கிளிநொச்சி பிரமந்தனாற்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரமந்தனாறு சுண்டிக்குளம் வீதியில் இரவு 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடித்துக் கொலை செய்யப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் வெளிச்சம் இல்லாமல் செல்வதாகவும் இதனால் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் அவருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் இறந்தவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பாக நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், அமலபால் ஜோடியாக நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் தலைவா. இந்த படத்தை வெளியிட்டால் திரை அரங்குகளில் குண்டு வைப்போம் என்று ஒரு தரப்பினர் மிரட்டல் விடுத்ததன் காரணமாக படம் குறிப்பிட்ட திகதியில் வெளியாவது தடைபட்டது.
இருப்பினும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தலைவா’குறிப்பிட்ட திகதியில் வெளியானது. இதனால், இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. இதனால் படக்குழுவினர் பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் சென்னை காவல்துறை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தலைவா திரைப்படம் கடந்த ஆக 9ம் திகதி உலகமெங்கும் வெளியாகி இருந்தது. ஆனால் திரையரங்குகளுக்கு வந்த மொட்டை கடிதங்களாலும், தொலைபேசி மிரட்டல்களாலும் திரையரங்கு உரிமையாளர்கள் தலைவா திரைப்படத்தினை வெளியிட மறுத்து வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் மட்டும் தடைசெய்யப்பட்டு திரைக்கு வெளிவராத சூழல் அமைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த பொருள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை தவிர உலகமெங்கும் வெளியான காரணத்தினால் தலைவா திரைப்படம் அனுமதியின்றி இணையதளத்திலும், விசிடி வழியாகவும் தமிழகமெங்கும் புற்றீசல் போல பரவி உள்ளது.
தமிழகத்தில் தலைவா திரைப்படம் வெளிவர பல வகையில் முயற்சித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாத காரணத்தினால் தலைவா படத்தில் நடித்த நடிகர் விஜய், சத்யராஜ், அமலாபால் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தலைவா திரைப்படம் தமிழகத்தில் உடனடியாக வெளியாக வேண்டி ஆக.16 அல்லது 17 திகதி அரசு அனுமதி கொடுக்கும் இடத்தில் அடையாள உண்ணாவிரதம் இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கிரிக்கெட் லீக் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை, ஆண் வீரர்களுடன் இணைந்து விளையாடி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அவரது பெயர் கோலே வால்வெக். 20 வயதான இவர் போல்டன் அசோசியேஷன் லீக் போட்டியில் கலந்து கொண்டு வால்ஷா அணி சார்பாக விளையாடினார்.
இந்த அணி கோல்பேன் அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. வால்ஷா அணியில் சக வீரர்கள் அனைவரும் ஆண்களே. கோலே மட்டும்தான் பெண் ஆவார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆண்களோடு இணைந்து ஆடிய முதல் பெண் என்ற பெருமை கோலேவுக்குக் கிடைத்தது.
போல்டன் அசோசியேஷன் லீக் 125 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகும். இந்த வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் ஆண்களுடன் இணைந்து ஆடியது இதுவே முதல் முறையாகும்.
பந்து வீச்சாளரான கோலே 11 ஓவர்கள் பந்துகளை வீசி 4 விக்கெட்களையும் பறித்து சாதனை படைத்தார். இதன் மூலம் தனது அணிக்கும்அவர் வெற்றி தேடித் தந்தார்.
வெற்றிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” நான் ஆட வந்தபோது அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆனால் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். அணியில் நான் மட்டுமே பெண்ணாக இருந்ததை நான் கவலைப்படவில்லை” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ” நான் பந்து வீச முயன்றபோது என்னை அவர்கள் கேலி செய்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தவில்லை” என்றார். கோலே, தனது 8 வயது முதலே வால்ஷா அணிக்காக ஆடி வருபவர் ஆவார். மேலும் அவர் கால்பந்திலும் விளையாடுகிறார்.
பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில், இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவலை மறைத்ததாக இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தொடரின் போட்டி ஒன்றில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு இலங்கை வீரர் ஒருவர் அணுகப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார். எனினும் இது குறித்த அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு தகவல் வழங்கி இருக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள வீரர் நேற்றையதினம் இலங்கை கிரிக்கட் நிறைவேற்று குழுவின் முன்னால் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
குற்றம் சுத்தப்பட்டுள்ள வீரர் முன்னர் இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடி இருந்த போதும் பின்னர் சரியாக திறமையை வெளிப்படுத்தாக காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் டாக்கா கிளேடியேட்டர் அணியில் பங்கு பற்றி இருந்த 9 வீரர்கள் ஆட்டநிர்ணய சதி தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த விசாரணைகள் நிறைவடையும் வரையில் குறித்த 9 வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படமாட்டாது என்று சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த 9 வீரர்களில் 7 பேர் மீது பணத்துக்காக போட்டியில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதேநேரம் இருவர் இந்த ஆட்ட நிர்ணயம் குறித்த தகவல்களை அறிந்திருந்த போதும், அதனை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சதி குறித்த தகவல்களை வழங்காத இரண்டு வீரர்களில் ஒருவர் இலங்கையர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் பெயர் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
1 கோடி வாய்ப்பை ஏற்கத் தயங்கியது தான் கோடம்பாகத்தை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது. நயன்தாராவுக்கு பட வாய்ப்புகள் தவிர்த்து விளம்பர பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
என்ன தான் அதிக சம்பளம் கொடுத்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் பிரபல புடவை நிறுவனம் ஒன்று நயன்தாராவை அணுகி எங்கள் விளம்பர தூதராக இருங்கள், உங்களுக்கு 1 கோடி சம்பளம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
கோடியைக் கேட்டதும் நயன்தாரா உடனே ஒப்புக் கொள்ளவில்லையாம். யோசித்து கூறுகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டாராம். இப்படி வாசல் தேடி வந்த கோடியை நயன்தாரா ஏற்க தயங்குகிறாரே என்று கோடம்பாக்கத்தினர் ஆச்சியப்படுகிறார்களாம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆரம்பம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கொண்ட அஜித் ஒருவழியாக மீதிப் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறுகையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்திற்கு சமீபத்தில் தான் பெயர் சூட்டியுள்ளோம்.
இதில் அஜித் உட்பட அனைவருமே தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இப்படத்திற்காக படு பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டது. அதில் அஜித் ஓடும் ஒரு காரிலிருந்து, மற்றொரு காரில் தாவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக அஜித் விபத்தில் சிக்கியதில் வலது காலில் அடிபட்டது. ஆர்யா தான் அந்த காரை ஓட்டிச் சென்றார். இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அஜித் வலியை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து வரும் அஜித், படம் முடிவடைந்த பின்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்லான் அன்று கடந்த 9ம் திகதி ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து அங்கு சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் நிலவும் இந்த கவலைக்கிடமான நிலை குறித்து சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
இதற்கு முதலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேசினார்.
இப்படியாக தொடர்ந்து விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், ப.சிதம்பரத்திற்கு பின்னால் அமர்ந்திருந்த ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி பால்வை கோவர்த்தன் ரெட்டி நன்கு உறங்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். வந்தமுப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
அப்படி தலை முடி உதிர்வதை தடுக்க, மீண்டும் வளர உள்ள வழிமுறைகளை கீழே படியுங்கள்
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
மெய்ன் ஹூன் அப்ரிடி படத்தில் வரும் முத்தக் காட்சி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை கோபமடைய செய்துள்ளது.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள படம் மெய்ன் ஹூன் அப்ரிடி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகிட் அப்ரிடியை போன்று ஆக வேண்டும் என்று அசைப்படும் ஒரு இளைஞனின் கதை தான் மெய்ன் ஹூன் அப்ரிடி.
இந்த படத்தில் ஹீரோ நைட் கிளப்பில் ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த காட்சியை படத்தின் டிரெய்லரில் வைத்துள்ளனர். இதைப் பார்த்த அப்ரிடி கடுப்பாகிவிட்டார்.
படம் குறித்து அவர் கூறுகையில், மெய்ன் ஹூன் அப்ரிடி படம் என் வாழ்க்கையைப் பற்றியது அல்ல. குழந்தைகள் மத்தியில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தான் நான் இந்த படத்திற்கு அனுமதி அளித்தேன்.
ஆனால் அந்த படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காட்சிகள் இருக்கக் கூடாது. பல குடும்பங்கள், குழந்தைகள் எனக்காக இந்த படத்தை பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படக் கூடாது. அதனால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார்.
டெக்சாஸைச் சேர்ந்த ஜொனி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜொனி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிசாரிடம் அவர் கூறுகையில் மிஷல் என்னை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு தத்தெடுத்துக் கொண்டார்.
அதனால் தான் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தேன் என்றார். ஆனால் பொலிசார் கேட்ட கேள்விகளுக்கு ஜொனியால் பதில் கூற முடியவில்லை. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பிராஸோஸ் கவுன்ட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார்.
இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.
செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். செங்கமலத்தின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் செங்கமலத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது.
இலங்கையின் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் செல்லையா பொன்னுத்துரை காலமானார். தமது 78 வது வயதில் அவர் காலமானதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
1985ம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றில் முதல் வெற்றியை இந்தியாவுக்கு எதிராக பதிவுசெய்தபோது அதில் பொன்னுதுரையே நடுவராக கடமையாற்றினார்.
பொன்னுத்துரை 1985-93 காலப்பகுதியில் 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும் நடுவராக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நிர்வாண திருமணம் எனப்படும் புதிய வகை திருமண முறை வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும் இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சீனாவில், கடந்த, 13ம் திகதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த காதலர்களும், சொப்பிங் மால்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் பூங்காக்களுக்கு சென்று காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது அந்நாட்டின் டிவி நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது.
