மாயமாக மாறிய பெண் : சிலையாக மாறிய மற்றொரு பெண் : இலங்கையில் நடந்த விசித்திரம்!!

கல்முனையில் வித்தியாசமான முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். கல்முனை நகர் மக்கள் அதிகம் நடமாடும் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெண் ஒருவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் 3000 ரூபா பணத்தை குறித்த பெண் கொள்ளையடித்துள்ளார்.

கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் பெண், அந்தப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கிக்கு சென்று மீண்டும் திரும்பி வரும் போது சந்தேகநபரான பெண், அவரை அழைத்து ஏதோ கேட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு மொழி தெரியாதென கூறிவிட்டு அந்த பெண் செல்லும் போது அவர் பின்னாலேயே சென்ற நபர் தங்களின் உதவியொன்றை எதிர்பார்ப்பதாக கூறி வீதி ஓரத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் முதல் வந்த பெண் கைக்குட்டை ஒன்றில் கல் போன்ற பொருளை வைத்து வீதி ஓரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளார். எனினும் அந்த பெண் அதனை பெற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் பையில் இந்த கைக்குட்டையை வைத்துள்ளனர்.

சற்று நேரத்தில் அந்த பெண் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கேட்டவுடன் ஒன்றும் கூறாமல் எடுத்து கொடுத்துள்ளார்.

பின்னர் பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்ட பெண் மற்றும் ஆண் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். அதனை கொடுத்த பெண் சில நிமிடங்களின் பின் சுய நினைவுக்கு வந்துள்ளார். தனக்கு என்ன நடந்ததென தெரியாமல் வீதியில் நின்று கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எட்டு மாத கரு கலைப்பு : 17 வயது சிறுமி உயிருக்கு போராட்டம்!!

நாமக்கல் அருகில் 17 வயது சிறுமியின் 8 மாத கருவை கலைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் அருகே தாய் இல்லாத இந்த சிறுமி தன் தந்தை மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். 9ஆம் வகுப்புவரை படித்த இந்த சிறுமி குடும்ப வறுமை காரணமாக கூலி வேலைக்கு சென்ற இடத்தில சங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தால் கர்ப்பிணியான சிறுமி இந்த தகவலை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. கரு எட்டு மாதம் வளர்ந்த நிலையில் விடயம் தெரிந்த தந்தையும் சகோதரனும் கருக்கலைப்புக்கு மாத்திரை வாங்கி கொடுத்துள்ளனர்.

இதனால் 8 மாத கரு கலைந்த நிலையில் அதிக ரத்தப்போக்குடன் சிறுமி மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தார் அம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான் கடவுள் இனிமேல் வேலைக்கு வர முடியாது : அரசு அதிகாரியின் அதிர்ச்சி செயல்!!

தான் கடவுள் கிருஷ்ணனின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் என்றும் அதனால் தன்னால் இனி வேலைக்கு வர முடியாது என்றும் அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணை புனரமைப்பு பணி அதிகாரியான ரமேஷ் சந்திரா பொஃபர் என்பவர்தான் இந்த பரபரப்புக்கு காரணமானவர்.

பச்சை நிற கையெழுத்திடும் கெசடட் அதிகாரியான ரமேஷ் சந்திரா கடந்த சில மாதங்களாகவே அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால் பல பணிகள் பாதித்தன. இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டிஸிற்கு ரமேஷ் சந்திரா அளித்த பதில் இப்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பதிலில் தான் பகவான் கிருஷ்ணரின் பத்தாவது அவதாரம் என்றும், தான் வீட்டில் இருந்து தவம் செய்து வருவதால் நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பொழிகிறது என்றும் கூறியுள்ளார். 2010 ஆண்டிலேயே தான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்து விட்டதாகவும் அப்போதிருந்தே பல தெய்வ சக்திகள் அவருக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த பதிலில் அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

கடவுளின் அவதாரமாக இருக்கும் நான் இனி வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்று அதிரடியாக பதில் கூறியிருக்கிறார் ரமேஷ். அதுமட்டுமில்லாமல் அலுவலகத்தில் இருந்து தன்னால் தவம் செய்ய முடிவதில்லை என்றும் அதனால் இனி தான் அலுவலகம் வர போவதில்லை என்றும் கூறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல திரைப்பட நடிகை விபத்தில் மரணம் : திரையுலகினர் இரங்கல்!!

