சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியஅணித்தலைவர் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சிம்பாப்வே அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது. சிம்பாப்வே அணியின் சார்பாக சிக்கந்தர் 82 ஓட்டங்களையும் சிகும்புரா 43 ஓட்டங்களையும் பெற்றனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அமித் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக விராட் கோஹ்லி தனது 15வது சதம் கடந்து 115 ஓட்டங்களைப் பெற்றார். அம்பட்டி ராயுடு ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றி மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
மைனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விதார்த். அதற்கு முன் சின்னச் சின்ன வேடங்களில் தலை காட்டியுள்ளார்.மைனா வெற்றி பெற்றாலும் அதற்கடுத்து அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் அஜித்தின் 54-வது படத்தில் நடித்து வருகிறார் விதார்த். இந்தப் படத்தில் இன்னும் 3 ஷெட்யூல் மட்டுமே மீதம் உள்ளது. அனேகமாக நவம்பர் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
இந்தப் படத்திற்காக அஜித்துடன் 100 நாட்களாகப் பழகியதை என்னால் மறக்க முடியாது. அவருடைய மனிதநேயத்தை நேரில் பார்த்து உணர்ந்து கொண்டேன். நான் நடித்த ஆள் படத்தின் டிரெய்லரைப் பார்த்துவிட்டு படம் ஹிட்டாகும்னு பாராட்டினார். அதனால் அந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்க்குறேன் என்று தெரிவித்துள்ளார் விதார்த்.
அஜித்தின் 54-வது படத்தைத் தொடர்ந்து ஆள், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்புற பாண்டியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விதார்த்.
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவரின் பிரபலமான கடையினை இரண்டு முகமூடியணிந்த திருடர்கள் பெற்றோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த 48 வயதான ஜுட் ஜீவன் என்பவர் புலம்பெயர்ந்து பிரித்தானியாவிலுள்ள லிவர்பூல், பிரயோரி வீதியில் அமைந்துள்ள பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜுன் 8ம் திகதி 9 மணியளவில் தம்மை உருமறைப்புச் செய்துகொண்டு கடைக்குள் நுழைந்த இருவர் திருட முற்பட்டதுடன் இனவெறிச் சொற்களை பிரயோகித்து கடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இருவரையும் வெளியேற்ற முயன்ற ஜுட் மீது தீ மூட்ட முயன்றுள்ளனர். இதன் போது பதட்டமைந்த அவர் நிலை தடுமாறி எரிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் விழுந்துள்ளார்.
பலத்த எரி காயங்களுக்குள்ளான ஜுட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சில வாரங்கள் அங்கே தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் உயிராபத்தில் இருந்து தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜுட் ஜிவன் பொலிஸாரிடம் விபரிக்கையில் நான் தற்பொழுது உயிர்பிழைத்திருப்பது பேர் அதிசயமே. இவ்விரு சந்தேக நபர்களும் முகமூடி அணிந்திருந்தனர். நான் இவ்விருவரும் கிண்டல் செய்வதாகவே எண்ணினேன். ஆயினும் திடீரென பெற்றோல் ஊற்றி தீயிட்டனர். அயலவர்களின் உதவியுடன் தற்பொழுது உயிர் பிழைத்துள்ளேன் என பொலிஸாரிடம் தெரிவித்தார்.
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்றுள்ளது.
இந்தியா- சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்பது தொடர்பாக சிம்பாப்வே அணி வீரர்களுக்கு அந்நாட்டு முன்னாள் வீரரும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளருமான அண்டி பிளவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவரது சகோதரரும் சிம்பாப்வே அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான கிராண்ட் பிளவர் கூறும்போது இந்திய அணியை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய சில ஆலோசனைகளை அண்டி பிளவர் தெரிவித்தார். அவர் வழங்கிய அறிவுரைகளை நாங்கள் பின்பற்றுவோம் என்றார்.
அண்டி பிளவர் எந்த மாதிரியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்ற விவரத்தை வெளியிட கிராண்ட் பிளவர் மறுத்துவிட்டார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றது.
இதற்கு பயிற்சியாளர் அண்டிபிளவர் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. 5 போட்டியில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று சிம்பாப்வே அணியின் தலைவர் டெய்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்து, தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த சாண்ட் கவுர் பஜ்வா என்ற 115 வயது மூதாட்டி கடந்த வெள்ளியன்று இயற்கை எய்தினார். இங்கிலாந்தின் அதிகூடிய வயதுப் பெண்மணியான இவர், இரண்டு உலகப்போர்களைப் பார்த்துள்ளாராம்.
