

அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகினார் பொண்டிங்..

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிக்கி பொண்டிங், சகல கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
38 வயதாகும் பொண்டிங், தாம் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலக இதுவே சரியான தருணம் என தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது, பொண்டிங் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
இதுவரை அவுஸ்திரேலிய அணி சார்பில் 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பொண்டிங் 13,378 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அத்துடன் 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ஓட்டங்களை விலாசியுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய அணி மூன்று உலகக் கிண்ணங்களை சுவீகரிக்க இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, அதில் இரண்டு போட்டிகளுக்கு இவர் தலைமை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆள் வளர வளர உடம்பில் ரோமமும் வளரும் அதிசயச் சிறுமி!
சீனாவில் ஒரு சிறுமிக்கு உடலின் முதுகு ,கை ,முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் பூனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது.
சீனாவின் தெற்குப்பகுதியான பென்கை எனும் பகுதியில் வசித்துவரும் 7 வயது நிரம்பிய லை சுயவான் என்ற சிறுமிக்கே இவ்வாறு காணப்படுகின்றது.
இது பற்றி மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில் இச்சிறுமி பிறக்கும் போது சிறிய மச்சமாகவே காணப்பட்டது. ஆனால் இவர் வளர வளர அதுவும் வளர்ந்து இன்று உடல் முழுவதும் பரவியுள்ளது. சாம்பல் நிறத்தில் காணப்படும் சிறிய ரோமங்களாக அது காணப்படுகிறது.
இது பற்றி குறித்த பெண் கூறுகையில் எனது உடலின் அரை வாசிக்கு இந்த மாற்றம் காணப்படுகிறது. இதனால் என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு ஏனைய சிறுவர்கள் மறுக்கின்றார்கள்.அவர்கள் எல்லோரும் என்னை பூனைப்பெண் என்று தான் அழைக்கின்றனர் என இந்த அதிசயச் சிறுமி தெரிவித்தார்.
இதே போல் சீனாவில் இன்னுமொரு சிறுவனும் காணப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.



வாய்ப்புண்ணால் அவதிப்படுகின்றீர்களா?

கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.இதனால் பேசவும் உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன்.
* வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும்.இதனால் வாய்ப்புண் சரியாகும்.
* இரண்டு கோப்பை தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும்.10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
* ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
* கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
* மஞ்சள் மருந்து அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண் வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். மறுபடியும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
* தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
* நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவி வர வாய்ப்புண் குணமாகும்.
* புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும்.
* வாழைப்பூ, வாழைப்பழம் துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும்.வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
* வாய்ப்புண்ணுக்கு மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு மட்டுமே வலி குணமாகும். அதேசமயம் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிரந்தர குணம் கிடைக்கும் என்பதே உண்மை
வவுனியாவில் பாடசாலை மாணவனைக் காணவில்லை!

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை(13.06.2013) திகதி முதல் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ்நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் சிவசூரியகுமார் சனராச் என்ற மாணவன் கடந்த 13 ஆம் திகதி காலை பாடசாலைக்கெனச் சென்ற இடத்தில் காணாமற் போயுள்ளதாகவும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ, மனிதஉரிமைக்குழுவுக்கோ அல்லது 0243248887, 0773369084 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையில் கற்கும் நான்கு சக மாணவர்கள் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புக்களில் ஏமாற்றுதலில் இலங்கை நிலைமை மோசம்..

வேலைவாய்ப்புக்கள் குறித்து பொய்ய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்களை ஏமாற்றி அழைத்துச் செல்லல் தொடர்பிலான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் வருடாந்த அறிக்கையில் இலங்கை நிலவரம் மோசமானதாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதுடன்.
தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் இரண்டாவது நிலைப் பட்டியலில் அந்த நாடு பட்டியலிடப்பட்டுள்ளது. பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு கட்டாய வேலைகளுக்காகவும், பாலியல் தொழிலுக்காகவும் இலங்கையர்கள் வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவது கணிசமாக தொடர்வதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது.
16 முதல் 17 வயது வரையிலான சிறார்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட பல இலங்கையர்கள் சவுதி அரேபியா, குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், பஹ்ரைன், லெபனான், இராக், ஆப்கான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிர்மாணப்பணியாளர்களாக, வீட்டு வேலையாட்களாக, ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களாக கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நடமாடுவதற்கான சுதந்திரத்தை இவர்களில் சிலர் இழந்துள்ளதாகவும், சிலரிடம் கடவுச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜன்சிகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் பல முகவர்கள், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் ஆண்களிடம் கணிசமான வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறுவதாகவும், பெண்கள் பலர் தமக்கு கிடைக்கும் சம்பளத்தில் இந்தப் பணத்தையும் பிடித்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் அது கூறுகிறது.
பல ஏஜன்சிகள் ஒரு வேலைக்காக ஒப்பந்தத்தை செய்துவிட்டு அதனிலும் குறைவான சிரமமான வேலைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், அனுமதி பெறாத பல துணை முகவர்கள் இதில் உதவுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் உள்நாட்டிலேயே பல இடங்களில் சிறார்கள் தொழிலாளர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் பயன்படுத்தப்படுவதாகவும், மலையக தமிழ் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பு போன்ற இடங்களில் வீட்டுப் பணியாளர்களாக பலவிதமான துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதாகவும் அமெரிக்க அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
இந்த மலையக சிறார்கள் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் அது கூறுகிறது. இப்படியான முறையற்ற ஆட்கடத்தல்களுக்கு பெருமளவில் போர் விதவைகளும், பதிவு செய்யப்படாத பெண் தொழிலாளர்களும் இலகுவில் ஆட்படுவதாகவும் அது கூறுகிறது.
சீனா, தாய்லாந்து மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் இலங்கையில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்திருகின்ற போதிலும், அவை போதுமான பலனை இதுவரை தரவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது
-BBC தமிழ்-
இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி அதன் நிதி ஊக்குவிப்புத் திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையிலேயே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாவின் மதிப்பு கடந்த புதன்கிழமை 58.72 ஆக இருந்தது. ஆனால் இப்போது 59.93 ரூபாவாக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரத்துக்குள் பணத்தை முதலிடும் அமெரிக்க மத்திய வங்கியின் திட்டத்தின்மூலம் உலகில் முன்னேறிவரும் பொருளாதார நாடுகளுக்கும் பணம் வந்துகொண்டிருந்தது.
இந்திய பொருளாதாரம் அந்நிய நிதி வருமானத்தில் பெருமளவில் தங்கியிருக்கின்றமையை இப்போதைய நாணய மதிப்பின் வீழ்ச்சி காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து வெளியில் செல்லும் பணத்துக்கும் உள்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் வருவாய்க்கும் இடையில் ஏற்படும் இடைவெளி கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்திய ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிக்கான செலவினம் அதிகரிக்கின்ற போதே இந்த பற்றாக்குறை ஏற்படுகின்றது.
இந்த பற்றாக்குறையாலும் அதிகரித்த பணவீக்கத்தாலும் இந்திய ரூபாவின் மதிப்பு ஏற்கனவே கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள்..?
பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஷவிந்ர பெனாண்டோ தெரிவித்தார்.
உயர் நீதிமன்றில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டையை தமிழ் மொழியிலும் வெளியிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்தில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.
வவுனியாவில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்..!
வவுனியா – கொக்குவெளி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மிக மோசமாக காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காடிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்..