சீன இளைஞர்கள் எவ்வகை திருமணம் செய்ய விரும்புகின்றனர் என்ற வகையில் அந்த ஆய்வு அமைந்திருந்தது. சீனர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் போது மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு, ஏராளமான வரதட்சணை கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் பெருமளவு தானியங்களும், ஆடை ஆபரணங்களாகவே தரப்பட்ட இந்த வரதட்சணை நாளடைவில் நாகரீக மாற்றத்திற்கேற்ப கார், வீடு என உருமாறியது.
இதனால், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்வதில் ஏராளமான பொருட்செலவு ஏற்படுகிறது. இக்கால இளைஞர்கள் பலரும் இதை விரும்புவதில்லை. இதனால், இளைஞர்களில் சிலர் சில ஆண்டுகளுக்கு முன், வரதட்சணை பெறாமல், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், அதிகப்படியான இளைஞர்கள் இந்த புதிய முறை திருமணங்களால் பெரிதும் கவரப்பட்டு, எளிய வகை திருமணங்களை செய்து கொண்டனர். பாரம்பரியத்தில் மூழ்கிய பலரும், இவ்வகை திருமணங்கள் நிர்வாணத் திருமணங்களே என கேலி செய்தனர்.
முறையான சடங்குகள் பின்பற்றாமல் செய்யப்படுவதால் ஆடையில்லாத மனிதனுக்கு ஒப்பானது என கூச்சலிட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்புக் குரலையும், தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள், இவ்வகை திருமணத்திற்கு நிர்வாணத் திருமணம் என்றே பெயர் சூட்டினர்.
கடந்த சில ஆண்டுகளாக சீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை திருமணங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவத் துவங்கியுள்ளன. டிவி நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிர்வாணத் திருமணத்தை ஆதரித்தனர்.
இவ்வகை திருமணம் செய்வதால், தேவையற்ற பொருட் செலவு குறைக்கப்படுவதாகவும் பெற்றோரின் மன உளைச்சலை குறைக்க முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆடம்பர திருமணத்திற்காக செலவிடப்படும் தொகையை சேமித்து திட்டமிட்ட வாழ்க்கை வாழலாம் என கூறியுள்ளனர்.
அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவே வரதட்சணைகள் கொடுக்கப்பட்டதாகவும் இக்காலப் பெண்கள் அதிகம் படித்துள்ள நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் வரதட்சணை, பெற்றோர் மீது சுமத்துப்படும் தேவையற்ற சுமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஆடம்பரமற்ற திருமணங்களை பழமைவாதிகள் நிர்வாணத் திருமணம் என கேலி செய்தனர். நாங்கள் அதையே எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு எங்களின் புதிய முயற்சிக்கு நிர்வாணத் திருமணம் என்றே பெயர் சூட்டியுள்ளோம் என சீன இளைஞர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மட்டும் 58 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாசி அல்-கைபாரி என்பவர் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து, எரித்து கொலை செய்துள்ளார்.
இந்த குற்றத்துக்காக மதினா நகரில், அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
எகிப்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 525 பேர் கொல்லப்பட்டபோதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்னாள் ஜனாதிபதி முர்ஷியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி முதல் முறையாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முர்ஷி அடக்குமுறையை கையாள்வதாக கூறி அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த ஜூலை 3ம் திகதி, முர்ஷியை கைது செய்த ராணுவம், அவரை தனது காவலில் வைத்துள்ளது.
இந்நிலையில் முர்ஷி தலைமையிலான முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியினர் அவரை மீண்டும் பதவியில் நியமிக்கக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கெய்ரோவின் இரு பகுதிகளில் முகாம்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களை ஒடுக்குவதற்காக தற்காலிக ஜனாதிபதி முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் ராணுவம் களத்தில் இறங்கியது. முகாம்களில் இருந்தவர்களை விரட்டியடிக்க முயன்றபோது அவர்கள் வன்முறையில் இறங்கினர். ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீச ஆரம்பித்தனர். வேறு வழியின்றி ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இதில் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உட்பட 525 பேர் கொல்லப்பட்டனர். போராட்டக்காரர்கள் முகாம் அமைத்திருந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது. இந்த செயலை கண்டித்து நாடு முழுவதும் முர்ஷியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லா இடங்களிலும் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. எகிப்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால் ஒரு மாதகாலம் அவசர நிலையையும் ராணுவம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், துணை ஜனாதிபதி எல்பராடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் சமரசம் மூலம்தான் தீர்வு காணவேண்டும். அவ்வாறில்லாமல் அடக்குமுறையை கையாள்வது சரியல்ல. மேலும் பொதுமக்கள் மீது ராணுவத்தை ஏவிவிடும் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை.
இம்முடிவை நிர்வாகம் என்னை ஆலோசிக்காமலேயே எடுத்துள்ளது. இதுபோன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பதவி விலகுகிறேன் என்று கூறியுள்ளார். எல் பராடியின் பதவி விலகலுக்கு ஒரு தரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, முஸ்லிம் பிரதர்ஹுட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கெஹாத் எல் ஹதாத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் எங்களில் எத்தனை பேரை ராணுவம் கொன்றாலும், தொடர்ந்து எங்கள் போராட்டம் நடக்கும். முர்ஷியை மீண்டும் பதவியில் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.