சிம்பாவேக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது. சிம்பாவேக்கு எதிரான ஒருநாள் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றது குறித்து தற்காலிக தலைவர் வீராட் கோலி கூறியதாவது,
சிம்பாவே தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இதற்கு தோனியே காரணம். ஆடுகளத்தில் எப்படி செயல்படுவது என்பது பற்றிய யூக்தியை அவரிடம் இருந்து கற்றேன். இதை பயன்படுத்திய நான் சிறப்பாக செயல்பட்டேன். இந்த அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்ததால் எனக்கு தலைவர் பதவி கடினமாக தெரியவில்லை. இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.
இந்த தொடரில் சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா 18 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.
இந்திய தலைநகர் டில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும் அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து தன் வயிற்றையே வெட்டி குடலை வெளியே உருவியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிழக்கு டில்லி பகுதியில் உணவகம் ஒன்றில் வேலை பார்க்கிறார் நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது நபர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில் அந்த நபரின் வயிற்றில் மூன்று குழந்தைகளை யாரோ கணணி மூலம் வலி தெரியாமல் வைத்து விட்டதாகவும், அந்தக் குழந்தைகள் பசியால் துடித்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் தோன்றின.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கனவிலிருந்து விடுபட்டு, வயிற்றைத் தடவிப் பார்த்தபோது வயிறு சற்றுப் பெரிதாக இருந்துள்ளது. இதனால், கனவில் கண்டது உண்மை தான் என கருதிய நபர் வயிற்றில் இருந்த குழந்தைகளை வெளியே எடுத்து அவற்றைக் காப்பாற்ற நினைத்தார். இலவச அம்புலன்சுக்கு போன் செய்து, வீட்டை விட்டு கீழிறங்கி தெருவுக்கு வந்தார்.
முன்னதாக வயிறு நிறையத் தண்ணீர் குடித்தார். கையில் இருந்த பிளேடால் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குடலை வெளியே எடுத்துப் போட்டு குழந்தைகளைத் தேடியுள்ளார். ரத்தம் வீணானதால், மயக்கமடைந்த அவர் குடலைப் பிடித்தபடி தெருவோரத்தில் சாய்ந்தார்.
அந்த நேரம் அம்புலன்ஸ் வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தது. டில்லி லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரிடம் வைத்தியர்கள் விசாரித்த போது தனக்கு வந்த கனவு பற்றி கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரியவில்லை அவருக்கு ஏற்பட்ட கனவை உண்மை என நம்பியதால் இந்த விபரீதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனினும் அவர் நலமடைந்ததும் மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளோம் என வைத்தியர் கவுரவ் சால்யா கூறினார். பொலீஸ் விசாரணையில் தான் மேற்கொண்ட செயல் தவறு தான் என ஒப்புக்கொண்ட அந்த நபர் அதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
வவுனியா ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள யேசுபுரத்தில் உள்ள இராணுவ கல்குவாரியில் கல்லுடைப்பதற்காக சக்திவாய்ந்த 30க்கு மேற்பட்ட டைனமேற் குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததால் சிதறிய கற்கள் மக்கள் குடிமனைகளுக்குள் வீழ்ந்துள்ளது. இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக நான்கு வீடுகளினுடைய கண்ணாடி யன்னல்கள் மற்றும் கூரைப்பகுதி என்பன என்பன உடைந்து சேதமடைந்துள்ளது. விடுமுறை தினமாகையால் சிறுவர்கள் வீட்டு முற்றங்களில் விளையாடிக் கொண்டிருந்த போதும் அவர்களுக்கு தெய்வாதீனமாக பாதிப்பு ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் காரணமாக அப் பகுதி மக்கள் வெளியில் திரிவதற்கே அஞ்சுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைத் உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பாக இராணுவ அதிகாரியை அழைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.
Floppy, CD என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு (Pen Drive) மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா?
ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம்.
Floppy ல் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து பைல்களை எழுதலாம், அழிக்கலாம் மற்றும் அதன் மேலேயே எழுதலாம். அந்த அளவிற்கு இவை மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அப்படியானால் எத்தனை முறை இது போல நாம் அழித்து அழித்து எழுத முடியும்? ஒரு தடவை அழித்து எழுதுவதை ஒரு சைக்கிள் (சுற்று) என அழைக்கின்றனர். அப்படிக் கணக்கு பார்த்தால் பல நூறு ஆயிரம் முறை இந்த சுற்றினை மேற்கொள்ளலாம்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த சுற்று மிக மெதுவாக மேற்கொள்ளப்படும். இதிலிருந்து ப்ளாஷ் ட்ரைவிற்கு வயதாகி விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
எந்நேரமும் அது தன் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்பதனை எதிர்பார்க்கலாம். ஆனால், அது எப்போது என்பது உங்களின் செயல்முறையைப் பொறுத்தும் உள்ளது.
எத்தனை முறை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு அளவிலான பைல்களை எழுதுகிறீர்கள், மற்ற விஷயங்களுக்கு இந்த ட்ரைவைப் பயன்படுத்துவது மற்றும் உங்கள் கணனியின் CPU வேகம் என்ற விஷயங்களைப் பொறுத்து உங்கள் ப்ளாஷ் ட்ரைவ் தன் செயல்பாட்டை இழந்து ஒரு கட்டத்தில் முடித்துக் கொள்ளும்.
கவலைப் படாதீர்கள் பொதுவாக நீங்கள் செலுத்திய பணத்திற்கேற்ப ப்ளாஷ் ட்ரைவ்கள் பல காலம் உழைக்கும். உங்களுக்கே அலுத்துப் போகும் போதுதான் அல்லது வேறு ட்ரைவ்களின் பால் மனது செல்லும் போதுதான் இதன் பயன்தன்மை நிற்கும்.
பென்டிரைவ் இனை கணனியில் பொருத்தி உபயோகித்த பின் பென்டிரைவ் இன் இயக்கத்தை நிறுத்தாமல் அதாவது Eject பண்ணாமல் பென் டிரைவ் ஐ நீக்காதீர்கள்.
இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது தொடர்பான பாடம் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கற்றுக் கொடுக்கப்படவுள்ளது. மேற்குவங்கத் தலைநகர் கொல்கட்டாவில் உள்ளது, பிரசிடென்சி பல்கலைக்கழகம்.
பிரபலமானவர்கள் பலர் படித்த அந்தப் பல்கலைக்கழகத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் காதல் தொடர்பான பாடங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட பல்கலை துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் என்ற பெண் தியரி பாடங்கள் மட்டும் தான், பிரக்டிகலுக்கு இடமில்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் புதுமையாக பல பாடப்பிரிவுகள் உள்ளன. அறிவியல் கற்றிராதவர்களும் அன்றாட வாழ்க்கையில் இயற்பியல் என்ற பாடத்தை எடுத்து படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது போல் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும், பல பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார் மாளவிகா.
அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் திகதி தேர்தல் நடக்கவுள்ளது.
பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் அவுஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம்.
ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.
நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன.
சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது.
ஆனால் பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்டிடம் இருந்து கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருந்தார் அவருடைய நெடுநாள் போட்டியாளரான கெவின் ரட்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியா கில்லாட்,இதேபோல ரட்டிடம் இருந்து கட்சியின் தலைமைத் துவத்தைப் பறித்து பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெவின் ரட் மறுபடியும் பிரதமராக வர, நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொழிற்கட்சி கன்சர்வேடிவ் கட்சியிடையே போட்டியும் கடுமையடைந்துள்ளது.
ஜூன் 26ஆம் திகதி பிரதமர் ஆனதிலிருந்து பல முக்கிய அரசு கொள்கைகளில் கெவின் ரட் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.
பொருளாதாரம், தஞ்சம் கோரி வருபவர்களை எப்படிக் கையாளவது என்ற விவகாரம், பருவநிலை மாற்றம் போன்ற விஷயங்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய தேர்தல் விவகாரங்களாக அமைந்திருக்கின்றன.
இதனிடையே, விக்கிலீக்ஸ் தோற்றுநரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் ஆரம்பித்த விக்கிலீக்ஸ் கட்சிக்கு 26 சதவீத வாக்களர்கள் ஓட்டுப்போடத் தயாராக இருப்பதாக தேசிய கருத்துக் கணிப்பு ஒன்று காட்டியுள்ளது.
வாக்காளர்கள் ஆயிரம் பேரிடம் கருத்தை சேகரித்து இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் ஓராண்டுகாலமாக தங்கியிருக்கும் ஜூலியன் அஸ்ஸான்ஜ், ஆஅவுஸ்திரேலிய மக்களிடையே தனக்குள்ள ஆதரவை அறிந்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இவரது கட்சி அவுஸ்திரேலிய செனெட் மன்றத்துக்கு ஏழு வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதாதேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்திருந்தார்.
அதில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை பொலிசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர்.
பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40க்கும் மேற்பட்ட பொலிசார் என் வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர்.
மேலும் எனது பக்கத்து வீட்டில் உள்ள பெண் எனது இடத்தை கேட்டதற்கு நான் தரமறுத்துவிட்டேன். பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு அவர் வேண்டியவர் என்பதால் என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்த காதல் கிசு கிசுக்கள் உண்மையானது தானா அல்லது அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என்று சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. மதராச பட்டணம் படத்தில் நடித்த போது ஜோடியாக நடித்த எமிஜாக்சனுடன் இணைத்து பேசப்பட்டார்.
எமிஜாக்சன் லண்டனை சேர்ந்தவர். அவரை சந்திப்பதற்காக ஆர்யா அடிக்கடி லண்டன் செல்வதாக கூறப்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் பரவின. அதன் பிறகு வேறு நடிகர்களுடன் எமி ஜாக்சன் நடிக்க போனதும் இவர்கள் இடையிலான காதல் செய்திகள் அடங்கி போனது.
பிறகு ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்றார்கள். இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தனர். இப்போது ராஜா ராணி படத்தில் நடிக்கிறார்கள். பிரபுதேவாவுடனான காதலை முறித்ததும் நயன் தாராவை வீட்டுக்கு அழைத்து ஆர்யா விருந்து கொடுத்தார். இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது.
திடீரென ஆர்யாவும் நயன்தாராவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதுபோன்று திருமண அழைப்பிதழ் பத்திரிகை அலுவலகங்களுக்கு வந்தது. இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அது ராஜா ராணி படத்தை விளம்பரபடுத்துவதற்காக வெளியிடப்பட்ட போலி திருமண அழைப்பிதழ் என தெரிய வந்தது.
அது போல் இப்போது அனுஷ்காவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் என செய்திகள் வந்தன. சில தினங்களுக்கு பின் அனுஷ்காவுடன் காதல் இல்லை என ஆர்யா மறுத்தார். இருவரும் இரண்டாம் உலகம் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்தை விளம்பரபடுத்துவதற்காக திட்டமிட்டு இந்த காதல் வதந்தி பரப்பப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 10இற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 50இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இடங்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முன்று ருவென்டி ருவென்டி போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2:0 என்ற நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக லேகாவாஷிங்டன் நடிக்கிறார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். எவரெஸ்ட் என்டர்டெய்ன் மென்ட் சார்பில் அருண் வைத்திய நாதன், ஆனந்த் கோவிந்தன் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில் பிரசன்னா மனைவி சினேகாவுடன் கலந்து கொண்டார். பிரசன்னா பட்டு வேட்டி சட்டை அணிந்து இருந்தார். சினேகா பட்டுச் சேலையில் வந்தார். இருவரையும் போட்டோ கிராபர்கள் போட்டி போட்டு படம் பிடித்தனர். ரசிகர்களும் ஆட்டோ கிராப் வாங்க சூழ்ந்தார்கள்.
விழாவில் டைரக்டர் பாலு மகேந்திரா பங்கேற்று பாடல்களை வெளியிட்டார். அவர் பேசும் போது பிரசன்னா எனக்கு பிடித்த நடிகர். இந்த படத்தில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் உள்ளது. இதில் பிரசன்னா துணிச்சலாக நடித்துள்ளார் என்றார்.
ரயில்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக வருவதைத் தொடர்ந்து திரைப்படத் துறையினரின் தேவைக்காக ஒரு ரயில் நிலையத்தை அமைத்துக் கொடுக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பிரசித்திபெற்ற மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அருகேயுள்ள வாடி பந்தர் என்ற ரயில் பழுதுபார்க்கும் இடம் திரைப்படப் படப்பிடிப்புக்கு ஏற்றார்போல மாற்றங்கள் செய்யப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் இருப்பது போல பிளாட்பார்ம்களும் மற்ற வசதிகளும் இங்கே இருக்கும். ஆனால் மற்ற ரயில் நிலையங்களைப் போல சாதாரண பயணிகள் உள்ளே வர மாட்டார்கள்.
ரயில் நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் பலவற்றை ஏற்க முடியாத சூழல் உருவாகிவிட்டதன் காரணமாகவே இந்த முடிவு என்கிறார் மத்திய ரயில்வே பேச்சாளர் அதுல் ரானே.
“ரயில்களை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்- பயணிகளுக்கு தொந்தரவுகள் வரக்கூடாது என்பதால் பலமுறை எங்களால் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடிவதில்லை. எனவேதான் இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் சில இடங்களை உருவாக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.”
திரைப்படக் குழுவினர் எளிதாக சென்றடையக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதால் மும்பையில் உள்ள வாடி பந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், குர்லா மற்றும் மாத்துங்காவில் உள்ள ரயில் மனைகளை மாற்றுவது குறித்து யோசிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வாடி பந்தர் பகுதியில் இருக்கும் ரயில் மனையில் ரயில் பெட்டிகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. இந்த இடம் குறித்த படங்கள், ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும். பிரத்யேகமாக படப்பிடிப்புக்காக வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் ரயில்வேயின் வருமானம் உயரும் – புகழும் அதிகமாகும் என்று ரயில்வே நம்புகிறது.
சுமார் 160 ஆண்டுகளாக இந்தியர்களின் வாழ்வோடு இழைந்தோடும் ரயில்கள் பல திரைப்படங்களின் கதைக் களமாகவும் இருந்திருக்கிறது. பல படங்களில் கதாநாயகர்களுக்கு இணையாக ரயில்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
அமெரிக்க உணவகம் ஒன்றில் தினமும் மீதமாகும் உணவுகளை திருட்டுத் தனமாக கரடி சாப்பிட்டு வந்தது ரகசிய கமராவில் பதிவாகியுள்ளது.
பொதுவாக வீட்டில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் சாப்பிடும் உணவிற்கு அடிமையாவது சகஜம். ஆனால் அமெரிக்காவில் காட்டில் வாழும் கரடி ஒன்று தினமும் இரவு அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றின் பின்பக்க கதவு வழியாக ரகசியமாக உள்ளே நுழைந்து அங்கு மீதமாகியுள்ள உணவுகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலோராடோ ஸ்பிரிங் பகுதியில் உள்ளது எடல்வெய்ஸ் உணவகம். இங்கு காரசாரமான உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் ஊறுகாய் வகை உணவுகள் பிரபலம். இரவு மீதமாகும் உணவுகளை ஒரு பெட்டியில் கொட்டி மூடி வைப்பது இவர்களது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பின்பக்கத்தில் வைக்கப் படும் அந்த உணவுப் பெட்டி காலையில் கார் பார்க்கிங் பகுதியில் உருண்டு கிடப்பதையும் அதிலுள்ள உணவுகள் மாயமாகி வருவதும் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இரவில் என்ன நடக்கிறது என்பதை அறிய ரகசிய கமரா பொருத்தப்பட்டது. மறுநாள் காலை ரகசிய கமராவில் பதிவான காட்சிகளைப் போட்டுப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் இரவில் பின்பக்க கதவு வழியாக உள்ளே நுழையும் கரடி ஒன்று உணவுப் பெட்டியை சுமார் 15 அடி தூரம் நகர்த்திச் சென்று அதிலுள்ள உணவுகளை ரசிந்து உண்பது பதிவாகி இருந்தது.
காட்டிற்குள் இருந்து வரும் இக்கரடி சுற்றுலாப்பயணிகள் அளித்த உணவின் மூலம் ருசியான உணவிற்கு அடிமையாகி இருக்கலாம் எனக் கூறப் படுகிறது. இப்போதெல்லாம், அக்கரடிக்குப் பயந்து உணவுத் தொட்டியை சங்கிலியால் கட்டிச் செல்கிறார்களாம் உணவக ஊழியர்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவரது மாமனார் வீட்டில் பதுங்கியிருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி தன்னுடன் வந்து வாழ மறுத்ததால் மாமனார் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்காக இப்படி தவறான செய்தியை அவர் பரப்பினார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கே.துரைராஜ் பொறியியலாளராக உள்ளார். இவருக்கும் சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
துரைராஜ் முதலில் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி நின்று விட்டார். பின்னர் வேறு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து வேலை தேடி வந்தார். இந்த நிலையில் துரைராஜ் தனது மனைவியுடன் சேலம் வந்து தனது மாமனார் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்தார்.
கரூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கேட்டு விண்ணப்பித்து இருந்தார் துரைராஜ். அந்த கல்லூரியிலிருந்து வேலை நியமன உத்தரவு சில நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்து. தனது முகவரியாக மாமனார் வீட்டு முகவரியைக் கொடுத்திருந்தார் துரைராஜ்.
