திருமணம் செய்து கொண்ட தன்பால் ஈர்ப்பாளர் இந்திய தம்பதி.. முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சி!!

அமெரிக்காவில்..

இந்திய – அமெரிக்கர்களான தன்பால் ஈர்ப்பாளர் தம்பதிக்கு கடந்த 2019ல் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் அமித்ஷா மற்றும் ஆதித்யா மடிராஜு என்ற 2 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அமித்ஷா “ஸ்ப்ரிட்” என்ற நடனக்குழுவின் பொறுப்பாளர் ஆவார்.

ஆதித்யா பேரிடர் மேலாண்மை குழுவில் பணியாற்றி வருகிறார். 2016-ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒன்றாக பழகி வருகின்றனர். இதனிடையே இருவரது நட்பும் காதலாக மாறுவதை இருவரும் உணர்ந்தனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களான இருவரும் குடும்பத்தாரின் சம்மதம் பெற்று கடந்த 2019ல் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அமித்ஷா – ஆதித்யா தம்பதி வரும் மே மாதத்தில் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

கருமுட்டை தானம் செய்பவர்கள், வாடகை தாய், ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து பிரசவிக்கும் பெண் (குழந்தைக்கும் அவருக்கும் எந்த உயிரியல் தொடர்பும் இல்லை) போன்றவைகள் குறித்து முழுவதுமாக தம்பதி அறிந்து கொண்டனர்.

இதையடுத்து கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் குழந்தை பெறும் வாய்ப்பை ஆதித்யா – அமித்ஷா பெற்றுள்ளனர்.

ஆதித்யா கூறுகையில், ஒரே பாலின ஜோடியாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் விரும்பும் வாழ்க்கையை நடத்த முடியும். எங்களுக்குப் பிறகு பல தன்பால் ஈர்ப்பாளர் தம்பதி திருமணம் செய்து கொண்ட நிலையில்,

இது அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்,. நாங்கள் ஓரின சேர்க்கை பெற்றோராக இருக்க மாட்டோம், எல்லாரையும் போல நாங்கள் பெற்றோராக இருப்போம் என கூறியுள்ளார்.

வவுனியா பட்டாணிச்சூரில் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிலை முச்சக்கரவண்டி மோதிதள்ளியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளை மன்னார் வீதியூடாக,

நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதித்தள்ளியதில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்தமையுடன் மோட்டார் சைக்கிளும் பகுதியளவில் சேதமடைந்தது.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றதுடன் AAC 8837 என்ற இலக்கத்தினையுடைய முச்சக்கரவண்டியே விபத்தினை ஏற்படுத்தியதாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

12 வயது சிறுவன் பரிதாபமாக மரணம் : கதறியழும் பெற்றோர்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, சமீபகாலமாக 25 வயதினருக்கே மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆனால் அதை விட மோசமான சம்பவம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது. மடிகேரி மாவட்டம் கூடுமங்களூரை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி. இவர் பாடசாலை பேருந்து ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். இவரது மகன் கீர்த்தன் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று கீர்த்தனை தனது நண்பர்களுடன் மாலையில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நெஞ்சில் வலி இருப்பதாக கூறிய அவர், உடனேயே கீழே மயங்கி விழுந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

மேலும் சிறுவனின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு தான் என உறுதி செய்தனர். 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!!

கோவில்குளம் இந்துக் கல்லூரி..

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10.01.2023) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்துக்கல்லூரிக்கு புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒழுக்கமற்றவர் என்பதுடன் அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்.

அத்துடன் ஏற்கனவே குறித்த நபர் ஆசிரியராக பணியாற்றிய பாடசாலையில் சி.றுவர் து.ஸ்.பி.ர.யோ.க கு.ற்.றச்சாட்டுக்கு உள்ளானவர் என தெரிவித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், எல்லா வகையிலும் தகுதியான அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டும், மாணவர்களை பாதுகாக்கும் மதிப்பு மிக்க அதிபர் வேண்டும்,

மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் அதிபர் எமக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம் தகுதியற்ற அதிபர் எமக்கு வேண்டாம் போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கு குறித்த நியமனத்தை நிறுத்துமாறு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!!

பொலிஸ்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10.01.2023) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர் தொலைவிலுள்ள வளைவிற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

குறித்த மரணத்திற்கு காரணம் விபத்தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலை பகுதியினை சேரந்த 45 வயதுடைய பொலிஸ் சார்ஐன் வசந்த சந்தன நாயக்க என்பரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

வவுனியா பொலிசாரால் முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கைது : நகைகளும் மீட்பு!!