பிரபல திரைப்பட நடிகை மனிஷா ராய் சாலையில் விபத்தில் மரணமடைந்துள்ளார். போஜ்புரி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் மனிஷா ராய். இவர் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் உதவியாளர் சஞ்சீவுடன் சென்று கொண்டிருந்தார்.

மனிஷாவின் வீட்டருகிலேயே படப்பிடிப்பு நடந்ததால் அவர் காருக்கு பதிலாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மனிஷா உயிரிழந்தார்.

உடன் பயணித்த சஞ்சீவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருசக்கர வாகனம் மீது மோதிய காரை ஓட்டிய ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்ற நிலையில் பொலிசார் அவரை தேடி வருகிறார்கள். மனிஷாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இறந்த குழந்தை : மயானத்தில் உயிர் வந்த அதிசயம்!!

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தைக்கு மயானத்தில் உயிர் வந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வேலம்மாள் (25). இவர், பிரசவத்திற்காக சுரண்டை கமலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்ந்தார்.
நேற்று காலை வேலம்மாளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டது என கூறி அதை உடனடியாக அடக்கம் செய்யுங்கள் எனக் கூறி அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதபடி குழந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.

அவர்களது வழக்கப்படி காது குத்திதான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் மயானத்தில் குழந்தைக்கு காது குத்தப்பட்டது. அப்போது குழந்தை கதறி அழுவதைக் கண்டு திகைத்த உறவினர்கள் உடனடியாக அம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு விரைந்த அம்புலன்ஸில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து குழந்தை காப்பாற்றப்பட்டது.

முறையாக பரிசோதனை செய்யாமல் குழந்தை இறந்துவிட்டது என கூறிய மருத்துவமனை மருத்துவர்களை உறவினர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை : 4 பில்லியன் டொலர் சிக்கியது!!

 

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள விலையுயர்ந்த பொருட்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது, வளர்ச்சி நிதியத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன் பிறகு, நஜிப்பால் அமைக்கப்பட்ட அந்த நிதியத்துக்காக வந்த பல பில்லியன் டொலர்கள் கணக்கில் வரவில்லை என தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, மலேசிய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட நஜிப், பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால், பிற நாடுகளால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையை மீண்டும் துவங்க முடிவு செய்வதாக தற்போதைய பிரதமர் மஹதீர் தெரிவித்தார். அத்துடன் சுமார் 700 மில்லியன் டொலர்களை நஜிப் கையகப்படுத்தியதாக கூறப்பட்டதை மீட்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, நஜிப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நஜிப்பின் அலுவலகம், தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூரில் நஜிப்புக்கு சொந்தமான பல இடங்களில், பல நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சோதனையில், சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள் அதில் கண்டறியப்பட்டதாக, வர்த்தக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அமர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எங்களது ஆட்கள் இந்த பைகளை சோதனை செய்ததில், 72 பைகளில் மலேசியாவின் ரிங்கெட், அமெரிக்க டொலர்கள், கைக்கடிகாரங்கள், நகைகள் ஆகியவை கண்டறியப்பட்டன’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், நஜிப் இது தொடர்பாக கூறுகையில், ‘இந்த சோதனை தேவையற்று என்னை துன்புறுத்துகிறது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெரிதாக மதிப்பற்றவை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், நஜிப் தனது மனைவிக்காக வாங்கிய வைர நகையின் மதிப்பு சுமார் 23 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு ஆள் எடுக்க நேர்முகத்தேர்வு நடத்தும் அதிசய ரோபோ!!