சாண்ட் கவுர் பஜ்வா 1898ம் ஆண்டு ஜனவரி 1ம்திகதி தற்போது பாகிஸ்தானில் உள்ள குஜராத் பகுதியில் பிறந்தார். 1960ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்த இவர், இங்கிலாந்தின் வயது மூத்த பெண்மணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் வயது முதிர்ந்த இரண்டாவது பெண்மணி இவர்.16 வயதில் மணமுடிக்கப்பட்ட பஜ்வா சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர்.
தனது மூத்த சகோதரியால் வளர்க்கப்பட்டார். நான்கு குழந்தைகளுக்கு தாயான நிலையில் மணமான ஆறு வருடங்களிலேயே பஜ்வாவின் கணவர் காலமானார்.
1972ம் ஆண்டு இவரது மகள் எதிர்பாராவிதமாக மரணமடைந்த போது இவருக்கு வயது 74. ஆனால், அந்த தள்ளாத வயதிலும் தனது பேரக்குழந்தைகளை எடுத்து பராமரித்து வளர்க்கத் தொடங்கினார்.
அதில் இரட்டைக் குழந்தைகளான பேரன்களின் வயது அப்போது 6 ஆகும். எங்கள் பாட்டியின் உடல் மற்றும் உள்ள உறுதிதான் அவரை இத்தனை நாள் வாழ வைத்தது.
அவரைப் போன்ற பெண்மணியை பார்ப்பது மிகவும் அரிது என அவரது பேரன்கள் மற்றும் கொள்ளுப் பேரன்கள் அவரைப் புகழ்ந்து பேசுகின்றனர்.
தற்போது, இவருக்கு 12 பேரப்பிள்ளைகளும், 28 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனராம்.
வயோதிபம் காரணமாக கடந்த வெள்ளியன்று இயற்கை எய்திய இப்பாட்டியின் இறுதிச்சடங்கை சிறப்பாக செய்து முடிக்க உறவினர்கள் திட்டமிட்டிருக்கிறார்களாம். தன் மகள் மற்றும் மருமகனோடு 1966ம் ஆண்டு லண்டனில் குடியேறிய பஜ்வா தனது இறுதிமூச்சை அங்கேயே விட்டுள்ளார்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழைகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருவதாக, இந்திய திட்ட கமிஷன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புள்ளி விவரத்தின் படி 2011-12ம் ஆண்டில் 26 கோடியே 93 இலட்சம் பேர் தான் ஏழைகள் ஆவார். இது 2004-05ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 40 கோடியே 71 இலட்சத்தை விட இது குறைவானதாகும்.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 37.2%ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை தற்போது 21.9ஆக குறைந்துள்ளது. சுரேஷ் டெண்டுல்கர் குழுவின் பரிந்துரை படி கிராமப்புறத்தில் தினமும் ரூ.27.20 (இந்திய ரூபாய்) செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையில்லை.
அதே போல் நகர்புறங்களில் ரூ.33.33 செலவளிக்க முடிந்தால் அவர் ஏழையாக கருதப்பட மாட்டார். சுரேஷ் டெண்டுல்கர் பரிந்துரைபடி ஏழைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த குழுவின் மறு ஆய்வு செய்வதற்கு பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசிய ஜாவா தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கடலில் மூழ்கியது என்றும், தத்தளித்தவர்களில் நூற்றைம்பதுக்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் இந்தோனேஷிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறைந்தது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர், அவர்களில் இரண்டு பேர் பிள்ளைகள் ஆவர்.
வேறு யாரும் உயிர் பிழைத்துள்ளார்களா என மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர்.
இராக், ஈரான், இலங்கை, சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படகில் வந்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் மக்களை நிறுத்த வேண்டிய அவசியத்தை படகு கவிழ்ந்த இந்த சம்பவம் வலியுறுத்துகிறது என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் கூறினார்.
கடல் வழியாக அவுஸ்திரேலியா வரும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்ற வாரம் பிரதமர் ரட் அறிவித்திருந்தார்.
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக சிம்பாப்வே சென்று உள்ளது. இந்தியா– சிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கோப்பை மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த மும்முனைப் போட்டியில் வெற்றி பெற்றது. இதனால் சிம்பாப்வே தொடரில் இந்திய அணி சாதிக்கும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் தலைவர் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதால் வீராட் கோலி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே சம்பியன்ஸ் கிண்ண ஆட்டத்தில் தலைவராக பணியாற்றி இருந்தார்.
அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காண்கிறது. புஜாரா, மொகித் சர்மா, அம்பதி ராயுடு, பர்வேஸ் ரசூல், ஜெய்தேவ் உனகட் ஆகியோர் முதல் முறையாக ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகார் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளன. தினேஷ் கார்த்திக், ரெய்னா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
சிம்பாப்வே அணிக்கு பிரெண்டன் டெய்லர் தலைவராக செயற்படுகிறார். தனது நாட்டில் போட்டி நடைபெறுவதால் அந்த அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளும்.
