சிறுவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு..!

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்.

முல்லைத்தீவு- வவுனியா- கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து பின் பெற்றோரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

cycle

இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பு..!

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு மலேசியா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

தன்சானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த மலேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தன்சானியாவில் இடம்பெற்ற மாநாட்டிற்காக சென்ற மலேசிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து பேசியுள்ளார்.

தன்சானியாவுக்கான விஜயத்திலிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து சீசெல்ஸிற்கான இரண்டு நாட்கள் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மூளை செயல்பாடுகளை விளக்கும் டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைப்பு..!

brain

மனித மூளையின் செயல்பாடுகளை விளக்கும் வகையில் மூளையின், டிஜிட்டல் 3டி மாதிரியை, விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள், கடந்த, 15 ஆண்டுகளாக மனித மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன் பயனாக, மனித மூளையின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் குறித்த, டிஜிட்டல் 3டி மாதிரியை வடிவமைத்துள்ளனர். 65வயது பெண்ணின் மூளையைக் கொண்டு, இந்த புதிய டிஜிட்டல் 3டி மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனித மூளையை, 7,400 சிறு துண்டுகளாக பிரித்து, அதன் மூலம் மூளையின் பல்வேறு நுணுக்கமான நரம்புகளின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு இதில் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மயிரிழையில் பாதி அளவு தடிமன் கொண்ட நரம்புகளின் செயல்பாடுகளையும், எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இந்த தொழில் நுட்பத்தில் அளித்துள்ள செயல் விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

இதில், மனித மூளையில் உள்ள கோடிக்கணக்கான, நியூட்ரான்களின் செயல்பாடுகள் தத்ரூபமாக விளக்கப்பட்டுள்ளதால், மருத்துவத் துறையில் இது ஒரு புதிய சகாப்தம் படைக்கும்´ என,பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த டிஜிட்டல் 3டி மாதிரியை, உலகின் அனைத்து நாடுகளில் உள்ள டாக்டர்களுக்கு அனுப்பி வைக்கப் போவதாக, இதை வடிவமைத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மருத்துவத் துறையில் மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் பால் பிளேச்சர் தெரிவித்துள்ளார்.

அமீருக்கு ஜோடியான மிர்த்திகா..!

யோகி படத்திற்கு பிறகு அமீர் நடித்து வரும் திரைப்படம் பேரன்பு கொண்ட பெரியோர்களே.
அரசியல் கலந்த கொமடி படமாக உருவாகும் இப்படத்தை சீன ராமசாமியிடம் தொழில் பயின்ற சந்திரன் இயக்குகிறார், அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதாம் பாலாதான் தயாரிக்கிறார்.

இதில் அமீருக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளாததால், இறுதியில் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அவரோ அர்ஜுனின் ஜெயஹிந்த் 2 பட வாய்ப்பு கிடைத்ததால், அமீர் படத்தை கண்டுகொள்ளவில்லையாம்.

இந்நிலையில் சசியின் 555 படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான மிர்த்திகாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

ரஷ்யாவைத் தாக்கிய இராட்சத விண்கல் பற்றிய திடுக்கிடும் தகவல்..!

rushya

கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் வரையில் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ரஷ்யாவின் செலியாபின்ஸ்கில் இந்த இராட்சத எரிகல் நெருப்புடன் சென்ற காட்சி பல சென்சார்களில் பதிவானது.

அணுகுண்டு சோதனை செய்தபிறகு ஏற்படும் ஒலி அலைகளின் நுணுக்கங்களை துல்லியமாக பிடிக்கும் சென்சார்கள் இந்த இராட்சத எரிகல்லின் அதிர்ச்சி அலைகளின் பாதையையும் விளைவையும் பதிவு செய்துள்ளது.இந்த இராட்சத எரிகல்லின் தாக்கம் 460 கிலோ டன்கள் டி.என்.டி.க்கு சமம் என்று பிரான்சில் உள்ள அணுசக்தி ஆணையத்தின் அலெகிசிஸ், லீ பைச்சான் என்பவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

1908ஆம் ஆண்டில் சைபீரியாவை நாசம் செய்த மிகப்பெரிய, இராட்சத எரிகல் நிகழ்வுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நிகழ்வு பதிவானது இப்போதுதான். உண்மையில் அன்று பூமியில் எதுவேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். ஏன் நிகழவில்லை என்பது பற்றி விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

சீனாவில் மீண்டும் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல்..!

