சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி மழை காரணமாக தாமதம்..!

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி, கூக் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.

இதன்படி நாணய சுழற்சியை வசப்படுத்திய இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வீதியை விட்டு விலகிய பஸ்: இரு சிறுவர்கள் பரிதாப பலி..!

கேகாலை, ரம்புக்கன பிரதான வீதியில் தளுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

பெண் ஒருவருடன் வீதியில் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் இருவரே பஸ் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (22) இடம்பெற்ற இவ் விபத்தின்போது சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த பெண் ரம்புக்கன பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் ரம்புகன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன் குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்..!

ACCIDENT_logo

வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் 16ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு சைக்கிளொன்றில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியே இவ்விபத்து ஏற்பட்டதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தேர் திருவிழா காணொளி..!

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்பாள் மற்றும் அம்பாள் தேரில் இருந்து பச்சை சாத்தி வரும் காட்சிகள்.

காட்டுத் தீ பரவ காரணமான நிறுவனங்களுக்கு எதிராக சிங்கப்பூர் சட்ட நடவடிக்கை..!

இந்தோனேசியாவில் காட்டுத் தீயை உண்டுபண்ணி தமது காற்றுமண்டலத்தை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கபூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தக் காடுகளை எரித்து அங்கு பால்ம் எண்ணெய் பண்ணைகளை அங்கு உருவாக்கிவருவதாக கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.

தேவைப்பட்டால், இதில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களை இலக்குவைத்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

எல்லா நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு இந்தோனேசியாவிடமே இருப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் சிங்கப்பூரில் மாசுமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி வானத்தில் நீலம் தென்படத் தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளியன்று 401 பிஎஸ்ஐ வரை சென்ற மாசு மண்டலத்தின் அளவு, இன்று காலை 73 பிஎஸ்ஐ வரை குறைந்திருந்தது.

காற்று மாசடைந்துள்ளதால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசல்ரீ நீர் தேக்க வான் கதவுகள் திறப்பு..!

காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்ற மட்டத்தை அடைந்துள்ளது.

காசல்ரீ நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் அடிப்பகுதியில் உள்ள நீரை வெளியேற்றும் அவசர கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (23) காலை முதல் அணைக்கட்டின் 12 வான் கதவுகளையும் மேவி நீர் வழிந்தோட ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிகழ்வு சுமார் 43 வருடங்களுக்கு முதல் இடம்பெற்றதாக இதற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் களனி ஆற்றை அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்களை அவதானமாக செயற்படுமாறு இடர் முகாமைத்து நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

fall

வாழைப்பழம் சாப்பிடுவதால் நன்மை உண்டா?

 

banana

வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

அதில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

ஒவ்வாமை(Allergy)

ஒவ்வாமையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ அமிலங்கள் நிறைந்திருப்பதால் இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்கும்.

இரத்த சோகை

அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தலைபாரம்

மது அருந்தியதால் ஏற்படும் தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி உடலை சீராக இயங்க வைக்கும்.

புகைப்பிடித்தலை நிறுத்த

வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான விட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.

மன அழுத்தம்

வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம்  மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தைப் போக்கி மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

குடல் கோளாறு

தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால் புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் சமிபாடும் சீராக நடைபெறும்.

மூளை செயல்பாடு

பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால் மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும்.எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு அன்றைய நாளை தொடங்குங்கள்.

எடை குறைய

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால் உடல் எடை குறையும்.

 

பேஸ்புக் ஆபத்தானதா?

facebook

இன்றைய நவீன உலகத்தில் சமூக வலைத் தளங்கள் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருகிறது. பெரியவர்கள் மூதல் இளைஞர்கள் வரை எல்லோரும் இதை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் மிகவும் பிரபலமாக உள்ளது.

நண்பர்களிடையே தகவல் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள அரட்டை அடிக்க என பல பயன்பாடுகள் இதில் உள்ளன. உலக அளவில் உள்ள பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் அன்றாட நிகழ்ச்சிகளை பற்றி அறியவும் இது உதவுகிறது. இத்தனை சிறப்புகள் உடைய பேஸ்புக் பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பதே உண்மை.

ஆம் கடந்த ஆண்டு வரை பேஸ்புக் தனது 6 மில்லியன் பயனீட்டாளர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் இ-மெயில் களை அதிகாரமற்ற பார்வையைளர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பேஸ்புக் நிறுவனமே நேற்று வெளியிட்டது.

இதற்க்கு காரணம் “டேட்டா லீக்கேஜ்” தான் என்றும் இந்த பிரச்சனை 2012 முதலே உள்ளதாகவும் உலக அளவில் உள்ள தனது 1.1 பில்லியின் பயனீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இதை தெரிவிப்பதாகவும் கூறியது. பேஸ்புக் பயனீட்டாளர்கள் தங்களுக்கு தேவையானவர்களை பற்றிய தகவல்களை தரவிறக்கம் செய்யும் பொழுது தேவையற்ற மற்றவர்களின் பற்றிய தகவல்களும் வருவதாக கூறியள்ளனர்.