நகைகள் மீட்பு..

முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று (09.01) தெரிவித்தனர்.

வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த 3 ஆம் திகதி வீடு புகுந்து சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பூ.கஜேந்திரன் தலைமையில்,

பொலிஸ் சார்ஜன்களான திசநாயக்க (37348), திலீப் (61461), பொலிஸ் கொன்டபிள்களான உபாலி (60945), தயாளன் (91792), தர்மகீர்த்தி (91983) உள்ளிட்ட பொலிஸ குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து திருடப்பட்டதாக கருத்தப்படும்,

காப்பு, சங்கிலி உள்ளிட்ட நகைகளும் மீட்கப்பட்டன. இதனையடுத்து மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு வந்த முதல் மனைவி.. மணமகனின் சகோதரரை கரம்பிடித்த மணமகள்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணப்பெண் மணமகனின் இளைய சகோதரரை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் அரியானா கிராமத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், தவாய் குர்த் கிராமத்தின் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் முடிவானது.

அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் விமர்சியாக நடைபெற்றது. இரு வீட்டாரும் தங்கள் உறவினர்களுடன் வந்திருந்தனர். அப்போது பெண்ணொருவர் குழந்தைகளுடன் வந்து மணமகனின் மனைவி என்றும், தனக்கு தெரியாமல் தன் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்தனர். அப்போது நடத்திய விசாரணையில் மணமகன் 5 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும், இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர் என்றும் தெரிய வந்தது.

மணமகளின் குடும்பத்தினர் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணை மணமகன் விவாகரத்து செய்ய வேண்டும் என்றும், மணமகனின் இளைய சகோதரரை அப்பெண் திருமணம் செய்ய வேண்டும் என்றும் முடிவானது. அதனைத் தொடர்ந்து மணமகனின் இளைய சகோதரரை கரம்பிடித்த மணமகள், அவருடன் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அன்று பீடி சுற்றும் வேலை செய்த கூலித் தொழிலாளி.. இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதி : சாதனை மனிதனின் கதை!!

கேரளாவில்..

சுரேந்திரன் கே பாட்டேல், தற்போது இந்தியர்கள் மத்தியில் பிரபலமான பெயராக உருவெடுத்து வருகிறது. கேரளாவைச் சேர்ந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது, வறுமை காரணமாக குடும்பத்திற்கு உதவும் வகையில் கூலி வேலை செய்தவர்.

பதின்பருவத்தில், அவர் பணம் சம்பாதிப்பதற்காக பீடிகளை சுருட்டும் கூலி வேலை செய்தவர். சுரேந்திரன், 10 ஆம் வகுப்புக்குப் பிறகு தனது கல்வியைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தவர். ஒரு வருடம் பள்ளிக்கு செல்லாமல் வறுமை காரணமாக வேலைக்கு சென்றவர்.

ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு, ஈ.கே. நாயனார் நினைவு அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்தார். பிறகு அவர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிக்க விரும்பினார், போதுமான பணம் இல்லாததால் அவரது நண்பர்களின் உதவியுடனும், ஒரு ஹோட்டலில் வேலை செய்தும், அவர் 1995 இல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 1996-ல் கேரளாவில் உள்ள ஹோஸ்துர்க்கில் வக்கீலாக பயிற்சி செய்யத் தொடங்கிய அவர், படிப்படியாக சீனியர் வழக்கறிஞராகத் திகழ்ந்தார். 2007 இல், அவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார், அங்கு அவரது மனைவி ஒரு முக்கிய அமெரிக்க மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டார்.

தம்பதியினர் நிரந்தர விசா பெற்று தங்கள் மகளுடன் டெக்சாஸின் ஹூஸ்டன் நகருக்கு குடிபெயர்ந்தனர். சுரேந்திரன், டெக்சாஸில் பார் கவுன்சில் தேர்வில் கலந்து கொண்டு முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று ஹூஸ்டன் பல்கலைக்கழக சட்ட மையத்தில் LL.M படிப்பிற்கு விண்ணப்பித்தார்.

2011 இல் பட்டம் பெற்ற பிறகு, சுரேந்திரன் கே குடும்பச் சட்டம், குற்றவியல் பாதுகாப்பு, சிவில் மற்றும் வணிக வழக்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பரிவர்த்தனை விஷயங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டார், பின்னர் தனது சொந்த சட்ட நிறுவனத்தை நிறுவினார்.

தற்போது அமெரிக்காவின் டெக்சாஸில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திரன், டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் உள்ள 240வது நீதித்துறை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றுள்ளார். 51 வயதான அவர் கேரளாவில் காசர்கோட்டில் பிறந்தவர்.