சீனாவின் மேற்குப் பிராந்தியமான ஷின்ஜியாங்கில் மோட்டார் சைக்கிள்களில் பட்டாக் கத்திகளுடன் வந்த நூற்றுக்கும் அதிகமானோர் அங்குள்ள ஒரு பொலிஸ் நிலையத்தைத் தாக்கியதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இலகுவில் சென்றடைய முடியாத ஹோடன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் தொடரும் வன்செயல்களில் இறுதியாக நடந்திருப்பதாகும்.

இந்த மாகாணத்தின் மற்றுமொரு பகுதியில் இந்த வார முற்பகுதியில் இன்னுமொரு பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் பிராந்தியத்தில் சீனா காட்டமாக நடப்பதாக அந்தப் பகுதியில் உள்ள உய்குர் சிறுமான்மையினர் மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.

(BBC)

முக்கோணத் தொடரிலும் தொடருமா இந்திய அணியின் ஆதிக்கம்?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத்தீவுகளில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

2-வது லீக் ஆட்டம் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான இந்தியா- பிராவோ தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் இந்தப்போட்டியில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. இந்திய அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்குமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத்தீவுகள் ஆடு களங்கள் மிதவேகம் மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ரவிந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கலாம். வேகப்பந்தில் புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ் சிறப்பாக வீசக்கூடியவர்கள். துடுப்பாட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. சம்பியன்ஸ் டிராபியில் அதிக ஓட்டங்களை குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ரோகித்சர்மா, தினேஷ் கார்த்திக்,வீராட் கோலி, கேப்டன் டோனி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். மேற்கிந்தியத்தீவுகள் அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலம். சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்தியாவிடம் தோற்றதற்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. இலங்கையை தொடக்க ஆட்டத்தில் எளிதில் வீழ்த்தியதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

கிறிஸ் கெய்ல், டாரன் பிராவோ,பொல்லார்ட், அணித்தலைவர்பிராவோ, டரன் சமி, சுனில் நரேன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளுமே முழு திறமையை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

கமல் படத்தில் காஜல் நடிக்க மறுத்தது ஏன்?

நாயகிகள் அனைவருக்குமே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வேண்டும் என ஆசைப்படுவதுண்டு.
அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சம்பளத்தை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஆனால் காஜல் அகர்வாலோ அதற்கு நேற்மாறாக இருக்கிறாராம், சம்பள விடயத்தில் மிகவும் கறாராக இருக்கிறாராம்.

சமீபத்தில் கமல்ஹாசனின் புதிய படமான உத்தம வில்லன் படத்தில், கமலுக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் எதிர்பார்த்த சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து கமல்ஹாசன் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் மறுத்துவிட்டார்.

இதேபோன்று சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாணுடன் கப்பர்சிங்-2 படத்தில் வாய்ப்பு கிடைத்தும், சம்பள பிரச்னையால் நடிக்க மறுத்து விட்டாராம்.

முன்னணி நடிகர்களுடன் நடித்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும், அப்போது சம்பளத்தை கண்டுகொள்ள கூடாது என நெருங்கிய வட்டாரங்கள் காஜலுக்கு தொடர்ந்து அறிவுரை கூறிய வண்ணம் உள்ளனராம்.

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை இளைஞர்கள் கைது..!

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கென சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கை அகதிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் முறையான அனுமதி பெற்று செல்லவேண்டும் என விதிகள் உள்ளன.

இந்நிலையில் திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் இளைஞர்கள் 12 பேர் கள்ளத்தோணி மூலம் கடலூர் வழியாக அவுஸ்திரேலியா செல்வதாக திருச்சி க்யூ பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

திருச்சி கே.கே.நகரில் ஒரு இலங்கை இளைஞர்களை ஏற்றி கொண்டு வேன் கடலூர் புறப்பட்டு செல்ல தயாரானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து க்யூ பிரிவு பொலிஸார் அங்கு சென்று வேனை மடக்கினர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார் வேனில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். கைதான 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு 5 பேரும் அங்கு அடைக்கப்பட்டனர். மேலும் 7 பேர் குறித்து க்யூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்..!

வவுனியா பஸ் நிலைய வர்த்தக நலன்புரிச் சங்கம், டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்து நகரசபை மற்றும் சுற்றுச்சூழல் பொலிஸாரின் அனுசரணையுடன் இச்சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக வவுனியா பஸ் நிலையத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கி வந்த பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இதன்போது தீர்வு காணும் பொருட்டு பொலிஸாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

Vavuniya  bus stand

அவுஸ்திரேலியா செல்ல தயாரான வவுனியா குடும்பத்தினர் காத்தான்குடியில் கைது

arrest

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் விடுதி ஒன்றில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஐந்து குடும்ப உறுப்பினர்களை காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) அதிகாலை 12.30 மணியளவில் கிரான்குளத்திலுள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் என ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யதுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுத்திப்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்கரையிலிருந்து சட்டவிரேதமாக விற்கு செல்வதற்கு முற்பட்ட 23 பேர் பொலிஸாரினாலும் இராணுவத்தினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமலா பாலை கண்டுகொள்ளாத விஜய்..!

ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகள் அடுத்த படத்தில் இணைந்தாலோ அல்லது நிகழ்ச்சிகளின் போதோ சந்தித்து கொள்வார்கள்.
ஆனால் இந்த விடயத்தில் அமலா பால் புது வித பாணியை பின்பற்றி வருகிறார்.

ஒரு படத்தில் இணைந்து நடித்த பிறகு, அந்த நாயகர்களுடன் தொடர்பில் இருப்பாராம்.

முக்கியமாக அவர்களின் வீட்டுக்கு சென்று புது நட்பை வளர்த்து கொள்வதுடன், அவ்வப் போது ஓய்வுகள் கிடைக்கும் போது விசிட் அடிப்பாராம்.

ஆனால் சில முன்னணி ஹீரோக்கள் வீடு வரைக்கும் அனுமதிக்காத போது, சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து விருந்து அளிப்பாராம்.

இருப்பினும் சமீபத்தில் தன்னுடன் இணைந்து நடித்த விஜய்க்கு பல தடவை அழைப்பு விடுத்தும் அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.

இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறாராம் அமலா பால்.

விமானத்தின் இரு டயர்கள் வெடித்த நிலையில் அதிஸ்டத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!

இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர்.

இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது.

காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ்களின் மூலம் விமான நிலைய கட்டிடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

விமானி தக்க நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் இருந்தால் டயர் வெடித்த அந்த விமானம் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடி பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இலங்கை விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றதால் மற்ற விமானங்கள் எல்லாம் மாற்று ஓடுபாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் அந்த விமானம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறினர்.

வவுனியாவில் விபத்து – மோட்டர்சைக்கிளும் காரும் மோதியதில் இருவர்காயம்..!

வவுனியா பட்டக்காடு முதலாம் ஒழுங்கை சந்தியில் காரும் மோட்டர் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்று (29) மாலை வவுனியா குருமன்காட்டில் இருந்து பட்டக்காடு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளானது மடுவில் இருந்து வவுனியா நோக்கி மன்னார் வீதிவழியாக வந்த காருடன் முதலாம் ஒழுங்கை சந்திப் பகுதியில் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டக்காட்டை சேர்ந்தவர்களான சப்ராஸ் (வயது22), அஸ்ரப் (வயத 24) ஆகியோரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

acc1

acc2

கூட்டமைப்பின் விசேட அறிக்கை விரைவில் வெளிவரும்..!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வெளியிடவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று (29) மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த கூட்டத்தின்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் நேற்றைய கூட்டத்தில் நேரமின்மை காரணமாக குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் அவ்வறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு எண்ணியுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் இன்னும் 3,000 பேர் சிக்கியுள்ளனர்: இராணுவத் தளபதி..!

வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் மழைவெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியவர்களில் மேலும் 3,000 பேர் வரையில் இன்னும் வெளிவர முடியாமல் மாட்டிக்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அங்கு இதுவரை 800 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் மீட்பு நடவடிக்கைகளை ஆராய்வதற்காக சென்றுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், பெரும்பாலானவர்கள் பத்ரிநாத் கோவில் நகரிலேயே சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கை 350 ஆக இருக்கலாம் என்று முன்னர் ஊகிக்கப்பட்டதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 3,000 வரை இருக்கலாம் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு நிவாரண முகாம்களில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையில், மேலும் 43 சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

இந்த அழிவில் மாட்டிக்கொண்டவர்களில் இதுவரை ஒரு லட்சம் பேர் வரையில் மீட்புப் பணியாளர்களால் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

மலைப்பகுதிகளுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைத் தேடி விமானப்படையினர் தொடர்ந்தும் ஹெலிகொப்டர்கள் மூலம் அங்கு சென்றுவருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தராகண்ட் சென்ற இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், கேதார்நாத் கோவில் நகரில் சிக்கியிருந்த எல்லோரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், 500 பேர்வரையில் தற்போது மீட்கப்பட்டுவருவதாக ஹார்சில் பகுதியிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும், மேலும் 2,500 பேர்வரையில் பத்ரிநாத் கோவில் நகரில் சிக்கியிருப்பதாகவும் கூறினார்.

காலநிலை ஒத்துழைத்தால் அவர்களும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.