தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை காரணமாக கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் ஓரடி வான் பாய்வதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார்.
மாவட்டத்தின் ஏனைய குளங்கள் நிரம்பி வழிவதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லையெனவும் ஆனால் குளங்களின் நீர்மட்டம் சுமார் இரண்டரை அடிக்கு மேலாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
வருடத்திற்கு சுமார் 1200- 1400 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகின்ற நிலையில் 373 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது என்பது சாதாரண விடயமல்ல, இரணைமடுக் குள புனரமைப்பு பணிக்காக நீர் மட்டத்தினை குறைத்திருந்தோம்.
அதனால் எந்த பதிப்பும் இல்லை. இவ்வாறான மழைவீழ்ச்சி, குளங்களில் நீர்மட்டம் உயர்வாக உள்ள காலங்களில் பெய்திருந்தால் பாதிப்புக்கள் அதிகமாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சேருநுவர பிரதேசத்தில் நீண்டகாலமாக பெண்ணொருவரை காதலித்து பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதன் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் தரவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை இளைஞர் பாடசாலைக் காலத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார்.
குறித்த பெண்ணுடன் அதிக தடவைகள் பல இடங்களுக்கும் சென்று பாலியல் உறவு கொண்டுள்ளதுடன் அதை இரகசியமாக தொலைபேசியில் வீடியோ செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு வீட்டாருக்கும் இடையில் பிணக்குகள் ஏற்பட்டவுடன் குறித்த இளைஞன் பாலியல் நாடாவை முகநூலில் தரவேற்றம் செய்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த பெண் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா கந்தன்குளம் பூவரசன்குளத்தில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கல்வி கற்று வரும் பிள்ளைகளுக்கு கந்தன்குளம் சன் ஸ்டார் விளையாட்டு கழகம் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் சின்னத்தம்பி நற்பணி மன்றம் மூலம் 3 துவிசக்கர வண்டிகளை நேற்று (15.05.2016) கந்தன்குளத்தில்வைத்து வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், பூவரசன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேசிங்க, சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவர் பேனாட் அந்தோணிபிள்ளை, ஆலய பரிபாலன சபைத் தலைவர் மு.நாகலிங்கம், கந்தன்குளம் பிரிவு பொலிஸ் பொறுப்பாளர் கருணாதிலக, சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத் தலைவர் சிவானந்தன், மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளதுடன் இருப்பிடங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. தார் சீற்றுடன் இருக்கும் சுமார் 14 வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததுடன் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 104 குடும்பங்களில் 450ற்கும் மேற்ப்பட்டோர் தங்கியுள்ளனர்.
இதில் 16 குடும்பங்களின் வீட்டிற்கு தார்சீட் போடப்பட்டுள்ளதால் கனமழை காரணமாக அச்சீற்று சேதமடைந்து காணப்படுவதுடன் வீட்டிற்குள் வெள்ளம் சென்றுள்ளதால் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தமக்கு தகரத்திலான சீற் அல்லது தற்காலிகமாக படங்கு தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகமொன்று தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஹோட்டல் ஒன்றை விரைவில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
நவீன கால உணவு முறையில் முற்றிலும் மாறுபட்ட வகையில் உருவாகிவரும் இந்த பன்யாடி உணவகத்தில் மின்சாரம், பீங்கான் தட்டுகள், மேசைக்கரண்டி மற்றும் முள்ளுக்கரண்டிகள் போன்றவை பயன்படுத்தாது அதற்கு பதிலாக மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், மரத்திலான பண்டைய மேசைகள், நாற்காலிகள், களிமண்ணால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில், நவீன செயற்கை மசாலாக்களின் கலப்பில்லாத – இயற்கையான முறையில் விறகு அடுப்பில் சமைக்கப்பட்ட உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன.
