இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் பொலிஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம்.
இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம்.
மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு பொலிஸ்காரர். நான் அந்த பொலிஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் கேட்டுக்கொள்ளவே இல்லை.
அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் நாங்கள் ரயில் ஏற முடியாமல் போனது என்றார். இந்த விவகாரம் குறித்து மதுமதி அங்கு பொலிஸ் அலுவலகத்தில் புகாரும் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரி ரமதான் அப்துல்லா கூறுகையில் உடைக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை. எப்படி இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. கெளரவமான உடை எதுவாக இருந்தாலும் தாராளமாக அணிந்து செல்லலாம். சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மத்திய மலைநாட்டில் மீண்டும் கடும் மழையுடன் கூடிய காலநிலை தற்சமயம் நிலவி வருகின்றது. மழை கடுமையாக பெய்து வருவதால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வட்டவளையில் 35 வீடுகள், கொட்டக்கலையில் லொக்கில், ஹெரிங்டன், மேபீல்ட், சாமஸ் ஆகிய பகுதிகளில் 48 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வட்டவளை – ரொஸல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹட்டன் – கொழும்பு வீதியில் தியத்தலாவ தொடக்கம் வட்டவளைக்கு இடைப்பட்ட பகுதியில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மலையகத்தின் பிரதான நீர்த்தேக்கங்களான லக்ஷபான, காசல்ரீ, கென்னியன் ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தாமினி தெரிவித்தார்.
இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.
கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், கூறியதாவது: தான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல என்றும், தானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான் என்றும் கூறிய அவர், தாமும் தனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றும், மனைவி குடும்பத்தினர் கூட ஏழ்மை நிலையிலிருந்து மேலே வந்தவர்கள்தான் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் “நானும் எங்களது குழந்தைகளை ஏழை, பணக்காரன், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்று சொல்லி அதன்படியே வளர்த்துள்ளோம்.எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த பையன் ( சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும் பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள். உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்.
இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள். தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் எடுத்த திரைப்படங்களை பார்த்தாலே இதை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது நியாயமானதுதானே” என கண்ணீர் மல்க பேட்டியை முடித்துக்கொண்டார்.
கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு.பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட தர்மபுரி காதல் ஜோடி இளவரசன் – திவ்யா. மகளின் காதல் திருமணத்தால் மனம் உடைந்த திவ்யாவின் தந்தை செல்வராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திவ்யாவை மீட்டு தரும்படி அவரது தாய் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றில் கேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜரான திவ்யா தாயுடன் செல்வதாகவும், இளவரசனுடன் செல்ல விரும்பவில்லை என்றும் கூறினார். திவ்யா பிரிந்து சென்ற நிலையில் மறுநாள் தர்மபுரியில் ரெயில்வே தண்டவாளத்தில் இளவரசன் பிணமாக கிடந்தார்.
இளவரசன் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதுபற்றி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் இளவரசன் உடலை மறு பரிசோதனை செய்து அவர் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்தினார்கள். இளவரசன் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் பொலிஸார் சேகரித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி அஸ்ராகார்க் உத்தரவின் பேரில் அரூர் பொலிஸ் டி.எஸ்.பி. சம்பத் தலைமையிலான தனிப்படை பொலிஸார் இதுதொடர்பாக விசாணை நடத்தி ஆவணங்களை சேகரித்து வருகிறார்கள். திவ்யாவிடம் பொலிஸார் விசாரித்தபோது இளவரசன் தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு மன்பு என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, நீ என்னோடு வாழ வராவிட்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே உயர் நீதிமன்ற விசாரணையின்போது சென்னையில் லொட்ஜில் தங்கியிருந்தபோது தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறினார் என்றார்.
திவ்யாவும் இளவரசனும் பேசிய பேச்சுக்களை மொபைல் போன் நிறுவன உதவியுடன் பொலிஸார் பதிவு செய்து வைத்துள்ளனர். அதையும் திவ்யாவிடம் பொலிஸார் போட்டு காட்டி இது நீங்கள் இருவரும் பேசியதுதானா என்று கேட்டனர்.
அந்த உரையாடலை கேட்ட திவ்யா இது நாங்கள் பேசியதுதான் என்று உறுதிப்படுத்தினார். இளவரசன் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்ததையும் பொலிஸார் கைப்பற்றி வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே இளவரசன் எழுதிய காதல் கடிதங்களை வைத்து இந்த கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்துதானா என்று திவ்யாவிடம் கேட்டனர்.
