பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக அழைத்துச் சென்ற கும்பல்!

pakistan-day பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ஆதரவோடு ஒரு கும்பல் கிறிஸ்தவ பெண்களை தாக்கி நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பிஎம்எல்-என் கட்சியின் ஆதரவுள்ள நிலச் சொந்தக்காரர் அப்துல் ராஷீத் என்பவரின் மகன் மொஹமட் முனீர். அவரால் அனுப்பப்பட்ட அடியாட்கள் சிலர் கடந்த 3ம் திகதி இரவு கிறிஸ்தவ குடும்பம் ஒன்று வசிக்கும் வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டு ஆண்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தனர். வீட்டில் அர்ஷத் பீபி, சாஜிதா பீபி மற்றும் சௌரியா பீபி ஆகிய 3 பேர் மற்றும் அவர்களது மாமனார் சாதிக் மாசிஹ் மற்றும் மாமியார் ராணி பீபி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அந்த அடியாட்கள் சாதிக்கின் மகன்களைத் தேடினர். அவர்கள் இல்லாததால் மருமகள்கள் 3 பேரையும் அடித்து உதைத்து அவர்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினர். பின்னர் அவர்களை வெளியே இழுத்து வந்து ஊராருக்கு அவர்கள் கோலத்தை காட்டினர்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயினர். அந்த 3 பெண்களும் உதவி கேட்டு அலறியதையடுத்து ஊர் பெரியவர்கள் தங்கள் தலைப்பாகையை கழற்றி அந்த அடியாட்களின் பாதங்களில் வைத்து பெண்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். இதையடுத்து அடியாட்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் பொலிஸாரிடம் சென்றால் அவ்வளவு தான் என்று ஊர் மக்களை மிரட்டிவிட்டு சென்றனர்.

முன்னதாக சாதிக்கின் வீட்டு ஆடுகள் முனீரின் வயல்களில் புகுந்துவிட்டதாம். ஆடுகள் பயிர்களை சேதப்படுத்தியதாக முனீர் தெரிவித்து அவற்றை பிடித்து வைத்துக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை சாதிக்கின் மகன் சௌகத் முனீரை சந்தித்து ஆடுகளை விடுமாறு கேட்டுள்ளார். அதற்கு முனீர் சௌகத்தை அறைய பதிலுக்கு அவர் முனீரை அறைந்துவிட்டார். இதனால் தான் முனீர் ஆட்களை அனுப்பி பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

யூலை 5ம் திகதி வெளிவரும் சிங்கம் 2..!

கொலிவுட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சிங்கம் 2.
பரபர விறுவிறு காட்சிகளில் கவனம் ஈர்ப்பவர் அருவா இயக்குநர் ஹரி. சிங்கம் கதையின் தொடர்ச்சியை சிங்கம் 2வில் தொடர்ந்தாலும், சூர்யாவுக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும்.

சிங்கம் படத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளைப் புரட்டி எடுத்த சூர்யா, சிங்கம் 2வில் தூத்துக்குடியில் உலாவும் கடத்தல்காரர்களையும், பெரிய பெரிய டான்களையும் துவாம்சம் பண்ணுகிறாராம்.

பள்ளிக்கூட மாணவியாக நடிக்கும் ஹன்சிகா தான் சர்வதேசக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சூர்யாவுக்கு உதவி செய்கிறாராம்.

இதைத் தெரிந்து கொண்ட பெரிய டான் ரகுமான், அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் ஹன்சிகாவைக் கொன்று விடுகிறார்.

ஹன்சிகா இறந்த பின்பு சூர்யா வெறித்தனமாக வேட்டையாடி ரகுமான் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து எல்லா டான்களின் சதிச் செயல்களையும் முறியடிப்பதே சிங்கம் 2வின் கதையாம்.

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிங்கம் 2’ படம் யூலை 5ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் இப்படம் வெளியாகிறது. ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் வெளியிட இருக்கின்றனர்.

சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக ‘அளவு கடந்து’ செல்கிறது

சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும் அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.

மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.

300 PSI-ஐ தாண்டிவிட்டால் அது ஆபத்தான அளவைத் தாண்டிவிட்டதாக கருதப்படும்.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.

முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.

இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.

அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.

singapore

ஒளிப்பதிவாளர் இல்லை – மீண்டும் மதுரைக்கே திரும்பிய வடிவேலு..

vadivelu

ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததால் வடிவேலு மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு.

தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி இரண்டு ஆண்டுகளாக மதுரையில் இருந்தார்.

இந்தநிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் படப்படிப்பில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம்.

இதையெல்லாம் பார்த்த வடிவேலு அதிருப்பதி அடைந்து மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

 

இந்தியா-சிம்பாப்வே ஒரு நாள் தொடர்..

