இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளை இன்று 6.4அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சன்கைபெனு நகரத்திற்கு தென்மேற்கே 154 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கடியில் 23 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4300கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த மீட்புப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தொப்பையை குறைக்க எளிய வழிகள்..!

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது.

அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பின்பு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

மாலைத்தீவு – இலங்கை ஜனாதிபதிகளுக்கு இடையே சந்திப்பு..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியும் அவரது பாரியரும் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த மாலைத்தீவு ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

slmal

மனிதனின் நீண்ட ஆயுளின் இரகசியம்..!

நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.

இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.

பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது. நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம். இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர்  “டாங் சே கெய்” [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது. ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில்NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.

நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது. NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.

NF -kB ஹைபோதாலமஸில்GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது. ”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு.

“குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது” என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்). இந்த ஆய்வு குறித்து “நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.

இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய்,வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் ) திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70சதவீதம் நீட்டிக்கிறதாம். பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

மண்டேலாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை அகற்ற பரிந்துரை..!

மண்டேலாவின் உயிரை தக்கவைத்திருப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் மருத்துவத் துணை இயந்திரங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கு அனுமதிக்குமாறு நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

அசைய முடியாத தாவர நிலையில் தொடர்ந்து இருப்பதால், அவர் சுவாசிப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றை அகற்றிவிடுவது பற்றி யோசிக்குமாறு மண்டேலாவின் வைத்தியர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில மருத்துவ தகவல்களை அடிப்படையாக கொண்டு ஏ.எப்.ஃபி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வேதனையுடன் சுவாசத்தை தொடர்வதிலும் பார்க்க இது சிறந்த முடிவு என மருத்துவர்கள் கூறியுள்ளனராம். எனினும் இந்த அறிக்கைகள் குறித்து மருத்துவர்களோ, மண்டேலாவின் குடும்பத்தினரோ தகவல் எதுவும் பின்னர் வெளியிடவில்லை.

மண்டேலா இன்னமும் தான் யார் எனும் நினைவுகளை இழக்கைல்லை.  அவர் மிக மோசமான உடல்நிலையில் இருக்கிறார். ஆனால் சுயநினைவை இழக்கவில்லை. நாம் பேச முயற்சிக்கும் போது அவர் தனது கண்களையும், வாயையும் அசைத்து எம்முடன் பேச முற்படுகிறார் என மண்டேலாவின் நெருங்கிய நண்பர் டெனிஸ் கோல்ட்பேர்க் தெரிவித்துள்ளார்.

95 வயதாகும் மண்டேலா கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

9,10,11 திகதிகளில் கிளிநொச்சியில் நடமாடும் சேவை..!

தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லாத நபர்களுக்காக கெபே அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை எதிர்வரும்09, 10, 11 ஆம் திகதிகளில் கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றும் அங்கீகரிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இல்லாத நபர்களுக்கு வசதி செய்து கொடுக்கவென இந்த நட மாடும் சேவை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களம், நீதியான தும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் என் பன இணைந்து இந்நடமாடும் சேவையை நடாத்தவுள்ளன

2012 வாக்காளர் இடாப்புக்கு அமைய வட மாகாணத்தில் 85,000 பேர் தேசிய அடையாள அட்டை இன்றி இருப் பதாகவும் அவர்களில் பலருக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியா திருப்பதற்கு அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லாமையே காரணம் என தெரியவந்துள்ளது.

2013.07.09 காலை 9.30 – 4.00 ஸ்கந்தபுரம் பொது சந்தை தொகுதி கட்டடத்தில் வன்னேரிகுளம், ஆணைவிழுந்தான்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம்,கண்ணகைபுரம், கோனாவில், ஊற்றுபலம், புதுமுறிப்பு மக்களுக்கு நடமாடும் சேவையில் இடம்பெறவுள்ளது.

2013.07.10 காலை 9.30 – 4.00 கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் பொன்னகர், பாரதிநகர், மலையாள புரம்,விவாகனந்த நகர், கிறிஸ்ணபுரம், உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, அம்பால்குளம்,செல்வநகர், ஆனந்தபுரம், தொண்டமான் நகர், கனகாம்பிகை குளம், ஆம்பல் நகர்,திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம் கிளி – நகரம், பன்னன்கண்டி, கங்காபுரம்,துறைநகர் தெற்கு, துறைநகர் வடக்கு, கணேசபுரம், ஜெயந்தி நகர், பெரிய பரந்தன்,உருத்திரபுரம் வடக்கு, உருத்திரபுரம் தெற்கு, உருத்திரபுரம் மேற்கு, சிவநகர் மக்கள் கலந்து கொள்ள முடியும்.