 

ரஷ்யாவில் ரோபோ ஒன்று, ஒரு நாளைக்கு 1500 பேரை நேர்காணல் செய்து வேலைக்கு சேர்த்து வருகிறது. பிரபல ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அமேஸான், ‘அமேஸான் கோ’ என்ற பெயரில் ஒரு செயல்திட்டத்தை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பணியாளர்கள் இல்லாமல் இயங்க உள்ள Super Market ஆகும். இந்நிலையில், மனித வள மேம்பாட்டு அதிகாரிகளின் வேலைக்கு ரோபோக்களே நேர்முகத்தேர்வு நடத்துகின்றன.

நபர் ஒருவரிடம் ஒரு நாளைக்கு எத்தனை பேரை தெரிவு செய்வீர்கள் என்ற கேள்விக்கு 50 பெர் என பதிலளிக்கிறார். ஆனால், ரோபோ வேரா 1500 பேரை ஒரு நாளைக்கு நேர்முகத்தேர்வு செய்ய முடியும் என்று கூறுகிறது.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவில் உள்ள 200 நிறுவனத்தில் ரோபோட் வேரா நேர்முகத்தேர்வுக்கான பணியில் இறங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு பல்வேறு நிறுவனத்தின் உதவியோடு ரோபோட் வேரா தயாரிக்கப்பட்டது. இதனைத் தயாரித்த அலெக்ஸி கோஸ்டெரேவ் கூறுகையில்,

‘தற்போது 200 நிறுவனங்களில் ரோபோட் வேரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வேரா 85 சதவித விண்ணப்பதார்களின் கேள்விகளுக்கு விடையளித்து வருகிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோட் வேரா ஒரு நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை ஒன்லைனில் தேடி எடுப்பத்தில் இருந்து, அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வது வரை அனைத்து வேலைகளையும் தானே மேற்கொள்கிறது.

இது தற்போது ரஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி வருகிறது. ஆண், பெண் விண்ணப்பதார்களை குரல் மூலமாக எளிதாக அடையாளம் கண்டு நேர்முகத்தேர்வை மேற்கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.

***COMPOSITE***

இறந்த ரசிகருக்காக களத்தில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு!!

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக இருக்கிறார் சிம்பு.

இந்நிலையில், சிம்புவின் செயல் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது. அந்த விஷயத்தை நடிகர் விவேக்கும் பாராட்டியுள்ளார். சிம்பு ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் இறந்த தன் தீவிர ரசிகரும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் என்பவரின் 9ம் நாள் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தானே போஸ்டர் ஒட்டியுள்ளார் நடிகர் சிம்பு. இந்த புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த மதன் என்பவர் கடந்த 10-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு நடிகர் சிம்பு அன்றே இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த மதனுக்கு அவருடைய நண்பர்கள் நேற்று இரவு நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருந்தனர். நேற்று இரவு காரில் செல்லும்போது தற்செயலாக இதைப் பார்த்த சிம்பு, உடனே காரில் இருந்து இறங்கி வந்து மதன் நண்பர்களிடம் அந்த போஸ்டரை வாங்கி அவரே ஒட்டினார்.

சிம்புவே போஸ்டரை வாங்கி ஒட்டியதைப் பார்த்ததும் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்று ரசிகர்கள் மேல் அன்பு வைத்திருக்கும் வேறொரு நடிகரைப் பார்க்கவே முடியாது என்று சமூக வலைதளங்களில் நெகிழ்ந்துபோய்ப் பாராட்டி வருகின்றனர்.

மரணச் சடங்கொன்றுக்காக சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

வெலிமடை – பதுளை பிரதான வீதியின், ஹலிஎல அம்பஉக பகுதியில் வானொன்று 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை மூன்று மணியளவில் நேர்ந்துள்ளதுடன், இதன்போது வானில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியிலுள்ள மரண சடங்கொன்றிட்காக பயணித்தவர்களின் வானே விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது.

நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார்.

“தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்த போராளி என்பதோடு, ஒரு மாவீரரின் தந்தை என்பதோடு, ஒரு மகனை முள்ளிவாய்க்காலில் இழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் யார் செய்வது என அடிபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இப்படியான உயர்வான உயர்வான மனிதர்கள் வாழ்வது பலருக்கு எடுத்துக் காட்டு என்பதுடன் உயிர்களைப் பிரிந்த உறவுகளுக்கு இப்படி நல்ல உள்ளங்கள் ஓரளவு ஆறுதலாகும் என பாதிக்கப் பட்ட மக்கள் கூறுகின்றனர்.

-தமிழ்வின்-

பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது : இயக்குநனர் பாரதிராஜா சீற்றம்!!

”வீரச் தமிழச்சியை நாள் ஈழத்தில் பார்த்திருக்கின்றேன். அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய் விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும்”

இவ்வாறு இயக்குநனர் பாரதிராஜா தெரிவித்தார். சென்னை பெருங்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில், நேற்று நடைபெற்ற, இன எழுச்சி அரசியல் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“வேலுப்பிள்ளை பிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது. வேலு பிரபாகரன் ஈழத்தில் இல்லை. அவரின் மறுஅவதாரமாக வந்திருக்கிறார் சீமான். பிரபாகரனுடைய சீருடையை சீமானுக்குப் போட்டுப் பாருங்கள். அப்படியே இருப்பான். அவர் செந்தமிழ் என்று சொல்லுவார்… ஆனால், இவர் கறுப்புத் தமிழன்”.

பல அமைப்புகள் மொழி, இனம் பற்றி பேசுகிறார்கள். பேசலாம், ஆனால் உண்மை பேச வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்த்தேன். அது, இந்த சீமானிடம் உள்ளது. நான் பொய் சொல்லவில்லை. சீமான் சமீபகாலமாக மிக தெளிவாக இருக்கிறார்.

உடம்பில் வெள்ளை சிவப்பு என்று இரண்டு அணுக்கள் இருக்கு. இதில் இரண்டில் ஒன்று குறைந்தால் கூட ஆபத்து. உன் இளைஞர்களுக்கு எல்லாம் இனம், மொழி என்ற வெள்ளை அணு, சிவப்பு அணு சரியான கலவையில் இருக்கு.

இங்கு பேசியவர்கள் பொய்மையாகப் பேசவில்லை, உணர்ச்சி வசப்பட்டுப் பேசவில்லை உண்மையாகப் பேசினர். ஆனால் ஒன்று, தனிமனித விமர்சனங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தை தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இது.

‘புலியை முறத்தால் விரட்டிய வீரத் தமிழச்சி’ என்று புறநானூற்றில் பார்த்தோம். அதன் பிறகு, தமிழச்சி தன் பிள்ளையை போருக்கு அனுப்புவாள், போரிலே அவன் மாண்டுவிடுவான், செய்தி வரும், அவள் கேட்பாள் ‘என் பிள்ளை வேல் முதுகில் பாய்ந்ததா அல்லது நெஞ்சில் பாய்ந்ததா? புறமுதுகு இட்டு ஓடியிருந்தால் வேல் அவன் முதுகில் பாய்ந்திருக்கும்.

அப்படியென்றால் அவனுக்குப் பால் கொடுத்த மாரை வெட்டி எறிவேன்’ என்று சொன்ன தமிழச்சி. அத்தகைய தமிழச்சியை நான் பார்த்தது ஈழத்தில் தான்.

அங்கு, மாவீரர் நாளில் விளக்கு ஏந்தி வருபவர்கள் கண் செத்துப் போய்விடும். துயில் கொள்ளும் இடம், அதைப் பார்த்தீர்களென்றால் கண்ணீர் வரும். நாகரீகமாக ஒவ்வொருவருக்கும் நடுகல் நடப்பட்டு இருக்கிறது.

