கடந்த 10 மாதங்களில் புகையிரதத்தில் இருந்தும் புகையிரதப் பாதைகளில் வைத்தும் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது நடந்த விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் மோதிய 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 76 புகையிரத பயணிகள் புகையிரதத்தில் இருந்து விழுந்துள்ளனர்.
வருடா வருடம் புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், புகையிரத பாதை மற்றும் புகையிரத கடவைகள் ஊடாக பயணிக்கும் போது 436 விபத்துக்கள் நடந்துள்ளன.
முழுயாக கடந்த 10 மாதங்களில் நடந்த புகையிரத விபத்துக்கள் காரணாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை தவிர வாகனங்கள் புகையிரத கடவைகளில் உள்ள கேட்டுகளில் மோதி சேதமடைந்தமை சம்பந்தமான 506 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியால் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த திருடர்கள் அப்பெண்ணை தள்ளிவிழுத்திய நிலையில் சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது கிழே விழுந்த குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப்ப பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் தாரகை சஞ்சிகை வெளியீடும் இன்று (24.11.2017) காலை 9.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், நாடகம், நூல் வெளியீடு, நூல் ஆய்வுரை , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.தேவசேனா, விருந்தினர்களாக சமயத்தலைவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி இன்று (24.11) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர பிரதேச செயலகம், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகங்கள் சார்ந்தோர் மற்றும் சீட் நிறுவனம், வரோட் நிறுவனம், ஓகான் நிறுவனம் இணையும் கரங்கள், உயிரிழை ஆகிய நிறுவனங்களின் சார்பில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் .
வேகநடை, 100 மீற்றர் ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல், சக்கர நாற்காலி ஓட்டம், சங்கீதக்கதிரை எனப்பல போட்டிகள் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
சமூகசேவை உத்தியோகத்தர்களான திருமதி பி.விமலேந்திரன், என்.பாலகுமாரன், செல்வி வி.சோபனா அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செல்வி தி.கலைவாணி, திருமதி ப.கோமளா, திருமதி.செ.கலா, திருமதி.எஸ் ஜீவசாந்தி , எஸ்,கே.வசந்தருபன், திருமதி ஜெ.செல்வமலர் ஆகியோரும் சீட் நிறுவனத்தின் சந்துரூ, மற்றும் டிலானி, ஓகான் நிறுவன கலைவாணி, வரோட் நிறுவன விக்ரர் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .
நண்பகல் வரை நடைபெற்ற நிகழ்வில் மதியபோசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனபாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.
மீள் மரநடுகை தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே சமயம் வவுனியா மாவட்டத்திலும் மீள மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன, முன்னாள் அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பொலிசார், விமானப்படையினர் எனப் பலரும் இவ் மரநடுகை வேலைத்திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று (23.11.2017) மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய 21,22,25,41 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளனர்.
இன்றையதினம் (24.11.2017) நால்வரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக இவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கும்போது,
இன்று பிற்பகல் 2 மணியளவில் மாமடு குளத்திற்கு குளிப்பதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 4 பேர் சென்றிருந்தோம். குளத்தில் கரை ஓரப்பகுதியிலிருந்து தண்ணீரைத் தட்டித் தட்டி ஒருவர் மீது ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தோம்.
இதில் திருமணமாகி இரண்டு மாதமான 26 வயதுடைய ஜெயப்பிரதாப் மற்றும், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியான 16 வயதுடைய பானுரேகா என்ற 2018ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஆகிய இருவரும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது மற்றைய இருவரும் வெளியே சென்று அயலவர்களின் உதவியை நாடியதுடன் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடி மீட்டு அருகிலுள்ள மாமடுவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உயிரிழந்த இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தின் 36வது அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11.2017) காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து சுபநேரத்தில் மங்கள விளக்கேற்றி பதவியேற்றுக்கொண்டு முதல் கடிதங்களுக்கு கையெழுத்திட்டார்.
சிறப்பான வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், முன்னாள் அரசாங்க அதிபர் எம்.வி.ரோஹண புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மரநடுகை வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் மரநடுகை இடம்பெற்றது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 – இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.
ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிவிடலாம். மிக மிக நவீன கட்டுப்பாட்டு நுட்பங்களையும், பாதுகாப்பையும் இந்த விமானம் பயணிகளுக்கு வழங்குகிறது.
விமானத்தில் பயணிகள் ஏறுவது, இறங்குவது தெரியாத அளவுக்கு மிகச்சிறப்பாக படிக்கட்டுகள் மற்றும் எஸ்ட்லேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தில் இருக்கும்போதும், நடக்கும்போது நமது வீட்டுக்குள் நாம் இருப்பது போன்ற உணர்வினை தருகிறது.
இதுவரை உருவாக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் அதிர்வுகளும், சப்தமும் குறைவான விமான மொடலாகவும் ஏர்பஸ் ஏ380 வர்ணிக்கப்படுகிறது.