2013.07.11 – காலை 9.30 – 4.00 வட்டக்கச்சி கிராம சேவகர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையில் மாவடியம்மன், ராமநாதபுரம், சிவிக் நிலையம்,மாயவனூர் பகுதி மக்கள் கலந்துகொள்ள முடியும்.

சிம்பாவே, இந்திய தொடர்-டோணிக்கு ஓய்வு..கோஹ்லி தலைவர்!

zimbabwe

சிம்பாவேக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாவேக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணித் தலைவராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். கோஹ்லி தலைமையிலான் இந்த அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, புஜாரா, தினேஷ் கார்த்திக், ராயுடு, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷமி அகமது, வினய் குமார், ஜெயதேவ் உனாட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அனுபவ வீரர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி சிம்பாவேயை எதிர்கொள்ளப் போகின்றது!

 

பிரபுதேவா- ஸ்ருதிஹாசன் மோதல்!!!

prabhu-deva
“ராமய்யா வத்சவய்யா” படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவாவுக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம் . இதனால், படத்தின் புரமோஷனில் ஜக்குலினை முன்னிறுத்தி செயல்படுகிறாராம் பிரபுதேவா.

நடன இயக்குனராக அறிமுகம் ஆகி மெல்ல நடிகராகி தற்போது பிரபல இயக்குனரான பிரபுதேவா ஹிந்தியில் “ராமய்யா வத்சவய்யா” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தமிழிலும் தெலுங்கிலும் வெளி வந்து வெற்றிப்படமான, “சம்திங் சம்திங்” படத்தின் ஹிந்தி ரீமேக்கான இப்படத்தில் கிரீஷ் நாயகனாகவும் ஸ்ருதி நாயகியாகவும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது பிரபுதேவா சொல்லிக் கொடுத்த நடனத்தை ஸ்ருதி சரியாக செய்யவில்லையாம். இதனால் ஸ்ருதியை பிரபுதேவா கண்டித்ததற்கு பதிலுக்கு பதில் பேசியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இருவருக்கும் இடையில் அப்போது உருவான மனஸ்தாபம் இன்னும் தொடர்கிறதாம். இந்நிலையில் ராமைய்யா வத்சாவய்யா வரும் 19ம் திகதி வெளியாகவுள்ளது.

படத்திற்கான புரமோஷன் வேலைகள் எதிலுமே ஸ்ருதி பங்கு கொள்வதில்லையாம். அதனால், பிரபுதேவா சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டிய ஜாக்குலினை வைத்து மீதமுள்ள வேலைகளை முடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களுக்கான விசா விதிமுறைகளில் மாற்றம்..!

இங்கிலாந்தில் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், விசா விதிமுறைகளை பிரான்ஸ் அரசு தளர்த்தியுள்ளது.

இங்கிலாந்து அரசு சமீபத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, கானா ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.2.5 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.

மேலும் இங்கிலாந்தில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முடியாது, விசா பெற ஆங்கில தேர்வு எழுத வேண்டும் என்று பல விதிகளை அறிவித்தது.

இந்நிலையில் மேற்படிப்புக்காக பிரான்ஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா விதிகளை தளர்த்தி பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பிரான்ஸ் தூதர் பிரங்காய்ஸ் ரெய்ச்சர் கூறுகையில், ஒவ்வொரு நாடும் அவர்களுக்குரிய விசா கொள்கைகளை கடைபிடிக்கின்றனர். இதில் எந்த நாட்டுக்கும் எவ்வித போட்டியும் கிடையாது.

தற்போதைய நடைமுறைப்படி, இங்கு உயர் கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளையும் செய்து தர திட்டமிட்டுள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு..

uk

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சம் கோரிகளின் மனுக்களை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மனுதாரரின் நாடு குறித்த பரிந்துரையின்படி (country guidance) அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தபடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்கூட இலங்கைக்கு அனுப்பப்பட்டால் துன்புறுத்தப்படலாம் என்று குடியேற்றம் தொடர்பான உயர் தீர்பாயம் தீர்ப்பளித்துள்ளதாக வழக்கறிஞர் அருண் கணநாதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

தஞ்சம்கோரிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் பெரும்பாலான சமயங்களில் அந்தக் குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் உள்துறை அமைச்சு மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, தஞ்சம் கோரிகள் குறித்த பரிந்துரையை வழங்க 9 நாட்கள் விசாரணை நடந்ததாகவும், இந்த வழக்கின் தீர்ப்பு மற்றவர்களுக்கும் பொருந்தக் கூடியது என்றும் அருண் கணநாதன் தெரிவித்தார்.