இதை பற்றி அறிந்த பேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் தனது பாதுகாப்பு குழுமத்திடம் 24 மணி நேரத்தில் இந்த பிரச்சனையை சரி செய்யும்மாறு கட்டளையிட்டுள்ளது. ஆனால் தனது பயனீட்டாளர்களுக்கு இதை பற்றிய தகவலை நேற்று தான் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சனை பூதாகாரமாக இருப்பதற்க்கான ஆதாரம் இல்லை என்றும் ஆனால் இது போன்ற பிரச்சனைகள் திரும்பவும் வராமல் இருக்க நாங்கள் இரு மடங்காக உழைப்போம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தனது பிலொக் இல் தெரிவித்துள்ளது. பேஸ்புக்,கூகுள்,யாஹூ,மைக்கிரோசொப்ட் மற்றும் அப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேட்டாகளை பாதுகாப்பிற்காக யு.எஸ் இண்டலிஜன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஆரம்பித்துள்ளது.

 

விளம்பர நிறுவனங்களை போட்டி போட வைத்த தவான்!!

dhawan

சர்வதேச கிரிக்கெட்டில் ஹட்ரிக் சதம் அடித்த ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்ய விளம்பர நிறுவனங்கள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மொகாலி டெஸ்டில் இந்தியாவின் ஷிகர் தவான் சதம் (187) அடித்தார்.

அடுத்து சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் தென் ஆப்ரிக்கா (114), மேற்கிந்திய தீவுகள் (102) அணிகளுக்கெதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். இப்படி ஹட்ரிக் சதம் அடித்ததால் இவரது மதிப்பு உயர்ந்து விட்டது. பல்வேறு விளம்பர நிறுவனங்கள் இவரை மொடலாக ஒப்பந்தம் செய்ய துடிக்கின்றன.

வீராட் கோஹ்லி, ரோகித் சர்மா, முரளி விஜய் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ள கார்னர்ஸ்டோன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பன்ட்டி சாய்தே கூறுகையில், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஷிகர் தவான், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது தான் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பது உறுதி. இவரை எங்கள் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வருகிறோம்.

இவரது கிரிக்கெட் பயணம் அடுத்த ஆறு மாதத்தில் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஏனெனில் விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

இதற்குள் அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எங்களைத் தவிர மூன்று முதல் நான்கு நிறுவனங்கள் ஷிகர் தவானை ஒப்பந்தம் செய்து விட வேண்டும் என்று துடிக்கின்றன எனவும் கூறினார்.

ஷிகர் தவானை விட பெரியளவில் முறுக்கு மீசை வைத்திருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெர்வ் ஹியுஸ் கூறுகையில், ஷிகர் தவானின் மீசை அவரது ஆளுமைத் தன்மையை உணர்த்தலாம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் இது அவருக்கு சோறு போடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போதுள்ள நிலையில், இவரது மீசைக்கு பணம் தர எதாவது நிறுவனங்கள் வந்தால், அதை வரவேற்க வேண்டும் என்றார்.

 

சவுதியிலிருந்து 13,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை..!

சவுதி அரேபியாவில் விசா இல்லாது தங்கியிருக்கும் 15 லட்சம் வெளிநாட்டவர்கள் விசா பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சவுதியில் விசா இல்லாது வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதிவரை விசா பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வீசா இல்லாது அந்நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தொடர்ந்து 13,000 இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகள் தொடர்பில் சவுதியிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை சவுதியிலுள்ள இலங்கை பிரஜைகளின் உறவினர்கள் அவர்கள் தொடர்பான தகவல்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

சவுதி அரேபியாவில் ஆறு லட்சம் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிப்பு: ஹக்கீம் கடும் கண்டனம்

இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

இது குறித்து கல்முனையில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று தெரிவித்த அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி, சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.

அதேவேளை 13வது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது அமைப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் ஹசன் அலி கூறியுள்ளார்.

மிக அமைதியான முறையில் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!!

vijay birthday
இளைய தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை மிக அமைதியான முறையில் கொண்டாடி உள்ளார்.வழக்கமாக ஒவ்வொரு பிறந்த நாளன்றும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம், ஏழைகளுக்கு இலவச பொருட்கள், அன்னதானம் வழங்கி விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடுவார் விஜய்.

ஆனால் இந்த முறை மிக அமைதியான முறையில் கொண்டாடியுள்ளார். இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடினாராம்.

அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர். கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணியை பரிமாறினாராம்.

இதற்கு அரசியல் நெருக்கடிகள் தான் காரணம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

இன்றும் மீன்பிடியில் ஈடுபடுவது நல்லதல்ல..!