இரு அணிகளும் கடைசியாக 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் ஹராரேயில் நடந்த போட்டியில் மோதின. இதில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
2010-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற 3 நாடுகள் போட்டித்தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இலங்கை, சிம்பாப்வே அணிகள் தகுதி பெற்றன. இதனால் இந்திய அணி ஒருநாள் தொடரில் கவனமுடன் ஆட வேண்டும்.
இரு அணிகளும் இதுவரை மோதிய 51 ஆட்டத்தில் இந்தியா 39 போட்டியில் வெற்றி பெற்றது. சிம்பாப்வே 10 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் டிண்டா தனது காதலியான ஸ்ரேயாசியாவை கரம் பிடித்தார். இந்திய அணியின் வீரர் அசோக் டிண்டா(வயது 29).
வேகப்பந்துவீச்சாளரான இவர் 13 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ரேயாசி ருத்ராவை திருமணம் முடித்துள்ளார்.
இது குறித்து டிண்டா கூறுகையில் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரேயாசியை பார்த்தேன். அதன் பின் நண்பர் மூலம் அவரின் மொபைல் எண் கிடைத்தது.
இதன் மூலம் எங்களின் காதல் வளர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். தற்போது இது நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதமளவில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் என யாழ். கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில் 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகக் கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
பன்னிரெண்டு வருட காதலன் திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.
முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.
காரணம், மஞ்சுளா – விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய விதம் அப்படி. அவர்களுக்கு அனைவருமே நண்பர்கள்தான். மஞ்சுளா மறைவுச் செய்தி கேட்டதுமே, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வருத்தத்துடன் அதைத் தெரிவித்த கலைஞர்கள், அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
2002ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஏறியது.
இதில் ஒருவர் பலியானார் 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் மரணம் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் கான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
அவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சல்மான் கான் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் சம்மன் அனுப்பும்போது மட்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ருத்ரமாதேவி படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது.
இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, சுமன், மகேஷ்பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார் அனுஷ்கா.
மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து, குதிரை சவாரி, வாள் சண்டை என அனைத்தையும் கற்றுள்ளார்.
சமீபத்தில் மகேஷ்பாபுவும், அனுஷ்காவும் மோதிக்கொள்வது போல சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.
அனுஷ்கா குதிரையில் ஏறி தப்பித்துப் போகும்போது மகேஷ்பாபு அவரை நோக்கி கத்தியை வீசுவார். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மகேஷ்பாபு வீசிய அட்டைக்கத்தி நிஜமாகவே அனுஷ்காவைக் குத்திவிட்டதாம். குத்தியது அட்டைக்கத்தி என்பதால் சிறிய காயம் தானாம்.
உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்தாராம் அனுஷ்கா.
தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. “நான் ஈ” படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார். அவர் கூறியதாவது…
கல்லூரியில் படித்த போது நான் அடங்காத பெண். சுட்டித்தனமாக இருப்பேன். பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான சுயரூபம் தெரியும். பேராசிரியர்கள் முன்பு நல்ல பெண் மாதிரி இருப்பேன். அவர்கள் போனதும் வகுப்பில் அட்டகாசம் செய்வேன்.
சகமாணவிகளை கிண்டல், கேலி என கலாய்ப்பேன். ரவுடித்தனங்கள் செய்வேன். பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன். இதனால் நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் தலையில் விழும்.
ஆசிரியைகளிடம் திட்டு வாங்குவார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருப்பார்கள். நான் கெஞ்சி சமாதானம் செய்து விடுவேன். சினிமாவுக்கு அடிக்கடி போவேன். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கிறேன்.
கல்லூரி சுவர் ஏறி குதித்தும் படத்துக்கு போய் உள்ளேன். ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச்மேன் பிடித்து பிரின்ஸ்பாலிடம் நிறுத்தி விட்டார். அவர் அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அன்று முதல் அடாவடித்தனங்களை மூட்டை கட்டி விட்டு அமைதியான பெண்ணாக மாற ஆரம்பித்தேன் என்றார்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் வர்டான் மாகாணத்தில் கழுதை மீது ஏறிவந்த ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மூன்று நேட்டோ படை வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் உள்ள வர்டான் மாகாணத்தில் நேட்டோ படை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, சாலையோரம் கழுதை மீது ஏறி அமர்ந்து வந்த தலிபான் தீவிரவாதி திடீரென்று கழுதையை அதட்டி விரட்டி வேகமாக ஓட வைத்து நேட்டோ வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
இந்த தாக்குதலில் மூன்று நேட்டோ வீரர்கள் பலியாகினர். மேலும் கழுதையும் அதன்மீது அமர்ந்து வந்த மனித குண்டு தீவிரவாதியும் இச்சம்பவத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த முக்கிய பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.