நிராகரிக்கபப்பட்ட தஞ்சம்கோரிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது என்றும் மனித உரிமை அமைப்புகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

-BBC தமிழ்-

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா..!

indwi

இந்தியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 4-வது போட்டியில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் நேற்று மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சிகார் தவான் களமிறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் ஜோடியில் இந்திய அணி 123 ஓட்டங்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் 69 ஓட்டங்களுடனும், சர்மா 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ரெய்னா (10), கார்த்திக் (6), விஜய் (27), சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில், அணித்தலைவர் விராட் கோலி அதிரடியாக விளையாடி 102 ஓட்டங்களை எடுத்து, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்தது.

இதை அடுத்து 312ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

மழை ஓய்ந்த பிறகு ஆட்டம் 39 ஓவராக குறைக்கப்பட்டது. அதே போல் 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய நடுவரிசை வீரர்கள், நிதானமாக விளையாடத் தவறினார்கள். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 39 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுளையும் இழந்து 171ஓட்டங்ளை மட்டுமே எடுத்தது. எனவே இந்தியா அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

குவைத்தில் பணம் திருடிய இலங்கையர் கைது..!

குவைத் – ரிக்கா பகுதியில் வைத்து தனது தொழில் தருணரின் காரில் இருந்து 6,500 குவைத் தினார் பணத்தை திருடிய இலங்கை ஆண் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ரிக்கா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டு ஆடை மாற்றுவதற்கு வீட்டுக்குள் சென்றவேளை தனது பணம் திருடப்பட்டதாக தொழில் தருணர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பு..!

நாளை (07) நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெனாண்டோ தெரிவித்தார்.

ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்துடன் தொடர்புடைய 11 தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஸ்கரிப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (05) அதிகாரிகளுடன் மூன்று மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதற்கு முன்னரும் பல தடவைகள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப் போவதாக ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்த போதும் பின்னர் அவற்றை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்: இலங்கைக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்..!

இலங்கை – இந்திய உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள செய்தியை பஷில் ராஜபக்ஷ குர்ஷித்திடம் தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்பு சட்ட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் சல்மான் குர்ஷித் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13வது அரசியலமைப்பு சட்டமூலத்தை வலுவிலக்கச் செய்யும் வகையில் இலங்கை செயற்படக் கூடாது என சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நினைவெல்லாம்…

இதயம் கனக்கிறசோகமாய்
மாலைக்குருவி
பாடிச்செல்கிறது..

அது உன்னை பற்றிய கவிதைகளை
ஞாபகப்டுத்துகிறது..

நினைவுத்துயர் சூழும்
வேளைகளில்
உன் பாடல்களை
திரும்பபாடுகிறது
இந்த மாலை..

நிலவிருந்து எனைத் தழுவும்
ஒளியி்ல்
உன் தன் கைகளா?

-வேலணையூர்-தாஸ்-

நேபாள முன்னாள் பிரதமருக்கும், வவுனியா சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

நேபாளத்தின் முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான மாதேவ் குமார் நேபால் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறவுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் விசேட விருந்தினராக கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை வந்திருந்த அவர் இன்று வவுனியாவில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர் நோபளத்தில் 125இற்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்ந்த போதிலும் முரண்பாடுகள் தோற்றம் பெறவில்லை. முரண்பாடுகளுக்கு வன்முறையோ யுத்தமோ தீர்வாகாது.

அனைவரையும் மதித்தும் ஒவ்வொருவருடைய சமய கலாசாரங்களைள மதித்து மனிதாபிமானத்துடன் அனைவரும் நடத்தப்படவேண்டும். இனக்குழுமங்களுக்கிடையில் விரோத தன்மை அற்றதாக உருவாக்கப்படும் போது மனிதாபிமானம் வளரும் என தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நோபாளத்தில் இடம்பெற்ற அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்து கொண்டிருந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்திருந்தார். இதனையடுத்து வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னராக காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த சிலைகளை வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் எடுத்தியம்பியும் எவ்வித பலனும் இன்றி அரசு மௌனியாக உள்ளது என தெரிவித்ததுடன் இலங்கை அரசியல் நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

இச்சந்திப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர், நேபாள முன்னாள் பிரதமரின் குடும்பத்தினர் உட்பட வவுனியா சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

vavuniya1

vavuniya3