புத்தளத்திலிருந்து காலி நோக்கி ஹம்பாந்தோட்டை வரையாக கடற் பரப்பு இன்றும் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலைம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் கடற்தொழில் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் எனவும் இது கிலோ மீற்றருக்கு 70ஆக இருக்கும் எனவும் அவ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு!

human_feet_jaffna
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த பாதச்சுவடு உருவாக்கியமைக்கு விஞ்ஞான ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றது. பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40 அடி மனிதன் ஒருவன் காலை வைத்ததால் உருவானதாகவும் இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும் போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

பிறந்தநாள் கொண்டாடும் இளைய தளபதி விஜய் சுவாரஸ்ய தகவல்கள்..

vijay 39

இளைய தளபதி விஜய் இன்று தனது 39வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்ஷன் அதிரடியும், காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்

  • முதல் நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜயகாந்த்தோடு நடித்த செந்தூரபாண்டி, விஜய்யைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதை மிகவும் பெருந்தன்மையோடு இப்போதும் ஒப்புக்கொள்வார் விஜய்.
  • பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் வரை 23 பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் ஏனோ பாடுவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது துப்பாக்கி, தலைவா என அடுத்த ரவுண்டை ஆரம்பித்திருக்கிறார்.
  • விஜய்க்குத் திருமணம் ஆனவுடனேயே அவரது காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார் மனைவி சங்கீதா. இன்றுவரை அவர் தேர்ந்தெடுத்துத் தருகிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது.
  • திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ்சில் உட்கார்ந்துவிட்டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரையாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீர்கள்.
  • ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடிவந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார். வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன்று முழுவதும் அம்மா பக்கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்.
  • எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந்து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்துவிட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான டிவிடி கலெக்ஷன் வைத்திருக்கிற பெருமை அவருக்கு உண்டு.
  • நொன்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை.
  • விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடையாது.
  • ஹிந்தியில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந்திப் படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்.
  • ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை ஹாய் கீஸ் எனக் கூப்பிடுவார். எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் வாங்க போங்க தான்.
  • வருஷத்துக்கு ஒரு தடவையாவது மனைவி, குழந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்சநாள் இருந்த பிறகு, பயணம் அதற்கடுத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவடையும். எந்த நாட்டுக்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பையன் சஞ்சய்தான்.
  • தி.நகரில் சூர்யாவின் அடுத்த வீட்டுக்காரராக இருக்கிற டைரக்டர் பாரதிராஜா, கொட்டிவாக்கத்தில் விஜய்க்குப் பக்கத்துவீட்டுக்காரராக இருக்கிறார்.
  • விளையாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார். டென்னிஸில் விடாப்பிடியாக இவரிடம் ஜோடி கட்டுவது மகன் சஞ்சய்தான்.
  • சஞ்சய்யின் ஒவ்வொரு வயது கூடும்போதும் அவனது நடவடிக்கைகளை வீடியோவில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போகிற பெரிய பரிசு அதுதான்.
  • அப்பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல பேசிக் காட்டியது அண்ணாமலை பட வசனம்தான். அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்.
  • நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்.
  • நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழைப்பது மச்சி. மற்றவர்களை விஜய் அழைப்பது என்னங்கண்ணா.
  • கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய். நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தோடு வந்தால், அழகிய தோசை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன்தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்.
  • எப்போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்.
  • வீட்டின் வராந்தாவில் காத்திருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு.
  • அம்மா ஷோபா சந்திரசேகர் இசைக் கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்துவார். அம்மாவின் கச்சேரிகளுக்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போதும்.
  • மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷாவும் அப்பாவின் நடிப்பில் ஆர்வமாக இருந்தாலும் படிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜய். நாலு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் விளையாடுகிறாள் சாஷா.
  • எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய். தமிழில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக நிற்கிறார். சமீபத்தில் பிரபுதேவாவின் விருப்பத்திற்காக ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய் கன்னாவுடன் ஒரு குத்தாட்டம் போட்டார்.
  • விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. உலக அழகி ப்ரியங்கா சோப்ரா அறிமுகமானது விஜய்யுடன் ஜோடி சேர்ந்த தமிழன் படத்தில் தான்.
  • ஜாலியாக ரிக்கார்டிங்கில் உட்கார ஆசைப்படுவார் விஜய். எப்போதும் அவரது சமீபத்திய பாடல்களின் முணுமுணுப்போடுதான் காணப்படுவார் விஜய்.
  • வெளிநாடு படப்பிடிப்பு செல்லும் போதும் சரி, வரும் போதும் சரி முதலில் அம்மாவிற்கு ATTENDANCE கொடுத்து விட்டு தான் தனது வீட்டிற்கு செல்வார்.
  • ஒவ்வொரு படம் முடியும் போதும் அதில் பங்குபெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்து மகிழ்வது விஜய் வழக்கம்.

 

 

வவுனியாவில் சுயதொழில் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா..

vavuniya

வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தால் முதல் தடவையாக வழங்கப்பட்ட குறுகியகால சுயதொழில் பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் நேற்று (21) வவுனியா றோயல் காடின் மண்டபத்தில் வழங்கப்பட்டது.

பாடசாலையை விட்டு விலகிய 37 பேருக்கு சுயதொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக வழங்கப்பட்ட இப் பயிற்சி நெறியில் காளான் வளர்ப்பு, தேனி வளர்ப்பு, நாற்று மேடை தொழில்நுட்பம், சேதன விவசாயம், உணவு பதனிடல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பிரதம விருந்தனராக கலந்து கொண்டிருந்ததுடன் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு, தேசிய வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் ஆட்டிக்கல, வவுனியா பிரதேச செயலாளர் கே. உதயராசா, வவுனியா வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எம். உவைஸ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.