Zim-vs-ind

இந்திய கிரிக்கெட் அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி ஜூலை 24-ந் திகதி முதல் ஒகஸ்டு 3-ந் திகதி வரை சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

ஜூலை 24-ந் திகதி, ஜூலை 26, ஜூலை 28, ஜூலை 31 மற்றும் ஒகஸ்டு 3-ந் திகதி ஆகிய நாட்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன. இதில் முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும், கடைசி இரு ஆட்டங்கள் புலவாயோவிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 2-ம் தர அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

2010-ம் ஆண்டு அங்கு நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சுரேஷ் ரெய்னா தலைமையில் பங்கேற்றது நினைவு கூறத்தக்கது.

 

 

மும்பையில் கட்டிட விபத்து: 9 பேர் பலி..!

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே மாவட்டத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டுமனைக் கட்டிடமே இன்று அதிகாலை இடிந்துவிழுந்துள்ளது.

கட்டிடம் இடிந்தமைக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பொதுவாக இந்த நகரங்களில் அமைந்துள்ள கட்டிடங்களில் மோசமான கட்டுமான குறைபாடுகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தானே மாவட்டத்தில் இதற்கு முன்னரும் கடந்த ஏப்ரல் மற்றொரு கட்டிடம் இடிந்துவிழுந்ததில் 74 பேர் பலியானார்கள்.

இம்மாதத்தின் ஆரம்பத்திலும் மும்பை நகரில் 5மாடிக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இன்று காலை இடிந்துவிழுந்த கட்டிடத்தில் 9 குடும்பங்களின் வீட்டுமனைகள் அமைந்துள்ளன. பலரும் தூக்கத்தில் இருந்தபோது கட்டிடம் இடிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் பருவமழையால் இந்தப் பழைய கட்டிடம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

mumbai

வரலாறு காணாத அளவு சம்பளத்தை உயர்த்திய அனுஷ்கா, நயன்தாரா..

nayantara-anushka

நயன்தாரா, அனுஷ்கா சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை. இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவே சம்பளத்தை வரலாறு காணாத அளவு ஏற்றி உள்ளனர்.

நயன்தாரா தெலுங்கில் நடிக்கும் அனாமிகா படத்துக்காக இந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படம் ஹிந்தியில் ஹிட்டான கஹானி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

ஹிந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். கர்ப்பிணியாக நடிப்பதற்காகவே ரூ.2 கோடியை அள்ளி கொடுத்துள்ளனர்.

தமிழில் நயன்தாரா அஜித் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் ஆர்யாவுடன் ராஜாராணி படத்திலும் மற்றும் உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதலி படத்திலும் நடிக்கிறார்.

இப்படங்களுக்கு இரண்டு கோடிக்கு குறைவாகவே சம்பளம் பேசி உள்ளார். தெலுங்கில் சம்பளம் ரூ.2 கோடியானதால் அடுத்து ஒப்பந்தமாகும் புதுப் படங்களுக்கு ரூ.2 கோடி கேட்க முடிவு செய்துள்ளாராம்.

இதுபோல் அனுஷ்கா ருத்ரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடிக்க ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். இதற்காக வாள் சண்டையும் கற்றார்.

தமிழ், தெலுங்கு இரசிகர்கள் இரு நடிகைகளையும் கனவு கன்னியாக வைத்து கொண்டாடுவதை சம்பள உயர்வு வெளிப்படுத்தி உள்ளது என்கின்றனர்.

 

 

பஸ் கட்டணம் உயருமா? திங்களன்று பேச்சுவார்த்தை..!

பஸ் கட்டண உயர்வு குறித்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை, மாகாண போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பஸ் கட்டண உயர்வு குறித்து மட்டுமன்றி நேர்த்தியான போக்குவரத்து சேவை, ஒன்றிணைந்த கால அட்டவணை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இங்கு பேசப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து பேச சம்பந்தம் இல்லாத நபர்களை அழைத்துள்ளமைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வட இந்திய வெள்ளம்: ஐநூறுக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு..!

வட இந்தியாவில் கடுமையான பருவ மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசாங்கம் கூறுகிறது.

பாலங்களும் சாலைகளும் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை அடுத்து ஐம்பதாயிரம் பேர் வரையிலானோர் சிக்குண்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள கேதர்நாத் என்ற புனித நகரமும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன.

இங்குள்ள கோயில்களுக்கு யாத்திரை வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை இந்திய ராணுவம் முன்னின்று செயல்படுத்துகிறது.

மிகவும் ஒதுக்குப்புறமான மலைப் பகுதிகளை இன்னும் சென்று சேர முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Flood_india_PTI

நில்வளா கங்கையில் நீராடிய பெண் முதலைக்கு இரை!

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவில் கந்துவ, ரஜகல்கொட பகுதியில் நில்வளா கங்கையில் நீராடச் சென்ற பெண்ணை முதலை இழுத்துச் சென்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 43 வயதுடைய கமலாவதி என்ற பெண்ணே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளார்.

கம்புறுபிட்டி பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாலிம்பட பிரதேச சபை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கம்புறுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நடைபெற்று வரும் வடமாகாண கால்பந்தாட்ட போட்டிகளில் மன்னார் மாவட்ட அணிகள் ஆதிக்கம்..