மிகச் சிறப்பான காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றிருக்கிறது. சிறிய விமானங்கள் டர்புலென்ஸ் (Turbulence) எனப்படும் காற்று வெற்றிடங்களை கடக்கும்போது அதிக அதிர்வுகள், குலுங்கல்களை சந்திக்கும்.
ஆனால், இந்த விமானம் டர்புலென்ஸ் (Turbulence) காரணமாக அதிக பாதிப்பை சந்திக்காது. இந்த விமானத்தின் suite அறை நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது.
மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளை வைத்தே இந்த விமானம இயக்கப்படுகிறது.
புறா விடு தூது, கடிதங்கள், போன் கால் போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.
தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம் செய்துக் கொள்ளும் இடமாக சமூக தளங்கள் மாறி நிற்கின்றன.
பிரபலமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இடுப்பு கொஞ்சம் அதிகம் சிரித்தாலே பெயர் கெட்டுவிடும் என்ற காலம் ஒன்று இருந்தது.
ஆனால், இன்று செக்ஸி போஸ்களில் எடுத்த படங்களை கூட எளிதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டு லைக்ஸ் அள்ள தான் பார்க்கிறார்கள்…
#1 ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக / தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது அந்த நபரை தனது நட்பு வட்டாரத்தில் யார், எவர் என அறியாமல் சேர்த்துக் கொள்கின்றனர்.
#2 நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!
#3 லைக்ஸ் மோகம்: இப்போது அதிக இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மோகம் இது. லைக்ஸ் மற்றவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்காமல் போனாலோ, வரும் லைக்ஸ் எண்ணிக்கை குறைந்தாலும் உடனே வருந்த துவங்கி விடுவது. இதனால், எப்படியாவது அதிக லைக்ஸ் பெற வேண்டும் என இவர்கள் பல முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
#4 அன்று கடிதம், செல்போன், நேரில் சென்று தான் காதலை சொல்ல வேண்டும். அப்படியே கூறினாலும், ஊர் சேர்ந்து அடிக்குமோ, அந்த பெண்ணே செருப்பை கழற்றும் சூழல் எழுமோ என்ற அச்சங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்த அச்சம் இல்லாததால் சமூக தளங்கள் மூலம் காதலை பகிர்வது அதிகரித்து விட்டன.
#5 சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.
#6 மேலும், இளவட்ட வயதான 17 – 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.
#7 ஒரு பெண் செல்ஃபீ போஸ்ட் செய்துவிட்டார் அதற்கு குவியும் லைக்ஸ்-க்கு ஈடு நிகர் வேறு என்ன என்பது ஆய்வு தான் செய்ய வேண்டும். அழகு என்பதை தாண்டி, முக பாவனைகளை பல்வேறு விதமாக காண்பித்து பதிவு செய்து, தங்கள் படங்களை எண்ணிலடங்காத வண்ணம் பகிரும் போது, அது சில சமயங்களில் தவறான வழிகளில் பலர் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.
விபரீதம் #1 அதிகமான பெண்களின் படங்கள், கண்ட க்ரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கிறார்கள்.
விபரீதம் #2 வேறு பெண்களின் படம் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதல்.
விபரீதம் #3 மார்பிங் செய்து, நிர்வாண உடலுடன் இணைத்து அசிங்கப்படுத்துவது.
விபரீதம் #4 ஆபாச தளங்கள் அல்லது டேட்டிங் தளங்கள், மொபைல் அப்க்ளில் வேறு பெண்களின் படங்கள் பயன்படுத்தி ஏமாற்றுவது.
அமெரிக்காவின் பிரபலமான இரண்டு நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா $110 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் சவுதி இடையே கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில் இந்த தகவல் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
அமெரிக்காவின் Raytheon மற்றும் Boeing நிறுவனங்களிடம் ஆயுதங்களை சவுதி வாங்க உள்ளது. இதன் முதற்கட்டமாக அமெரிக்க ஆயுதக் கிடங்குகளில் உள்ள ஆயுதங்களை 7 பில்லியன் டொலர் மதிப்பில் பெறுவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த இரு நிறுவனங்களும் வெளியான இந்த தகவலை மறுத்துள்ளது. அமெரிக்க அரசாங்கமும் உறுதியான பதிலை வெளியிட மறுத்துள்ளது.