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு!!

 

வவுனியாவில் ‘அறம்’ பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்காக இன்று (19.05) திறந்து வைக்கப்பட்டது.

உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய உற்பத்தி கைத்தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாரம்பரிய உற்பத்திகள் பொருள் விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்கள் மாலை அணிவித்து, கலாசார நடன நிகழ்வுகளுடன் அழைத்து வரப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல் வைபவத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சர்வமாத குருமார்களின் ஆசிச் செய்தியும் இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் இறுதியில் பிரதம விருந்தினருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அரச வேலை வாய்ப்புக்களில் வன்னி மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வவுனியாவில் இராணுவ வீரர்கள் வெற்றிநாள் அனுஷ்டிப்பு!!

மே 19 இராணுவ வெற்றி நாள் இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இன்று (19.05) பிற்பகல் 12 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள லெப்டிணன்ட் ஜெனரல் லக்ஸ்மன் கொப்பேகடுவ நினைவு தூபியில் வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவ வெற்றி நாள் நிகழ்வில் கொப்பேகடுவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் உயிரிழந்த படையினர், பொதுமக்கள் அனைவருக்காகவும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உப தவிசாளர் வசந்தகுமார, உறுப்பினர் சானுர, தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் துசார மற்றும் சகல கட்சி உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

யாழில் காணாமல் போன நபரொருவர் சடலமாக மீட்பு!!

யாழில் கடந்த 19ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்படும் நபரொருவரின் சடலம் இன்று காலை நல்லூர் பகுதியிலுள்ள யமுனா ஏரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் யாழ். செம்மணி வீதியை சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம்) எனும் 66 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தவில் வித்துவானான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஜெயராசா கடந்த 17ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயுள்ளார். உறவினர்கள் அவரை தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை இவரது மனைவி யமுனா ஏரிக்கு தண்ணீர் அள்ளச் சென்ற வேளையில் ஏரி பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச கிராம அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிராம அலுவலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், யமுனா ஏரி தண்ணீரை அப்பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் அங்கு பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தால், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தான் தாயை கொலை செய்தேன் : மகன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மாற்றாந்தாயை சொத்து பிரச்சனையில் கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்தவர் அபுல் அலிம். இவர் முதல் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்ட நிலையில் அப்துல் ஹாசன் மற்றும் வாசிம் கல்லு என இரு மகன்கள் அவருக்கு உள்ளனர்.

பின்னர் அலிம் இரண்டாவதாக சுலீமா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் அவர் மூலம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்து வந்த வீட்டை சுலீமா சமீபத்தில் தனக்கு பிறந்த பிள்ளைகள் மீது கணவர் அனுமதியுடன் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக அப்துலின் மனைவி ஷபனா, சுலீமாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஷபனாவின் கணவர் அப்துல் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்த போது அவரிடமும் சுலீமா சண்டை போட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தனது மாற்றாந்தாயான சுலீமாவை குத்தி கொலை செய்துள்ளார். சுலீமாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள்.

ஆனால் எந்த வித பதற்றமும் இல்லாமல் இருந்த அப்துல் பொலிசாரை அழைக்குமாறு அவர்களிடம் கூற பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அப்துலை கைது செய்துவிட்டு, சுலீமாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். இதனையடுத்து நடந்த அனைத்து விடயங்களையும் பொலிசாரிடம் அப்துல் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

டுபாயில் உயிரிழந்த கூலி தொழிலாளி : உடலை கொண்டு வர உறவினர்கள் கெஞ்சல்!!

தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் துபாயில் உயிரிழந்துவிட்டதால், அவரின் உடலை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. துபாயில் கூலி வேலை செய்து வந்த இவர், இறந்துவிட்டதாக கூறி, அவர் வேலை பார்க்கும் நிறுவனம் முனியசாமியின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்த விபரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் துபாயில் இருக்கும் முனியசாமியின் உடலை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தரும் படி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.