நண்பர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்தாகவும், அதனையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தின் மூலம் டுபாயில் இருந்து சடலத்தை இலங்கைக்கு கொண்டுவந்ததாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும் நித்திரையே விபத்திற்கான காரணம் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரச பேருந்தும், வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினால் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 ஆண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கிட்டத்தட்ட 21 பேர் காயமடைந்துள்ள நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் வானில் பயணித்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் ஹொரனை, மில்லனிய பிரதேசத்தில் இருந்து சுற்றுலா பயணத்திற்காக யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இவ்விபத்தில் காயமுற்ற பஸ்ஸின் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதேவேளை குறித்த விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கருத்து தெரிவிக்கையில் ‘நான் எனது திசையில் பஸ்ஸை செலுத்தினேன். அப்போது எதிர்த்திசையில்வந்துகொண்டிருந்த வான் எனது திசை நோக்கி வருவதை அவதானித்தேன்.’
இதையடுத்து, பஸ்ஸை உடனடியாக நிறுத்த முயற்சித்தேன். ஆனால், அதற்குள் வான் வந்து பஸ்ஸுடன்மோதியது’ என்று பஸ் சாரதி தெரிவித்துள்ளார்.