மட்டுமின்றி அமெரிக்காவுக்கான சவுதி தூதர் குறித்த தகவலுக்கு பதிலளிக்க மறுத்துள்ளதுடன், ஜனாதிபதி டிரம்ப் சவுதி விஜயத்தின்போது இது தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டில் கிளர்ந்தெழும் உள்நாட்டு கலவரங்களுக்கு சவுதியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும், சவுதியின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி தரப்படும் என ஈரான் தெரிவித்துள்ள நிலையிலும், பெருந்தொகைக்கு சவுதி ஆயுதங்களை கொள்முதல் செய்ய இருப்பதாக வெளியான தகவல், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு போருக்கான ஆயத்தமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயோர்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் வெளிவிவகார அமைப்பு ஒன்று குறித்த அதிர வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளானது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்குள் வரும் சில பிரதேசங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகொரியா இலக்காக குறிவைத்துள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக இருப்பதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளியான பட்டியலின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக வெள்ளை மாளிகை மற்றும் பெண்டகன் சிறப்பு கவனத்தை பெறுகின்றது. இதுபோலவே ஜப்பான் நகரங்கள் பவற்றில் மக்கள் தொகை மிகுந்த பகுதியாகும்.
மூன்று குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தையையும், தாய்மாமாவையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குருஷேத்ரா என்ற பகுதியில் கடந்த வாரம் சமீர் (11) சிம்ரன் (8) மற்றும் சமர் (5) என்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காணாமல் போனார்கள்.
இது குறித்து குழந்தைகளின் தாய் அளித்த புகாரின் பேரின் பொலிசார் அங்கிருக்கும் காட்டுப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
பொலிசாருடன் சேர்ந்து குழந்தைகளின் தந்தை சோனு மாலிக், தாய் மாமன் ஜெகதீப் மாலிக் மற்றும் ஊர்காரர்களும் தீவிரமாக தேடி இருக்கின்றனர்.
அப்போது சோனு மற்றும் ஜெகதீப் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களிடம் விசாரித்தனர்.
முதலில் பேச மறுத்த இருவரும் பின்னர் மூன்று குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றதை ஒப்பு கொண்டனர்.
தன் குழந்தைகளை கொலை செய்வதற்கு சோனு பல காலமாக திட்டமிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சோனு மற்றும் ஜெகதீப்பை பொலிசார் கைது செய்தனர்.
குழந்தைகளின் தாத்தா ஜித்தா மாலிக் கூறுகையில், சோனுவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. மூன்று குழந்தைகள் நலனுக்காக கள்ளத்தொடர்பை விட்டு விடும் படி குடும்பத்தார் அவரிடம் கோரினோம்.
ஆனால் அதை மீறி அந்த பெண்ணுக்காக குழந்தைகளை சோனு கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இதுதான் கொலைக்கான காரணம் என்பதை கூற மறுத்த பொலிஸ் இந்த விடயத்தில் மெளனம் காக்கிறது.
சென்னை தனியார் கல்லூரியில் பிஇ முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி மவுனிகா, தேர்வில் கொப்பி அடித்த காரணத்தால் பேராசியர் அவரை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மவுனிகா, நான் தற்கொலை செய்யப்போகிறேன் என தனது சகோதரனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு விடுதி அறையின் மின்விசிறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மவுனிகாவும் இவரது சகோதரன் ராகேஷ் ரெட்டியும் இரட்டையர்கள் ஆவார். தனது சகோதரன் மீது அதிக பாசம் கொண்ட மவுனிகா, I Love You…..I’ll Miss You So Much என எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜாரெட்டி கூறியதாது, என் மகள் தற்கொலை பற்றி கல்லூரி நிர்வாகம் எங்களுக்குத் தகவல் சொல்லவில்லை, எனது மகள் ஹால் டிக்கெட்டை கல்லூரி நிர்வாகத்தினர் கிழித்து எறிந்தனர். கல்லூரியின் தவறான நடவடிக்கையால் எனது மகளை இழந்துவிட்டேன்.
இனிமேலாவது கல்லூரி மாணவர்களை துன்புறுத்தாதீர்கள். என் மகள் தவறு செய்திருந்தால் என்னிடம் தெரிவித்திருக்கலாம். அவளுக்கு இளவயது அவள் தவறு செய்திருந்தால் அவர்களே கவுன்சிலிங் கொடுத்திருக்கலாம். ஒவ்வொருவரும் தவறு செய்துள்ளனர்.
இளவயது சிந்தனையின் வேகத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கும் வயது. இன்று என் மகளை இழந்துவிட்டேன், கல்லூரி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் இலங்கையும், தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்த வாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 28ஆம் நாள் வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரை, இலங்கையிலும், தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
குவைத் நாட்டில் தற்கொலை செய்து உயிரிழந்தவரின் சடலம் 4 மாதங்களின் பின்னர் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலில் பல பாகங்கள் காணவில்லை எனவும், தற்போதைக்கு மீதமாக உள்ள பாகங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்தெனிய பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான ஹரிகல பிரதேசத்தை சேர்ந்த உபாலி என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு குவைத் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதி உயிரிழந்தவரின் சடலம் இலங்கை கொண்டு வந்தவுடன் புதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளமையினால் விசாரணை மேற்கொள்ளுமாறு உயிரிழந்தவரின் சகோதரர் கேகாலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளர்.
அதற்கமைய நேற்று முன்தினம் அவரது உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட போது அவரது உடலில் பல பாகங்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.