இந்த உணவகத்தின் மிக முக்கிய விதிமுறை என்னவென்றால் கையடக்கத்தொலைபேசிகள் கொண்டு செல்லவும், புகைப்படங்கள் எடுக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைந்த கணமே தங்களின் ஆடைகளை களைந்து விட்டு கையில் அளிக்கப்படும் ஒரு சிறு டவலால் உடலை மூடியபடி சென்று தங்களது இருக்கையை அடைந்ததும், அதையும் களைந்துவிட்டு, முழுநிர்வாணமாக அமர்ந்து தேவையான உணவு வகைகளுக்கு ஓடர் செய்து ருசித்தும், ரசித்தும் சாப்பிடலாம்.
ஆடைகளை களையாமல் வழக்கம்போல் சாப்பிட விரும்புபவர்களுக்கான தனிப்பகுதியும் இங்கு உண்டு. எதிர்வரும் ஜூன் மாதம் அல்லது ஜூலை மாதத்தில் இந்த உணவகம் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டன் நகரின் எப் பகுதியில் இவ் உணவகம் அமைக்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், இதுதொடர்பான மேலதிக தகவல்களை பெறவிரும்பி, இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமான லண்டன்வாசிகள் ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்பிலிப்பிட்டிய- காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைத் தோட்டத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியை தொட முனைந்த போதே மின்சார தாக்குதலுக்கு இலக்காகி இவர்கள் பலியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
17 மற்றும் 25 வயதான இளைஞர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் பெண் ஒருவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் அணிந்திருந்த தங்க வளையல்களும், சங்கிலியும் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான முகம்மது இஸ்மாயில் ஹாஜரா (வயது 65) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
றஹ்மானியா வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த இவர், வீட்டின் முன்பக்கத்தில் சிறிய பல சரக்குக் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார்.
வழமை போன்று ஞாயிற்றுக்கிழமை (15.05) இரவு ஒன்பது மணிக்கு தனது கடையை பூட்டிவிட்டு உறங்குவதற்குச் சென்ற இவர், இன்று திங்கட்கிழமை (16) காலை ஒன்பது மணியாகியும் கடையைத் திறக்கவில்லை.
இந்தநிலையில், பக்கத்து வீட்டிலிருந்த இவரது பேத்திகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கொள்ளையிடும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள கிண்ணியா பொலிஸார், இதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் திடீரென ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக 11மாவட்டங்களில் சுமார் 4186 மக்கள் பாதிக்கப்பட்டள்ளதாக அனர்த்த நிலைய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கூடுதலான மழைவீழ்ச்சி காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, அனுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது.
இந்தத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வெளியிட்டுள்ளார்.
நோர்வே மோஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்திலிருந்து இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விமானத்தில் இலங்கையருக்கும் மற்றுமொரு வெளிநாட்டவருக்கும் இடையில் நடைபெற்ற சந்தேகத்திற்கிடமான சம்பாஷணையை அடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வே ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு பயணிகளும் விமான கழிவறையில் வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் பின்னர் மன்சேஸ்டரில் விமானம் தரையிறங்கிய போது, குறித்த இருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையிலான உரையாடலில் குண்டு என்ற வார்த்தை பிரயோகம் வெளிப்பட்டதாக விமானத்திலிருந்த பயணிகள் கேட்டதாக விமானி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விமானத்தை பரிசோதனை செய்து, எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லையென வெடி குண்டு அகற்றும் குழுவினர் கூறியதை அடுத்து, குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிதலைவர்கள், நட்சத்திரங்கள், குடிமக்கள் என அனைவரும் தங்களது வாக்குபதிவினை மும்முரமாக செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி
கோபாலபுரம் தொகுதிக்கு வாக்களித்த வந்த கருணாநிதி அவர்களிடம் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திமுகவின்வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
மேலும், பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது, அதனை முறையாக தடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குசாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம், தங்களது கடமையை உணர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும், இந்த தேர்தல் வித்தியாசமான ஒன்று தான், பணபலம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேட்டியளித்துள்ளார்.
நடிகர் அஜித்
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து திருவான்மியூர் தொகுதியில் உள்ள வாக்குசாவடியின் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார், இதற்காக காலை 6.50 மணிமுதலே வரிசையில் காத்திருந்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். நடிகை கவுதமியும் தனது வாக்கை பதிவு செய்தார்.
ராஜேஷ் லக்கானி
அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம், வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்ததுடன் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஈரோட்டில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.
குஷ்பு
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு மந்தவெளியில் வாக்களித்தார், பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், தோல்வி பயத்தால் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழக மக்கள் அதிமுக-வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 99 சதவிகித பணம் அதிமுக-வுடையது எனவும் பேசியுள்ளார்.
அதுமட்டுமின்றி நோட்டாவுக்கு “நோ” சொல்லுங்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
முக ஸ்டாலின்
திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தேனாம்பேட்டையில் தனது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் என குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், முறைகேடு நடந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் நினைக்கிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவர் பேட்டி அளிக்கையில், கல்வி மற்றும் மருத்துவத்தினை இலவசமாக தரும் அரசியல் வரவேண்டும். தஞ்சாவூர், அரவங்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்கு பதிவு நடைபெறாது ஜனநாயகத்திற்கு விரதோமானது. என்னுடைய ஜனநாயக கடமையை நான் முடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியன்
சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடைபெற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், பல கட்சி தலைவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம்
பெரியகுளம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
ராமதாஸ்
வாக்களிக்க வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, இது ஒரு வித்தியாசமான தேர்தல், திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுத்து தமிழ் நாட்டை சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள், அவற்றையெல்லாம் மாற்றுவதற்காக அன்புமணி கண்டிப்பாக ஆட்சிக்கு வருவார் என கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி கண்டிப்பாக நடக்கும் என கூறியுள்ளார்.
செல்வி ஜெயலலிதா
ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு தனது தோழி சசிகலாவுடன் சென்று ஜெயலலிதா வாக்களித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், இவ்வளவு நாள் பொறுத்துவிட்டீர்கள், இன்னும் 2 நாட்களின் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என கூறியுள்ளார்.
விஜயகாந்த்
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்துள்ளார்.
கனிமொழி
மயிலாப்பூர் தொகுதியில் வாக்களித்தார் கனிமொழி, அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது, மேலும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகமான முறையில் பணப்பட்டுவாடா நடக்கிறது என நாங்கள் ஏற்கனவே புகார் கூறியுருந்தோம் என தெரிவித்துள்ளர்.
இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி என கூறியுள்ளார்.
வைகோ
கலிங்கம்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த வைகோ திமுக மற்றும் அதிமுக கட்சிகள் நடத்திய பணப்பட்டுவாடாவினை குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், சில தேர்தல் அதிகாரிகளையும் குற்றம்சாட்டியுள்ளார்.
ரங்கசாமி
புதுச்சேரியில் ரங்கசாமி மிகவும் எளிமையான முறையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
அதிக மழை மற்றும் காற்றின் காராணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தலுக்கான சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மின்சார தடை ஏற்பட்டுள்ள பகுதிகள் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எம்பிலிபிட்டியவில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் – கொழும்பு ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என, தெரியவந்துள்ளது.
இதன்படி, கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16.05) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வலையக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொழும்பு 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கோன்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
வவுனியா பூவரசங்குளத்தில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்ததால் வவுனியா–மன்னார் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும்மழை காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் வவுனியா பூவரசங்குளம் இலங்கை வங்கிக்கு முன்பாக பாரிய மரமோன்று வீதியின் குறுக்கே வீழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இவ் வீதியில் பயணித்த அரச பேரூந்து மரத்தினை கடந்து செல்ல முற்பட்டவேளை பாதை புதையுண்டுள்ளதாகவும். இம் மரத்தினை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த 48 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
உக்குளாங்குளம் பிரதேசத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவ் அனர்த்தங்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினை தொடர்பு கொண்ட போது,
வவுனியா பூவரங்குளத்தில் பாரிய மரம் முறிந்து விழ்ந்ததில் வவுனியா – மன்னார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதுவரை வவுனியா மாவட்டத்தில் வேறு எவ்வித அனர்த்தங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.
வவுனியா குருமன்காட்டு குளம் வான் பாய்வதுடன் தொடர்ச்சியாக மழை நீடிக்குமானல் வவுனியாவிலுள்ள ஏனைய குளங்களும் வான் பாய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.