அமைச்சரைவயிலிருந்து விலகப் போவதில்லை : சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்!!

அமைச்சரைவயிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வாக்களித்த போதிலும், அமைச்சரவையிலிருந்து விலகப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 அமைச்சர்கள் இது பற்றி நேற்றைய தினம் இரவு தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடித்திருக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி. திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, அனுர பிரியதர்சன யாபா, ஜோன் செனவிரட்ன, சுசில் பிரேமஜயந்த, லக்ஸ்மன் யாபா, டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி, அனுராத ஜயரட்ன, சுசந்த புஞ்சிநிலமே, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, சுமேதா ஜயசேன மற்றும் தரானாத் பஸ்நாயக்க ஆகிய அமைச்சர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபாலவினது எனவும், ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் அமைச்சராக நீடிப்பதில் பிரச்சினை கிடையாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதற்கு சகல உரிமையும் உண்டு எனவும், ஜனாதிபதி கூறும் வரையில் அமைச்சுப் பதவியில் நீடிக்க முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் பிளவுகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதில் சிக்கல் எதுவும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களை பணி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களை பணி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி தயசேகர ஆகியோரை பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 33 உறுப்பினர்கள் பிரதமரிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இந்த ஆவணம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சனம் செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளினால் இவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை தொடர்பான பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்!!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வென்றார் ரணில் : தோற்கடிக்கப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ : போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம்!!

ஜனாதிபதியின் செயல்திட்டமான மது போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம் இலங்கையில் முதல் முதலாக வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியலயத்தின் ஏற்பாட்டில் இன்று (04.04) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வானது கல்லூரியின் அதிபர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியாவிலுள்ள 37 பாடசாலைகளை சேர்ந்த சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 420 பேர் போதை தவிர்ப்பு வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், போதைப்பொருள் பாவனை தொடர்பாக முறையிடுவதற்கு அல்லது தகவல்களை பொலிசாருக்கு வழங்குவதற்கு ஒவ்வோரு பாடசாலையிலும் வைப்பதற்காக மாணவர்களிடம் முறைப்பாட்டு பெட்டிகள் பொலிசாரால் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலய மாணவிகளின் நடன நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உதவி ஆய்வாளர் எஸ்.எம். பிரேமரத்தின வளவாளராக கலந்து கொண்டு மது போதை தவிர்ப்பு வேலைத்திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

விருந்தினர்களாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!

அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும். கத்தார் குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டவர்கள், இந்தத் தீவின் உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பேர்ல் கத்தாரின் கழுகுப் பார்வை புகைப்படத்தை விண்வெளியாளர் ஒருவர் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது, மொத்த பேர்ல் கத்தார் தீவும் Binocular போன்ற வடிவமைப்பில் இருப்பது அழகாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

30 மில்லியன் டொலருக்கு விலை போன அரிய கிண்ணம் : என்ன சிறப்பு தெரியுமா?

சீனாவின் குயிங் வம்ச அரசர் பயன்படுத்திய அரிய வகை கிண்ணம் ஒன்று 30.4 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

சீனாவின் குயிங் வம்ச பேரரசர் Kangxi என்பவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிண்ணமாகும் இது. வெறும் 14.7 செ.மீற்றர் விட்டம் கொண்ட இந்த அரியவகை கிண்ணமானது பூக்கள் மற்றும் மிருகங்களின் உருவங்களை பொறிக்கப்பட்டிருந்தது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த Kangxi பேரரசர் இந்த கிண்ணத்தில் உணவருந்தியதாக கூறப்படுகிறது.

ஏலம் துவங்கிய 5 நிமிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபாடு காட்டிய யூடியூப் : துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பெண் குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்திலுள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதில் 3 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அப்பெண் தன்னை தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

குறித்தபெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில் அப்பெண் குறித்த தகவலை அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சன் டியாகோ மாகாணத்தில் வசித்து வந்த 36 வயதான நசீம் அக்தாம் என்பவர் தான் குறித்த தாக்குதலை முன்னெடுத்தவர்.

குறித்த நபர் உடற்பயிற்சிகள், பாரசீக கலாச்சாரம், சைவ உணவு உள்ளிட்டவற்றை யூடியூப்பில் வீடியோவாகப் பதிவிட்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொளி பதிவில், அவருடைய வீடியோவுக்கு யூடியூப் நிறுவனம் பாகுபாடு காட்டியதாகவும், பெரும்பாலான வீடியோக்கள் பார்வையாளர்களைச் சென்றடையாமல் யூடியூப் நிறுவனம் செய்ததாக தனது NasimeSabz.com என்ற பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மேலும் அதில் யூடியூப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் விளம்பரப் பணத்தைச் சுரண்டுவதாகவும் யூடியூப் சமமான வளர்ச்சியை அளிப்பதில்லை போன்ற பதிவுகள் இடம் பெற்றிருந்தன.

மட்டுமின்றி மிருகவதை தடுப்பு குறித்தும் அவர் பல்வேறு காணொளிகளை பதிவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை யூடியூப் கணக்கை அவர் செயலிழக்கச் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

யூடியூப் நிறுவனத்தின் மீது இருந்த கோபத்தினால் நசீம் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அவரது தந்தையும் விசாரணை அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விசாரணை அதிகாரிகள் இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்று கூறியுள்ளனர்.

சவுதியில் எறும்பு கடித்து உயிரிழந்த கேரள பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

சவுதியில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுசி ஜெபி (36) என்ற பெண் சவுதியின் ரியாத்தில் தனது கணவர் ஜெபி மேத்யூவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 19-ஆம் திகதி சுசி, வீட்டில் இருந்த போது அவர் உடலில் எறும்பு ஒன்று கடித்துள்ளது. அந்த எறும்பை பார்த்த மேத்யூ அதை பிடித்து தூர வீசியுள்ளார்.

இதன்பின்னர் சுசியின் உடல் வீக்கமடைய தொடங்கியதுடன், மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ள சுசி உடனடியாக ரியாத்தில் உள்ள ஓபியிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுசி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சுசி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போதே அவரின் ரத்த அழுத்தமும், நாடி துடிப்பும் குறைவாக இருந்தது.

சுசியின் கணவர் எறும்பை பார்த்தாக கூறினார், ஆனால் அவர் உடலில் எறும்பு கடிக்கான எந்த தழும்பும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்னர் கூட இதே போன்ற பிரச்சனையோடு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரையும் காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்.

சுசி ஆஸ்துமாவுக்காக எடுத்து வந்த சிகிச்சை முறைகள் குறித்து முழு தகவலும் வெளிவராத நிலையில், சில விஷத்தன்மை கொண்ட எறும்புகள் கடித்தால் இது போன்ற உடல் அலர்ஜி கொண்டவர்களின் உயிரை கூட அது பறிக்கும் என தெரியவந்துள்ளது.

பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை!!

அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகையின் அரண்மனை இன்று கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது.

பரமக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சிவபாக்கியம் என்பவர் பலகோடி மதிப்பிலான தனது அரண்மனை வீட்டை , அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்தார்.

அதன்படி இந்த வீடு சிலகாலம் பெண்களின் பிரசவ மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது, பின்பு காட்டுப்பரமக்குடியில் உள்ள தலைமை மருத்துவமனையோடு பிரசவ ஆஸ்பத்திரி இணைக்கப்பட்டு அதற்கென கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் இவர் தானமாக வழங்கிய அரண்மனை வீடு இன்று பாழடைந்து இருக்கிறது. கட்டிடத்தின் பின் பகுதியில் ஓடும் கழிவுநீர் கட்டிடத்திற்குள் புகுந்து குளங்கள் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் புழுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரப்பும் இடமாக திகழ்கிறது.

விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக அந்த அரண்மனை இருக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்கட்டிடத்தை பராமரிக்க பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

ஐபிஎல் தொடருக்கு பெருகும் எதிர்ப்பு : தமிழர் அமைப்புகள் எச்சரிக்கை!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழகத்தை சேர்ந்த சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 7-ஆம் திகதி மும்பையில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி 10-ஆம் திகதி நடக்கிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், நதிநீர் பங்கீடு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் இழப்பதைக் கண்டிக்கும் விதத்திலும், அதற்காக மக்கள் உணர்வுடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது.

இதையும் மீறி வரும் 10-ம் திகதி தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களுடைய சொந்த பணத்தில் டிக்கெட் வாங்கி மைதானத்துக்குள் சென்று போராட்டத்தை நடத்துவோம் என கூறியுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அளித்துள்ள பேட்டியில், சென்னையில் வருகின்ற 10-ம் திகதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.

இதை மீறி அங்கு விளையாட வரும் ஐபிஎல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம் என கூறியுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்துள்ள பேட்டியில், ஏப்ரல் 10-ஆம் திகதி சென்னையில் முதல் ஐபிஎல் போட்டி நடக்கிறது.

அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் போதும் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம்.

ஒரு 50,000 பேர் மட்டுமே செய்யும் இந்த தியாகம் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை. இது தமிழர்களின் பிரச்னை என தமிழகத்தில் வாழும் பிறமொழியினர் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

காட்டில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை : இந்தியாவில் நடந்த அவலம்!!

இந்தியாவில் மிருகங்கள் அதிகம் நடமாடும் காட்டில், பிறந்த ஒருநாளே ஆன குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் சின்சோலி நகரின் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அடர்ந்த காட்டில் புதிதாக பிறந்த பெண் குழந்தையை யாரோ வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அவ்வழியாக சென்ற ஒரு லொறி ஓட்டுனர் குழந்தையை பார்த்த நிலையில் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

லொறி ஓட்டுனர் மட்டும் குழந்தையை பார்க்காமல் இருந்திருந்திருந்தால், காட்டில் உள்ள மிருகங்களுக்கு குழந்தை இரையாகியிருக்கும் என கூறினால் அது மிகையாகாது.

கணவனைத் தோளில் சுமந்த பெண் : அலைக்கழிக்கப்பட்ட அவலம்!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக பெண் ஒருவர் தனது கணவரை தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் Mathura பகுதியைச் சேர்ந்தவர் BadanSingh. ஒரு லொறி டிரைவராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீரென ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

அவரது காலில் ஏற்பட்ட கட்டிகளில் நோய்த்தொற்று ஏற்பட்டு அவரது ஒரு காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அவரது மனைவியான பிமலா தேவி, அரசு வழங்கும் இலவச சக்கர நாற்காலி ஒன்றை வங்குவதற்காக முயற்சி செய்தார்.

உடற்குறைபாட்டை நிரூபிக்கும் ஒரு சான்றிதழ் இருந்தால்தான் அரசின் இலவச சக்கர நாற்காலி கிடைக்கும் என்று அவருக்கு கூறப்பட்டது.

ஒரு சான்றிதழுக்காக தனது கணவரைத் தூக்கிக்கொண்டு வாரக்கணக்கில் சுகாதார மையத்திற்கு அலைந்த பிமலா தேவியைக் கண்டு கொள்வாரில்லை.

பல்வேறு அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட அவரால் ஒரு சான்றிதழைப் பெற இயலவில்லை.

பிமலா தேவி தனது கணவரைத் தோளில் சுமந்து கொண்டு திரியும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இதைப் பார்த்த பூபேந்திர சவுத்ரி என்னும் அமைச்சர் “நாகரீகம் வளர்ந்த ஒரு நாட்டில் இது ஒரு பெருத்த அவமானம்” என்று கூறியுள்ளார். அந்த தம்பதியினருக்கு தன்னாலான உதவியைச் செய்வதாக உறுதியளித்தார். இறுதியாக பிமலாவின் கணவருக்கு சான்றிதழ் கிடைத்து விட்டது.

“எங்கள் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் எனது கணவரை அழைத்துக் கொண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ரிக்‌ஷாவுக்கு கொடுக்க என்னிடம் காசு இல்லை” என்று கூறும் பிமலா தேவியின் தலையில் குடும்பப் பொறுப்பு முழுவதும் விழுந்து விட்டது.

குடும்பப் பொறுப்பையும் கணவரையும் சுமந்து திரிந்த பிமலா இனி கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விடலாம்.

BadanSinghக்கு ஒரு வீல் சேர் வந்து விட்டால் கொஞ்சம் நிலைமை மாறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் அந்த ஏழைத் தம்பதியர்.

ஆடுகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரப்பெண்!!

இந்தியாவில் இளம்பெண்ணொருவர், புலியுடன் வெறும் குச்சிகளைக் கொண்டு சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரூபாலி மேஷ்ராம்(23). இவர் மலையை ஒட்டிய பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் ஆடுகளை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த ரூபாலி மற்றும் அவரது தாய் இருவரும் வெளியே வந்துள்ளனர்.

அப்போது புலி ஒன்று, அங்கிருந்த ஆட்டைத் தாக்கிக் கொண்டிருந்ததை இருவரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, சற்று யோசனை செய்யாத ரூபாலி அருகில் கிடந்த குச்சியைக் கொண்டு புலியுடன் சண்டையிட தொடங்கினார்.

புலியின் தாக்குதலினால் ரூபாலிக்கு ரத்த காயம் ஏற்பட்டதை பார்த்த அவரது தாய், ரூபாலியை இழுத்து காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் கால்நடைகளையும் பாதுகாத்து புலியையும் அந்த வீரபெண் காப்பாற்றியுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வருவதற்குள் புலி அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்நிலையில், புலியின் தாக்குதலினால் காயமடைந்த ரூபாலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிர்ஷ்டவசமாக புலி அவரை கடிக்கவில்லை. ரூபாலியின் தைரியத்தை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் தொடர்பாக ரூபாலியின் தாயார் கூறுகையில்,

‘புலியின் தாக்குதலில் எனது மகள் இறந்து விடுவாள் என எண்ணினேன். அவளை பார்க்க பயமாக இருந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட புலியுடன், வெறும் குச்சிகளை கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்’ என தெரிவித்துள்ளார்.

கண்கலங்கிய கமல்ஹாசன்!!

திருச்சியில் பொலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மனைவி உஷாவுடன் வந்த ராஜாவின் வாகனத்தை மறித்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வண்டியை உதைத்ததில், ராஜாவும் அவரின் மனைவி உஷாவும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில், 3 மாத கர்ப்பிணியான உஷா தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் திருச்சி வந்த கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தபடி, உஷாவின் கணவர் ராஜாவிடம் 5 லட்சமும் உஷாவின் தாய் நூர்து மேரியிடம் 5 லட்சமும் மொத்தம் 10 லட்சம் வழங்கினார்.

அப்போது உஷாவின் கணவர் கமலிடம் கதறி அழுதுள்ளார் இதனைப்பார்த்து கமலும் கண்கலங்கினார்.

நடுவீதியில் பொலிசாரின் பாசத்தைக் கண்டு கலங்கிய இணையவாசிகள்!!

இந்தியாவில் பொலிசார் ஒருவரின் செயல் இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

தெலுங்கானாவில் பிரதான சாலை ஒன்றில் கடந்த 1ம் திகதி வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென்று ரோட்டிலே மயங்கி விழுந்தார். அப்போது அந்த சாலையில் போக்குவரத்து சரி செய்து கொண்டிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கோபால் என்ற போக்குவரத்துப் பொலிசார் ஓடி வந்த அந்த மூதாட்டியை தூக்கி ஓரமாக அமரவைத்தார்.

மூதாட்டியின் நிலைமையை புரிந்த அவர் உடனடியாக அருகில் இருந்த உணவுகத்தில் உணவை வாங்கி வந்து தன் கையாலே ஊட்டி விட்டார்.

உடல் நலம் முடியாத அந்த மூதாட்டி, கோபாலை கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லியுள்ளார். அதற்கு கோபால் என் தாயாக இருந்திருந்தால் செய்திருக்க மாட்டேனா என்று கூறிவிட்டு அங்கிருந்துசென்றுள்ளார்.

இந்தக் காட்சியை அங்கிருக்கும் நபர்பகள் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். கோபாலின் இந்த செயலை பார்த்த அனைவரும் கண்கலங்கியதுடன் அவருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.