அதை பார்த்த திவ்யா இது இளவரசனின் கையெழுத்துதான் என்று உறுதிப்படுத்தினார். ஏற்கனவே தடயவியல் துறை மூலம் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து மற்றும் தொலைபேசி உரையாடல்கள் இளவரனுடையது தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது திவ்யாவும் பொலிஸில் அதை உறுதிப்படுத்தியிருப்பது பொலிஸ் விசாரணையில் மிகவும் முக்கியமான சாட்சியாக கருதப்படுகிறது.
திவ்யாவின் தாய் தேன்மொழியும் இளவரசன் தற்கொலை செய்வதற்கு முன்பு தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கெண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அஜீத் சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதையடுத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. அஜித் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.
கதாநாயகனாக அறிமுகமான முதல் தமிழ் படம் அமராவதி. 1993ல் இப்படம் வந்தது. வெறும் 32 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இது எடுக்கப்பட்டது. ஆசை, காதல் கோட்டை படங்கள் பிரபலபடுத்தியது. அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிட்டிசன், வில்லன், வரலாறு, என பல ஹிட் படங்களில் நடித்தார்.
பில்லா, மங்காத்தா படங்கள் வசூல் சாதனை படைத்தன. தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவருக்கு 53வது படம் அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
மொனராகலை – தெஹெல்லெஹெல மலை பகுதியில் மீண்டும் தீ பரவியுள்ளது.
இதற்கு முன்னர் தீ ஏற்பட்ட பிரதேசத்திற்கு எதிர் திசையில் உள்ள பகுதிகளில் இத்தீ பரவியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மொனராகலை மாவட்ட உதவி பணிப்பாளர் ரவிந்திர குமார தெரிவித்தார்.
தீயை கட்டுப்படுத்த அப்பிரதேசத்திற்குச் செல்ல முடியாதுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை தெஹெல்லெஹெல மலை பகுதியில் ஏற்பட்ட தீயினால் 150 ஏக்கர் எரிந்து சாம்பலானமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா – சிம்பாவே இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் சிம்பாவேயில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடந்து முடிந்த 4 போட்டிகளிளும் இந்தியா வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி போட்டி புலவாயோவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் சிம்பாவேவை துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 39.5 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்களும், ஹாமில்ட்டன் 32 ஓட்டங்களும் எடுத்தனர். பந்துவீச்சில் அமித் மிஸ்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
164 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரில் ஓட்டம் ஏதும் எடுக்காமலே புஜரா ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த தவான், ரகேனா சிறப்பாக துடுப்பெடுத்தாடினர்.
இந்திய அணி சார்பாக தவான் 41 ஓட்டங்களும் ரகேனா 50 ஓட்டங்களும் ரவீந்தர ஜடேஜா 48 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.இறுதியில் இந்திய அணி 34 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாவே அணியை வெற்றிபெற்றது.
இன்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது.
பரீட்சைகள் காலை 8.30 க்கு ஆரம்பமாகும். பகல் நேரம் 12.30 க்கு இரண்டாவது கட்ட பரீட்சை ஆரம்பமாகும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிற்பகல் 2.00 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகும்.
நாளை ஆரம்பமாகவுள்ள இப்பரீட்சைகளில் பழைய, புதிய பாடத்திட்டங்களின் படி 2 இலட்சத்து 92, 706 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
புதிய பாடத் திட்டத்தின் படி 2 இலட்சத்து 35, 318 பாடசாலை பரீட்சார்த்திகளும், 45,242 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர். பழைய பாடத்திட்டத்தின் படி 12,146 தனிப்பட்ட பரீட்சார்த்திகளே தோற்றவுள்ளனர்.
நாடு முழுவதும் 2164 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. விசேட தேவையுடையவர்களுக்கென ரத்மலானையிலும், தங்காலையிலும் பரீட்சைகள் நடத்தப்படும்.
பரீட்சை கடமைகளில் 16,264 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உயர்தர பரீட்சைக்குரிய 5 பாடங்களுக்குமாக தமிழ், சிங்கள மொழிகளில் மொத்தம் 40 லட்சம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறுவதாக அறிவித்துள்ள பகுதிகளில் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஒலிபெருக்கி பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை மண்டபத்துள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் கூட மாணவர்களுக்கு, பரீட்சார்த்திகளுக்கு இடையூறு அல்லது அவர்களது கவனம் சிதைந்து விடும் விதத்தில் ஒலி கேட்கும் விதத்தில் பாதணிகள் அணிவதும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் நாட்களில் பாடசாலை வளவுக்குள் பரீட்சையுடன் தொடர்புடையவர்களைத் தவிர வெளியார் எவரும் உள்ளே செல்லக் கூடாது.
