தெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.


இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…

IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி தலைவர் டிவிலியர்ஸ் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டி அரங்கில் தனது 14வது அரைசதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 127 ஓடங்கள் சேர்த்த போது ரோகித் ஷர்மா 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து மிகச் சிறப்பாக ஆடிய தவான், கிளைன்வெல்ட் பந்தில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை அடித்து ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 94 பந்துகளில்(12 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம்) 114 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜடேஜா ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கெட்ட இழப்புக்கு 331 ஓட்டங்களை குவித்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மெக்லாரன் 3 விக்கட்டுகளையும், டிசாட்சொபே 2 விக்கட்டுகளையும், டுமினி ஒரு விக்கட்டையும் பெற்றுக்கொண்டனர் .

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியில் கோலின் இங்ராம் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹசிம் அம்லா 22 ஓட்டங்களுடனும் டிவிலியர்ஸ் 70 ஓட்டங்களுடனும் ரொபின் பீட்டர்சன் 68 ஓட்டங்களுடனும் டுப்லசிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.தனிநபராக இறுதிவரை போராடிய மெக்லாரன் ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதிவரை போராடிய தென் ஆப்ரிக்க அணியால் 50 ஓவர் முடிவில் 305 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இறுதியில் 26 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார், யாதவ்,இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.ஆட்ட நாயகனாக தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

~கேசா~


வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரம், மண்டபம் சேர்ந்த 9 படகுகளை பிடித்து கொண்டு, 49 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதையடுத்து, இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க அவசர கூட்டம் நடந்தது. இதில், நேற்று மீன்பிடிக்க சென்ற 49 மீனவர்களையும், 9 படகுகளையும், ஜூன் 20ம் திகதிக்குள் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஜூன் 22ம் திகதி, அனைத்து விசைப்படகிலும் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கை அரசிடம் தஞ்சம் கேட்டு மீனவர்கள் இலங்கை நோக்கி செல்வது, மேலும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில், காலையில் மீன்பிடிக்க செல்வதை தவிர்த்து, ஜூன் 8ம் திகதி முதல் பகல் 2 மணியளவில், மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று, மீன்பிடிக்க செல்ல வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.

 


பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

sivanathan   ch

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சம்பியன் ஒப் சேஞ்ச்’ (Champion of Change) விருது வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க சீல் படையினர் இரவோடு இரவா சுட்டுக் கொலை செய்தனர். இதற்கு பயன்படுத்தப்பட்ட நைட் விஷன் தொழில்நுட்பக் கருவிகளை பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் அமெரிக்காவின் சிகாகோவில் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செமி கண்டக்டர் ஆராய்ச்சியாளரான இவர் mercury cadmium telluride (MCT) என்ற ரசாயனத்தைக் கொண்டு உருவாக்கிய நைட்விஷன் தொழில்நுட்பம் சீல் படையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.

நிலா வெளிச்சம் கூட இல்லாத அமாவாசை நாளில் அமெரிக்கப் படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த இந்தத் தொழில்நுட்பம் உதவியது. இது மிக மிகச் சிறிய அளவிலான ஒளியைக் கூட பல்லாயிரம் மடங்கு அதிகப்படுத்தும் தொழில்நுட்பமாகும். இந் நிலையில் சமீபத்தில் அமெரிக்கா அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான சம்பியன் ஒப் சேஞ்ச் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதுதான் இவரது தொழில்நுட்பம் ஒசாமாவைக் கொல்ல உதவிய தவல் வெளியே தெரியவந்தது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம் அணு மின் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்றவர். பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்காவின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி போர்க் கூறுகையில் பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் போன்ற அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தது பெருமைக்குரியது என்றார்.

அமெரிக்காவின் ஒரு உயரிய விருது ஈழத் தமிழருக்கு கிடைத்ததையிட்டு நாமும் பெருமைகொள்வோம்.

 


உலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..

hunger

கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ‘மனிதர்களின் தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 1.3 பில்லியன் தொன் அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பாகம் வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் வத்திகான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ் பின்வருமாறு பேசியதாவது,

நமது முன்னோர்கள் மிச்சம் மீதி உணவுகளை வீணாக தூக்கி எறியக்கூடாது என்ற பண்பை கடைபிடித்து வந்தனர். ஆனால், தற்காலத்தில் அன்றாட வாழ்க்கை முறையில் உணவுகளை வீணடிப்பதை நாம் வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளோம். வீணடிக்கப்படும் உணவின் உண்மையான மதிப்பு நமக்கு தெரிவதில்லை. உலகெங்கும் 87 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசி, பட்டினியால் தவிக்கும் போது இதைப்போன்ற உணவை வீணடிக்கும் கலாசாரத்தை நாம் கைவிட வேண்டும். உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது என்பது, பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமமான செயலாகும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

 


சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்த ஐசிசி தடை..

icc_logo

சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பாக கையடக்க தொலைபேசிகளை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

7வது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றன. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தை அடுத்து சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஐசிசி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் முதல் மைதானம் வரை அனைத்து இடங்களும் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மைதானத்திற்கு வீரர்கள் கையடக்க தொலைபேசிகள் கொண்டு செல்ல கூடாது என்றும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது ஐசிசி. போட்டிக்கு செல்லும் முன் வீரர்கள் தங்கள் நிர்வாகத்திடம் கையடக்க தொலைபேசிகள் ஒப்படைத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 


மைக்கேல் ஜாக்சனின் மகள் தற்கொலை முயற்சி..!

உலகப் புகழ் பெற்ற பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், மிதமிஞ்சிய போதையில் கடந்த 2009ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்சன் (16), பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன் (11) என்ற இரு மகன்களும் பாரீஸ் மைக்கேல் கேத்தரின் ஜாக்சன் (15) என்ற மகளும் உள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனின் கடைசி மகள் பாரிஸ் ஜாக்சன் (15) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக கலிபோர்னியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நேரப்படி, அதிகாலை 1.27 மணியளவில் ´911´ அவசர உதவி பிரிவுக்கு தகவல் வந்ததாகவும், 2.00 மணியளவில் கலபாசஸ் பகுதியில் இருந்து அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று தனது ´டிவிட்டர்´ பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த பாரிஸ் ஜாக்சன், ´எனது துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன என்று நினைத்திருந்தேன்.

ஆனால், அவை இன்னும் என்னை விட்டு விடைபெறவில்லை என தெரிகிறது, கண்ணீர் ஏன் உப்பு தன்மையுடன் உள்ளது? என நான் வியக்கிறேன்´ என்று எழுதியிருந்தார்.

கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிதமிஞ்சிய போதையில் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.


ஒரு கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் செய்கிறார் இளைய தளபதி..!

தனது பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி ரூ 1 கோடி மதிப்புள்ள உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இந்த விழாவை வருகிற 8ம் திகதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்துகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, விழாவை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு 3,900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் எந்திரங்களும் வழங்கி பேசுகிறார்.

விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொள்கிறார்.


இசையமைப்பாளர் ஆகிறார் “ட்ரம்ஸ்” சிவமணி..!

விக்ரம் பிரபு நடிக்கும் “அரிமா நம்பி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி.
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது.

ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக “அரிமா நம்பி” என்ற படத்தில் நடிக்கிறார்.

விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். ஆனந்த் குமார் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தபடத்தில் தான் சிவமணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.

இசையமைப்பாளரானது குறித்து சிவமணி கூறியுள்ளதாவது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்திற்கு இதுவரை நான்கு பாடல்களை கம்போஸ் பண்ணிவிட்டேன். முதல்பாடலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வைத்து கம்போஸ் பண்ணினேன்.

பொதுவாக என்னுடைய படங்களின் இசையில் டிரம்ஸ் ‌கொஞ்சம் வேகமாக இருக்கும். அதேப்போல் இந்தபடத்திலும் அது தொடரும்.

அதேசமயம் மெலோடியும் நிறைய இருக்கும். ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு இந்தபடத்தின் இசை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

வித்தியாசமாக செய்கிறேன் என்று வலிய போய் இசை திணிக்க நான் விரும்பவில்லை, கதைக்கு என்ன தேவையோ அந்த இசையை நான் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.


கட்டுநாயக்கா பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் வீட்டு அறையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி நேற்று முன்தினம் மாலை தற்கொலை செய்து கொண்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உறவினர்கள் இல்லாதவேளை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாடசாலைக்கு செல்லுமாறு தந்தை அறிவுறுத்தியமையின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸர் மேற்கொண்டுள்ளனர்.


மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்

ICC

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து தவிர மற்ற அணிகள் அனைத்தும் ஒரு தடவையேனும் கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்தப் போட்டிதான் கடைசி சம்பியன்ஸ் கிண்ண போட்டியாகும். 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்போட்டி 2017-ம் ஆண்டு முதல் டெஸ்ட் சம்பியன்ஸ் நடைபெறவிருப்பதன் காரணமாக இந்த ஆண்டோடு நிறுத்தப்படுகிறது.

கார்டிஃப் நகரில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.15 மாதங்களுக்குப் பிறகு ஆசியாவுக்கு வெளியில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கிறது இந்திய அணி.

சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ் சிங் போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது டோணி தலைமையிலான இந்திய அணி. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் , முரளி விஜய் ஆகியோர் சரியாக விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும். எனினும் மதிய வரிசையில் விராத் கோஹ்லி, சுரேஷ் ரைனா, தினேஷ் கார்த்திக், அணித்தலைவர் டோணி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க அணியில் மூத்த வீரர்களான ஜக்ஸ் கலிஸ், ஸ்மித் ஆகியோர் இடம்பெறாத நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சுழற்பந்துவீச்சாளர் ரொபின் பீட்டர்சன் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருவது பின்னடைவாக அமைந்துள்ளது.

அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ், டூ பிளெஸ்ஸிஸ், டேவிட் மில்லர் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.

வேகப்பந்து வீச்சில் மோர்ன் மோர்கல், சோட்சோபி, கிளெய்ன்வெல்ட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரொபின் பீட்டர்சன் இடம்பெறாத பட்சத்தில் அரோன் பங்கிசோ இடம்பெறலாம்.

இன்றைய போட்டியில் சம பலம் உள்ள இரு அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை..

இலண்டனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மாளிகை வைத்திருக்கும் பிச்சைக்காரர்..

simon_wright_001

லண்டனில் தினசரி யாசகம் எடுத்து வாழும் ஒரு பிச்சைக்காரருக்கு சொந்தமாக மாளிகை போன்ற வீடு ஒன்று இருப்பதை அறிந்த நீதிமன்றம், யாசகம் எடுக்க தடை விதித்தது. லண்டனில் நெட்வெஸ்ட்( Natwest) வங்கியின் முன் தினசரி 37 வயதான சைமன் ரைட் என்ற பிச்சைக்காரர் வங்கிக்கு வருவோரிடம் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்.

இதன்மூலம் அவருக்கு தினசரி £300 வரை வருமானம் கிடைத்தது. மாலை 6 மணி ஆனவுடன் அந்த இடத்தில் இருந்த் சென்று Fulham High Street என்ற இடத்தில் உள்ள தனது மாளிகை போன்ற வீட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய வீட்டின் மதிப்பு சுமார் £300,000 ஆகும்.

கடந்த சில நாட்களுக்கு முன் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் இவருக்கு மாளிகை வீடு இருப்பதை அறிந்த ஒருவர் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மிகவும் வசதியாக இருந்து கொண்டு பொதுமக்களிடம் பொய்கூறி பிச்சையெடுக்கும் இவரை உடனே அகற்ற வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த பிச்சைக்காரர் யாசகம் பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


கொழும்பில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நியுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக டெங்கு அழிப்பு தொடர்பில் கொழும்பு நகரசபை மற்றும் கொழும்பு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளவேண்டிய செயற்திட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு, மேல் மாகாணசபை, கொழும்பு நகரசபை, பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

தற்போதுள்ள டெங்கு நோயாளர்களில் 46 வீதமானவர்கள் கொழும்பில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் 152இல் டெங்கு நுளம்பு குடும்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் 52 பாடசாலைகள் அறுவுறுத்தப்பட்டுள்ளதுடன் 12 பாடசாலைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தெனாலி ராமன் கதைகள் – புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து “பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்” என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே “ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? ” என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக “இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!” என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக “வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் “இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!” என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், “அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்” என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.


காதலியைக் கொலை செய்து கல்லில் கட்டி கிணற்றில் போட்ட காதலன்- முல்லைத்தீவில் சம்பவம்..

 

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த 25 வயது துரைசாமி சரோஜா 25 என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சரோஜாவை காதலித்துத் திருமணம் செய்வதாக உறுதியளித்திருந்தவரெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மே மாதம் 24ஆம் திகதியன்று, மாங்குளம் பனித்தம்குளம் பிரதேசத்திலுள்ள கிணற்றுக்குள்ளிருந்து இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கல்லொன்றுடன் சேர்ந்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. சடலத்தை உறவினர்கள் இனங்கண்டதற்கமைய அவர்களது வாக்குமூலங்கள் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் :-

மேற்படி யுவதியை காதலிப்பதாகக் கூறி வந்த இளைஞன் அவரையே திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கி குறித்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். யுவதி அங்கு சென்றதையடுத்து, தனது நண்பனுடன் வந்திருந்த காதலன் பாழடைந்த வீட்டுக்கு யுவதியை அழைத்துச் சென்ற பின் தனது நண்பனுடன் இணைந்து காதலியை வல்லுறவுப்படுத்த முயன்றுள்ளார்.

இதற்கு குறித்த யுவதி எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே இளைஞர்கள் இருவருமாக சேர்ந்து யுவதியை அடித்துக் கொலை செய்த பின்னர் சடலத்தை கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் போட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை அவர்கள் நாளை முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை மேற்படி யுவதி கொலை செய்யப்பட்டுள்ளமை மரண விசாரணைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

 


மன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..!

மன்னார் தாராபுரம் – எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது எருக்கலம் பிட்டி வீதியூடாக தாராபுரம் கிராமத்திற்கு உழவு இயந்திரத்தை வேகமாக கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் சென்றுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்த இரு இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரத்தில் இருந்த முஹம்மது லதீப் சதாத் (வயது-20) என்ற இளைஞர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.