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த காடிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.
இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.
இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.
இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இருதடவைகள் இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.
இலங்கையில் கொமன்வெல்த் பிரஜைகள் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தம்வசம் வைத்திருந்தார்கள்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஒரு தடவையும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் போதும் இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.
இப்படியாக மைதானத்தில் நுழைந்து போராட்டம் நடத்தியவர்கள் 8 பேரை தாம் கைது செய்துள்ளதாக வேல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
-BBC தமிழ்-
இலங்கையை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 38 ஓட்டங்களையும் மத்தியூஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
182 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி சார்பாக கோலி 58 ஓட்டங்களையும் தவான் 68 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிகோலினர்.
தமிழ் நாடு, திருநெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு..!
தமிழ் நாடு, திருநெல்வேலியை பூர்விகமாகவும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும்.
இதில் ஒரு நீதிபதியாக அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இந்திய மக்களின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவும் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “ஸ்ரீனிவாசன் சாதித்து காட்டியுள்ளார்” என்று புகழ்ந்தார்.
ஸ்ரீனிவாசன் பேசுகையில், “உங்களின் பாராட்டுகள் என்னை மிகவும் கௌரவப்படுத்தி உள்ளன. உங்களின் பேராதரவு என்னை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது” என்றார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் கடந்த ஆண்டு ஜூன் 11ம் திகதி, ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜனவரியில் செனட் சபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதால், ஒபாமாவின் பரிந்துரை மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல், அந்த பரிந்துரை ஜனாதிபதிக்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஒபாமா மீண்டும் ஸ்ரீனிவாசனை இப்பதவிக்கு பரிந்துரைத்தார். இதில், அரிதிலும், அரிதாக 97,0 என்ற ஏகோபித்த செனட் சபை ஆதரவுடன், ஸ்ரீனிவாசன் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிறினிவாசன் ஹவாய் சட்டக் கலூரியில் பயின்றவர். இவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் அமெரிக்காவில் விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நட்பிற்காக சிவகார்த்திகேயனுடன் வடிவேலு..!!
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த அளவிற்கு அவரது பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன.
அவரது கொமடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது கொமடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து கொமடி செய்திருந்தார் வடிவேலு.
தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர்.
ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வவுனியா வைத்திய சாலையில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு..!!
அரசாங்க தாதிமார் சங்கத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா வைத்தியசாலை முன்றலில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அரசே ஒரு வாரத்திற்கான வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்று, ஆபத்து கொடுப்பனவு அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் வழங்க வேண்டும், மேலதிக நேர கொடுப்பனவு என்பன அதிகரிக்கப் பட வேண்டும், அரசே 1979 ல் வெளி வந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும், பட்டதாரி தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனத்தை வழங்கு, சேவை மூப்பு அடிப்படையின் அடிப்படையின் படி மூத்த தாதியர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கு என்பவற்றை முதலான கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடை பெற்றது.
இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டிக்கு விசேட பாதுகாப்பு..!
பிரித்தானியாவில் இன்று இடம்பெறும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அந்நாட்டு பொலிஸாரிடம் விடுத்துள்ளார்.
விசேட பாதுகாப்பு தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகர் மூலமாக ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியின் போது தமிழ் உணர்வாளர்களினால் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின்போதும் இலங்கை அணிக்கு எதிரான நடவடிக்கைகள் பிரித்தானியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்றைய போட்டியின் போதும் குழப்பமான சூழ்நிலை நிலவப்பெறும் பட்சத்தில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை..!!
கடும் காற்று காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னாரிலிருந்து பொத்துவில் ஊடாக காலி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மீனவர்களுக்கும் கடற் பிரதேச மக்களுக்குமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடற் பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என அவ் நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிற்கும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிற்கும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை நிலவப்பெறும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.