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கை!!

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு..

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ளோருக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக கடவுச்சீட்டையும் பணத்தையும் முகவர்களுக்கு வழங்குவதற்கு முன் அதனை சார்பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த முகவரகம், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அறிந்து கொள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கமான 1989 என்ற எண்ணை தொடர்பு கொள்ள முடியும். அல்லது www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட முன்னர் குறித்த விடயத்தை கட்டாயம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களுக்கு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

70 வயதிலும் தீராத ஆர்வம் : மொடலிங்கில் அசத்தும் மூதாட்டி!!

பெவர்லி ஜான்சன்..

70 வயதிலும் சூப்பர் மொடலாக பெவர்லி ஜான்சன் சாதித்து வருகின்றார். திறமைக்கு வயது இல்லை என்பார்கள், அது எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் பலர் சாதித்து வருகின்றார்கள்.

அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் சாதித்து வருகின்றார்கள். அந்த வரிசையில் இடம்பிடித்தவர்தான் 70 வயது பெவர்லி ஜான்சன். 1952ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பெவர்லி ஜான்சன். இவர் அமெரிக்க மொடல், நடிகை, பாடகி மற்றும் தொழிலதிபர் என பன்முகத் திறமைகளை தம்வசம் வைத்திருப்பவர்.

இவர் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 1971ஆம் ஆண்டு தனது 19 வயதில் பில்லி போர்ட்டரை முதலாவதாக செய்து கொண்டார். பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாரத்துக் பெற்றுக்கொண்டார்.

பிறகு தனது 25 வயதில் டேனி சிம்ஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். பிறகு அவருடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. மேலும் இவருக்கு 4 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

பெவர்லி ஜான்சன் 1970ஆம் ஆண்டு மொடலிங் துறைக்குள் நுழைந்தார். அந்தக் காலத்தில் சிகப்பு நிறத்தோல்களும் நீல நிறக் கண்கள் கொண்ட பெண்களுமே அதிகம் வரவேற்கப்பட்டனர்.

கறுப்பின பெண்ணான பெவர்லி ஜான்சனுக்கு பல நிராகரிப்புகள் மட்டுமே இருந்தது. ஆனால் எதையும் நினைத்துக் கவலைக் கொள்ளாத பெவர்லி அந்தத் துறையிலே தன்னை நிலைநாட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதனால் மொடலிங் துறையை நேசித்து அதற்கென தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு நாளடைவில் வெற்றியும் பெற்றார். அதற்கு ஆதாரமாக 1974ஆம் ஆண்டில், அமெரிக்கன் வோக்கின் அட்டைப்படத்தில் தோன்றிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மொடலாகவும், அதே ஆண்டு பிரெஞ்சு எல்லே இதழின் அட்டைப் பக்கத்தில் தோன்றிய முதல் கறுப்பினப் பெண்ணாகவும் இடம் பிடித்தார்.

இவருக்கு தற்போது 70 வயதாகிய நிலையும் தனது உடலை இன்றும் கவர்ச்சியாக வைத்திருக்கிறார். இதற்கு காரணம் தியானம், யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் காலை வேளையில் காலை உணவுக்கு பதிலாக எலுமிச்சை மற்றும் ஸ்ட்ரோபெரிகள் மட்டுமே எடுத்துக் கொள்வாராம்.

மதியம் மற்றும் இரவு உணவு வேளைகளில் இறைச்சிகள் மற்றும் வேகவைத்த காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம். மேலும், இவரின் உடலை அறுவைச்சிகிச்சை மூலம் தான் பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் யுவதியை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு சென்ற பேஸ்புக் காதலன் : பெண்ணின் விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!!

பேஸ்புக் காதல்..

யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த காதல் தோல்வியால் மன உளைச்சலிற்குள்ளாகியிருந்ததால் தற்கொலை செய்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு பேஸ்புக் காதலன்தான் காரணமென குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

மட்டக்களப்பை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் வழியாக உறவு ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலர்களாக மாறினர். யாழ் நகரையண்டிய பகுதிகளில் சில ஆதனங்களும் குடும்ப த்தினருக்கு சொந்தமாக காணப்பட்டன.

யுவதியின் வற்புறுத்தலின் பேரில் ஆதனமொன்றை விற்பனை செய்து, காதலனிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் காதலன் வெளிநாடு செல்வதாக குறிப்பிட்டு, மலேசியாவில் தங்கியிருந்துள்ளார். மலேசியா சென்ற சில மாதங்களின் பின்னர் யுவதியுடனான தொடர்பை பேஸ்புக் காதலன் நிறுத்திக் கொண்டதக்க கூறப்படுகின்றது.