இம்முறை பொலிஸாரின் கூடுதல் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மண்டபம் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சை மண்டபத்துக்கு பரீட்சார்த்திகள் வரவேண்டும்.
*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட் டுள்ள பாடங்கள் சரியானவையா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தான் விண்ணப்பித்த பாடம் சரியாக இல்லாத பட்சத்தில் பரீட்சை திணைக்களத்துடன் தொடர்புகொண்டு சரி செய்துகொள்ள வேண்டும்.
*பரீட்சைக்கான அனுமதி அட்டையில் பரீட்சார்த்தி தனது கையொப்பத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். பாடசாலை விண்ணப்பதாரியாயின் பாடசாலை அதிபரூடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்தியாயின் அதற்குரிய நபரூடாகவும் உறுதி செய்துகொள்ள வேண்டும். (அனுமதி அட்டையின் மறுபுறம் குறிப்பிடப்பட்டுள்ளது)
*பரீட்சைக்கு செல்லும்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். இவை இல்லாத விடத்து பரீட்சை மண்டப பொறுப்பாளரிடம் வினவ முடியும்.
*பரீட்சார்த்திகள் விடைத்தாள்களை ஒப்படைத்த பின்னர் பரீட்சை மண்டப பொறுப்பாளர் விடைத்தாள்களை சரிபார்த்து முடியும் வரை பரீட்சார்த்திகள் மண்டபத்தைவிட்டு வெளியேறக் கூடாது.
*பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் கருவிகளை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
*அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மண்டபம், பாடங்கள் தொடர்பாக பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். இவை சரியானவையா? என்பது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் தனியார் மற்றும் இ. போ. சபை பஸ் போக்குவரத்துகள் ஒழுங்கான முறையில் நடைபெறவேண்டும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.
பரீட்சை நடைபெறும் காலங்களில் பரீட்சை மண்டபத்தினுள் அல்லது பரீட்சை நடைபெறும் வளவுக்குள் வெளியார் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். பரீட்சைகள் நடைபெறும் பகுதியில் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஒலிபெருக்கிகள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் பரீட்சை நடைபெறும் பரீட்சை மண்டபங்களுக்கு அருகில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வர முயன்ற ஐவர் சென்னை குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமான பயணிகளின் கடவுச்சீட்டுக்களை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த செந்திவரன் 32, நாகராஜ் 73 மற்றும் மதிவதனா 53 ஆகியோர் போலி விசா வைத்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பங்களாதேஷைச் சேர்ந்த முகமது குலாம் ரபானி 27, முகமது முரோல் அப்தின் 32, ஆகியோர் நேற்று காலை 7 மணிக்கு “ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்´ விமானம் மூலம் கொழும்பு வர சென்னை விமான நிலையம் வந்தனர்.
இருவரின் கடவுச்சீட்டுக்களும் போலி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டு, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிம்பாவேயின் 7வது ஜனாதிபதி தேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் ஜானு-பி.எஃப். கட்சியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சிம்பாவேயில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒன்றாக நடத்தப்பட்டது.
சிம்பாபே சுதந்திரம் பெற்றது முதலே தலைமைப் பீடத்தில் வீற்றிருக்கும் தற்போதைய ஜனாதிபதி ரொபர்ட் முகாபே 7வது முறையாக களம் கண்டார்.
அவரை எதிர்த்து, தற்போதைய பிரதமர் மோர்கன் வான்கிரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார்.
ரொபர்ட் முகாபேவுக்கு ஆதரவாக 61 வீத வாக்குகளும் அவருக்கு எதிராக 34 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் முகாபேயின் கட்சி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற்றுள்ளதால் சிம்பாவே அரசியல் சட்டத்தை திருத்தியமைக்கும் அளவுக்கு ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பலம் பெற்றுள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தொழிற்சாலை ஒன்றை ஐனாதிபதி ராஜபக்ச திறந்து வைத்திருக்கின்றார்.
வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராசேந்திரகுளத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 250 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கின்றது.