எனவே கடிதம் துரைராஜ் மாமனார் வீட்டுக்குப் போனது. ஆனால் மாமனார் வீட்டில் இதுகுறித்துக் கூறவில்லை. தபாலையும் துரைராஜிடம் தரவில்லை. இதனால் வேலை போய் விட்டது. இந்த நிலையில் விஷயம் அறிந்து பெரும் வருத்தமடைந்தார் துரைராஜ்.
தனது மனைவியிடம் அவர் சண்டை பிடித்தார். இதனால் துரைராஜின் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குப் போய்விட்டார். பலமுறை மனைவியை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வெறுத்துப் போன துரைராஜ் தனது மாமனாரால்தான் இத்தனை குழப்பமும் என்று நினைத்து குடும்பத்தோடு பழிவாங்க முடிவெடுத்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு தவறான குறுந்தகவலை அனுப்பினார். அதில் சேலம் கிச்சிப்பாளையம் வ.உ.சி. நகரில் வசிக்கும் பட்டறைக்காரர் மணி, பாப்பாத்தி, தர்மலிங்கம், கார்த்தி ஆகியோருடன் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி தங்கி உள்ளார் என்றும் இவர்கள் அனைவரும் சேலத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சிக்கிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தத் தகவலைப் பெற்ற டெல்லி சிபிஐ அதிகாரிகள் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர் . சென்னை, சேலம் பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டனர். சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் கடந்த இரண்டு நாட்களாக கிச்சிப்பாளையம் பகுதியில் விசாரித்து வந்தனர்.
பிறகு துரைராஜின் மாமனார் மணியின் வீட்டில் ஏராளமான பொலீசார் குவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அப்போது அங்கு விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் இல்லை என்றும் தெரியவந்தது.
பின்னர் பொலீசார் நடத்திய விசாரணையில் துரைராஜ் தனது மாமனார் குடும்பத்தை பழிவாங்க இப்படி தகவல் அனுப்பியது தெரியவந்தது. போலீசார் துரைராஜை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது மாமனார் மணி, மாமியார் பாப்பாத்தி, மைத்துனர்கள் தர்மலிங்கம் , கார்த்தி ஆகியோர் எனக்கு வேலை கிடைக்காமல் செய்ததோடு எனது மனைவியையும் பிரித்து சென்று விட்டனர். இதனால் அவர்களை பொலீசில் சிக்க வைக்க டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு விடுதலைப் புலிகள் சேலத்தில் பதுங்கி உள்ளனர் என்று தகவல் அனுப்பி வைத்தேன் என்று கூறினார். அவரைப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் நகைக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபர் ஒருவர் உள்ளாடைக்குள் மறைத்து சுமார் எழு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை எடுத்து வந்த போது பிடிபட்டார்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் சிங்கப்பூரிலிருந்து மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை சோதனை செய்த போது அவர் உள்ளாடைக்குள் 7 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பிடிபட்டன.
விசாரணையில் அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நகைக்கடை பெண் தொழிலதிபர் விஹாரி போடார் என்பதும் அவருடைய கணவர் அபிஷேக் போடார் பிரபல ஜவுளி நிறுவன அதிபர் என்பதும் தெரிய வந்தது. ஏற்கனவே, இது போன்று உள்ளாடைகளில் மறைத்து 10க்கும் மேற்பட்ட முறை இவர் நகைகள் கடத்தியது விசாரணையில் உறுதியானது.
விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில் நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்காக சிங்கப்பூரில் இருந்து நகைகளை கடத்தி வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரது நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், கணக்கில் வராத 10 கோடி மதிப்பிலான நகைகள் பொலிசாரால் கைப்பற்றப் பட்டன.
விசாரணைக்குப் பின்னர் விஹாரி போடார் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப் பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள அவரது கணவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மெரிக்க ராணுவத்தில் பயிற்சியாளர்களாக பணியாற்றும் 60 வீரர்கள் அதிரடியாக நீக்கப் பட்டுள்ளனர். சமீபகாலமாக அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணுவத்தில் பணிபுரியும் ஆண் வீரர்களாலேயே பெண் வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக பெண்டகன் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணயில் 60 பயிற்சியாளர்கள் குற்றம் செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவ அமைச்சர் ஷாக் ஹாகெல் உத்தரவிட்டார்.
அதன்படி, ராணுவப் பயிற்சியாளர்கள் 55 பேரும், கடற்படை பயிற்சியாளர்கள் ஐவரும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருவதால் பணி நீக்கம் செய்யப் படுபவர்களின் எண்ணிக்கை கூடலாம் என தெரிகிறது.