இந்நிலையில் யுவதி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, பேஸ்புக் காதலனிற்கு எதிராக, யுவதியின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய மொத்த குடும்பமும் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவை சேர்ந்த மொத்த குடும்பமும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரமேஷன் (48).

இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த வியாழன் அன்று சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு ரமேஷன் வீட்டில் நெருப்பு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் பதறியடி போய் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.

அப்போது ரமேஷன், அவர் மனைவி சுலஜா குமாரி (46), மகள் ரேஷ்மா (23) ஆகிய மூவரும் சடலமாக கிடந்தனர். கடன் தொல்லையால் மூவரும் தற்கொலை செய்து கொண்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ரமேஷனுக்கு பெரும் கடன் இருந்ததாகவும், பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால் குடும்பம் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொண்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து மோதிய 56 வாகனங்கள்… 17 பேர் பலி : 22 பேர் படுகாயம்!!

சீனாவில்..

கொரோனா தொற்றின் பிறப்பிடமான சீனாவில் தற்போது பயங்கரமான பனி பெய்து வருகிறது. இந்நிலையில், மூடு பனி காரணமாக சாலைகள் சரிவர தெரியாமல் தினந்தோறும் விபத்துக்கள் நடைப்பெற்று வருகின்றன.

இன்று காலை சீனாவில் பயங்கரமான சாலை விபத்தினால், 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 17 பேர் பலியானார்கள். இந்த சாலை விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணிக்கு இந்த சாலை விபத்து நிகழ்ந்தது. கடும் பனி பொழிவு காரணமாக முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனங்கள் தெரியாமல் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்து நடந்த பின்னரும் கூட, விபத்து பற்றி தெரியாமல் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் மோதி மேலும் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி எனும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின்னரே, நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்துக் போலீசார் விபத்து நடந்த பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், மூடுபனி வானிலை நிலவுவதாகக் கூறி அந்த பகுதிக்கு செல்லும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி தடுத்துள்ளனர். பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால், இது போக்குவரத்து விபத்துக்களை எளிதில் ஏற்படுத்தும் என்றும், வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்டவும் என்றும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம், மத்திய சீனாவில் மூடுபனியில் குறைந்த தெரிவுநிலை காரணமாக பல வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (09.01.2023) காலை 10.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரி, வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் பேரணியாக வைத்தியசாலை நுழைவாயிலிருந்து சென்று மணிக்கூட்டு கோபுர சந்தியூடாக சென்று மீண்டும் வைத்தியசாலை ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்திருந்தனர்.

இலங்கையில் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டம் : சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

சாரதிகளுக்கு எச்சரிக்கை..

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு ஓட்டுனர் உரிமத்தில் 24 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருந்தால் அந்த உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமத்தில் 10 புள்ளிகள் குறைக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் 150 கிலோ மீற்றருக்கு மேல் வேகத்தில் ஓட்டினால் 8 புள்ளிகள் குறைக்கப்படும். காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் 6 புள்ளிகள் குறைக்கப்படும்.

இந்த முறையில் மதிப்பெண் குறைக்கும் முறை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்திற்கமைய, ஓட்டுநர் உரிமங்களில் இருந்து மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் தந்தை.. காதலன் செய்த வெறிச் செயல்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்தவர் ராஜா (32). ரவுடியான இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் 2 மகள்களும், ஒரு மகன் உள்ளனர். இந்த பிள்ளைகளுக்கு ராஜா வளர்ப்பு தந்தையாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜா தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெளியே சென்றார். கோபாலன்கடை மெயின்ரோடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில்வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் இறந்துபோனார். இந்த படுகொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், ராஜாவின் வளர்ப்பு மகளும், அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு வளர்ப்பு தந்தை ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வளர்ப்பு மகளின் காதலனுக்கும், ராஜாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

மேலும் கொலை சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் ராஜாவின் வளர்ப்பு மகளின் காதலன் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று காதலை விட்டுவிடும்படியும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த விரோதத்தில் வளர்ப்பு மகளின் காதலன் பிரகாஷ்ராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். தமிழக பகுதியான பெரம்பையில் பதுங்கியிருந்த காதலன் பிரகாஷ்ராஜ் அவரது நண்பர்களான மணிகண்டன், தங்கமணி, தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்பு அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் போலீஸ் அடைத்தனர்.