நாளடைவில் இங்கு மூவாயிரம் பேர் வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன, மத, குல பேதங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றதுடன், பிரிவினை வாதத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்திப் பணிகளுக்கென மேலும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் இலங்கைக்கான இத்தாலிய நாட்டு தூதுவர், அமைச்சர்களான டகளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, திஸ்ஸ கரலியத்த மற்றும் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலின் முன்னாள் பாய்ந்த பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது..
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலின் முன் நேற்று மாலை சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாய்ந்துள்ளார். பாய்ந்தவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த பெண்ணுக்கு இன்னும் சுயநினைவு திரும்பாத நிலையில் மேலதிக தகவல்கள் எதையும் பெற முடியாதுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அஜித் குமாரின் ஆரம்பம் பட பாடல் இசை வெளியீட்டு விழா பிரபல ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்பொழுது நடக்கும் என்பது பற்றி பலவாறு கூறப்படுகிறது.
முதலில் படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 31ம் திகதி இசை வெளியீடு என்று கூறப்பட்டது. ஆரம்பம் ஆனால் யுவனுக்கு நெருக்கமானவர்களோ இந்த செய்தியை வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆரம்பம் இசை வெளியீட்டு விழா யுவனின் பிறந்தநாளுக்கு முன்பே நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ஆரம்பம் இசை வெளியீடு ஆடம்பரமின்றி பிரபல ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் வைத்து நடக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய குஜராத் மாநிலத்தில் தனது இரண்டு மகள்களை முச்சக்கர வண்டியுடன் ஒரு நபர் எரித்து கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மனைவியோடு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
தனது மகள்களை தினமும் பள்ளிக்கு முச்சக்கர வண்டியில் கொண்டுவிடும் வழக்கமுடைய கோவிந்த், வழக்கம்போல் 2 மகள்களையும் பள்ளிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து சென்றார்.
மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமாக இருந்த கோவிந்த் பள்ளிக்கு செல்லும் வழியில், மேகானிநகர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீர் என்று முச்சக்கர வண்டியை நிறுத்தி, 2 மகள்களுடன் முச்சக்கர வண்டி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியதால் 2 சிறுமிகளும் கருகி பரிதாபமாக இறந்தனர். உடனே தந்தை தப்பி ஓட முயன்றார். அவரை பொது மக்கள் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
கணவரின் மரண செய்தி கேட்டு அவருடன் 70 ஆண்டுகள் வாழ்ந்த அவரது 90 வயது மனைவி பதறியடித்துக் கொண்டு அவர் விழுந்துக் கிடந்த இடத்திற்கு ஓடினார். கணவரின் உடலை தூக்க முயற்சித்த அவர் பிரேதத்தின் மீது விழுந்து இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
அபுலஹப் குக்கிராமத்தில் முதன்முதலாக குடியேறிய இந்த தம்பதியர் மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப் பேத்திகள், எள்ளுப்பேரன், எள்ளுப்பேத்திகள் என புதியதொரு கிராமமாக சுமார் 200 வாரிசுகளை உருவாக்கி விட்டு மறைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதியினரை அவர்களின் கொள்ளுப் பேரன்களில் ஒருவர் வந்து சந்தித்துள்ளார். அப்போது, அந்த முதியவர் எனது இறுதி நாட்கள் நெருங்கி விட்டதாக உணருகிறேன். இவ்வளவு நாள் என்னுடன் சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை போகும் போதும் என்னுடனே அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
அவர்கள் எவ்வளவு அன்பு அரவணைப்பு, உண்மை, தியாகம் ஆகிய நற்குணங்களுடன் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த மரணம் உறுதிபடுத்தி விட்டது. அவர்களின் வேண்டுதலை இறைவன் நிறைவேற்றி விட்டான் என அந்த கொள்ளுப்பேரன் கூறினார்.
வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,
2. ஜனசெத பெரமுன,
3. இலங்கை தொழிலாளர் கட்சி
4. எக்சத் லங்கா மகா சபா,
5. இலங்கைத் தமிழரசுக் கட்சி,
6. மக்கள் விடுதலை முன்னணி,
7. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
8. ஜனநாயகக் கட்சி,
9. ஐக்கிய தேசியக் கட்சி,
10.ஐக்கிய சோசலிசக் கட்சி,
11.ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு,
12.ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி.
இத்துடன் வவுனியா மாவட்டத்திலிருந்து 6 சுயேச்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன.