களுத்துறை, கடுகுரந்த பிரதேச வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிஸார் இவர்களை நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தினை சோதனையிட்ட போது அங்கிருந்து 03 இலட்சத்து 95 ஆயிரம் பெருமதியான இலங்கை ரூபாய்கள், 500 ரூபா பெருமதி வாய்ந்த யூரோ 30 மற்றும் 1000 ரூபா பெருமதி வாய்ந்த சுவிஸ் பிராங் பணத்தாள்கள் 17 உம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கும் மேலதிகமாக கையடக்கத் தொலைபேசி, கணனி மற்றும் பணம் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் 71 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நடிகை பிந்து மாதவி இனி சில்க் ஸ்மிதா போன்ற கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம்.
தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் சில்க் ஸ்மிதா. அவர் ரஜினிகாந்த், கமல், பிரபு உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தார்.
இந்தநிலையில் சில்க் ஒரு நாள் திடீர் என்று இறந்துவிட்டார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் எழுந்தது.
இறுதியில் அது தற்கொலை தான் என்று தீர்மானிக்கப்பட்டது. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹிந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வந்தன.
அந்த படத்தில் சில்கின் சாயலில் இருக்கும் பிந்து மாதவி நடிக்க விருப்பம் தெரிவித்த போதிலும் அவரை யாருமே கண்டுகொள்ளவில்லை.
அதனால் அவருக்கு ஒரே வருத்தமாம். இந்தநிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சில்க் ஸ்மிதாவைப் போன்று கவர்ச்சியில் கலக்கப் போகிறாராம் பிந்து.
ஷங்கரின், பாய்ஸ் படத்தில் ஐந்து நாயகர்களுல் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து மணிரத்னத்தின், “ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார்.
ஆனால் தமிழில் அவருக்கு ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு போனவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் அமைய தெலுங்கில் ஒரு ரவுண்ட் வந்தார்.
பின்னர் நீண்டஇடைவெளிக்கு பிறகு “180″ படம் மூலம் தமிழில் மீண்டும் தன் திருமுகத்தை காட்டினார் சித்தார்த், அதன்பிறகு “காதலில் சொதப்புவது எப்படி”, “உதயம்” படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றார்.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில், அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் கடந்தவாரம் வெளியானது.
இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் சக்சஸ் மீட் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்,
நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் தீயா வேலை செய்யணும் குமாரு பட ஹிட் போல எனக்கு எந்த படமும் அமையவில்லை. இப்படம் வெளியான ஒருவாரத்திலேயே ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதுவரை நான் பழகியவர்களில் சுந்தர்.சி போன்று ஒருவர் கிடையாது. பொதுவாக எனக்கு கோபம் அதிகம் வரும், ஆனால் இப்போது அதை குறைத்து கொண்டுள்ளேன்.
இதற்கு சுந்தர்.சியும் ஒரு காரணம். எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படியும் வாழலாம் என்பதை புரிய வைத்தவர் சுந்தர்.சி. வாழ்க்கை என்றால் என்ன என்பதை எனக்கு புரிய வைத்த நல்ல நண்பர்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது அவரது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
தமிழில் நான் அதிகமாக நடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. அப்படியல்ல, நல்ல கதைக்காக காத்திருந்து நடிக்கிறேன். அடுத்து தமிழில் நான் 4 படங்களில் நடித்து வருகிறேன்.
ஒன்று பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ஜிகர்தண்டா”, வசந்தபாலனின் “காவியத்தலைவன்” மற்றொன்று எனது சொந்த தயாரிப்பு. எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும் இப்படியே இருக்கும் மனநிலை வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எப்போது திருமணம் என கேட்டபோது, இப்போதைக்கு திருமணம் பற்றிய பேச்சுக்கே இடம் கிடையாது என்று உறுதியாக சொன்னார் சித்தார்த்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ப்ளோட், டி.யூ.எல்.எப், டேலோ, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன.
இதன்படி குறித்த விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28.6) உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலன் தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியின் போது அரச ஊழியாகள் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், அனர்த்தத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, அனர்த்தத்தின் போது முதலுதவிகள் வழங்குதல் போன்ற பயிற்சிகள் அதன் போது தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேலைத்திட்டங்கள் அதற்கு பொது மக்களினால் வழங்கப்பட வேண்டிய பங்கபளிப்புகள் என்பன தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இப் பயிற்சி நெறிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என். சூரியராஜா, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர் கே. ராஜ்சங்கர் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில் அவர் அரச படையினரிடம் சரணடைந்துள்ளார்.
அல் ஷபாப் இயக்கத்துக்குள்ளேயே கடந்த வார இறுதியில் உள்மோதல்கள் வெடித்தன. அதன் பின்னரே ஆவேயஸ் சரணடைந்துள்ளார்.
அவரை என்ன செய்வது என்று கலந்தாலோசிப்பதற்காக பழங்குடி சமூகத் தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, மொகதீஷுவில் உள்ள பிபிசி செய்தியாளரிடம் பேசியுள்ள சமூகத் தலைவர்கள், ஆவேயஸ் சரணடைந்துள்ளதை ஏற்க மறுப்பதாகவும் மொகதீஷுவுக்கு வரவும் மறுப்பதாகவும் கூறியுள்ளனர்.
அல்-ஷபாப் இயக்கத்தின் ஆன்மீகத் தந்தையாக ஆவேயஸ் கருதப்பட்டுவந்தவர். ஐநாவாலும் அமெரிக்காவாலும் பயங்கரவாதியாகவும் கருதப்படுகிறார்.
இலங்கைக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நேற்று ஆரம்பமானது.
இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய முதல்நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்த தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பில், மஹேல ஜெயவர்த்தன 52 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சுனில் நரேன் 4 விக்கெட்டுக்களையும், ரவி ராம்போல் 3 விக்கெட்டுக்களையும், பிராவோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் சிறப்பாக துடுபெடுத்தாடி, 109 ஓட்டங்களை குவித்த கெய்ல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த வருடம் 13/10/2012 தொடக்கம் 20/10/2012 வரை பீட்ரு (pedro – Nuwaraeliya) சாரண தேசிய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாரணர் உயர் கற்கைநெறி பயிற்சியை நிறைவு செய்த சாரணத்தலைவர்களுக்கான சான்றிதழ்கள் எதிர்வரும் 13/07/2013 (சனிக்கிழமை)அன்று காலை 09.00 மணிக்கு பயிற்சிநெறியின் தலைவர் திரு.செல்வநாயகம் தலைமையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரணி மில்லர்ஸ் வீதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்தவர் அழகுராஜா (வயது32). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. மேலும் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அழகுராஜா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென்று பரவியது. வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இலங்கை அகதியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் போராளிகள், பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூறும் தியாகிகள் தின நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) காலை 9.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வில் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில், யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த 175 பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சேமிப்புப்புத்தகங்கள் வழங்குதலும்,
யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட இருபது நபர்களுக்கு முதல் கட்டமாக சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்குதலும் இடம்பெறும்.
தொடர்ந்து பத்மநாபா நினைவுப்பேருரையும்இ சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர்கள், பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார் சீனிவாசன்.
இவரை விசாரிக்க வேண்டும் என்று இதன் முன்னாள் ஆலோசகர் பிந்த்ரா ஐ.சி.சி. அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் விவரம் நேற்று வெளியானது.
38 ஆண்டுகளாக கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து வருகிறேன். எந்த தனிநபரை விடவும் கிரிக்கெட் தான் மேலானது என்று எப்போதும் நம்புபவன் நான். சமீபத்தில் நடந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணம் சீனிவாசன்.
பதவியை தனிப்பட்ட முறையில் ஆதாயம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்று ஐ.சி.சி விதி தெளிவாக கூறுகிறது. இவற்றை சீனிவாசன் மீறிவிட்டார் என்றும் நடத்தை நெறிமுறைகளை மீறிய இவரை ஐ.சி.சி விசாரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடியை வாரி வழங்கிய பி.சி.சி.ஐ., உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்துக்கு எவ்வித நிதியும் வழங்காதது மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திகழ்கிறது. கடந்த 2010-11ல் இதன் ஆண்டு வருமானம் 868 கோடி. ஐ.பி.எல்., தொடரின் ஒளிபரப்பு உரிமம் மூலம் 10 ஆண்டுகளுக்கு (2008-2017) 8 ஆயிரத்து 700 கோடி சம்பாதிக்கிறது.
இப்படி கோடிகளில் புரளும் பி.சி.சி.ஐ., சமீபத்தில் சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களுக்கு தலா 1 கோடி, அணியில் இடம் பெற்ற மற்ற ஊழியர்களுக்கு தலா 30 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
மற்றும் எம்.பி.,க்களுக்கு கட்டப்பட்டுள்ள கிளப்பில் நீச்சல் குளம் அமைக்க பெரும் தொகையை நிதியாக வழங்கியது. ஆனால், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியான உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண நிதியாக ஒரு சிறிய தொகை கூட வழங்கவில்லை.
இந்திய அணி வீரர் ஷிகர் தவான் கூட, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் வென்ற தங்க மட்டை விருதை, உத்தரகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணித்தார். ஹர்பஜன் சிங் ரூ. 10 லட்சம் வழங்கினார். வசதியே இல்லாத ஹொக்கி இந்தியா அமைப்பு 10 லட்சம் வழங்கியது.
சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கும் பி.சி.சி.ஐ மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளது. ஐ.சி.சி., கூட்டத்தில் தற்காலிக தலைவர் டால்மியா பங்கேற்பாரா ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் கலந்து கொள்வாரா என்று தனது உள்விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டுள்ளது.
பி.சி.சி.ஐ நிதி வழங்காதது குறித்து சமூகவலைதளமான டுவிட்டரில் ஏராளமானோர் விமர்சித்துள்ளனர்.
இதே போல டோனி, சச்சின், கம்பீர், ஷேவாக் உள்ளிட்ட கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்களும் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கையடக்க தொலைபேசிகளின் மூலம் பாடல் இணைப்பு கருவிகளை காதில் பொருத்தியவாறு ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழர்களான அண்ணனும் தங்கையும் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு பயணித்த தொடரூந்தில் மோதுண்டு பலியாகினர்.
இப்பரிதாபகரமான துயரச் சம்பவம் இன்று அதிகாலை கொழும்புக்கு அருகில் ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது இருவரின் சடலங்களும் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வத்திக்கானின் நிதி நிர்வாகத்துறையில் பணிபுரிந்த மூத்த ஆயர் ஒருவர் ( பிஷப்) இத்தாலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகளில் ஈடுபட்டமை, பணத்தை சுருட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மொன்சிக்னோர் நுன்சியோ ஸ்காரானோ என்ற இந்த ஆயர் வத்திக்கான் வங்கி ஊடாக தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாதாக தெரியவருகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றியே இத்தாலிய காவல்துறையினர் அவரிடம் விசாரித்துவருகின்றனர். இந்த விவகாரத்துடன் சம்மந்தப்பட்ட இத்தாலிய உளவுத்துறை அதிகாரி ஒருவரும் நிதித் தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.
வத்திக்கான் வங்கி தொடர்பில் விசாரணை ஆணையம் ஒன்றை பாப்பரசர் பிரான்சிஸ் அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்த கைதுகள் நடந்துள்ளன.
வத்திக்கான் வங்கி தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.