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் பெரு விளையாட்டு அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முதலாம், இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவுற்று, மூன்றாம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் 15, 17, 19 வயது இருபாலாருக்குமான கால்பந்தாட்டப் போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான போட்டியில் மன்னார் சென்.சேவியர் அணி சம்பியனாகியது. இரண்டாமிடத்தினை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை இளவாளை சென்.ஹென்றிஸ் அணி பெற்றுக்கொண்டன.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான போட்டியில் முதலிடத்தினை மாதகல் சென்.ஜோசப் வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாமிடத்தினை கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயமும், மூன்றாமிடத்தினை கிளிநொச்சி சிவநகர் ஜி.ரி.எம்.எஸ் உம் பெற்றுகொண்டன.

இன்று வெள்ளிக்கிழமை எஞ்சிய பிரிவு அணிகளுக்கிடையிலான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

f1 f2 f3

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் யாழ். வலயத்திற்கு முதலிடம்..

Sri-Lanka-sports

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் 2013ஆம் ஆண்டுக்கான மாகாணப் பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று வியாழக்கிழமைவரை இடம்பெற்ற போட்டியில்; யாழ். வலயம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வடமாகாண வலயங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் வருமாறு

நிலை             வலயம்                   புள்ளிகள்
01                      யாழ்ப்பாணம்              421
02                     வலிகாமம்                    250
03                     வடமராட்சி                   212
04                     கிளிநொச்சி                   114
05                     முல்லைத்தீவு             99
06                     வவுனியா வடக்கு      68
07                     மன்னார்                           65
08                     தென்மராட்சி                 63
09                     வவுனியா தெற்கு        53
10                     தீவகம்                              27
11                     துணுக்காய்                    14
12                     மடு                                     00

 

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் டில்ஷான் பங்கேற்க மாட்டார்..

tillakaratne dilshan

மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் திலகரத்ன டில்ஷான் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற போட்டியில் காயமடைந்ததன் காரணமாகவே அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

இலங்கை, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 28ம் திகதி, மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை வீரர்கள் பயிற்சி பெறும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரி முற்றுகை..!

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் குன்னூர் இராணுவ பயிற்சி கல்லூரியை வரும் ஜூன் 25ஆம் திகதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது.

கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக் கருதுகிறது. தமிழர்களின் தன்மானத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறது. தமிழக அரசும், தமிழ் நாட்டில் மான உணர்வுள்ள அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் இந்தத் துரோகச் செயலுக்குப் பலத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்ததையும் காங்கிரஸ் அரசு பொருட்படுத்தவே இல்லை.

கடந்த மே 27-ஆம் திகதியில் இருந்து சிங்கள இராணுவத்தின் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகியோர் பயிற்சியைத் தொடருவது மட்டுமல்ல; அக்கொடியோருக்கு நீலகிரி மாவட்டத்தில் இன்பச் சுற்றுலாவையும் நடத்தி இருக்கிறது.

ஒரு பக்கத்தில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நாளும் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கிறது. நாதியற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம்; மானமும் வீரமும் அழிந்து விடவில்லை என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டியது நமது தலையாயக் கடமையாகும்.

எனவே, 25-ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியை முற்றுகையிடுவோம். மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

எங்கள் தொப்புள்கொடி உறவுகளை, தமிழ்க்குலச் சொந்தங்களைக் கொன்று குவித்த இரத்தம் தோய்ந்த கரங்களோடு உலவுகிற சிங்களக் கொடியோருக்கு எங்கள் மண்ணிலேயே பயிற்சியா? இந்திய அரசே! அக்கொடியோரை உடனே வெளியேற்று! எனும் கோரிக்கையை முன்வைத்து முற்றுகைப்போர் நடத்துவோம். நானும் உங்களோடு பங்கேற்கிறேன். இந்திய அரசுக்கு பாடம் புகட்ட, தமிழகத்தை ஆயத்தப்படுத்த இந்த அறப்போர் களத்தில் அணிதிரள்வோம் வாரீர்”.

இவ்வாறு வைகோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோதரை பகுதியில் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு..!

மோதரை விஸ்னு கோவில், கரவலவாடிக்கு அருகில், உடலில் மண்ணென்னையை ஊற்றி தீவைத்துக் கொண்ட நபர் இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 3 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர், மோதரை பகுதியைச் சேர்ந்த, 58 வயதான மொஹமட் பரூஸ் எனத் தெரியவந்துள்ளது.

எனினும் இவர் தீவைத்துக் கொண்டமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மோதரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வியால் இளைஞர் ரயிலில் தலைவைத்து தற்கொலை..!

கொழும்பு கோட்டையில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற ரயிலில் தலைவைத்து இன்று  முற்பகல் 11.25 அளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாரவில பொலிஸ் பிரிவில் நாத்தன்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பகஹவாடிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய தசுன் பிரியங்கர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மனக்கவலையை அடுத்து குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.